“பணமதிப்பிழப்பு எளிய மக்கள் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்” – 2016இல் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய அரசு 2016ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதியன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது. அதுகுறித்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அந்த நடவடிக்கை செல்லும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
அந்த நடவடிக்கையின்போது, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வழங்கப்பட்ட 52 நாட்கள் கால அவகாசம் நியாயமற்றது இல்லை என்று நீதிபதி நாகரத்னா தவிர அமர்வின் மற்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். ஆனால், உண்மையில் அந்த 52 நாட்கள் போதவில்லை என்பது மட்டுமின்றி தான் நடைமுறையில் பல சிக்கல்களை எதிர்கொண்டதாகக் கூறுகிறார் தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜே.ஜேம்ஸ்.
கடந்த 1978ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்குக் கால அவகாசமாக 3 நாட்கள் வழங்கப்பட்டு, பிறகு மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட நீதிபதி கவாய், தனது தீர்ப்பில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் அரசின் முடிவெடுக்கும் செயல்முறை குறைபாடுடையது இல்லை என்றும் குறிப்பிட்டார்.
“பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது லட்சக்கணக்கானவர்களின் வாழ்வதாரம் பறிக்கப்பட்டது என்பதுதான் நடைமுறை உண்மை,” என்கிறார் தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜே.ஜேம்ஸ்.
சம்பளம்கூடக் கொடுக்க முடியாத நிலை
5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் ஒருவரான நீதிபதி நாகரத்னா, நீதிபதி கவாயின் தீர்ப்புடன் தான் மாறுபடுவதாகக் கூறினார். அவர் கூறிய தீர்ப்பில், “இந்திய ரிசர்வ் வங்கி என்பது இந்திய பொருளாதாரத்தின் பாதுகாப்புச் சுவர். பொருளாதார, நிதி சார்ந்த முடிவுகள் சிறந்தவையா என்பதை இந்த நீதிமன்றம் ஆராய முடியாது,” எனக் கூறியவர், “நாடாளுமன்றம் இல்லாமல் ஜனநாயகம் தழைத்தோங்க முடியாது. ஆகவே, இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது,” எனக் குறிப்பிட்டார்.
பிரிவு 26(2)இன் பொருள், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நன்மை தீமைகளை ஆராய்வது இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி நாகரத்னா, “பிரிவு 26(2)ன் படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கான முன்மொழிவு ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவிடமிருந்து வெளிவர வேண்டும். எந்த பரிசீலனையும் மேற்கொள்ளாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துவிட்டது,” என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, சட்டம் மூலமாகவே பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றவர், ரகசியம் தேவை என்று மத்திய அரசு கருதியிருந்தால் அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றி இருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.
“நீதிபதி நாகரத்னா கூறியுள்ளது நடைமுறையை உணர்ந்து கூறியிருப்பதாகத் தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் முழுக்கவும் இருக்கக்கூடிய ஒரு முடிவை, நாடாளுமன்றத்தில் கூட ஆலோசிக்கப்படாமல், பிரதமரே அறிவித்தார். அது மிகவும் தவறு.

கடந்த சில ஆண்டுகளில், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பல கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. ஆனால், அவற்றுக்கான தொடக்கம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான்,” எனக் கூறுகிறார் ஜேம்ஸ்.
“எங்களைப் போன்ற குறுந்தொழில் செய்வோர், தொழிலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது, வார சம்பளம், நிலுவைத் தொகைகளைத் தருவது என்று அனைத்தையும் பணப் பரிவர்த்தனை மூலம் தான் மேற்கொண்டு வந்தோம். அப்படியிருந்த சூழலில், இந்த நடவடிக்கை வந்தது.
அப்போது எங்களால் பணத்தைத் தேவைக்கேற்ப உடனடியாக எடுக்க முடியவில்லை. ஆகையால் சம்பளம் கொடுக்க முடியாத நிலை, மூலப் பொருட்களை வாங்க முடியாத நிலை போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டன. சொந்தப் பணத்தை எடுக்கவே நாள் கணக்கில் நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது,” என்கிறார்.

பட மூலாதாரம், K.E.Raghunathan
“பணமதிப்பிழப்பு ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்”
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அதன் பாதிப்பு எந்தளவுக்கு இருந்தது என்பது குறித்து அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் இந்தியளவில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. 2017ஆம் ஆண்டில் வெளியான அந்த அறிக்கை, 35% வேலையிழப்பு, 50 சதவீதம் வருமான இழப்பு ஆகியவை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முதல் 34 நாட்களில் நடந்ததாகத் தெரிவித்தது.
