சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது ஏன் முக்கியம்?

பட மூலாதாரம், TWITTER/ SURYA KUMAR YADAV
- எழுதியவர், சந்திரசேகர் லூத்ரா
- பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக
சூர்யகுமார் யாதவ் 2021 மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் சர்வதேச பந்தயத்தை விளையாடினார். அப்போது அவருக்கு ஏற்கனவே 30 வயதாகிவிட்டது. தனது அர்ப்பணிப்பு காரணமாக அவரால் சர்வதேச மட்டத்தை எட்ட முடிந்தது.
நீண்ட காத்திருப்புடன், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்களை குவித்துக்கொண்டே தேர்வாளர்களின் கதவுகளை அவர் தட்டினார்.
இதுமட்டுமின்றி அவர் சர்வதேச அரங்கில் அறிமுகமாகும் முன் 170 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் சர்வதேச அரங்கில் அறிமுகமாவதற்கு முன் விளையாடியுள்ள அதிகபட்ச டி20 போட்டிகள் இதுவாகும்.
அணியில் தேர்வு செய்யப்படாதது அவரது மன உறுதியைக் குறைத்திருக்கக்கூடும். ஆனால் விளையாட்டின் மீதான அவரது உற்சாகம் அப்படியே இருந்தது.
தனக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறினார்.
அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கில் அவர் தனது திறமையை மேம்படுத்திக் கொண்டார்.
டி20 கிரிக்கெட்டில் ஸ்டிரைக் ரேட் 180க்கு அருகில் இருந்தாலும்கூட அவர் பந்தை கடுமையாக விளாச மாட்டார்.
மாறாக அவரது பேட்டிங்கின் மிகப்பெரிய சிறப்பு அவரது டைமிங். அவர் ஒவ்வொரு பந்தையும் எல்லைக் கோட்டிற்கு வெளியே அனுப்ப முயற்சிக்கமாட்டார்.
பேட்டிங் சாதனைகள்

பட மூலாதாரம், TWITTER/ SURYA KUMAR YADAV
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து வரலாறு படைத்தார்.
முன்னதாக டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாமிலும், நியூசிலாந்துக்கு எதிராக மவுண்ட் மவுங்குனியிலும் சதம் அடித்துள்ளார்.
இந்த இன்னிங்ஸின் போது, குறைந்த பந்துகளில் 1500 ரன்களை எட்டிய சாதனையை அவர் படைத்தார்.
அவர் இந்த ரன்களை வெறும் 843 பந்துகளில் எடுத்தார். அந்த நேரத்தில், அவரது ஸ்ட்ரைக் ரேட் 180 ஐ விட அதிகமாக இருந்தது.
1500 ரன்களை வேகமாக எட்டிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி, கே.எல்.ராகுல், ஆரோன் பின்ச் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் டி20 போட்டிகளில் 1500 ரன்களை எட்ட 39 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ளனர்.
பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 42 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார். சூர்யகுமார் யாதவ் 43 இன்னிங்ஸ்கள் விளையாடி இந்த சாதனையை படைத்தார்.
இதுவரை, 45 டி20 போட்டிகளில் 43 இன்னிங்ஸ்களில், யாதவ் 46.41 என்ற சராசரியுடன் 1578 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் அடங்கும்.
அவரது இதுவரையிலான சிறந்த ஸ்கோர் 117 ரன்கள். அவர் தனது மூன்றாவது சதத்தை 45 பந்துகளில் அடித்தார்.
இலங்கைக்கு எதிராக ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் சதம் அடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக நான்கு சதங்களையும், சூர்யகுமார் யாதவ், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் தலா மூன்று சதங்களையும் அடித்துள்ளனர்.
இருப்பினும் சூர்யகுமாரின் சிறப்பு என்னவென்றால், அவர் மூன்றாவது அல்லது அதற்குப் பிறகு பேட்டிங் செய்ய வந்து இந்த மூன்று சதங்களையும் அடித்துள்ளார்.

பட மூலாதாரம், TWITTER/ SURYA KUMAR YADAV
சதங்கள் அடித்த மற்ற எல்லா பேட்ஸ்மேன்களும் ஓப்பனிங் செய்து இந்த சாதனையை படைத்துள்ளனர். ஓப்பனிங் செய்யும்போது அதிக பந்துகளை விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
கண் இமைக்கும் நேரத்தில் களத்தில் செட்டில் ஆகிவிடுவதால் சூர்யகுமார் யாதவ் அனைவரிடமிருந்தும் தனித்து நிற்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எதிர்கொண்ட முதல் பந்தை சிக்ஸர் அடித்தார்.
முதல் பந்தில் அவரது ஸ்டிரைக் ரேட் 154க்கும் அதிகம். ஸ்டிரைக் ரேட் மற்றும் குறைந்தபட்சம் 100 பந்துகள் விளையாடுவதற்கான திறன் அடிப்படையில் ஜேம்ஸ் நீஷம் (156.82) மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் (172.73) ஆகியோர் சூர்யகுமார் யாதவை விட முன்னிலையில் உள்ளனர்.
ஆனால் நீஷமும் ஸ்டோனிஸும் ஐந்தாவது அல்லது அதற்கும் கீழே விளையாட வருகிறார்கள். டி20 கிரிக்கெட்டில் அந்த நேரத்தில் பெரிய ஷாட்களை விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் சூர்யகுமார் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் விளையாடுகிறார். அங்கு அவர் அணியின் இன்னிங்ஸை கட்டமைக்கும் சவாலை எதிர்கொள்கிறார்.
உதாரணமாக இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், ஆறாவது ஓவரில் நான்காம் நம்பர் பேட்ஸ்மேனாக பேட்டிங் செய்ய வெளியே வந்தார்.
இன்னிங்ஸில் 11 பந்துகள் மீதமிருந்தபோது அவர் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
சூர்யகுமார் தனது இன்னிங்ஸுக்கு வேகத்தைக் கொடுப்பதில் நேரத்தை வீணாக்குவதில்லை, எனவே அவரது மூன்று சதங்களும் 50 பந்துகளுக்கும் குறைவாக விளையாடி அடிக்கப்பட்டவை.
இதுவரை அவர் மொத்தம் 16 இன்னிங்ஸ்களில் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதில் எட்டு இன்னிங்ஸ்களில் அவரது ஸ்டிரைக் ரேட் 200க்கும் மேல் இருந்தது.
அவர் ஷாட்களை விளையாடும்போது கூடுதல் ரிஸ்க் எடுப்பதை பார்க்கமுடிகிறது. ஆனால் அவர் அத்தகைய ஷாட்களை சிந்தித்து விளையாடுகிறார் என்பதையும் உணரமுடிகிறது.
வழக்கத்திற்கு மாறான ஷாட்களை அவர் மிகச்சுலபமாக விளையாடுவதை பார்க்கும்போது, தொழில்நுட்ப ரீதியாக போட்டியின் எந்த வடிவத்திலும் அவர் நீண்ட நேரம் விளையாட முடியும் என்று தெரிகிறது.
அவரைப் பற்றி இந்தியாவின் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் கபில்தேவ், “நூற்றாண்டிற்கு ஒருமுறை இப்படி ஒரு வீரர் வருவார்” என்று கூறியுள்ளார்.
சூர்யகுமார் அபாரமான ஷாட்களை அடிக்கிறார் என்றும், எங்கு வேண்டுமானாலும் அவரால் பந்தை அடிக்க முடியும் என்றும் கபில்தேவ் குறிப்பிட்டார்.
சூர்யகுமார் யாதவ் மணிக்கட்டை பயன்படுத்தி ஆடும் ஷாட்களால் கபில் தேவ் ஈர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. இதன் காரணமாக அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் அழைக்கப்படுகிறார்.
டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு சூர்யகுமார் யாதவ் இதுவரை 27 சிக்சர்களை அடித்துள்ளார். முகமது ரிஸ்வான் 13 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சூர்யகுமாரின் 27 சிக்ஸர்களில் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே டாப் எட்ஜ் மூலம் வந்தவை என்று சொல்லலாம். அதாவது சூர்யகுமார் 25 ஷாட்களை முழுக் கட்டுப்பாட்டுடன் ஆடியிருக்கிறார்.
தேர்ட் மேனுக்கு மேலே பந்தை அடிக்கும் அதே நேரம், அதே போன்ற பந்தை ஸ்கூப் மூலம் ஃபைன் லெக்கை தாண்டி பவுண்டரிக்கு வெளியேயும் அவரால் அனுப்ப முடியும்.
இந்த சிறப்பு காரணமாக அவர் எது சிறிய பவுண்டரி என்பதை முதலில் கண்டுகொள்வார். பொதுவாக விக்கெட்டுக்கு பின்னால் இருக்கும் பவுண்டரி 50 முதல் 60 கெஜம் இருக்கும்.
பயிற்சி மூலம் பெறப்பட்ட திறன்கள்

பட மூலாதாரம், TWITTER/ SURYA KUMAR YADAV
சூர்யகுமார் யாதவ் மணிக்கட்டைப் பயன்படுத்தி விக்கெட்டுக்குப் பின்னால் ஷாட்களை எளிதாக ஆடுவதைப் பார்த்தால், அதை மிகச்சுலபமாக ஆடமுடியும் என்று தோன்றும்.
ஆனால் உண்மை நிலை அது அல்ல. சூர்யகுமார் யாதவ் ஆகட்டும் அல்லது ஏபி டிவில்லியர்ஸ் ஆகட்டும், இவர்கள் நூற்றுக்கணக்கான மணிநேர பயிற்சியின் மூலம் இந்தத் திறமையைப் பெற்றிருக்கிறார்கள்.
”நிறையவே கடின உழைப்பு செய்திருக்கிறேன். ஆனால் அதற்கு முறையான பயிற்சி தேவை. எப்படி ரன்களை அடிப்பீர்கள் என்பதற்கான உங்களின் உத்தியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்," என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
T20 கிரிக்கெட்டில் எதிர்பார்ப்பு மிக அதிகம். அத்தகைய சூழ்நிலையில் பேட்ஸ்மேன் இரண்டாவது, மூன்றாவது மாற்று திட்டத்துடன் விளையாட வேண்டும்.
முதல் திட்டம் தோல்வியடைந்தால், அவர்களிடம் வேறு மாற்றுவழிகள் இருக்க வேண்டும். அதேபோல் பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களைப் பார்த்த பிறகு தங்கள் உத்திகளை உருவாக்குகிறார்கள்.
கடந்த வாரம் இலங்கைக்கு எதிரான ஒரு இன்னிங்ஸுக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ், "சில ஷாட்கள் சிந்தித்து விளையாடப்படுகின்றன. ஆனால் பந்து வீச்சாளர் வித்தியாசமான பந்துகளை வீசினால், நம்மிடம் மற்ற ஷாட்களும் இருக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.
சூர்யகுமார் தனது பேட்டிங்கின் போது களத்தை கவனித்துக்கொண்டே இருப்பார். சிக்ஸர் அடிக்க முயலாமல், எக்ஸ்ட்ரா கவர், மிட்-ஆஃப் ஆகியவற்றில் அவர் பவுண்டரி அடிக்கிறார். அதில் ரிஸ்க் குறைவு.
டெத் ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் 30 யார்ட் வட்டத்திற்குள் ஃபைன் லெக் இடத்தில் ஃபீல்டரை நிறுத்தும்போது மட்டுமே அவர் தனது ஸ்கூப் ஷாட்களைப் விளையாடுகிறார்.
ஒருநாள் போட்டியில் எவ்வளவு நம்பிக்கை?

