3 மாதத்தில் உணவுக்கு மட்டும் ரூ.60 லட்சம் செலவா? பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மீது அடுக்கடுக்கான புகார்

சரண்ஜித் சிங் சன்னி மீது ஊழல் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி, தனது ஆட்சிக் காலத்தில் அரசு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை மகனின் திருமணத்திற்கு முறைகேடாக செலவழித்ததாகவும் 3 மாதத்தில் உணவுக்கு மட்டும் 60 லட்சம் ரூபாய் அரசு பணத்தை செலவழித்ததாகவும் சிரோமணி அகாலி தளம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று சரண்ஜித் சிங் சன்னி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரீந்தர் சிங் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். சுமார் 6 மாதங்கள் சன்னி ஆட்சியில் இருந்த நிலையில், அதற்கு பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், சரண்ஜித் சிங் சன்னி ஆட்சியில் இருந்த காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சிரோமணி அகாலி தளம் கட்சி தெரிவித்துள்ளது.

அகாலி தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான பரம்பன்ஸ் சிங் ரோமானா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சம்கவுர் சாகிப்பில் நடைபெற்ற மத நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை சன்னி கையாடல் செய்துவிட்டார் என்றும் அந்த பணத்தை தனது மகனின் திருமணத்துக்கு அவர் செலவிட்டு விட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.

சரண்ஜித் சிங் சன்னி முதலமைச்சராக இருந்த மூன்று மாத காலத்தில் அவர் சாப்பிட்ட உணவுக்கான கட்டணம் மட்டுமே 60 லட்சம் ரூபாய் என்றும் ஒரு குற்றச்சாட்டை அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்று சரண்ஜித் சிங் சன்னி கூறியுள்ளார். மேலும், தனக்கு எதிராக நன்கு திட்டமிட்ட சதி பின்னப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இவை மிகவும் கீழ்த்தரமான குற்றச்சாட்டு என்றும் ஊழல் பணத்தை வீட்டுக்கு கொண்டுவருவது குறித்து நான் நினைத்து பார்த்தது கூட கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

5 நட்சத்திர விடுதியில் இருந்துவந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான உணவுகள்?

ஆட்சியில் இருந்த கடந்த காலங்களிலும் பஞ்சாபை காங்கிரஸ் கட்சி மிக மோசமாக சுரண்டியுள்ளதாக ரோமானா கூறுகிறார்.

செய்தியாளர்க சந்திப்பின்போது இது தொடர்பாக பேசிய அவர், “சரண்ஜித் சிங் சன்னியின் கதைகள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளது. செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்.டி.ஐ. தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சன்னி முதலமைச்சராக இருந்தவரை தினமும் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்னிக்கான உணவு தாஜ் ஹோட்டலில் இருந்து வந்துள்ளது.

ஒரு லிட்டர் ஜூஸை 2,500 ரூபாய்க்கும் ஒரு பிளேட் சாப்பாட்டை 4,000 ரூபாய்க்கும் எப்படி அவர்களால் சாப்பிட முடிந்தது” என்று கேள்வி எழுப்பினார்.

சரண்ஜித் சிங் சன்னி மீது ஊழல் புகார்

பட மூலாதாரம், FACEBOOK/SHIROMANI AKALI DAL

தஸ்தான்-இ-ஷஹாதத் திட்டத்திற்கான நிதியை மகன் திருமணத்துக்கு செலவழித்தாரா?

தொடர்ந்து பேசிய ரோமானா, “பத்திண்டா பகுதியைச் சேர்ந்த ராஜ்விந்தர் சிங் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் சில தரவுகளை அவர்கள் சேகரித்துள்ளனர். சம்கவுர் ஷாகிப் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தஸ்தான- இ-ஷஹாதத் நிகழ்வு நடைபெற்றது. பஞ்சாப் அரசாங்கத்தின் விதிகளின்படி, எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் 21 நாட்கள் காலக்கெடு வழங்க வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் இந்த விதி பின்பற்றப்படவில்லை. இந்த திட்டத்திற்காக 4 ஒப்பந்தங்களை சன்னி அரசு எடுத்துகொண்டது. நவம்பர் 17,2021ல் ஒப்பந்தம் கோரப்பட்டது, அன்றைய தினமே ஒப்பந்தங்களுக்கு ஒப்புதலும் வழங்கக்கப்பட்டன ” என்ற குற்றச்சாட்டையும் தெரிவித்தார்.

ஒருவேளை 21 நாட்களுக்குள்ளாகவே ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டிருந்தால் அது தொடர்பான விளக்கத்தை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், சரண்ஜித் சிங் சன்னி அரசு அதனை செய்யவில்லை என்றும் இதில் இன்னொரு பெரிய விஷயம் என்னவென்றால், நான்கு ஒப்பந்தத்திலும் ஒரே ஏலத்தொகை கோரப்பட்டதுதான் என்றும் அவர் கூறினார்.

