காயத்ரி ரகுராம் பேட்டி: "பாஜகவில் அண்ணாமலை பெண்களை மோசமாக நடத்துகிறார்" - குற்றச்சாட்டுகள் முழு விவரம்

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கட்சியின் தலைவரே கட்சியில் பணியாற்றும் பெண்கள் குறித்து தவறாகப் பேசுவதாகவும் 'வார் ரூம்' மூலம் தாக்குதல் நடத்துவதாகவும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டியுள்ளார்.
"அண்ணாமலையால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை" என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகியிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவரும் திரைக்கலைஞருமான காயத்ரி ரகுராம்.
அவர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலக வேண்டிய சூழல் எப்படி ஏற்பட்டது என அவர் பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார்.
"சில மாதங்களுக்கு முன்பாக நான் கட்சிப் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தேன். இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த இரண்டு மாதங்களில் என்னை விசாரிக்க வேண்டுமென தொடர்ந்து கோரி வந்தேன். என் தரப்பு விளக்கத்தைக் கேட்க வேண்டுமென மின்னஞ்சலும் அனுப்பியிருந்தேன். இதற்குப் பிறகு, அவர்களுடைய (அண்ணாமலை) 'வார் ரூமி'லிருந்து என்னை மிக மோசமாக ட்விட்டரில் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். கட்சிக்குள்ளிருந்து இதுபோல தாக்குதல் நடத்தும்போது அதைப் பற்றி அண்ணாமலை எதையுமே பேசவில்லை. "ஒரு பெண்ணை இப்படி குறிவைக்காதீர்கள்" என்று கூட சொல்லவில்லை," என்று காயத்ரி கூறினார்.
தொடரும் புகார்கள் - அண்ணாமலை மெளனம்
"இப்போது கடந்த சில மாதங்களாக honey - trap பத்தி மீண்டும் ஊடகங்களில் பேசப்படுகிறது. இது பெண்களுக்கு மிக அபாயகரமான விஷயம். இப்படியிருக்கும்போது, ஒரு கூட்டத்தில் 150 பேருக்கு முன்பாக "துபாய் ஹோட்டலில் என்ன செய்தார் எனத் தெரியாதா" என்று பேசினார் அண்ணாமலை. என்னைப் பற்றி பலரும் தவறாகக் கருத அது ஒரு வாய்ப்பளித்தது. அது குறித்து அண்ணாமலைக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கேட்டேன். அதற்கு அவர் பதிலே சொல்லவில்லை.
இதற்கிடையில் வாரமிருமுறை இதழ் ஒன்றில் அலிஷா அப்துல்லாவுக்கும் எனக்கும் வீடியோ இருப்பதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. அவர்களிடம் ஐந்தாறு 'வார் ரூம்' இருக்கிறது. அவர்கள் நம்மைத் தொடர்ந்து தாக்கிப் பேசும்போது என்ன செய்வது? நான் புகார் கொடுத்து 2 மாதங்களாகிவிட்டது. ஒரு நடவடிக்கையும் இல்லை. இது மன உளைச்சலை ஏற்படுத்தியது.
அலிஷா அப்துல்லாவுக்கு பிரச்சனை வந்தபோது, செய்தியாளர் சந்திப்பை நடத்தி அவர் தரப்பு விளக்கத்தை அளிக்க வைத்தார்கள். அதேபோல, டெய்சிக்கு பிரச்சனை வந்தபோது, அவரையும் செய்தியாளர்களைச் சந்திக்க வைத்தார்கள். ஆனால், அதேபோல எனக்கு பிரச்னை வந்தபோது, நான் தனியாகத்தான் அதை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எந்த விசாரணையுமில்லாமல் தண்டிக்கப்பட்டேன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"போலீஸில் புகார் தருவேன்"

என்னைத் தவிர்ப்பதற்கான காரணம் தெரியவில்லை.
மதன் ரவிச்சந்திரன் விவகாரம் வரும்போது வெளியான ஆடியோவில், தன் அறைக்கு கண்ணாடிக் கதவு போட்டதற்குக் காரணமே, "காயத்ரி, குஷ்பு போன்றவர்கள் தன்னைச் சந்தித்துப் பேசும்போது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்" என்று தெரிவித்தார்.
கட்சியிலிருக்கும் பெண்களை இப்படியா பேசுவது?" என்றார் காயத்ரி ரகுராம்.
தன்னிடம் இருக்கும் ஆடியோ - வீடியோக்களை காவல்துறையிடம் கொடுத்து, காயத்ரி ரகுராம் புகார் அளிக்கப்போவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது குறித்துக் கேட்டபோது, "என்னிடம் எந்த ஆடியோ - வீடியோவும் இல்லை. அவர்தான் தன்னிடம் "வீடியோ இருக்கிறது, வெளியில் விட்டால் அசிங்கமாகிவிடும்" என்கிறார்.
எதற்காக இத்தனை வீடியோக்களை வைத்திருக்க வேண்டும்? அதை காவல்துறையிடம் கொடுக்க வேண்டியதுதானே..? 150 பேருக்கு முன்னாடி, ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு பேசுகிறார். நான் துபாய் சென்றது என் சகோதரர்களைப் போன்ற பாஜக நிர்வாகிகளோடு. அதைப் பற்றி அவ்வளவு மோசமாகப் பேசுகிறார் அண்ணாமலை" என்று குறிப்பிட்டார் காயத்ரி ரகுராம்.
இதற்கிடையில், காயத்ரி ரகுராம் துபாய்க்கு வந்தபோது மிக மோசமாக நடந்துகொண்டதாக, ரவிச்சந்திரன் என்பவர் இரண்டு பக்கப் புகார் ஒன்றைக் கட்சித் தலைமைக்கு அனுப்பியிருக்கிறார்.
இது குறித்து காயத்ரி ரகுராமிடம் கேட்டோம்.
"அந்த ரவி என்பவர் ஜோக்கரைப் போன்றவர். நாங்கள் துபாய்க்குச் சென்றபோது எங்களை வரவேற்கக்கூட விமான நிலையத்திற்கு வரவில்லை. பா.ஜ.கவினர் மூன்று பேர் போயிருந்தோம். நாங்கள் அங்கே சென்றவுடன் சாப்பிட்டோமா, தூங்கினோமா என்று கூட கேட்கவில்லை.
நாங்களேதான் எல்லாவற்றையும் செய்து கொண்டோம். இந்த 'டைகர் ரவி' என்ற நபர் இத்தனை நாட்களாக இந்தக் கடிதத்தை ஏன் காட்டவில்லை. ஏன் இன்றைக்குக் காட்டுகிறார்? நான் விலகுகிறேன் என்ற சொன்ன பிறகு வெளியிடுகிறார்கள். நான் விலகிய பிறகு என்னை அசிங்கப்படுத்தலாம் என நினைக்கிறார்கள்.
அவருக்கு மனைவி இருக்கிறார். என்றைக்காவது அவரது புகைப்படம் வெளியாகியிருக்கிறதா? ஆனால், நாங்கள் தனிப்பட்ட பெண்ணாக கட்சியில் பணியாற்ற வருகிறோம். அதை ஆதரிக்க வேண்டும். உடன் நின்றிருக்க வேண்டும். மாறாக, நீங்களே எங்களைக் கொச்சைப்படுத்துகிறீர்கள். ஏன் என்னிடம் விசாரணை நடத்தி அந்த சமயத்தில் இந்தக் கடிதத்தைக் காட்டவில்லை?
கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் பா.ஜ.கவில் இதுபோல ஆடியோ - வீடியோ சர்ச்சைகளைப் பார்க்கிறோம். கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அது மட்டுமல்லாமல் திருவாரூரைச் சேர்ந்த பெண் ஒருவரும் புகார் அளித்தார். எல்லோருக்கும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
கட்சித் தலைவரே கட்சியில் உள்ள பெண்களைப் பற்றி மோசமாகப் பேசும்போது, பெரும் மன உளைச்சலாக இருந்தது. இரவெல்லாம் இதைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன். முடிவாக கட்சியிலிருந்து விலக முடிவுசெய்தேன் என்று காயத்ரி கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
வேறு கட்சியில் சேர திட்டமா?
நான் சேவைசெய்வதற்காக கட்சிக்கு வந்தேன். ஆனால், மன உளைச்சல்தான் ஏற்பட்டது. யாராவது பெண்களைத் தவறாகப் பேசினால் நாக்கை அறுப்பேன் என்பார். அவரே தவறாகப் பேசியிருக்கிறார். அவரை என்ன செய்வது? 150 பேருக்கு முன்பாக என்னை அவதூறாகப் பேச என்ன உரிமை இருக்கிறது?
டெல்லியில் இருக்கும் அனைவரிடமும் சொன்னேன். நடவடிக்கை எடுப்பார்கள் எனக் காத்திருந்தேன். ஆனால், அவ்வளவு 'ட்ரோல்' செய்தார்கள். எதிர்க்கட்சியினர் 'ட்ரோல்' செய்தால் பரவாயில்லை. ஆனால், இவர்களே செய்தார்கள். என்னுடைய நிலைக்கு அண்ணாமலைதான் காரணம். நல்ல தலைவராக இருந்தால் என்ன அழைத்துப் பேசியிருக்க வேண்டும்.
ஒரு நொடியில், கட்சிக்கு நான் என்ன செய்தேன் எனக் கேட்கிறார்கள். பதிலுக்கு, இந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் எனக் கேட்பேன்.
நான் தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதனால், பிற கட்சிகளில் இருந்துவரும் அழைப்புகள் குறித்துப் பரிசீலிப்பேன். எதற்காக இந்தக் கட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் வேலை பார்த்தேனோ அந்த நோக்கம் சிதைந்துவிட்டது" என்கிறார் காயத்ரி ரகுராம்.
காயத்ரி ரகுராம் விவகாரம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பிரிவோ, மாநிலத் தலைவர் அண்ணாமலையோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துக்களைப் பெற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொள்ள முயன்றோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
அவரது பதில் கிடைத்தவுடன் இந்த செய்தியில் பதிவு செய்கிறோம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