2017ஆண்டு மார்ச் வரையிலான நிலவரப்படி, 60 சதவீதம் வேலையிழப்பு, 55 சதவீதம் வியாபார இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறியது. அந்த அறிக்கையின்படி, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது வந்துள்ள உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து, அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அப்போது தேசியத் தலைவராக இருந்த, இப்போது இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவராக இருக்கும் ரகுநாதனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “இந்த நடவடிக்கையால், அன்றாடம் நடக்கும் வசூல்களின் மூலம் பிழைப்பு நடத்துபவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில்முனைவோர், தினக்கூலியைச் சார்ந்திருப்பவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் காணாமல் ஆக்கப்பட்டன,” எனக் கூறினார்.
இதை எளிய மக்கள் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று விவரிக்கும் ரகுநாதன், “இந்த நடவடிக்கையின் மூலம் அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்று பார்த்தால் எதுவுமே இல்லை, கஷ்டப்பட்டதுதான் மிச்சம். இன்றும்கூட, பல வீடுகளில் வயதானோரின் கைகளில் பழைய 500 ரூபாயோ, 1000 ரூபாயோ ஒன்றிரண்டு தாள்கள் இருக்கத்தான் செய்கிறது. அப்போது வரிசையில் நின்று மாற்ற முடியாமல் போன உழைத்தவர்களின் பணம் வெற்றுத் தாளாகிவிட்டது.
இந்த நடவடிக்கை சரியா என்பது கேள்வியில்லை. அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறை சரியா என்பதுதான் கேள்வி. இப்போதாவது எளிய மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை அங்கீகரித்து, குறிப்பிட்ட அளவு வரையறை வைத்து, சில நாட்கள் அவகாசம் கொடுத்து, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தால், அவர்களுக்குப் பயனளித்திருக்கும்,” என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
“பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறில்லை”
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட தனது அனுபவத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் பொருளாதார வல்லுநர் வ.நாகப்பன்.
“நானும் 20,000 ரூபாய்க்கு என்னிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் போய்விட்டது. நான் உழைத்து சம்பாதித்த அந்த 20,000 ரூபாயை நாம் இழக்க நேர்ந்தது.
சரி, தேசத்தின் நலனுக்காக அந்த இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அதன் பலன் சாமானிய மக்களுக்குச் சென்று சேர்ந்ததா என்றால் இல்லையே. சாமானிய மக்களையும் சிரமப்படுத்தி, என்னையும் சிரமப்படுத்தியது ஏன் என்பதுதான் கேள்வி,” எனக் கூறுகிறார்.
அன்று இருந்த நிலையில், சிறு, குறு நிறுவனங்களுக்கு, உழைப்பாளிகளுக்கு, அடித்தட்டு மக்களுக்கு நெருக்கடி இருந்ததில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கிறார் பொருளாதார வல்லுநர் வ.நாகப்பன்.
“ஆனால், அதைத் தாண்டி ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் வருமான வரி கட்டுவோரின் எண்ணிக்கை அதிகமானது. ஜிஎஸ்டி வசூல் அதிகரித்ததற்கும் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.”
இருப்பினும், “அந்த இரண்டு மாத காலம் நெருக்கடிகளுக்கு ஆளான மக்களுக்கு அரசு இழப்பீடு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் அதை மறந்திருக்கலாம். ஆகையால், அது இன்றளவும் நம் மனதில் இருந்துகொண்டே உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறில்லை. அதை நடைமுறைப்படுத்திய விதத்தில் தான் சிக்கல்,” என்று கூறினார்.
“சராசரியாக நான்கு மிஷின்களை வைத்து சிறிதாக ஒரு கம்பெனியை நடத்தி வருபவரோ, பம்ப் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவரோ, மூலப்பொருட்களை வாங்குவதாக இருந்தால், அதை விற்பவர்கள் காசோலை ஆகியவற்றை நம்பிப் பெறுவதற்கு மறுக்கிறார்கள். அந்தச் சூழலில் பணத்தை நேரடியாகக் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியிருந்தது. அது முடியாமல் போனது, உற்பத்தியையே பாதித்தது.
அதிரடி நடவடிக்கையின் மூலம் நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருகிறோம் என்ற பெயரில், இயல்பாக இயங்கிக் கொண்டிருந்த பணப் பரிவர்த்தனையைக் கலைத்துப் போட்டத்தைப் போல் அப்போது நிகழ்ந்துவிட்டது,” என்று கூறுகிறார் ஜேம்ஸ்.
இப்போதும்கூட, மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடுமையான நெருக்கடிகளை குறு, சிறு, நடுத்தர தொழில்கள் முடங்கியுள்ளன என்கிறார் ஜேம்ஸ். “குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு 2016ஆம் ஆண்டில் தொடங்கிய நெருக்கடிப் பயணம், அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி, கொரோனா பேரிடர் என்று அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்தது. ஆனால், இந்த நெருக்கடிகளில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அழைத்துப் பேசுவதே இல்லை. அதை முதலில் செய்ய வேண்டும்,” எனக் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













