விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய தனிப்படை அமைத்த டெல்லி போலீஸ்

பெண் விமானி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய தனிப்படை அமைத்த டெல்லி போலீஸ்

பட மூலாதாரம், Getty Images

ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று டெல்லி காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

“குற்றம் சாட்டப்பட்டவர் முப்பையில் வசிப்பவர். ஆனால், அவர் தற்போது வேறு மாநிலத்தில் இருக்கிறார் என்பதால் போலீசார் அங்குச் சென்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபரை விரைவில் கைது செய்வோம்,” என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

அந்த நபரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் 70 வயது பெண் ஒருவர் மீது மும்பையைச் சேர்ந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்ததாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து போலீசார் ஐபிசி 354, 509, 510 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதோடு, இந்திய விமானச் சட்டம் பிரிவு 23இன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு 30 நாட்களுக்குத் தடை விதித்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. தங்களுடைய விதிகளின் கீழ் இதுவே அதிகபட்சம் செய்யக்கூடியது என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், “இந்த விஷயத்தை ஏர் இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாகப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய இந்த விவகாரத்தில் சட்டரீதியான அமைப்புகளுக்கு உதவுவதில் ஏர் இந்தியா உறுதியாக உள்ளது,” என்று கூறினார்.

மேலும், டெல்லி போலீஸ் ஆணையரிடம் 7 நாட்களில் விரிவான அறிக்கையை வழங்குமாறு மகளிர் ஆணையம் கேட்டுள்ளது.

புதன்கிழமையன்று ஏர் இந்தியா நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து டெல்லி போலீஸ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் இது நடந்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் இதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம், தனது பிரிவுக்குள் இந்தப் பிரச்னையைக் கையாளுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா என்பதைக் கண்டறிவதற்கு விசாரணையை முன்னெடுத்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட 70 வயதான பெண் விமானி, டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், அவருடைய விமானப் பயணத்தை மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது என்றும் விமானத்தின் பிசினஸ் பிரிவில் இது நடந்தது தனக்கு ஏமாற்றம் அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்தத் திகிலூட்டும் சம்பவம், மதிய உணவு பரிமாறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடந்ததாகவும் அந்த நேரத்தில் விமானத்தின் ஒளி விளக்குகள் அணைக்கப்பட்டு அவர் உறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெண் விமானி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய தனிப்படை அமைத்த டெல்லி போலீஸ்

பட மூலாதாரம், Getty Images

அந்த நேரத்தில், போதையில் இருந்த அந்த நபர் எழுந்து அவருடைய இருக்கைக்கு அருகில் வந்து, கால் சட்டையின் ஸிப்பை கழற்றி, சிறுநீர் கழித்ததாகவும் வேறொரு பயணி அந்த நபரை அவருடைய இருக்கைக்குச் செல்லும்படி வலியுறுத்தும் வரை அவர் அந்தச் செயலை நிறுத்தவில்லை என்றும் தனது கடிதத்தில் பாதிக்கப்பட்ட 70 வயது பெண் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில், “ஜே.எஃப்.கென்னடி விமான நிலையத்தில் நான் ஏறிய விமானத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. இதுவரை இப்படியோர் அனுபவத்தை எதிர்கொண்டதே இல்லை.

இந்தச் செயலை, அருகிலிருந்த வேறொரு பயணி நிறுத்துமாறு கூறியபோதும் அவர் உடனடியாக நிறுத்தவில்லை. சில நிமிடங்கள் கழித்தே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இடத்தை மாற்றிக் கொடுக்குமாறு அவர் விமானப் பணியாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் வேறு எந்த இருக்கையும் இல்லையெனக் கூறி மறுத்துவிட்டதாகத் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. விமானத்தின் பெண் பணியாளர் ஒருவர், பணியாளர்கள் அமரக்கூடிய மிகச் சிறிய இருக்கை ஒன்றை வழங்கியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: