"ஆளுநரை விசாரிக்கவே முடியாது என்று சொல்ல முடியாது" - ஆளுநர் வழக்கு தள்ளுபடி குறித்து நீதிபதி சந்துரு

பட மூலாதாரம், RN RAVI
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதில், ஆளுநர்கள் நீதிமன்றங்களுக்குப் பதில் சொல்லக் கட்டுப்பட்டவர்கள் இல்லையென்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அவர் எந்தவித சட்டவிதிகளுக்கும் உட்பட்டவர் இல்லையா என்ற விவாதமும் தொடங்கியுள்ளது. அதுகுறித்துக் கேட்டபோது அப்படி எதுவும் இல்லை எனக் கூறுகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுவையில் உள்ள ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராகவும் பதவி வகிப்பதால், அவர் ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளை வகிப்பதாகக் கூறி அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ரவி, அந்த அறக்கட்டளை மூலமாக அவருக்குத் தரப்படும் ஆதாயத்தைப் பெறுவதால், அவர் எந்தத் தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என்று அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, ஆளுநருக்கு அரசியல் சாசனம் சட்டப் பாதுகாப்பு வழங்கியிருந்தாலும், அது ஆளுநர் என்ற பதவியின் செயல்பாடுகள் தொடர்பானதுதான் என்றும் தனிப்பட்ட முறையில் அவரது செயல்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடர முடியும் என்றும் மனுதாரர் கண்ணதாசனின் தரப்பு வாதிட்டது. மேலும் பல மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பியுள்ளன என்றும் வாதிட்டது.
ஆனால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவரோ, ஆளுநர்களோ நீதிமன்றங்களுக்கு பதில் சொல்லக் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்று தெரிவித்தனர்.
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 361ன் படி, பதவியில் இருக்கும் சமயத்தில், ஆளுநருக்கு இருக்கும் விலக்குரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதனால், தமிழக ஆளுநர் ரவி, இரட்டை பதவி வகிப்பததாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இந்திய அரசிலமைப்பு சட்ட விதி 361 சொல்வது என்ன ?
தமிழக ஆளுநர் ரவி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்தும், இந்திய அரசிலமைப்பு சட்ட விதி 361இன் படி ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்குரிமை குறித்தும் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருவிடம் பேசினோம்.
பிபிசி தமிழிடம் பேசிய நீதிபதி சந்துரு, ''ஆளுநருக்கு சில விலக்குரிமை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்பது சரிதான். ஆனால் அவரை விசாரிக்கவே முடியாது என்று சொல்ல முடியாது. அதாவது உரிமையியல் வழக்கு (சிவில் வழக்கு) மற்றும் குற்றவியல் வழக்கு(கிரிமினல் வழக்கு) ஆகிய இரண்டு வழக்குகளில் ஆளுநரை நீதிமன்றம் விசாரிக்க முடியாது.
ஆனால் ஆளுநராக அவர் எடுக்கும் முடிவுகள் குறித்து வழக்கு நடந்தால், அதில் அவரை விசாரணை செய்ய முடியும். அரசியலமைப்பு விதிகளை மீறிச் செயல்பட்டதாக வழக்கு இருந்தால் அவற்றை நீதிமன்றம் விசாரணை செய்யலாம்.
ஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெறும் சட்டவிதி 361 பற்றிப் பேசியதால் தமிழக ஆளுநர் ரவி எந்தவித சட்டவிதிகளுக்கும் உட்பட்டவர் அல்ல என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது,'' என்கிறார் நீதிபதி சந்துரு.

பட மூலாதாரம், KIZHAKKU PATHIPPAGAM
இந்திய அரசியலமைப்பு சட்டவிதி 361 பற்றிப் பேசிய அவர், அதில் உள்ள நான்கு முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டார்.
குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் தனது பதவியின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக எந்தவொரு நீதிமன்றத்திலும் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை.
குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு எதிராக அவரது பதவிக் காலத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் நடத்தப்படக்கூடாது.
குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு எதிராக அவரது பதவிக் காலத்தில் கைது செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ கூடாது.
குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு எதிராக நிவாரணம் கோரப்படும் உரிமையியல் (சிவில்) வழக்குகளில், அவர் பதவி ஏற்பதற்கு முன்னதாகவோ, பதவி ஏற்ற பிறகோ, அவர் தனிப்பட்ட முறையில் செய்த அல்லது செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு செயலுக்கும் அவரது பதவிக் காலத்தின் போது வழக்கு தொடுக்கப்பட்டால், அவருக்கு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் வழங்கப்படவேண்டும். பதில் தருவதற்கு அவருக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் தரப்படவேண்டும்.
இந்தியாவில் இதுவரை ஆளுநர்கள் மீதான வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதா என்று வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம். ''பல வழக்குகள் நீதிமன்றங்களில் ஆளுநர்களுக்கு எதிராகப் பதிவாகியுள்ளன. ஆனால் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆளுநருக்கு உள்ள விலக்குரிமை காரணமாக நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது.
சிவில், கிரிமினல் அல்லாத விவகாரங்களில், வழக்கு பதிவாவதற்கு முன்னதாக, அந்தப் பதவியில் இருப்பவர்கள் தாங்களாகவே பதவியை ராஜனாமா செய்துவிடுவார்கள். இந்த நடைமுறைதான் இந்தியாவில் இதுவரை இருந்து வருகிறது.
அதாவது, அவர் தவறு செய்திருந்தாலும், அந்தப் பதவிக்கு உரிய மரியாதை தரப்படவேண்டும் என்ற கருத்தில், ஆளுநர் பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள்.
சமீப காலத்தில், மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதன் மீது பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்கள் வந்தபோது, அவர் ராஜினாமா செய்தார். இதுபோல பல நேரங்களில் ஆளுநராக இருந்தவர்கள் பதவியில் இருந்து விலகிவிடுவார்கள்,'' என்கிறார் அஜிதா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