பட மூலாதாரம், TWITTER/ SURYA KUMAR YADAV
இத்தனை சிறப்புகள் இருக்கும்போதிலும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சூர்யகுமார் யாதவ் தனது வெற்றியை நிலைநாட்டுவாரா என்பது மிக முக்கியமான கேள்வி.
இந்தக்கேள்வி முக்கியமானது. ஏனெனில் இந்தியா இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த உள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சூர்யகுமார் யாதவ் வெற்றி பெறுவார் என்று ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் நம்புகிறார்கள். இதன் காரணமாக டி20 கிரிக்கெட்டின் ஹிட்டர் பேட்ஸ்மேன் மீது அதிக அழுத்தமும் உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் அவ்வளவு திறம்பட செயல்படவில்லை என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவர் இதுவரை 16 போட்டிகளில் 32 ரன் என்ற சராசரியில் 384 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 64 ஆகும்.
இதுவரை 15 ஒருநாள் இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர் இரண்டு முறை அரைசதம் அடித்துள்ளார்.
அதே சமயம் கடந்த ஒன்பது ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.
இந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில், சூர்யகுமாரின் திறமையை மதிப்பிடுவது அவ்வளவு சரியாக இருக்காது. ஏனென்றால் அவருக்குள் தெரியும் நெருப்பு, கிரிக்கெட்டின் எந்த வடிவத்திலும் அவருக்கு வெற்றியை கொடுக்கக்கூடும்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பு, ரஞ்சி டிராபியில் மும்பைக்காக 90 க்கும் அதிகமான ரன்களை எடுத்த சில இன்னிங்ஸ்களை அவர் விளையாடியுள்ளார்.

பட மூலாதாரம், TWITTER/ SURYA KUMAR YADAV
ஷாட்களை அடிக்கும் அவரது திறனையும் சந்தேகிக்க முடியாது. ஆனால் T20, ODI மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்றும் வெவ்வேறு விதமான விளையாட்டுகள் என்பதையும் அவற்றின் தேவைகள் வேறுபட்டவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வீரர் ஒரு வடிவத்தில் வெற்றி பெற்றால், அவர் மற்ற வடிவங்களிலும் சமமாக வெற்றி பெறுவார் என்று சொல்லமுடியாது.
சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் போராட வேண்டியிருந்தது. மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு முறை அவர் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் நல்ல ஃபார்மில் இருந்தபோதிலும்கூட, சிறப்பாக வீசப்படும் பந்துகளை விளையாட சில நேரங்களில் அவர் திணறுகிறார்.
அதிக டி20 போட்டிகளில் விளையாடுவதில் உள்ள குறைபாடுகளில் ஒன்று, பேட்ஸ்மேன் ஒவ்வொரு பந்தையும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே காற்றில் பறக்கவிட முயற்சிப்பதாகும்.
ஆனால், ODI கிரிக்கெட்டில் ஃபீல்டர்களை நிறுத்தும் உத்தி வேறுபட்டது. அதனால்தான் T20 கிரிக்கெட்டில் எந்த ஷாட்களில் பவுண்டரி அடிக்க முடியுமோ, அதே ஷாட்களில் ODI கிரிக்கெட்டில் கேட்ச் அவுட் ஆகமுடியும்.
ஆனால் சூர்யகுமார் யாதவுக்கு சாதகமாக இருக்கும் இன்னொரு திறமை, சுழற்பந்து வீச்சையும் அவர் நன்றாக ஆடத் தெரிந்தவர் என்பதே.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம், அவர் இந்த வடிவத்திலும் ஒரு மேட்ச் வின்னிங் பேட்ஸ்மேனாக ஆகமுடியும்.
அவரது பேட்டிங் ஸ்டைலால் கவரப்பட்டுள்ள பல ஆய்வாளர்கள், டெஸ்ட் அணியிலும் அவருக்கு முறையாக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆண்டு. எனவே ஒருநாள் போட்டிகளில் அவரது வெற்றி, அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













