இந்தியாவில் பெண்களைவிட அதிகமாக கைபேசி வைத்திருக்கும் ஆண்கள் – டிஜிட்டல் உலகிலும் சமத்துவமின்மை

டிஜிட்டல் சமத்துவமின்மை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் 61% ஆண்களிடம் கைபேசிகள் உள்ளன. ஆனால், 31% பெண்கள் மட்டுமே சொந்தமாகக் கைபேசி வைத்திருப்பதாக ஆக்ஸ்ஃபாம் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பின் 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கை கூறுகிறது.

பாலினம், சாதி, பொருளாதாரம், வாழக்கூடிய பகுதி என்று இந்தியாவில் டிஜிட்டல் சமத்துவமின்மை நிலவுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

திங்கட்கிழமை வெளியான இந்த அறிக்கை, டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான அணுகல் பெரும்பான்மையாக ஆண்களிடமும் நகர்ப்புறம், மேல்-சாதி, உயர் வர்க்கத்தின் கைகளிடமும் இருப்பதாகக் கூறுகிறது.

“பொதுப் பிரிவைச் சேர்ந்த 8 சதவீதம் பேரிடம் ஒரு கணினியோ மடிக்கணினியோ இருக்கிறது. ஆனால், 1% பட்டியல் பழங்குடியினரிடமும் 2% பட்டியல் சாதியினரிடமும் தான் அவை இருக்கின்றன.

கைபேசி மற்றும் கைபேசி இணையத்தைப் பொறுத்தவரை, 2021ஆம் ஆண்டில் ஆண்களோடு ஒப்பிடுகையில் 33% குறைவாகவே பெண்கள் பயன்படுத்தியுள்ளனர்,” என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், “இந்தியாவில் சாதி, மதம், பாலினம், வர்க்கம், வாழக்கூடிய நிலவியல் பகுதி ஆகையவை தொடர்பான வளர்ந்து வரும் சமத்துவமின்மை, வருந்தத்தக்க வகையில் டிஜிட்டல் உலகிலும் பிரதிபலிக்கிறது,” எனக் கூறுகிறது.

ஆக்ஸ்ஃபாம், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் இணைய அணுகல் குறித்த தரவுகளைப் பகுப்பாய்கிறது. மேலும், சொந்தமாகக் கைபேசி வைத்திருத்தல், இணைய வசதி போன்றவற்றை பொது சேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான அணுகல் ஆகியவற்றையும் அந்தத் தரவுகளில் பகுப்பாய்கிறது.

தவிர்க்கமுடியாத அங்கமாக மாறிய டிஜிட்டல் பயன்பாடு

இந்த அறிக்கைப்படி, வேலையின்மையும் டிஜிட்டல் சமத்துவமின்மையில் பங்களிக்கிறது.

பணி நிலைமையைப் பொறுத்து நிரந்தரமாகச் சம்பளம் பெறும் 95 சதவீதம் பேர் சொந்தமாகக் கைபேசி வைத்திருக்கின்றனர்.

ஆனால், வேலை தேடிக் கொண்டிருக்கும் வேலையின்மையால் அவதிப்படும் 50 சதவீதம் பேரிடம் மட்டுமே சொந்தமாகக் கைபேசி உள்ளது.

“உலகம் டிஜிட்டல்மயத்தை நோக்கி வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் அதற்கு நிகராக வேகமெடுத்துள்ளது. ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின்கீழ் அதற்கான முனைப்புகளும் அதிகரித்துள்ளன. இருப்பினும், டிஜிட்டல் முன்னேற்றங்கள் சமத்துவமின்றி உள்ளன.

டிஜிட்டல் சமத்துவமின்மை

பட மூலாதாரம், Getty Images

டிஜிட்டல் சமத்துவமின்மை இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றது. மேலும், அது நாட்டின் சமூக பொருளாதார சமத்துவமின்மையைப் பிரதிபலிக்கின்றது.

டிஜிட்டல் தொடர்பின்றி இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், டிஜிட்டல்மயத்தின் பலன்களை அனுபவிப்பதிலிருந்து ஓரங்கட்டப்பட்ட விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்,” என்று தெரிவித்துள்ளார், ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் தலைமை செயல் அலுவலர் அமிதப் பேஹார்.

பெருந்தொற்றுப் பேரிடர் காரணமாக, டிஜிட்டல் வெளி அனைவருடைய வாழ்விலும் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது. அறிவு மற்றும் தகவல் பகிர்வு, அடிப்படை சேவைகளை அணுகுவதை எளிமைப்படுத்தி, சந்தைகளை நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ளது.

இருப்பினும், இந்தக் கதைகள் ஒருபுறம் மட்டுமே நடைமுறையில் சாத்தியமாகியுள்ளதாகவும் டிஜிட்டல் வெளியின் பயன்களைப் பெறாத விளிம்புநிலை மக்கள், சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை கூறுகிறது.

 “டிஜிட்டல் தொடர்பின்றி வாழும் இந்த சமூகங்கள், டிஜிட்டல் தொடர்பு மூலம் கிடைக்கக்கூடிய பலன்களைப் பெறுவதில்லை.”

டிஜிட்டல் சமத்துவமின்மை

பட மூலாதாரம், Getty Images

டிஜிட்டல் சமத்துவமின்மை – கல்வி, சுகாதார சேவை அணுகலை பாதிக்கும்

இந்த அறிக்கைப்படி, கிராமப்புற மக்கள் தொகையில் 31 சதவீதம் பேரிடம் தான் இணையத்திற்கான அணுகல் உள்ளது.

ஆனால், நகர்ப்புற மக்கள் தொகையில் 67 சதவீதம் பேரிடம் இணைய அணுகல் உள்ளது. இந்த டிஜிட்டல் சமத்துவமின்மை கல்வி, சுகாதாரம், தனிநபர் பொருளாதாரம் ஆகிய முக்கியமான மூன்று துறைகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கல்வித்துறையைப் பொறுத்தவரை, பேரிடர் காலகட்டத்தில் இணையவழிக் கல்வி மிகவும் பிரபலமானது. ஆனால், 9 சதவீதம் மாணவர்களிடம் தான் இணைய வசதியுடனான கணினியை அணுகுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. மேலும் 25 சதவீதம் மாணவர்களிடம் மட்டுமே ஏதாவதொரு கருவியின் மூலம் இணைய வசதியைப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இணையம் மற்றும் இணையத்தை அணுகும் டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகல், சுகாதாரத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறது.

இந்த அறிக்கைப்படி, இணைய அணுகல் இல்லாமல் இருக்கும்போது, ஆரோக்கியம் தொடர்பான முக்கியமான தகவல்களைப் பெறுவது, வளங்களை அணுகுவது தடைப்படுகிறது.

“சுகாதாரம், கல்வி ஆகிய துறைகள் மேன்மேலும் டிஜிட்டல்மயமாகி வரும் நிலையில், இது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்,” எனக் கூறுகிறார் மும்பையைச் சேர்ந்த வரி மற்றும் பொருளாதாரம் குறித்த வழக்கறிஞரும் வல்லுநருமான மெய்யப்பன் நாகப்பன்.

டிஜிட்டல் சமத்துவமின்மை

பட மூலாதாரம், Getty Images

“குறிப்பாக சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை பல தனியார் நிறுவனங்கள் இணையவழி ஆலோசனைகளை வழங்குகின்றன. பொருளாதாரம் அதை நோக்கி முன்னேறி வருகின்றது. ஆகவே அதை அணுக முடியாமல் போகும்போது, அணுக முடிந்தவர்களுக்கும் முடியாதவர்களுக்கும் இடையிலான சமத்துவமின்மை அதிகம் தான் ஆகும்.

இதற்கு ஒரே வழி, அவர்களும் இணையத்தை அணுகும் வகையில் டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதிலும் பொது இடங்களில் இலவச வைஃபை மூலம் இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அந்தச் சமத்துவமின்மையைக் குறைப்பதில் உதவலாம்,” என்கிறார்.

பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் டிஜிட்டல் முன்னேற்றத்தின் பலன்களை டிஜிட்டல் தொடர்பின்றி இருப்போர் அடைய முடியாத நிலையும் நிலவுவதாக ஆக்ஸ்ஃபாம் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், கிராமப் பகுதிகளில், முறையான பொருளாதார சேவைகளை அணுகுவது பட்டியல் பழங்குடிகளிடம் மிகவும் குறைவாக உள்ளது. அதிலிருந்து இரண்டாவது இடத்தில் பட்டியல் சாதிகளும் மூன்றாவது இடத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் குறைவான அணுகலோடு இருக்கின்றன.

“இணைய தொடர்பு மிகவும் குறைவாக இருப்பதும் திறன்பேசி பயன்பாடு குறைவாக இருப்பதும் ஒரு காரணம். அதோடு, டிஜிட்டல் கட்டமைப்புகளும் குறைவாக உள்ளன.

குறைவான விலையில் ஒரு திறன்பேசியை வாங்குவதுகூட இன்று சாத்தியமாகலாம். ஆனால், அனைத்துப் பகுதிகளிலும் தடைபடாத இணைய தொடர்பு கிடைப்பது சிரமம்,” என்கிறார்.

மேலும், “இணைய சேவை நிறுவனங்களும் இதுகுறித்து நீண்டகாலமாக அரசுடன், இதை எப்படி மேம்படுத்துவது, இணைய தொடர்பை அதிகரிப்பது எனப் பேசி வருகின்றனர்.

எளிதில் அணுகமுடியாத பகுதிகளில் வாழும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் இருக்கும் நிலப்பகுதிகளுக்கு அது வருவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்,” எனக் கூறுகிறார்.

ஏழைகளின் வருமானத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் தற்போதைய வருமான சமத்துவமின்மையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் நீண்ட காலம் எடுக்கலாம் எனக் கூறும் அறிக்கை, நியாயமான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது, மறைமுக வரிச் சுமைகளைக் குறைப்பது, சுகாதார மற்றும் கல்வி சேவைகளை எளிமைப்படுத்துவது ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறது.

ஏழ்மையான 20% குடும்பங்களில், 2.7 சதவீதம் குடும்பத்திற்கே கணினி அணுகலும் 8.9 சதவீத இணைய அணுகலுமே உள்ளதாக இந்திய புள்ளியியல் துறையின் 2017-18 தரவுகளை மேற்கோள் காட்டி அறிக்கை கூறுகிறது.

மேலும், அதற்கு மாறாக பொருளாதாரரீதியாக முதல் 20 சதவீதத்திற்குள் இருக்கும் குடும்பங்களில் 27.6% பேர் கணினி அணுகலையும் 50.5% பேர் இணைய அணுகலையும் கொண்டுள்ளனர்.

டிஜிட்டல் சமத்துவமின்மை

பட மூலாதாரம், Getty Images

மாணவர்களில், பணக்காரர்களான 10% பிரிவைச் சேர்ந்த 41% பேர் இணைய வசதியுடன் கூடிய கணினியைக் கொண்டுள்ளனர் என்றும் அதற்கு அடுத்தபடியாக இருக்கும் 10% பணக்கார மாணவர்களிடையே 16% பேரிடம் கணினி மற்றும் இணைய வசதியைக் கொண்டுள்ளனர் என்றும் அறிக்கை கூறுகிறது.

இதுவே 10% ஏழை மாணவர்களிடையே 2% பேர் மட்டுமே இணைய சேவைகளுடனான கணினியைக் கொண்டுள்ளனர். மேலும், 75% பெற்றோர்களும் 84% ஆசிரியர்களும் டிஜிட்டல் கல்விமுறையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

டிஜிட்டல் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்

டிஜிட்டல் சமத்துவமின்மையை சரிசெய்வதற்கு இந்த அறிக்கை சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

டிஜிட்டல் சமத்துவமின்மையைக் களைவதில் மிக முக்கியமானது எளிதில் கிடைக்கும் நிலையை உருவாக்குவது. கிராமங்கள் மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில், இணைய வசதி கிடைப்பது அரிதாக அல்லது மிகவும் கடினமானதாக உள்ளது.

இணைய சேவை வழங்குநர்கள் சமூக வலைப்பின்னல், பொது இடங்களில் வைஃபை மூலம் இணைய சேவை வழங்குதல் போன்றவை மூலமாக இணைய சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

டிஜிட்டல் சமத்துவமின்மை

பட மூலாதாரம், Getty Images

இணைய தொடர்பு அனைவருக்கும் கிடைப்பதற்கு, விலையைக் குறைக்க வேண்டும். டிஜிட்டல் கட்டமைப்புகளில் அரசு முதலீடு செய்வதன் மூலம் விலையைக் குறைப்பதோடு திறன்பேசி பயன்பாட்டிற்கான அணுகலை விரிவுபடுத்தவும் வேண்டும்.

தனியார்களில் ஒருசில மட்டுமே, இணைய சேவைகளில் ஏகபோகம் கொண்டாடும் வகையில் இல்லாமல் அரசு கடுமையான ஒழுங்குமுறையை மேற்கொள்ள வேண்டும். மேலும், கணினி, கைபேசிகள் ஆகியவற்றுக்கான வரிகளை அரசு குறைக்க வேண்டும்.

இவைபோக, டிஜிட்டல் கல்வி குறித்த முகாம்களை குறிப்பாக கிராமப்புறங்களில் நடத்துவது, பள்ளிகளில் தொழில்நுட்பப் பயன்பாட்டைக் கற்றுத் தருவது, பஞ்சாயத்துகளை டிஜிட்டல்மயமாக்குவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள், குழந்தைகள் என்று அனைத்து நுகர்வோருக்கும் கல்விசார் தொழில்நுட்பங்கள், சுகாதாரம் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, கையாள்வது குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும்.

இவற்றோடு, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மட்டுமே சரி என்பதைத் தவிர்த்து, குறைவான தொழில்நுட்பப் பயன்பாடு அல்லது தொழில்நுட்பப் பயன்பாடற்ற தீர்வுகளையும் அங்கீகரிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: