ஆளுநர் உரை புறக்கணிப்பு - திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

பட மூலாதாரம், Twitter/TNDIPR
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு சட்டசபையில் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இதற்காக சட்டபேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்கும் போது, சமீபத்தில் ஆளுநர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் முழக்கம் எழுப்பின.
தமிழ்நாடு மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முழக்கமிட்டவாறே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. மேலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் பாமகவும் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புத்தாண்டில் ஆளுநர் உரை
ஆண்டுதோறும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். 2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது ஆளுநரின் உரையில் அரசின் நிதிநிலை, புதிய திட்டங்கள், அரசின் கொள்கைகள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆண்டு அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்திருந்தார். ஆளுநர் தனது உரையில் ஆங்கிலத்தில் வாசித்த பிறகு, அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டபேரவையில் வாசித்தார். ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வாடிக்கை தான் என்றாலும், இந்த ஆண்டு ஆளுநர் உரையை முன்னிட்டு தமிழ்நாட்டின் அரசியல் களம் சற்று பரப்பரப்பாக இருக்கிறது. இது மட்டுமின்றி, தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா உட்பட 19 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், இது தொடர்பான விவாதமும் ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் எழுந்தது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளியேறிய திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆளுநரின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வெளியேறின.
ஆளுநரும் சர்ச்சை உரைகளும்

பட மூலாதாரம், twitter/rajbhavan_tn
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிக்கும் கருத்துகள் பல நேரங்களில் சர்ச்சையாகி வருகின்றன.
ஆளுநரின் சனாதானத்திற்கு ஆதரவான கருத்துகள் தொடங்கி, இந்தி மொழி, வர்ணாசிரமம், ரிஷிகள் வரை ஆளுநர் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் பல்வேறு தருணங்களில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன. அண்மையில் கூட ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில், "தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்" என்று பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக தமிழ்நாட்டில் பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனத்தை பதிவு செய்திருந்தன.
ஆளுநர் உரையில் என்ன இருக்கும்?

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தற்போது ஆளுநருக்கு எதிரான மனநிலை இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து திமுக தவிர்த்து அதன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், இன்று ஆளுநர் உரைக்கு எதிராக திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என பிபிசி தமிழ், மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயனிடம் கருத்து கேட்டது. இது தொடர்பாக பதிலளித்த அவர், "ஆளுநரின் உரைக்கு எதிராக ஆளுங்கட்சியான திமுக செயல்படாது," எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய போது, ஆளுநர் உரை என்பது அரசின் ஒரு கொள்கை விளக்கக் குறிப்பு. இதில் அரசின் அம்சங்களே பெரும்பாலும் இடம்பெற்று இருக்கும்.
இந்த உரையைப் படிக்கும் பொறுப்பு மட்டுமே ஆளுநருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதனால் ஆளுநர் உரையில் அரசுக்கு சாதகமான அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் நிலையில், ஆளுநரின் உரைக்கு எதிராக திமுக எதிர்வினையாற்ற வாய்ப்பிலை எனத் தான் கருதுவதாகத் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் ஆளுநரின் உரையில், தமிழ்நாட்டின் சிறப்புகள் குறித்தும், சமூகநீதி, திராவிடம் குறித்த அம்சங்களைக் குறிப்பிட்டும் ஆளுநரையே வாசிக்க வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக, கார்த்திகேயன் தெரிவித்தார். அதேபோல், இன்றைய உரையில் திராவிட மாடல் போன்ற விஷயங்கள் இருந்தும் ஆளுநர் அதைத் தவிர்த்துவிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞரின் மரபு

ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் செயல்படக்கூடாது என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் ஒரு மரபு இருந்துள்ளது. அதைப் பின்பற்றி கடந்த கூட்டத்தொடரில் கூட ஆளுநருக்கு எதிராக உறுப்பினர்கள் பேசிய போது, கருணாநிதியின் மரபு குறித்து சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டுள்ளதாக, பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் பத்திரிகையாளர் கார்த்திகேயன்.
கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு
இந்திய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'தமிழ்நாடு' என்ற பெயரைப் பயன்படுத்துவது தவறு என ஆளுநர் பேசியது தவறு என்றும், இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அதனால் ஆளுநரின் இந்தப் போக்கை எதிர்த்து தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிளையும் ஜனநாயக அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஒரே குரலாக ஆளுநருக்கு எதிராக போராட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாலர் கே.பாலகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்டருந்தார். இந்நிலையில், ஆளுநருக்கு உரைக்கு எதிராக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ போன்ற கட்சிகளுடன் அதிமுகவையும் இணைத்து போராட திட்டமிட்டு இருந்ததாக, தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். ஆனால் இன்றைய வெளிநடப்பின் போது, ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணியில் இடம்பெற்றருக்கும் கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவும் வெளிநடப்பு செய்தன. அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வன் தரப்பில் இருந்து யாரும் வெளிநடப்பு செய்யவில்லை. ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியே வந்த காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்தில் முழக்கமிட்டனர். மேலும் தமிழ்நாடு அரசு வழங்கியிருந்த உரையில் இடம்பெற்றிருந்த, திராவிட மாடல், தமிழ்நாடு போன்ற பெயர்களை திட்டமிட்டே அளுநர் புறக்கணித்து அவரது உரையை வாசித்தாக குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆளுநர் உரை
கடந்த ஆண்டு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆளுநர் உரையின் போது, "தமிழ்நாடு சட்டசபையில் முதல்முறையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு கொரொனா தொற்றை சிறப்பாக கையாண்டுள்ளது." "திராவிட கலாச்சாரம் என்பது சமூக நீதி மீது கவனம் செலுத்தக் கூடியது. மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் கொள்கையுடன் அரசு செயல்படுறது. முக்கியமாக பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், ஆதி திராவிடர்களை முன்னேற்றுவதில் திராவிட அரசியல் கொள்கை பெரிய பங்கு வகிக்கிறது," என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













