டிரெண்டாகும் ஆடியோ - வீடியோ கலாசாரம்: தமிழ்நாடு பாஜகவில் பூதாகரமாகும் பாலியல் புகார்கள்

தமிழ்நாடு அரசியலில் பிரதான எதிர்க்கட்சி ஆக அடையாளப்படுத்திக் கொள்ள மத்தியில் ஆளும் பாஜக முற்படுவதாக பேசப்பட்டு வருகிறது. அந்த கட்சியில் சமீப காலமாக முக்கிய நிர்வாகிகளாக இருப்பவர்கள் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டு கட்சி மேலிடத்துக்கு தொடர் தலைவலியாகி வருகிறது.
குறிப்பாக, 2021-ம் ஆண்டு மத்தியில் அப்போதைய கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை, மத்திய இணையமைச்சராக்கிவிட்டு, விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அண்ணாமலையை மாநில பா.ஜ.க. தலைவராக்கிய பிறகு பாலியல் குற்றச்சாட்டுகள் ஓயாமல் எழுப்பப்பட்டு வருகின்றன. அப்படி பரபரப்பை கூட்டி வரும் சில நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
புயலை கிளப்பிய கே.டி. ராகவன் காணொளி
பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற அடுத்த மாதமே, அப்போதைய மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனுக்கு எதிராக திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. சிறிது காலத்திற்கு முன்னதாக பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட யூ டியூபர் மதன் ரவிச்சந்திரன், கே.டி.ராகவனுக்கு எதிரான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதுடன், அண்ணாமலை ஒப்புதலுடனேயே இதனை தாம் செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோ ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே கே.டி.ராகவன் தனது மாநில பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான கே.டி.ராகவன், அதே ஊடகங்களும், சமூக வலைதளங்களும் பாய்ச்சிய வெளிச்சத்தால்தான் காணாமல் போனார்.
சசிகலா புஷ்பாவுக்கு பாலியல் சீண்டல்
பா.ஜ.க.வில் கே.டி.ராகவன் வகித்த அதே, மாநில பொதுச் செயலாளர் பதவியை வகித்து வரும் பொன்.பாலகணபதி மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் உண்டு. கடந்த செப்டம்பர் மாதம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தப் போவதாக அறிவித்தது.
திருச்சி சூர்யா - டெய்சி ஆடியோ விவகாரம்
அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் பாஜகவின் சிறுபான்மை அணித் தலைவர் டெய்சி சரணை அக்கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணித் தலைவராக இருந்த திருச்சி சூர்யா தகாத வார்த்தைகளால் பேசும் தொலைபேசி ஆடியோ கசிந்தது.

இது கட்சிக்குள் புயலைக் கிளப்ப, பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்குப் பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இருவரும், நாங்கள் "அக்கா - தம்பியாகவே பழகுகிறோம்" என்று குறிப்பிட, அது சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாகிப் போனது.
அடுத்து வந்த நாட்களில், அவரது பதவி பறிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாக, திருச்சி சூர்யா சிவா, அக்கட்சியில் இருந்தே விலகுவதாக அறிவித்தார். இதுதொடர்பான அறிக்கையை அவர் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பட மூலாதாரம், FACEBOOK/ TRICHY SURYA SHIVA
இந்த பிரச்னையில் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு எதிராக விமர்சனக் கருத்துகளை முன்வைத்த, அப்போதைய பா.ஜ.க. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பரிவின் செயலர் காயத்ரி ரகுராமும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அலிஷா அப்துல்லா - திருச்சி சூர்யா பரஸ்பர குற்றச்சாட்டு
திருச்சி சூர்யா அத்துடன் நிற்கவில்லை. கடந்த மாதம், பாஜகவின் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆகிய இருவர் மீதும் சில சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும், தான் அலிஷாவைச் சந்தித்தபோது தான் பேசியவற்றை வீடியோ எடுத்து, அதனைப் பலரிடம் பரப்பி வருவதாகவும் கூறினார்.

சென்னையில் பா.ஜ.க மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அலிஷா அப்துல்லா, திருச்சி சூர்யாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார். அண்ணாமலை பெயரை திருச்சி சூர்யா தவறாக பயன்படுத்தியதாகவும், தனது உடலமைப்பு குறித்து அவர் மோசமாக விமர்சித்ததாகவும் அலிஷா அப்துல்லா குற்றம்சாட்டினார்.
அண்ணாமலை பேச்சுக்கு எதிராக காயத்ரி ரகுராம் போர்க்குரல்
இந்த பிரச்னையில் அலிஷா அப்துல்லாவுக்கு காயத்ரி ரகுராம் ஆதரவு அளித்தார். அத்துடன், ஒரு கூட்டத்தில் 150 பேருக்கு முன்பாக "துபாய் ஹோட்டலில் என்ன செய்தார் எனத் தெரியாதா" என்று அண்ணாமலை பேசியதால் என்னைப் பற்றி பலரும் தவறாகக் கருத வாய்ப்பளித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இறுதியாக, பா.ஜ.க.வில் இருந்தே விலகிவிட்ட காயத்ரி ரகுராம், இதுதொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
அண்ணாமலை தலைவரான பிறகு, மாநில அரசியலில் அதிமுகவை விஞ்சி பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தைப் பிடிக்க பகீரத பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க.விற்கு இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
வெறேந்த கட்சியிலும் இல்லாத வகையில் தமிழ்நாடு பா.ஜ.க.வில் முளைத்துள்ள ஹனி டிராப் (Honye Trap) குற்றச்சாட்டுகளும், ஆடியோ - வீடியோ கலாசாரமும் அக்கட்சியின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் பூதாகரமாக மாறி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












