'தமிழ்நாடு' பெயர் சர்ச்சை: ஆளுநர் ரவி கருத்தைத் தொடர்ந்து சூடாகி வரும் விவாதங்கள்

பட மூலாதாரம், TNDIPR
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது டிவிட்டர் தளத்தில் பெரிய சர்ச்சையாகி உள்ளது.
அதைத் தொடர்ந்து, இந்திய அளவில் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தமிழ்நாடு என்ற பெயரைப் பயன்படுத்தவேண்டும் என்றும், இந்தியாவின் ஓர் அங்கம்தான் தமிழ்நாடு என்றும் ட்வீட்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒருசிலர் ஆளுநரின் கருத்துக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்துப் பதிவிட்டு வருகின்றனர்.
சர்ச்சை தொடங்கியது எப்படி?
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
அதில் பங்கு பெற்ற தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "பிரதமர் மோதியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதுவும் மிகக் குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தமிழ்நாடு என்பதற்குப் பதில் தமிழகம் என இருக்க வேண்டும் என்ற கருத்து பற்றிய விவாதம் நடந்து வருகிறது.
ஆளுநர் ரவியின் பேச்சை விமர்சித்துள்ள திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு, ''வர்ணாசிரம உணர்வு, வேதகால சனாதனக் கோட்பாட்டுகளை கையில் வைத்துக் கொண்டு தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்து விட்டது.
அவருக்கு இம்மூன்றும் பிடிக்கவில்லை. தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் இரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச்செல்லும் முடிவை அவர்தான் எடுக்கவேண்டும்,'' என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக எழுத்தாளர் சு வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், ''தியாகி சங்கரலிங்கனார், அறிஞர் அண்ணா. தோழர் பூபேஷ்குப்தா என்று எங்கள் தலைவர்களால் கொன்று வீசப்பட்ட கருத்தை இன்று மீண்டும் ஆளுநர் ரவி தூக்கிக் கொண்டு வருகிறார். பழைய பிணம் என்றாலும் புதிய வண்டுகள் வெளிவரத் தானே செய்யும்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு என்று பெயர் வந்தது எப்படி?
மெட்ராஸ் மாகாணத்திலிருந்து மொழிவாரிய அடிப்படையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிரிந்து சென்றுவிட்டதில் இருந்தே மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை தீவிரமாக இருந்து வந்தது.
பெரியார், சங்கரலிங்கனார், ம.பொ.சிவஞானம், சி.என்.அண்ணாதுரை ஆகியோர் தொடர்ந்து இதுகுறித்துப் பேசி வந்தனர். நாடாளுமன்றத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பூபேஷ் குப்தா இது தொடர்பாக மசோதா ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
1950களின் மத்தியில் சங்கரலிங்கனார் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தில் இறங்கியபோது, அதில் ஒரு கோரிக்கையாக மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமென்ற கோரிக்கை இடம் பெற்றது.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக முன்வைத்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து அவர், தனது உயிரைத் துறந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் பெயர் மாற்றப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஓர் அமைப்பு, ம.பொ. சிவஞானத்தின் தமிழரசு கழகம். 1961ல் மிகத் தீவிரமாக இதற்கான போராட்டங்களை நடத்த ஆரம்பித்தார் ம.பொ. சிவஞானம்.
ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மட்டும் தமிழ்நாடு என்று அழைக்கவும் மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக, 1967இல் சி.என். அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை ஆங்கிலத்திலும் பயன்படுத்துவதை நிறுத்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தமிழ்நாடு என்றே மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடுவதற்கான தீர்மானம் 1967 ஜூலை 18ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்டது.
தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறிய பிறகு, முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, தமிழ்நாடு என மூன்று முறை சொன்னதும், உறுப்பினர்கள் வாழ்க என முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு என்ற சொல்லாடல்தான் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது.
ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்புகள் ஏன்?
தற்போது ஆளுநர் தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை முன்னிறுத்தியுள்ளார். ஆளுநரின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டர் தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் ஏன் முன்னிறுத்தப்படுகிறது, தமிழகம் என்ற சொல்லாடலை பயன்படுத்தவேண்டும் என ஆளுநர் ரவி சொல்வதற்கான பின்னணி என்ன என்று நாம் எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.
பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளர் ஜீவகுமார், தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது எளிதாக நடந்த ஒரு நிகழ்வு இல்லை என்றும் பெரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இந்தப் பெயரைப் பெற்றுள்ளதால், ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
''ஆளுநர் இந்திய நாடு என்ற சொல்லில் ஈர்ப்பு கொண்டவராக இருக்கிறார். பலவிதமான தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நிலப்பகுதியைத்தான் நாடு என்று சொல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை, தமிழ் பேசும் மக்களின் நிலமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு என்ற பெயரைக் கொண்டுள்ளது.
ஒரு காலத்தில் திராவிட நாடு என்ற பெயர் வேண்டும் என்ற நிலைமை மாறி, தமிழ்நாடு என்ற பெயர்தான் சரி என்ற கருத்து எழுந்தது. பலகட்ட அரசியல் போராட்டங்களுக்குப் பின்னர், தமிழ்நாடு என்ற பெயர் நம் மாநிலத்திற்குக் கிடைத்தது. ஆனால் இந்த சொல்லாடலை ஆளுநர் அரசியல்படுத்துகிறார் என்று தோன்றுகிறது,'' என்கிறார் ஜீவகுமார்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ் மொழி குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் ஜீவகுமார், ''தமிழ் மொழி குறித்த பற்று என்பது பல ஆண்டுகளாக மக்களிடம் ஊறிக் கிடக்கிறது. தங்களது மொழியை வைத்து தங்களை தமிழ் மக்கள் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
தமிழர்களுக்கு தனித்த அடையாளம் இருப்பதுகூட ஆளுநருக்கு உறுத்தலாக இருக்கலாம். இந்தியர்கள் என்பதில் நமக்குப் பெருமிதம், அதேநேரம் தமிழர்கள் என்ற அடையாளம் அவசியம் என்று நாம் கருதுகிறோம்.
பிரதமர் மோதி பல நிகழ்வுகளில் தான் தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்துகிறார். அவர் தமிழ் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் தன்னை முன்னிறுத்துகிறார் என்பதால், அவரை ஆளுநர் பின்பற்றுவது சரியாக இருக்கும்.
இதே காசி தமிழ் சங்கமம் நிகழ்வில்தான் மோதி, தமிழ் மொழியின் அடையாளத்தைக் காப்பது இந்தியர்களின் கடமை என்றார். அதை ஆளுநர் செய்வதற்குப் பதிலாக அடையாளத்தை ஏன் வெறுக்கிறார்?'' என்று கேள்வியெழுப்புகிறார் ஜீவகுமார்.
ஆளுநர் தனித்துவத்தை எதிர்க்கிறாரா?
ஆளுநர் தொடர்ந்து பல நிகழ்வுகளில் தொடர்ந்து ஒரே நாடு ஒரே அடையாளம் என்ற கொள்கையைப் பரப்பி வருவது சரியல்ல என்றும், அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போல செயல்படுவதாகத் தோன்றுகிறது என்றும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.
''ஆளுநர் ரவி அரசியல் சாசனப்படி தனது கடமையை நிறைவேற்றுவதை விட ஆர்எஸ்எஸ் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிகிறது. அவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, தற்போது ஆளுநர் என்ற பதவியை வகிக்கிறார்.
இந்திய அரசமைப்பு ஒவ்வோர் இந்தியரின் தனித்த அடையாளங்களைப் பாதுகாக்கப் பல விதிகளைச் சொல்கிறது. ஆனால் ஆளுநர் இந்திய அரசமைப்புக்கு எதிராக செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது,'' என்கிறார்.
மேலும், ''தமிழ்நாடு என்ற பெயருக்கு ஒரு வரலாறு உள்ளது என்பதை அறிந்தவர்தான் ரவி. இந்தியா என்பது தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களைக் கொண்டுள்ள நாடு. ஆனால் ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவத்தையும் இந்தியா அரசமைப்பு ஏற்கிறது.
ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே கல்வி முறை என்ற வரிசையில், தற்போது இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அந்த தனித்துவத்தை அழிப்பதற்குச் சமம்,'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.

பட மூலாதாரம், BADRI SESHADRI/FACEBOOK
''பிரிவினை என்பது திமுகவின் டிஎன்ஏவில் உள்ளது''
திமுக தனித்துவம் என்று சொல்வதை பிரிவினைவாதம் என்று புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் அரசியல் விமர்சகர் பத்ரி சேஷ்திரி. தனித்துவம் என்ற ஒரு கருத்தைப் பயன்படுத்தி, இந்திய நாடு, இந்தியர்கள் என்ற கருத்திலிருந்து பிரிவதைத்தான் திமுகவினர் விரும்புகிறார்கள் என்கிறார் பத்ரி.
''தமிழ்நாடு என்ற சொல்லை விட தமிழகம் என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்று ஆளுநர் சொல்வதில் தவறில்லை. தமிழகத்தில் பிரிவினைவாதம் என்ற தீ கொழுந்துவிட்டு எரிவதால், அதைத் தண்ணீர் கொண்டு அணைக்க அவர் இந்திய ஒற்றுமை என்ற கருத்தைச் சொல்வதில் தவறில்லை.
அவர் பல நிகழ்வுகளில் ஓர் அரசியல் கருத்தை வெளியிடுகிறார் என்றால், அவர் பிரிவினைவாதம் என்ற கருத்தை அகற்றி ஒற்றுமையை அதிகரிக்கும் வேலையைச் செய்கிறார், அவருக்கு அந்த வேலை தரப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.
தமிழ்நாடு என்ற கருத்தை முன்வைப்பவர்கள் பலரும் திமுகவினர்தான், ஒற்றுமையை விரும்புபவர்கள் இந்தப் பிரிவினையை ஏற்கமாட்டார்கள்,'' என்கிறார்.
''திராவிடம் என்று சொல்லிக்கொண்டாலும், தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் அண்டை மாநில தலைவர்களுடன் நட்புறவோடு இருப்பதில்லை. அதனால், இந்தியா என்ற கருத்தை ஆளுநர் முன்வைக்கிறார்.
பாஜகவில் இருப்பவர்களின் டிஎன்ஏவில் இந்துத்துவம் இருப்பதைப்போல திமுகவில் இருப்பவர்களின் டிஎன்ஏவில் பிரிவினைவாதம் என்பது அடங்கியுள்ளது. அதனால், அதற்கு எதிர்வினை தென்படும்போது, அவர்கள் பேசுகிறார்கள்.
திமுகவில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற பிரிவினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் மட்டும்தான் இதுபோன்ற பிரிவினை வெளிப்படுகிறது,'' என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












