ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் - மரபுகளை மீறியது யார்?

பட மூலாதாரம், TNDIPR
- எழுதியவர், சிவகுமார் ராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய நிகழ்வுகளால் மரபு மீறல் என்ற வார்த்தைகளே மாநில அரசியலில் ஓங்கி ஒலிக்கிறது. மரபுகளை கண்டிப்பாக பின்பற்றியே தீர வேண்டுமா? மரபுகள் இதுவரை மீறப்பட்டதே இல்லையா? 1995-ம் ஆண்டு அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டி - முதல்வர் ஜெயலலிதா மோதலின் போது நடந்தது என்ன?
உலகெங்கும் ஜனநாயக நாடுகளில் அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் சில நடைமுறைகள் மரபுகளாக வழுவாமல் கடைபிடிக்கப்படுகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
தேசிய அளவில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்த பிரதமர் மோடி தலைமையிலான வலுவான வலதுசாரி அரசு, முந்தைய அரசுகள் கடைபிடித்த நடைமுறைகளை மாற்ற முயலும் போதெல்லாம், மரபு மீறல் என்ற குற்றச்சாட்டுகள் எழுவது வாடிக்கை. அந்த வரிசையில், தமிழ்நாட்டிலும் மரபு மீறல் என்ற புகார்கள் அண்மைக்காலமாக அதிகமாகி வருகின்றன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றிய சிறிது காலத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு மரபு மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகின்றன. ஆளுநர் அரசியல் பேசுகிறார், அரசியல் சாசன பதவியில் இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்.காரராகவே செயல்படுகிறார் என்பன போன்ற புகார்களை எதிர்க்கட்சிகள் அவ்வப்போது எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில்தான், ஆண்டின் தொடக்கத்தில் கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு தயாரித்து அளித்த உரையில் சில குறிப்பிட்ட பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்திருப்பது சலசலப்புக்கு வித்திட்டிருக்கிறது. ஆளுநநரின் செயல் மரபு மீறல் என்று ஆளும் தரப்பும், அவையில் ஆளுநர் இருக்கும் போதே அவருக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மரபுகளை மீறிவிட்டதாக அதிமுகவும் குற்றம்சாட்டுகின்றன. இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் எத்தகைய மரபுகள் கடைபிடிக்கப்படுகின்றன? மரபுகள் இதுகாறும் மீறப்பட்டதே இல்லையா? மரபு மீறல்கள் மிகப்பெரிய ஆபத்துக்கு வித்திடுமா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
'குடியரசுத் தலைவர் மரபு மீறினால் 130 கோடி மக்களின் நிலை என்னவாகும்?'
மரபு மீறல் குறித்த புகார்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசுகையில், "அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கென சில அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. அதன்படி, மாநில அரசின் கொள்கைகளை மட்டுமே ஆளுநர் பிரதிபலிக்க வேண்டும். ஆளுநரின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? அவர் இன்னும் ஆளுநராக நீடிப்பது நியாயமா?" என்று கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், DMK OFFICIAL FACEBOOK PAGE
அவர் மேலும் கூறுகையில், "ஆளுநரைப் போலவே குடியரசுத் தலைவரும் விபரீத முடிவை எடுத்தால், மத்திய அரசின் கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டால் 130 கோடி மக்களின் எதிர்காலம் என்னவாகும்? இதனை கருத்தில் கொண்டு குடியரசுத தலைவரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆளுநர் ஆர்.என்.ரவி விஷயத்தில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
'மரபை சரியாக பின்பற்றவில்லை என்பது முறையாகாது'
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகரும், இன்றைய சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்ட போது, மரபுகளை மீறுவது சரியல்ல என்றார். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் மரபுகளை மீறியதாக அவர் குற்றம்சாட்டினார்.
"பல ஆண்டுகளாக வழிவழியாக பின்பற்றப்படுவதுதான் மரபு. அதை சரியாக செய்யவில்லை என்பது முறையாகாது. அரசு எழுதி கொடுத்ததை அப்படியே படிக்க ஆளுநர் ஒன்றும் பள்ளி மாணவர் இல்லையே. சட்டமன்ற உரையை பொறுத்தவரை ஓரளவுக்கு ஆளுநரின் முடிவே இறுதியானது. மற்றபடி இவர்கள் கொடுத்ததில் எதை படிக்க ஒப்புக் கொண்டார், எதை ஒப்புக்கொள்ளவில்லை என்பது நமக்கு தெரியாது. 90% சரியாக இருந்தால் 10% விஷயங்களை பொருட்படுத்த மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.
'இது மரபு மீறல் அல்ல; விதிமீறல்'
மரபு மீறல் குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்டேசனிடம் கேள்விகளை முன்வைத்த போது, "மரபு மீறல் என்பது பொதுவான வார்த்தை, உண்மையில் இது விதிமீறல்," என்றார். "ஆளுநரின் செயல்பாடு விதிமீறல், நேரடியாக சட்ட மீறல். ஆளுநர் ஆர்.என்.ரவி தனி நபராக சொந்தக் கருத்துகளை பேசலாம். ஆனால், ஓர் ஆளுநராக அதனை செய்யக் கூடாது. தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகள் கூடியுள்ள சட்டப்பேரவையில் அரசின் குரலாகவே அவர் ஒலிக்க வேண்டும். அவரது சொந்த கருத்துகளை தெரியப்படுத்தும் இடம் அதுவல்ல" என்றார் அவர் காட்டமாக.
"தி.மு.க.வின் சித்தாந்தத்தை பேசுமாறு ஆளுநரை நிர்பந்திப்பதா?"

இதற்கு மாறாக, பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசனோ, "ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதி," என்கிறார்.
"தமிழக சட்டப்பேரவையில் மரபுப்படி ஆளுநர் உரையாற்றியுள்ளார். அரசியல் சாசனம் அவருக்கு அளித்த கடமைகளின்படியே செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பதவியை பா.ஜ.க அரசு புதிதாக உருவாக்கவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டணி கட்சிகளை ஏவி விட்டு, ஆளுநரை அவமதித்துள்ளனர்," என்று குற்றம்சாட்டியுள்ளார்.
'வாஜ்பாய் அரசு நியமித்த கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்துக'

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான ரவிக்குமாரிடம் மரபு மீறல் சர்ச்சை குறித்து கருத்து கேட்டோம். "கோயிலுக்குள் செருப்பு அணிந்து செல்லக் கூடாது என்பது காலம் காலமாக நாம் கடைபிடிக்கும் பழக்கம். மரபுகளில் ஒன்று. அதற்காக, கோயிலுக்குள் செருப்பு அணிந்து செல்லும் ஒருவரை நாம் தண்டிக்க முடியாது, கண்டிக்க மட்டுமே முடியும்" என்றார் அவர்.
"1970-களில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரிய கமிஷன், ஆளுநரை தேர்வு செய்யவும், தகுதிகளை நிர்ணயிக்கவும் குழு ஒன்றை அமைப்பதோடு, மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்யவும் பரிந்துரை செய்திருந்தது. அதற்கும் மேலாக, வாஜ்பாய் அரசு அமைத்த வெங்கடாச்சலையா கமிஷனோ, ஆளுநருக்கு மசோதாவை அனுப்பும் நடைமுறையையே ரத்து செய்ய பரிந்துரைத்தது." என்று ரவிக்குமார் சுட்டிக்காட்டினார்.
"ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோத செயல். ஆளுநர்களின் செயல்பாடு குறித்து விவாதிக்க பா.ஜ.க. அல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்ய வேண்டும். மாநில சுயாட்சியை எப்போதும் ஓங்கி ஒலிக்கும் திமுகவே, அதற்கான முன்னெடுப்புகளை முன்னின்று செய்ய வேண்டும்," என்று அவர் உறுதியுடன்.
சென்னாரெட்டி-ஜெயலலிதா மோதல்

"ஆளுநர் உரையில் சில பகுதிகள் விடுபடுவது இதுவே முதல் முறையல்ல" என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷியாம், அதற்கு சான்றாக சில வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டுகிறார்.
"ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், 1994-ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டி அழைக்கப்படவே இல்லை. அடுத்த ஆண்டில், அதாவது 1995-ம் ஆண்டில் தனது உரையில் சில பகுதிகளை ஆளுநர் சென்னாரெட்டி தவிர்க்க, சபாநாயகர் காளிமுத்துவோ, ஆளுநர் சில இடங்களை விட்டுவிட்டாலும் அவர் முழுமையாக வாசித்து விட்டதாகவே பொருள் என்று கூறிவிட்டார்" என்பதை ஷியாம் நினைவூட்டினார்.
"அரசு தயாரித்து அளித்த உரைக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்ததும், அதன் பிரதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தரப்பட்டுவிடும். அதன் பிறகு அதில் எந்த மாற்றத்தையும் யாராலும் தன்னிச்சையாக செய்ய முடியாது. மாற்றம் தேவையென்றால், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியே செய்ய முடியும்." என்று குறிப்பிட்ட அவர், ஆளுநரின் உரை மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் திருத்தத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் போன்றவற்றை சுட்டிக்காட்டினார்.
"ஆளுநர் உரை என்பது வெறும் உரையுடன் முடிந்து விடுவது அல்ல. ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறவில்லை என்றால் ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவே பொருள்படும். அரசுக்கு தர்மசங்கடம் தரும் வகையில் ஆளுநரின் உரை இருக்கும் பட்சத்தில், ஆளும் தரப்பினரின் அதிருப்தி எழுவது இயல்பு என்பதால் தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படும். ஆகவே, ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தது அவசியமே தவிர, மரபு மீறலாக கொள்ள முடியாது" என்பது மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமின் கருத்து.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












