கடவுள் மறுப்பாளரான ஆசிரியரை வலுக்கட்டாயமாக கோவிலில் பூஜை செய்ய வைத்த இந்துத்துவா அமைப்புகள்

கடவுள் மறுப்பாளரான ஆசிரியரை வலுக்கட்டாயமாக கோவிலில் பூஜை செய்ய வைத்த இந்துத்துவா அமைப்புகள்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, தெலங்கானாவில் நாத்திகவாதியான தலித் ஆசிரியரை கோவிலுக்கு இழுத்துச் சென்று மன்னிப்பு கேட்க வைத்த இந்துத்துவா அமைப்புகள்.
    • எழுதியவர், பிரவின் சுபம்
    • பதவி, பிபிசி தெலுங்கு

தெலங்கானாவில் நாத்திகவாதியான தலித் சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரை இந்துத்துவா அமைப்புகளும் பாஜக அமைப்பினரும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்தது சர்ச்சையாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள கோத்தகிரி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மல்லமாரி மல்லிகார்ஜூன். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.

கோத்தகிரி மேல்நிலைப்பள்ளியில் இந்து கடவுள்களுக்கு எதிராக மல்லிகார்ஜூன் போதனை செய்வதாகக் கூறி பல்வேறு இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பாஜகவினரும் ஜனவரி 2ஆம் தேதியன்று அந்தப் பள்ளிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மல்லிகார்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அவர்கள் மல்லிகார்ஜூனை அருகிலுள்ள அனுமன் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அங்கு பூஜை செய்ய வைத்து, அவரை மன்னிப்பு கேட்க வைத்ததாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

என்ன சர்ச்சை?

தெலங்கானா, மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள தொலைதூர கிராமம்தான், கோத்தகிரி. இது நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ளது. பிரிக்கப்படாத ஆந்திராவின் முதல் தலித் முதல்வர் தாமோதரம் சஞ்சீவய்யா கோத்தகிரியில் இந்த ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.

மல்லிமாரி மல்லிகார்ஜூன், கடந்த 4 ஆண்டுகளாக இதே பள்ளியில் தெலுங்கு மொழி கற்பித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், விநாயக சதுர்த்திக்கு நன்கொடை சேகரிப்பதற்குச் சில இளைஞர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால், நாத்திகரான மல்லிகார்ஜூன் தானம் வழங்க மறுத்துவிட்டார்.

“நான் நாத்திகன் என்று அவர்களிடம் சொன்னேன். ‘அதனால் என்ன? நீ நாத்திகராக இருந்தால் என்ன செய்வது? உனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா? கடவுள் இல்லையென்றால் எப்படி கல்வி கற்றாய்?’ என்று அன்றைக்கு இளைஞர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள்,” என்றார் மல்லிகார்ஜூன். அவர்களுக்குப் பதிலளிக்கும்போது, “சரஸ்வதியை நம்பினால்தான் கல்வி கிடைக்குமா? அமெரிக்கா போன்ற நாடுகளில் சரஸ்வதியை மக்கள் நம்புவதில்லை இல்லையா? அவர்கள் கற்கவில்லையா?” என்று மல்லிகார்ஜூன் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆன நிலையில், சமீபத்தில் அவருடைய கருத்துகள் பொதுவெளியில் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து கோத்தகிரி மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று இந்துத்துவா அமைப்பினர் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர்.

கோத்தகிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மண்டல கல்வி அலுவலர் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், இந்துத்துவா அமைப்பினர் பள்ளி முன்பு தர்ணாவில் ஈடுபட்டு மல்லிகார்ஜூனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர். அவர் தனது மாணவர்களுக்கு இந்துக் கடவுள்களுக்கு எதிராகப் பாடம் நடத்துகிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடவுள் மறுப்பாளரான ஆசிரியரை வலுக்கட்டாயமாக கோவிலில் பூஜை செய்ய வைத்த இந்துத்துவா அமைப்புகள்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, ஆசிரியர் மல்லமாரி மல்லிகார்ஜூன்

இதைத் தொடர்ந்து பள்ளி முன்பு மல்லிகார்ஜூன் இந்துத்துவா அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு அவரை ஊர்வலமாக கோத்தகிரியிலுள்ள அனுமன் கோவிலுக்கு அழைத்துச் சென்று பூஜை செய்ய வைத்து, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷங்களை எழுப்ப வைத்தனர். பிறகு, அவருடைய நெற்றியில் ‘செந்தூரம்’ பூசிவிட்டு மன்னிப்பு கேட்க வைத்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

இவையனைத்தும் காவல்துறையினர் முன்னிலையில் நடந்துள்ளது.

‘கிராம எல்லையைத் தாண்ட மாட்டேன் என்று மிரட்டினார்கள்’

சர்ச்சை வெடித்த கோத்தகிரி மேல்நிலைப்பள்ளியை பிபிசி பார்வையிட்டது.

தனது நம்பிக்கைக்கு எதிராக மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மல்லிகார்ஜூன் கூறுகிறார்.

“மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்தப் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற மாட்டாய். பள்ளி வாசலைத் தாண்ட மாட்டாய்’ என்றார்கள். எந்த நொடியும் என்னைத் தாக்குவதற்குத் தயாராக இருந்தார்கள். நிலைமை இப்படியிருந்ததால், சர்ச்சையை நீடிக்க விரும்பாமல், என் விருப்பதிற்கு மாறாக அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, நான் தவறு செய்ததாக அவர்களிடம் கூறினேன்.

அங்கு நிலவிய சூழல் காரணமாகத்தான் நான் மன்னிப்பு கேட்டேன். நான் செய்தது தவறு இல்லை.

ஆனால், பள்ளியில் மன்னிப்பு கேட்டது போதாது எனக் கூறினார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாததால் கோவிலுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி என்னை வலுக்கட்டாயமாக அனுமன் கோவிலுக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கே கடவுளைப் புகழ்ந்து பாடும்படி என்னை வற்புறுத்தி, என் நெற்றியில் செந்தூரத்தைப் பூசி மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.

சரஸ்வதியை வணங்கக்கூடாது என்றோ, பூஜை செய்யக்கூடாது என்றோ நான் சொல்லவில்லை. வகுப்பில் மட்டுமில்லை, வகுப்பிற்கு வெளியிலும்கூட நான் அதைச் சொன்னதில்லை,” என்று பிபிசியிடம் விளக்கினார் மல்லிகார்ஜூன்.

கடவுள் மறுப்பாளரான ஆசிரியரை வலுக்கட்டாயமாக கோவிலில் பூஜை செய்ய வைத்த இந்துத்துவா அமைப்புகள்

‘இந்து விரோத கருத்துகளை வளர்க்கிறார்கள்’

பாஜக தலைவர்கள் கூறுகையில், “கடந்த காலங்களில் அவரது ‘இந்து எதிர்ப்பு’ அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தாலும், அவை சமீபத்தில் வெளிவந்ததால் நாங்கள் மன்னிப்பு கேட்குமாறு கூறினோம்,” என்றனர்.

“மல்லிகார்ஜூன் பள்ளியில் இந்துக்களுக்கு எதிரான விஷயங்களை மாணவர்களுக்குப் போதிப்பதால் நாங்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினோம். அவரிடம் இருந்து நாங்கள் வலுக்கட்டாயமாக மன்னிப்பை வாங்கவில்லை. அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அனுமன் கோவிலுக்கு வந்தார்.

கற்பிப்பதையே பணியாகக் கொண்ட ஓர் ஆசிரியர் எப்படி இந்துக் கடவுள்களை தவறாகப் பேச முடியும்? இந்த நாட்டில் பல கிராமங்களில் ஆசிரியர்களும் கிராம மக்களும் இணைந்து சரஸ்வதி சிலைகளை நிறுவுகின்றன. அவர் சரஸ்வதி தேவியை தவறாகப் பேசுகிறார். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

கிறிஸ்தவ மிஷனரிகள் இப்போது பள்ளிகளில் நுழைந்துள்ளனர். ஆசிரியர்கள் இப்படி மாறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?மாநிலத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் இந்து தெய்வங்கள், ஐயப்பன், சரஸ்வதியை சுற்றியே உள்ளன. இந்தச் சம்பவத்தில் இந்த ஆசிரியருடைய வீடியோவும் சமீபத்தில் வெளியானது. எனவே இப்போது அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம்.

அவர் கடவுளுக்கு எதிராகப் பேசியதால், கடவுள் முன்னிலையில் மன்னிப்பு கேட்கச் சொன்னோம். அவரும் அதற்கு சம்மதித்தார். நாங்கள் அவரை வற்புறுத்தவில்லை,” என்று கோத்தகிரி மண்டல பாஜக தலைவர் காபுகண்ட்லா ஸ்ரீனிவாஸ் பிபிசியிடம் கூறினார்.

கடவுள் மறுப்பாளரான ஆசிரியரை வலுக்கட்டாயமாக கோவிலில் பூஜை செய்ய வைத்த இந்துத்துவா அமைப்புகள்

பள்ளி தலைமை ஆசிரியர் என்ன சொல்கிறார்?

கோத்தகிரி ஜில்லா பரிஷத் மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றன்ர். இவர்களுக்கு 30 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.

“எங்கள் பள்ளியில் கடவுள்களுக்கு எதிராக யாரும் கற்பிக்கவில்லை. மல்லிகார்ஜூனும் மாணவர்களுக்கு அப்படி எதுவும் சொல்லிக் கொடுப்பதில்லை. வகுப்பிலுள்ள மாணவர்களிடம்கூட விசாரித்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை.

தெலுங்கு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. இந்தப் பள்ளியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். மதம் தொடர்பான எந்தப் பிரச்னையும் பள்ளியில் விவாதத்திற்கு வந்ததில்லை.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இப்படி நடந்திருக்கக் கூடாது. ஆனால், நடந்துவிட்டது,” என்று கோத்தகிரி ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவலிங்க கலாப்பா பிபிசியிடம் கூறினார்.

கடவுள் மறுப்பாளரான ஆசிரியரை வலுக்கட்டாயமாக கோவிலில் பூஜை செய்ய வைத்த இந்துத்துவா அமைப்புகள்
படக்குறிப்பு, சிவலிங்க கலாப்பா, தலைமை ஆசிரியர்

மண்டல கல்வி அதிகாரி முன்னிலையில் மல்லிகார்ஜூன் அனுமன் கோவிலுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சில ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

“அன்று பள்ளி தலைமை ஆசிரியரும் மண்டல கல்வி அதிகாரியும் சம்பவ இடத்தில் இருந்தனர். போராட்டக்காரர்கள் அவர்களிடம் புகாரளித்து நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தால் சரியாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஓர் ஆசிரியரிடம் தவறாக நடந்துகொண்டார்கள். இதுவொரு கேவலமான செயல்,” என்று அந்தப் பள்ளியின் ஆசிரியர் கோபால் காலே கூறினார்.

“மல்லிகார்ஜூனை வலுக்கட்டாயமாக கோவிலுக்கு இழுத்துச் சென்றதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால், போராட்டக்காரர்கள் கோவமாக இருந்தார்கள். போலீசார் முன்னிலையில் கோவிலுக்கு இழுத்துச் சென்றார்கள். நாங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தோம்.

எங்களுக்கு அது பிடிக்கவில்லை. இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடமும் என்னிடமும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளோம்,” என்று கோத்தகிரி மண்டல கல்வி அதிகாரி நாகநாத் பிபிசியிடம் கூறினார்.

‘மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மை எப்படி வளரும்?’

மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான இந்திய அரசமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதல் கொள்கை மாணவர்களின் வாழ்க்கையிலிருந்து தொடங்க வேண்டும் என்று சமூக அமைப்புகள் கூறுகின்றன.

நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று கோத்தகிரி ஆணையம் கூறியுள்ளது. “இன்றைய குழந்தைகளாகவும் நாளைய குடிமக்களாகவும் அறிவியல் மனப்பான்மை உள்ள மாணவர்களால் மட்டுமே பெரிய மனிதர்களாக வளர முடியும்.

தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்று, சமூக மரியாதையைப் பெறுவதற்குப் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து வரும் ஆசிரியர், தான் இழந்த மரியாதையை மீண்டும் பெற வேண்டும்.

மாவட்ட உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்றைய தினம் வெறும் பார்வையாளராக இருந்த காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், 1989ஆம் ஆண்டு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,” என்று பாரத நாஸ்திக சமாஜத்தின் தேசியத் தலைவர் ஜீடி சரையா கூறினார்.

ஆசிரியர் சங்கங்கள் அமைதி காக்கின்றனவா?

கோத்தகிரி ஜில்லா பரிஷத் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட சர்ச்சைக்கு ஆசிரியர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மல்லிகார்ஜூன் ஒரு தலித் ஆசிரியர் என்பதன் காரணமாக, ஆசிரியர்கள் அதிகமாக இருக்கும் அங்கீரிக்கப்பட்ட முற்போக்கு ஆசிரியர் சங்கத்தினர்(PRTU) அமைதி காப்பதாக, தெலங்கானா எஸ்.சி/எஸ்.டி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கொங்கல வெங்கட் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் இருந்தும் இந்த விவகாரத்தில் ஏன் யாருமே உரிய எதிர்வினை ஆற்றவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"இந்த விவகாரம் தாமதமாகவே வெளியில் தெரிய வந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் மல்லிகார்ஜூன் தாமாகவே முன்வந்து மன்னிப்பு கோரியதாகக் கூறப்பட்டது. பின்னர் அவர் மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தப்பட்டார் என்ற உண்மை தெரிய வந்த போது, எங்கள் சங்கம் சார்பாக கண்டனம் தெரிவித்து செய்திக்குறிப்பு வெளியிட்டோம்.

இதை அனைத்து செய்தித்தாள்களும் செய்தியாக வெளியிட்டன. எங்களைப் பொறுத்தவரை ஆசிரியர்களை, ஆசிரியர்களாக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். ஆசிரியர் சங்கத்தில் சாதி என்ற கருத்து ஏதும் இல்லை," என்று அங்கீரிக்கப்பட்ட தெலங்கானாவை சேர்ந்த முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் (PRTU) தலைவர் ஸ்ரீபால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

“ஆசிரியர் சங்கங்களில் சாதி என்று எதுவும் இல்லை. அனைத்து சாதியை சேர்ந்த ஆசிரியர்களும் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு தீண்டாமை எதுவும் கிடையாது. கோத்தகிரி மேல்நிலைப்பள்ளி சம்பவத்தில் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கலாம். எங்கள் பதில் போதுமானதாக இல்லாமல் போய் இருக்கலாம். ஆனால் ஆசிரியர் மீதான தாக்குதலை அனைவரும் கண்டிக்க வேண்டும்,” என்று பிபிசியிடம் பேசிய முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் (MLC) பதூரி சுதாகர் ரெட்டி கூறினார்.

ஆனாலும், தொழிற்சங்கங்களின் தலைவர் மற்றும் செயலாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது பாரபட்சம் பார்க்கப்படுவதாகவும், தலைமை பொறுப்புகளுக்கு நபர்களைத் தேர்வு செய்யும்போது சாதி முக்கியப் பங்கு வகிக்கிறது, என்று பெயர் வெளியிட விரும்பாத வடக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஆசிரியர் சங்கத்தின் மூத்த தலைவர் ஒருவர், பிபிசியிடம் பேசினார்.

இருதரப்பு மீதும் வழக்குப் பதிவு

இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் கோத்தகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். "தான் தாக்கப்பட்டதாகவும், தனது உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாகவும் மல்லிகார்ஜூன் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 353இன் கீழும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மல்லிகார்ஜுன் இந்து கடவுள்களை அவமதித்ததாக காபுகண்ட்லா ஸ்ரீனிவாஸ் அளித்த புகாரின் பேரில், மல்லிகார்ஜுன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று கோத்தகிரி காவல் நிலைய துணை ஆய்வாளர் மச்சேந்திர ரெட்டி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: