நரேந்திர மோதியுடன் நட்பு, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து அதானி வெளிப்படை பேச்சு

பட மூலாதாரம், Getty Images
- "ராகுல் காந்தி ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். ஒரு தொழிலதிபராக நான் அவரைப் பற்றி கருத்து சொல்வது நல்லதல்ல."
- "நிறுவனத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. யார் சொல்வதாலும் அல்ல."
- "இன்று நாங்கள் 22 மாநிலங்களில் தொழில் செய்கிறோம். எல்லா இடங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை. எங்களுக்கு எங்கும் பிரச்னை இல்லை."
- "ராகுல் காந்தியும் எங்களது முதலீட்டைப் பாராட்டியிருந்தார். ராகுல் காந்தியின் கொள்கை வளர்ச்சிக்கு எதிரானது அல்ல என்று நான் நம்புகிறேன்."
- "மோதியிடமிருந்து எந்தத் தனிப்பட்ட உதவியையும் பெற முடியாது. கொள்கை பற்றிய விஷயங்களை பேச முடியும்."
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்தும் நரேந்திர மோதியுடனான தனது நட்பு குறித்தும் பேட்டியில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் விரிவாகப் பேசப்பட்டு வருகிறது.
“அவரால் (ராகுல் காந்தி) மக்களுக்கு அதானி என்ற பெயர் தெரிய வந்தது” என்று அதானி குறிப்பிட்டார்.
அதே நேரம் பிரதமர் நரேந்திர மோதி குறித்துப் பேசிய அவர், 'மோதியிடமிருந்து தனிப்பட்ட முறையில் எந்த உதவியும் பெற முடியாது. ஆனால் மோதியுடன் 'எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது' என்றார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள நரேந்திர மோதி அரசை விமர்சிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நீண்ட காலமாக 'அதானி குழுமத்துடன்' பிரதமரின் 'நட்பை' குறிப்பிட்டு வருகிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த கெளதம் அதானி, ராகுல் காந்தியை தான் மதிப்பதாகவும், அவரது அறிக்கையை அரசியல் சொல் விளையாட்டாகக் கருதுவதாகவும் கூறினார்.
தனியார் செய்தி சேனலான 'இந்தியா டிவி'யுடன் உரையாடிய கெளதம் அதானி, "2014 தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி எங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்கள் அதானி யார் என்பதை அறிய உங்களுக்கு வாய்ப்பளித்தது. அதனால்தான் நான் இன்று இங்கே (நேர்காணல் அளித்த ஸ்டுடியோ) இருக்கிறேன்," என்று கூறினார்.
ராகுல் காந்தி குறித்த கௌதம் அதானியின் கருத்துக்குப் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளால் அதானிக்கு விளக்கம் அளிக்க வேண்டி வந்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர். அதேநேரம் மேலும் சிலர் அதானியின் பதில்களைப் பாராட்டி வருகின்றனர்.
2011 நவம்பர் 26 ஆம் தேதி மும்பையின் தாஜ் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அதே ஹோட்டலில் தான் இருந்ததாகவும் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டதாகவும் அதே நேர்காணலில் அதானி கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், உலகின் மூன்றாவது பெரிய செல்வந்தருமான கெளதம் அதானி ஓர் எளிய வைர வியாபாரியாகத் தனது தொழில் வாழ்கையைத் தொடங்கினார்.
இருப்பினும் இன்று அவரது குழுமம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி, சூரிய ஆற்றல், நிலக்கரி சுரங்கங்கள், சிமெண்ட், வீடுகள் முதல் பெட்ரோ கெமிக்கல்ஸ் வரையிலான துறைகளில் வணிகம் செய்து வருகிறது.
'நாட்டின் ஏழைகளுடைய பணத்தை, நாட்டின் இரண்டு பெரிய வணிகக் குழுக்களுக்கு (அதானி மற்றும் அம்பானி) மத்திய அரசு வழங்கியுள்ளது' என்று, ராகுல் காந்தி பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அதானி சொன்னது என்ன?
பல மாநிலங்களைக் கடந்து, 'பாரத் ஜோடோ யாத்திரை' டெல்லியை வந்தடைந்தபோது ராகுல் காந்தி, 'மத்தியில் மோதி அரசு அல்ல, அம்பானி-அதானி அரசுதான் உள்ளது' என்று மீண்டும் குறிப்பிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து கெளதம் அதானியிடம் கேள்வி எழுப்பியபோது, "ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். ஒரு தொழிலதிபர் என்ற முறையில் அவரைப் பற்றி நான் கருத்து சொல்வது நல்லதல்ல. அவர் மரியாதைக்குரிய தலைவர். அவரும் நாட்டின் முன்னேற்றத்தையே விரும்புகிறார்,” என்று கூறினார்.
"அவரது அறிக்கை அரசியல் ஆர்வம் காரணமாக வருகிறது. ஆனால் நான் அதை அரசியல் சொல் விளையாட்டாகவே கருதுகிறேன்," என்றார்.
“மோதி அரசு துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிவாயு, சுரங்கங்கள், இந்தியாவின் பசுமை எரிசக்தி என்று அனைத்தையும் கெளதம் அதானிக்கு வழங்கிவிட்டது,” என்று கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

பட மூலாதாரம், ANI
பொதுத்துறை வங்கிகளின் கடன் பற்றிய விளக்கம்
அதானி குழுமம் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ள பணம் பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் அவருக்கு இருப்பதாகவும் பொதுப் பணத்தில் அவர் தனது தொழிலைப் பெருக்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்தும் அதானியிடம் கேட்கப்பட்டது.
அவர் இதைப் பற்றியும் தனது வாதத்தை முன்வைத்து, இதுபோன்ற கூற்றுகள் 'தவறு' என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் மற்றும் மோதியுடனான உறவு பற்றி என்ன சொன்னார்?
காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் 68 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அதானி, முதலீட்டை ராகுல் காந்தி பாராட்டியதாகக் கூறினார்.
"ராகுல் காந்தியின் கொள்கை வளர்ச்சிக்கு எதிரானது அல்ல என்று நான் நம்புகிறேன். ஒன்று அரசியல் பேச்சு, மற்றொன்று உண்மையான குற்றச்சாட்டு. உண்மை என்ன என்பதை பொதுமக்கள் தீர்மானிக்கட்டும்," என்றார் அவர்.
அதானி குழுமத்தின் வெற்றிக்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோதியின் கை இருப்பதான குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அதானி, ‘மோதியுடன் பிரச்னை உள்ளவர்களால் மட்டுமே இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன,” என்றார்.
”மோதியிடம் இருந்து தனிப்பட்ட முறையில் எந்த உதவியும் பெற முடியாது. மோதி குஜராத்தின் முதலமைச்சராக 12 ஆண்டுகள் இருந்தார். அவருடன் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது என்று பெருமையுடன் கூறுகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் எதிர்வினைகள்
இந்தப் பேட்டி குறித்து சமூக ஊடகங்களில் பலரும் அதானியை விமர்சித்து வரும் நிலையில், அதானியின் நகைச்சுவை உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ட்விட்டர் பயனாளியான பாரத் பாண்டே, "அதானி எதையும் கண்டுபிடிக்கவில்லை. வங்கிப் பணத்தையும் அரசியல் பலத்தையும் பயன்படுத்தி நிறுவனங்களை வாங்கினார். மக்களின் பணத்தால் கடனைத் திருப்பிச் செலுத்தினார்" என்று ட்வீட் செய்துள்ளார்.
"ராகுல் காந்தி குறித்த அதானியின் பதில் எனக்குப் பிடித்திருந்தது. இந்த நேர்காணலில் வேறு மட்டத்திலான எனெர்ஜி காணப்பட்டது," என்று ஆஷிஷ் பாரீக் எழுதியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பத்திரிக்கையாளர் ரஜத் ஷர்மாவுக்கு பதிலளித்த ட்விட்டர் பயனாளர் ராஜு கே கோகோய், “ராகுல் காந்தியை ஏன் பொருத்தமற்றவர் என்று சொல்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.
ட்விட்டர் பயனர் அஞ்சனா, 'மோதி உடன் இருக்கும்போது அவருக்கு ராகுல் காந்தி ஏன் தேவை? மோதி அவருக்காக 18 மணி நேரம் உழைக்கிறார். இத்தனை அநியாயம் செய்யாதீர்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.
'கௌதம் அதானியை குறிவைத்து ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு கெளதம் அதானியின் பதில் வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது' என்று மற்றொரு ட்விட்டர் பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
'ராகுல் காந்தி குறித்து கருத்து தெரிவித்த கௌதம் அதானி, அவரால்தான் தாம் இங்கு இருப்பதாகக் கூறினார். அத்தகைய நேர்மறையான அணுகுமுறையைப் பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று ட்விட்டர் பயனாளி சுஜாதா குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












