அன்னதானத்தை நம்பியிருந்த ஆதரவற்ற சிறுவன் ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய கதை

ஆதரவற்ற சிறுவன் கோடீஸ்வரன் ஆகிய கதை

பட மூலாதாரம், ASIF ALI

    • எழுதியவர், ஆசிப் அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

புத்தகங்களை நண்பர்களாகக் கொண்டிருக்க வேண்டிய வயதில், ​​துரதிர்ஷ்டவசமாக, உத்தராகண்டின் 'பிரான் காலியார் ஷெரீப்' என்ற இடத்தில் இருக்கும் தர்காவில் ஆதரவற்று வாழ்ந்து கொண்டிருந்தான் ஷாஜேப்.

ஆனால் நிலைமை மாறியது. தர்காவில் அன்ன தானத்தில் உணவருந்திக்கொண்டிருந்த ஓர் அனாதைச் சிறுவனான ஷாஜேப் லட்சக்கணக்கான செல்வத்திற்கு வாரிசாகியுள்ளார்.

இது கற்பனைக் கதையல்ல, நிஜம்.

அதிர்ஷ்டம் ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பது, உலகெங்கிலும் நடப்பதைப் போல பிரான் காலியார் தர்காவிலும் நடந்துள்ளது.

இங்கே ஒரு அனாதை குழந்தை தனது இழந்த குடும்பத்தை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், இப்போது பல லட்சம் மதிப்புள்ள சொத்தின் வாரிசாகவும் ஆகியிருக்கிறான்.

பெற்றோரின் சண்டையால் பாதை மாறிய ஷாஜேபின் வாழ்க்கை

ஷாஜேப் எட்டு வயதுச் சிறுவனாக இருந்தபோது, ​​அவனுடைய வாழ்க்கை முற்றிலும் வேறுபட்ட விதத்தில் இருந்தது. மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார். அப்போது, அவர் தனது தாய் இம்ரானா பேகம் மற்றும் தந்தை முகமது நாவேத் ஆகியோருடன் சஹாரன்பூர் மாவட்டம் 'தியோபந்த்' பகுதியில் உள்ள 'நாகல்' தொகுதியின் 'பாண்டோலி' கிராமத்தில் வசித்து வந்தார்.

ஆனால் அவர் வாழ்க்கை திசை திரும்பியது. 2019 ஆம் ஆண்டில் அவரது தாயார் இம்ரான் பேகம் மற்றும் அவரது கணவர் நாவேத் ஆகியோரிடையே ஒரு பிரச்சினையில் வாக்குவாதம் முற்றியது.

அந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, இம்ரானா தனது மகன் ஷாஜேப்புடன் தனது மாமியார் வீட்டிலிருந்து தனது தாய்வீட்டான யமுனாநகர் (ஹரியானா) சென்றார். ஷாஜேப்பின் தந்தை நாவேத் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.

அவரது மனைவியும் மகனும் வீட்டை விட்டு வெளியேறும்போது நாவேத் படுக்கையில் இருந்தார். அவர் தனது மனைவி இம்ரானா மற்றும் மகன் ஷாஜேப் ஆகியோரின் பிரிவால் துன்பமடைந்திருந்தார்.

நாவேத் இம்ரானாவை மீண்டும் அழைக்க முயன்றார், ஆனால் இம்ரானா வீட்டிற்கு வரத் தயாராக இல்லை. இது மட்டுமின்றி, சில நாட்களுக்குப் பிறகு இம்ரானா பேகம் தனது தொலைபேசி எண்ணையும் மாற்றியுள்ளார்.

ஆதரவற்ற சிறுவன் கோடீஸ்வரன் ஆகிய கதை

பட மூலாதாரம், ASIF ALI

கொரொனாவில் தாயை இழந்த சிறுவன்

காலம் உருண்டது. இதற்கிடையே தன் தாய் வீடான யமுனாநகரை விட்டி, இம்ரானா, தன் மகனுடன் உத்தராகண்டின் ஹரித்வாரில் உள்ள பிரான் கலியாரின் வசிக்கத் தொடங்கினார். 1500 ரூபாய் வாடகையில் ஒரு வீடு எடுத்து, அருகில் உள்ள தர்காவைப் பராமரிக்கும் பணி செய்து பிழைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் உலகையே புரட்டிப்போட்ட கொரொனாவின் ருத்ர தாண்டவத்துக்குத் தனது ஒரே ஆதரவான தாயாரின் உயிரைப் பறி கொடுத்தான் சிறுவன்.

இன்று, வீட்டின் வெல்வெட் சோபாவில் வசதியாக உட்கார்ந்திருக்கும் ஷாஜேப், "அம்மா இறந்த கடைசி நேரத்தில் நான் அவருடன் இருந்தேன்." என்கிறான்.

தர்காவிற்கு வருகை தந்த ஒரு சிலரே தனது தாயார் இம்ரானாவின் இறுதிச் சடங்குகளைச் செய்ததாக ஷாஜேப் கூறினான்.

"நான் மிகவும் அழுதேன், பசித்தால் ​​​​தர்காவில் விநியோகிக்கப்படும் லங்கர் உணவைச் சாப்பிட்டேன். சில நேரங்களில் நான் பசியுடன் தூங்க வேண்டியிருந்தது."

டீக்கடையில் பாத்திரம் கழுவிய அவல நிலை

தெரியாத நகரம், ஆதரவுக்கு யாரும் இல்லை, தலைக்கு மேல் கூரையில்லை. சிறுவன் ஷாஜேப் இப்போது தர்காவின் தெருவில் தனியாக அலையத் தொடங்கினான்.

இங்கிருந்து தொடங்கியது அவனது போராட்டம். பசியை போக்க, ஷாஜேப் அருகில் உள்ள தேநீர் கடையில் வேலை செய்ய ஆரம்பித்தான். வாடிக்கையாளர்களுக்கு சோட்டுவாக மாறி, டீ வழங்குவது, கிளாஸ் கழுவுவது அன்றாடப் பணியாகிவிட்டது.

கடைக்கு வந்த சிலரின் மோசமான நடத்தையையும் ஷாஜேப் சந்திக்க நேர்ந்தது. தினமும் 150 ரூபாய் கிடைக்கும். இவற்றில் முப்பது ரூபாய் மதிப்புக்குப் போர்வை வாடகைக்கு எடுக்க வேண்டியிருந்தது.

சில சமயங்களில் ஷாஜேப் 150 ரூபாயில் கொஞ்சம் பணத்தைச் சேமித்து தர்காவின் காதிமிடம் (வேலைக்காரன்) கொடுத்து வைப்பான்.

தர்கா வேலைக்காரனிடம் இப்போது கூட 600 ரூபாய் இருப்பதாக ஷாஜேப் கூறுகிறான். “மற்ற குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் விளையாட ஆசையாக இருக்கும்.

பள்ளிக்குப் போகும் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம், என் அம்மா, அப்பா, தாத்தா இருந்தால் நானும் பள்ளிக்குச் சென்றிருப்பேன் என்று நினைப்பேன்." என்று கூறுகிறான் ஷாஜேப்.

ஆதரவற்ற சிறுவன் கோடீஸ்வரன் ஆகிய கதை

பட மூலாதாரம், ASIF ALI

ஷாஜேபின் வாழ்க்கை மாறியது எப்படி?

ஒரு நாள் ஷாஜேபின் தூரத்து உறவினர் முபின் அலி, பிரான் கலியாரில் தனது உறவினரைச் சந்திக்க வந்த போது, அந்த வீட்டுச் சிறுவனுடன் விளையாட வந்த ஷாஜேபைச் சந்தித்திருக்கிறார். அவர், அவனது பெயர் மற்றும் ஊரைக் கேட்டிருக்கிறார். சஹாரன்பூர் மணிக்கூண்டின் அருகே வீடு என்றதும் தந்தை மற்றும் தாத்தாவின் பெயரைக் கேட்டிருக்கிறார். தாத்தா பெயர் யாகூப் என்றும் மற்ற உறவினர்களின் பெயர்களையும் கூறியுள்ளான் சிறுவன். அவன் கூறிய தகவலைக் கேட்ட முபின், நீ எங்க வீட்டுப்பையன் பா என்று கூறியுள்ளார்.

தனது மொபைல் போனை எடுத்து, 4 வயது ஷாஜேபின் புகைப்படத்தைக் காட்டியுள்ளார். சிறுவன் உடனே அது தன் படம் தான் என்று கூறியுள்ளான். உடனே முபின் சஹரன் பூரில் உள்ள தனது உறவினர்களுக்குத் தொடர்பு கொண்டு, முழுக் கதையையும் கூறியுள்ளார். அடுத்த நாள் அவனது சித்தப்பா நவாஸ் ஆலம் வந்து தன் வம்ச வாரிசை அழைத்துச் சென்றுள்ளார்.

'ஆதரவற்ற' ஷாஜேப் கோடீஸ்வரனானான்!

இந்தக் கதையைப் பற்றி நன்கறிய, நாம் ஹரித்வாரின் பிரான் கலியாரில் உள்ள சாபிர் சாஹப் தர்காவுக்குச் சென்றோம். அங்கு தான் மூன்றாண்டுகள் ஷாஜேப் கழித்துள்ளான்.

அங்கு முனவ்வர் அலியைச் சந்தித்தோம். முனவ்வர் குடும்பத்தினர் இந்த தர்காவின் எதிர் வீட்டில் வசிக்கின்றனர். அந்த தர்காவில் ஷாஜேப் தனிமையாய்க் கழித்த இடங்களைச் சுற்றிக்காட்டினார் முனவ்வர். பேச்சின் இடையில் அவர், ஷாஜேப் தனது உறவுக் காரச் சிறுவன் என்றும் ஆனால் அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறினார்.

ஆதரவற்ற சிறுவன் கோடீஸ்வரன் ஆகிய கதை

பட மூலாதாரம், ASIF ALI

தர்காவின் தகரக் கூரையின் கீழ் குளிரில் படுத்துத் தூங்கும் சிறுவனைத் தன் வீட்டில் கூப்பிட்டுப் படுக்க வைத்ததைப் பற்றிச் சொன்னார். நான்கைந்து நாட்கள் படுத்திருந்த நேரத்தில் தான் முபின் வந்த நிகழ்வு நடந்ததாகக் கூறினார். முபின் வந்து விசாரித்த பிறகு தான் நாங்கள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்த சிறுவன் அவன் தான் என்று தெரியவந்தது என்று அவர் கூறினார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு அந்தச் சிறுவனின் புகைப்படம் தங்களுக்கும் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அதில் அவன் மிகவும் சிறிய பையனாக இருந்தான் என்றும் அவர் கூறினார். விஷயம் தெரிந்த பிறகு சஹாரன்பூரில் உள்ள அவனது தாத்தாவிற்குத் தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

சாஜேபை பற்றித் தெரிந்தவர்கள் கூறுவது என்ன?

ஷாஜேப் அனாதையாக அலைந்த அந்தப் பகுதியில் அந்தத் தகரக் கூரையின் கீழ், பலர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அதில் சிலர் ஆதரவற்றவர்கள், சிலர் தர்காவுக்கு வந்திருந்த பக்தர்கள். அங்கு இஸ்திகார் என்ற ஒருவரைச் சந்தித்தோம். அங்கு அவர் டீக்கடை வைத்திருக்கிறார். இரவில் தூங்க, மெத்தையும் கம்பளியும் வாடகைக்கு விட்டு வருகிறார். வாடகைக்குக் கம்பளி வாங்கியவர்களில் ஷாஜேபும் ஒருவன் என்று அவர் தெரிவித்தார்.

அங்கு அவன் டீ குடிக்கவும் வந்ததுண்டு என்றும் கம்பளி வாடகைக்குக் காசில்லாத பல நேரத்தில் இலவசமாகவும் தான் கம்பளி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆதரவற்ற சிறுவன் கோடீஸ்வரன் ஆகிய கதை

பட மூலாதாரம், ASIF ALI

ஷாஜேபின் புதிய வாழ்க்கை எப்படி இருக்கிறது?

ஒரு பெரிய வீடு, அனைத்து வசதிகளுடன் கூடிய முழுமையான குடும்பம். இன்று அந்தக் குழந்தையிடம் அனைத்து வசதிகளும் உள்ளன. ஒரு காலத்தில் இவற்றுக்காக அவன் ஏங்கியிருக்கிறான். இப்போது சஹாரன் பூரில் தனது சிறிய தாத்தா ஷா ஆலமின் வீட்டில் சுகமாக வாழ்கிறான் ஷாஜேப்.

உடன், பாட்டி ஷாஜஹான் பேகம், நான்கு சித்தப்பாக்கள், ஃபயாஸ் ஆலம், ரியாஸ் ஆலம், ஷாநவாஸ் ஆலம் மற்றும் நவாஸ் ஆலம் ஆகியோரும் இருக்கிறார்கள். இந்த வீட்டில் ஒன்பது குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடுகிறான் ஷாஜேப்.

சிறிய தாத்தா ஷா ஆலம் யார்?

இன்று ஷாஜேப்பின் வாழ்க்கையுடன் பல உறவுகள் தொடர்புபட்டுள்ளன. முகமது ஷா ஆலம் ஷாஜேப்பின் தந்தை முகமது நாவேத்தின் சித்தப்பா. எனவே, முகமது ஷா ஆலம் ஷாஜேபின் சிறிய தாத்தா ஆகிறார்.

முகமது ஷா ஆலம் இந்தக் குடும்பத்தின் தலைவரும் ஆவார்.

நாங்கள் முகமது ஷா ஆலமிடம் பேசியபோது, ​​இம்ரானாவும் ஷாஜேப்பும் வீட்டை விட்டு வெளியேறிய சிறிது காலத்திற்குப் பிறகு, ஷாஜேப்பின் தந்தை நாவேத் இறந்துவிட்டார் என்று கூறினார்.

ஷாஜேப்பின் தந்தை நாவேத் பதினோரு வயதாக இருந்தபோது, ​​அவரது தாயார் இறந்துவிட்டார், அதன் பிறகு தான் தான் நாவேதையும் வளர்த்ததாக ஷா ஆலம் கூறினார்.

ஆதரவற்ற சிறுவன் கோடீஸ்வரன் ஆகிய கதை

பட மூலாதாரம், ASIF ALI

அந்த நேரத்தில், அவரது மூத்த சகோதரரும், ஷாஜேப்பின் நேரடித் தாத்தாவும் நவேத்தின் தந்தையுமான முகமது யாகூப், இமாச்சல பிரதேசத்தில் பள்ளி ஆசிரியராக இருந்தார்.

ஷாஜேப்பின் தாத்தா யாகூப் இழந்த பேரன் தனது உரிமையைப் பெற வேண்டும் என்று இதயப்பூர்வமான ஆசை கொண்டிருந்தார் என்று கூறுகிறார் ஷா ஆலம்.

முதல் மருமகள் இம்ரானா, ஷாஜேப்புடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் யாகூப், நாவேத்தின் மரணத்தால் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறினார். யாகூப் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

முகமது ஷா ஆலம் சில சொத்து ஆவணங்களைக் காட்டி, ஷாஜேப்பின் தந்தை நாவேத் சொந்தமான சில சொத்துகளைச் சேர்த்ததாகக் கூறினார். அதில் ஒரு வீடும் அடக்கம்.

உத்திரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் தாலுகாவின் நாகல் தொகுதியின் பாண்டோலி கிராமத்தில் இந்தச் சொத்து உள்ளது.

அதன் மதிப்பு இன்று 50 லட்சம் பெறும் என்றும் அவர் கூறினார்.

அந்தச் சொத்து அனைத்தையும் ஷாஜேபின் பெயரில் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆதரவற்ற சிறுவன் கோடீஸ்வரன் ஆகிய கதை

பட மூலாதாரம், ASIF ALI

கனவை நனவாக்க விரும்பும் பாட்டி

ஷாஜேபின் பாட்டி ஷாஹனாஸ் பேகம் பல வருடங்களுக்குப் பிறகு ஷாஜேபைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறார். ஷாஜேபைச் சந்தித்ததில் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

ஷாஜேப் என்ன செய்ய விரும்புகிறானோ, அவனுடைய ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றுவோம். எங்கு படிக்க வேண்டுமோ படிக்கவைப்போம். வேலைக்குச் செல்ல விரும்பினால் செல்லலாம். அவரை மிகவும் அன்புடன் கவனித்துக் கொள்கிறார்கள்.

பதினோரு வயது ஷாஜேப் இப்போது தனது அன்புக்குரியவர்கள் மத்தியில் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார். தான் வளர்ந்ததும் அனாதை இல்லம் திறக்க விரும்புவதாகச் சொல்கிறார்.

காரணம் கேட்டால், “நான் வழி தவறியது போல், வேறு எந்தக் குழந்தையும் வழிதவறிப் போவதை நான் விரும்பவில்லை” என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறார்.

அனாதைகளுக்கு உதவுவதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க விரும்புவதாக ஷாஜேப் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: