விராட் கோலி தோனியாக மாறி 97 மீட்டர் தொலைவுக்கு அடித்த ‘ஹெலிகாப்டர் ஷாட்’

பட மூலாதாரம், BCCI
திருவனந்தபுரத்தில் விராட் கோலி எடுத்த அதிரடி அவதாரம் இந்திய அணிக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தப் போட்டியில் அவர் அடித்த 8 சிக்சர்களில் ஒரு சிக்சர் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை போல் இருந்தது.
கடந்த நான்கு ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை அடித்திருக்கும் விராட் கோலிக்கு ஜனவரி 15-ஆம் தேதி வெற்றிகரமான நாளாக அமைந்திருக்கிறது. ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதையும் அவர் வென்றார்.
இதன்மூலம் 20 ஆட்ட நாயகன் விருதை வென்று சச்சின் டெண்டுல்கருடன் இந்தப் பெருமையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
“இந்த விருதுகள் எனது நோக்கத்திற்குக் கிடைத்தவையாகவே கருதுகிறேன். எந்த இலக்கையும் அடைய வேண்டும் என்று விரக்தி எனக்குள் இல்லை. இதேபோன்ற ஆட்டத்தை தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு கோலி பேசினார்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் 110 பந்துகளில் அவர் அடித்த 166 ரன்களில் 13 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.
16-ஆவது ஓவரில் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்ததும் களமிறங்கினார் விராட் கோலி 35 ஓவர்களுக்கும் குறைவாகவே ஆடுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் அதிலேயே அவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

பட மூலாதாரம், bcci
விராட் கோலியின் ஹெலிகாப்டர் ஷாட்
இந்தப் போட்டியில் விராட் கோலி தொடக்கம் முதலேயே ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது இரண்டாவது பந்தை அவர் பவுண்டரிக்கு விரட்டினார். அதற்கடுத்த ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை அடித்தார்.
எனினும் 30-ஆவது ஓவருக்குப் பிறகு கோலியின் வழக்கமான ஆட்டம் தொடங்கியது. 34-ஆவது ஓவரில் சதமடித்திருந்த சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு ஆட்டம் முழுவதும் கோலியின் வசம் வந்தது.
41-ஆவது ஓவரில் தனது முதல் சிக்சரை அடித்தார் கோலி. லஹிரு குமார வீசிய பந்தை மிட் ஆப் திசையில் எல்லைக்கு வெளியே அடித்து 6 ரன்களை கோலி பெற்றார்.
43-ஆவது ஓவரில் தனது 46-ஆவது ஒருநாள் போட்டி சதத்தை நிறைவு செய்தார் கோலி.
44-ஆவது ஓவரில் ரஜித வீசிய பந்தை கிரீஸைவிட்டு வெளியே வந்து தோனியை போல ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்தார் கோலி. அது 97 மீட்டர் தொலைவுக்குச் சென்று விழுந்தது. கைப்பிடியின் கீழே இருக்கும் கைக்கு அதிக வேகம் கொடுத்து சுழற்றி அடிக்கும் இவ்வகை ஷாட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பெயர் பெற்றவர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதன் பிறகு 45-ஆவது ஓவரில் அடுத்தடுத்த இரண்டு சிக்சர்களை அடித்தார். 47-ஆவது ஓவரிலும் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை கோலி அடித்தார். அவை இரண்டும் ரஜிதவின் ஓவரில் அடிக்கப்பட்டன. கடைசி ஓவரில் மேலும் இரண்டு சிக்சர்களை அடித்தார். அவர் அடித்த 8 சிக்சர்களுமே கடைசி 10 ஓவர்களில் வந்தவை. 7 சிக்சர்கள் 100 ரன்களுக்குப் பிறகு அடிக்கப்பட்டவை.
100 ரன்னில் இருந்து 150-ஆவது ரன்னை எடுப்பதற்கு அவருக்கு 21 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன.

பட மூலாதாரம், BCCI
விராட் கோலி படைத்த சாதனைகள்
இந்தப்போட்டியில் ஏராளமான சாதனைகளை விராட் கோலி படைத்திருக்கிறார்.
சர்வதேசப் போட்டியில் மிக வேகமாக 74 சதங்களை அடித்தவர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்திருக்கிறது.
ஒரு நாள் போட்டியில் மிக வேகமாக 46 சதங்களை அடித்தவரும் அவர் மட்டும்தான்.
சச்சின் டெண்டுல்கருடன் அதிக ஆட்ட நாயகன் விருதை வென்றவர் என்ற பெருமையைப் பகிர்ந்திருக்கிறார். இருவரும் 20 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்கள். வேறு யாரும் இந்தச் சாதனையைப் படைக்கவில்லை.
உள்நாட்டில் 21 சதங்களை அடித்து அதிகச் சதங்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்திருக்கிறார்.

பட மூலாதாரம், BCCI
ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 16 சதங்களை அடித்தவர் என்பதும் அவரது புதிய சாதனை.
இந்தியாவில் நடந்த ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 150 ரன்களை அடித்தவர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்திருக்கிறது. 150 ரன்னை எட்ட அவருக்கு 106 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன.
ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்தவரும் விராட் கோலிதான். இலங்கை அணிக்கு எதிராக அவர் ஒருநாள் போட்டிகளில் 10 சதங்களை அடித்திருக்கிறார்.
ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 150 ரன்களுக்கு மேல் அதிக முறை எடுத்த பெருமையும் கோலிக்கு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இது அவருக்கு 4 ஆவது 150 ரன்கள்.
இவை தவிரவும் விராட் கோலி மேலும் சில சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை அடித்திருக்கிறார். அதை எட்டுவதற்கு விராட் கோலிக்கு இன்னும் 3 சதங்களே தேவைப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