“விருந்தினர்களுக்கு தேநீர் வழங்குவது, தற்காலிக மேடை அமைப்பது, பூ அலங்காரம் மற்றும் கூடாரம் அமைப்பது ஆகியவற்றுக்காக இந்த 4 ஒப்பந்தங்களும் கோரப்பட்டன. இதில், ஒரு கப் தேநீர் ரூ.2,000, நாற்காலி வாடகை ரூ.800, மேடையில் ஒளிஒலி அமைப்பதற்கு ரூ.97 லட்சம், சாப்பாடு ஒரு பிளேட்டுக்கு ரூ.2,000 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது” என்று குறிப்பிட்ட ரோமானா, இந்த திட்டத்திற்கான நிதியில் இருந்துதான் சன்னியின் மகன் திருமணத்துக்கு செலவிடப்பட்டது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

திருமண செலவுகள் இந்த நிதியில் இருந்து செலவிடப்படவில்லை என்றால், இந்த செலவுகள் எல்லாம் எந்த கணக்கில் இருந்து செய்யப்பட்டன என்பதை முன்னாள் முதல்வர் சொல்லியாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே நல்ல தொடர்பு இருப்பதாகவும் மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் ரோமானா குற்றம்சாட்டுகிறார்.

“சன்னி ஆகட்டும், சித்து ஆகட்டும் அனைவருமே மவுனமாக உள்ளனர். எல்லோர் மீதும் புகார்கள் இருப்பதால் அரசுக்கு எதிராக யாரும் பேசுவதில்லை. காங்கிரஸ் ஊழலில் ஈடுபட்டுள்ளது, அதனால் சமரசம் செய்து கொண்டு பேச முடியாது. ஆம் ஆத்மி அரசும் சன்னியை கைது செய்யவில்லை. சன்னிக்கு எதிராக புகார் வந்திருந்தால் அவரை கைது செய்து காட்டுங்கள். அப்போதுதான் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்” என்று அவர் கூறினார்.

சரண்ஜித் சிங் சன்னி மீது ஊழல் புகார்

பட மூலாதாரம், ANI

என் புகழை சீர்குலைக்க சதி

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்று சன்னி தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி ஊடகத்திடம் பேசிய அவர், “இது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் யாரோ ஒருநபரால் திரிக்கப்பட்டது. என் புகழை சீர்குலைக்க திட்டமிடப்பட்ட சதி ” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ எனது மகனின் திருமணம் அக்டோபர் 10ம் தேதி நடைபெற்றது. அப்போதுவரை தஸ்தான்-இ-ஷஹாதத் தொடர்பாக எந்த திட்டமிடலும் இல்லை. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெறவில்லை. திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்துதான் இந்த நிகழ்வு நடைபெற்றது. எனவே, இதற்கும் திருமணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மீது குற்றம் சாட்ட விரும்பினால் குற்றம் சாட்டுங்கள். என்னை கைது செய்ய விரும்பினால், கைது செய்யுங்கள். ஆனால் இதுபோன்று அவமானப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. ” என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பதவியில் இருந்து இறங்கியதில் இருந்து தன்னை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்ட அவர்,“முஸிவாலா வீட்டுக்கு நான் முதன்முறையாக சென்றபோது, அங்கே சென்றால் உங்களை கைது செய்வோம் என்று வழியிலேயே எனக்கு அழைப்பு வந்தது. எனது வங்கி கணக்கு மற்றும் நிலம் தொடர்பான விபரங்கள் கசிந்த பின்னர், அனைத்து இடங்களிலும் நான் விசாரிக்கப்படுகிறேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள், ஆனால் தள்ள வேண்டாம் என்று நான் சொல்கிறேன். இன்னும் நீங்கள் என்ன செய்ய விரும்பினாலும் நான் தயாராக இருக்கிறேன் ”என்று தெரிவித்தார்.

சரண்ஜித் சிங் சன்னி மீது ஊழல் புகார்

பட மூலாதாரம், FACEBOOK/ CHARANJIT SINGH CHANNI

பழிவாங்கும் செயலாக உணர்கிறேன்

இவற்றுக்கு பின்னால் பழிவாங்கும் எண்ணம் இருப்பதாக சரண்ஜித் சிங் சன்னி கூறுகிறார். “ஊழல் இல்லாத பஞ்சாப்பாக மாறுவதற்கு பதிலாக காங்கிரஸ் இல்லாத பஞ்சாப்பாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற தாக்குதல்களை நான் முன்பும் எதிர்கொண்டுள்ளேன். அரசுகள் இதை முன்னரே பார்த்திருக்கின்றன, 2007ல் என் சகோதரனை உள்ளே போட்டார்கள், எங்களை 6 மாதங்கள் தூங்க விடவில்லை, வீடு முழுவதும் சூறையாடப்பட்டது, என் சகோதரன் சித்திரவதை செய்யப்பட்டான், எதுவும் வெளியே வரவில்லை. அதே அரசாங்கம் அந்த வழக்கை வாபஸ் பெற்றது” என்று அவர் தெரிவித்தார்.

பஞ்சாப் மக்களுக்கும், எந்த காங்கிரஸ் சகோதரருக்கும், எந்த தொழிலாளிக்கும் வேண்டுகோள் விடுத்து நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். நான் என் கிராமத்தில் தங்குவேன்.

மூன்று மாதங்களில் பஞ்சாப் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டதா? இது மிகப்பெரிய சதி, ஆனால் நான் இது குறித்து கவலைப்பட மாட்டேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் என்று அவர் கூறினார்.

60 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவுகள் உண்ணப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் மது அருந்துவதில்லை, மாமிசமோ முட்டையோ சாப்பிடுவது இல்லை. ரொட்டி மட்டுமே சாப்பிடுகிறேன். என் வீட்டில் உள்ள சமையலறையை பாருங்கள். எனக்கான உணவு வேறு விதமாக செய்யப்படுகிறது. வெளியில் இருந்து உணவுகளை நான் ஆர்டர் செய்வது இல்லை. இதேபோல், டின்னருக்கு விருந்தினர்களை நான் அழைப்பதும் இல்லை” என விளக்கமளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: