சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: 'எங்களால் ஜிம்முக்குக் கூட செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை மெரினாவில் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பாதை மூலம் கடற்கரைக்கு சென்று தங்கள் மகிழ்ச்சியை சில மாற்றுத்திறனாளிகள் வெளிப்படுத்தியதை பார்த்திருப்போம். இப்படி தமிழ்நாட்டில் எல்லா இடங்களும் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதத்தில் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினால் “இல்லை” என்றே பதில் வருகிறது.
டிசம்பர் 3 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளையும் அவர்களின் உரிமைகளையும் பேசுவதற்கான தினமாக ஐநா சபையால் முன்னெடுக்கப்பட்டது. “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய தீர்வுகள்: அணுகக்கூடிய மற்றும் சமமான உலகத்தைப் படைப்பதில் புதுமையின் பங்கு” என்பதே இந்தாண்டுக்கான கருப்பொருள்.
கல்வி, சுகாதாரம் என பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு, மாற்றுத்திறனாளிகள் அனைத்து சேவைகளையும் அணுகும் விதத்தில் இருக்கிறதா?. இதுதொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக செயல்பட்டு வரும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதன் பிபிசியிடம் பேசினார்.
மாற்றுத்திறனாளிகள் ஒரு சேவையை அணுகுவதை மூன்றாக பிரிக்கலாம் எனக்கூறும் தீபக் அதுகுறித்து விளக்கினார்.
ஓரிடத்தை அணுகுதல்
“மிக அரிதாக செல்லும் அரசு அலுவலகங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், மால்கள் உள்ளிட்டவற்றை எங்களுக்கேற்றவாறு அமைக்க வேண்டும். சென்னையில் 2-3 மால்களில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான பார்க்கிங் வசதிகள் உள்ளன.
தமிழ்நாட்டில் தனியார் கட்டிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கானதாக இல்லை. எத்தனை அடுக்குமாடி குடியிருப்புகள் நாங்கள் அணுகும் விதத்தில் இருக்கின்றன?

பட மூலாதாரம், Deepak Nathan/Facebook
ஓரிடத்தை மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அமைப்பதில் தனியாருக்கும் பொறுப்பு உண்டு. அரசுக்கு மட்டும் இதில் பங்கு இல்லை. ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பங்கு இருக்கிறது.
ஒரு கட்டிடத்திற்கு உரிமம் அளிக்கும்போது மாற்றுத்திறனாளிகள் அதனை அணுகும் விதத்தில் இருக்கிறதா என்பதை பார்த்து அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் எந்தளவுக்கு சமூகம் முதிர்ச்சியடைந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்” என்கிறார்.
சமீபத்தில் தான் பயணம் மேற்கொண்ட பின்லாந்தில் சக்கர நாற்காலி உபயோகிப்பவர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே சென்றால் எல்லா இடங்களுக்கும் அதிலேயே சென்றுவரும் விதத்தில் இருப்பதாக கூறுகிறார் தீபக். அங்கு அமைக்கப்பட்டுள்ளது போல, தமிழ்நாட்டிலும் ரயில் நிலையங்களில் நடைமேடையில் லிஃப்ட், நடைபாதை மேம்பாலமும் அமைக்க வேண்டும் என்கிறார் அவர்.
“மாற்றுத்திறனாளிகளுக்கும் உடல் பருமன் பிரச்னை உள்ளது. நானே உடற்பயிற்சிகூடத்திற்கு செல்ல வேண்டும். ஆனால், நான் சென்று உடற்பயிற்சி செய்வதற்கான ஜிம் இங்கு இல்லை. எல்லா உடற்பயிற்சிக்கூடங்களும் மாடியில் உள்ளன. கீழ் தளத்தில் இல்லை”.

பட மூலாதாரம், Getty Images
சேவைகளை அணுகுதல்
ஆனால், கட்டிடங்களை அணுகுதல் மட்டும் முக்கியம் அல்ல, அங்கு வழங்கப்படும் சேவைகள் மாற்றுத்திறனாளிகளுக்கானதாக இருக்க வேண்டும் என்கிறார், தீபக்.
“குறிப்பாக, பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு என தளம் அமைத்தால் மட்டும் போதாது. கற்றலும் கற்பித்தலும் அவர்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதா? ‘அனைவரையும் உள்ளடக்கிய கல்விமுறை’யை ஏற்படுத்த வேண்டும்.
வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவற்றில் அதன் உள்ளே சென்று சேவைகளை அணுகும் விதத்திலும் இருக்க வேண்டும்,” என்கிறார், தீபக்.
அதுமட்டுமின்றி, பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் தேவை, திரைப்படங்கள் சைகை மொழிபெயர்ப்புடன் இருக்க வேண்டும் எனக்கூறும் அவர், எத்தனை இணையதளங்கள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதத்தில் இருக்கின்றன என்று கேள்வி எழுப்புகிறார்.
இணையதளங்களை வடிவமைக்கும்போது அனைத்து குறைபாடு உடையவர்களும் அணுகும் விதத்தில் W3C (World Wide Web Consortium) வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார நிலை
மூன்றாவதாக, எந்தவொரு பொருளையோ, சேவையையோ பெறுவதற்கான விலை, கட்டணம் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார நிலைக்கேற்றவாறு இருக்க வேண்டும். ஏனெனில், மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் ஏழைகளாக இருக்கிறார்கள் என சர்வதேச புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகள் அவர்கள் ஏழைகளாக இருப்பதற்கான காரணங்களாக அமைகின்றன.
“எனவே, வங்கிச் சேவைகள் உள்ளிட்டவற்றில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதத்தில் சேவைக் கட்டணங்கள் இருக்க வேண்டும்”
எனவே, மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமூகம் உருவாக மூன்றையும் கவனத்தில் வைத்து அனைத்தையும் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஒரு கட்டிடம் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதத்திலும், அதனுள்ளே சேவையை பெறும் விதத்தில் இருந்தாலும், அதனை பெறுவதற்கான கட்டணம் அவர்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால், அதனை பெற முடியாது என்கிறார் தீபக்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வடிவமைப்பதில் ஏன் இன்னும் பற்றாக்குறை நிலவுகிறது என கேட்டதற்கு, “ஒவ்வொரு சேவையுமே சந்தை தேவையைப் பொறுத்துதான் அமையும். அப்படி பார்த்தால், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவு என பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஆனால், வயதானவர்கள் பலருக்கும் ஆர்த்ரைட்டிஸ் ஏற்படுகிறது. எனவே, வயதானவர்களையும் தற்காலிகமாக உடல் குறைபாடு ஏற்பட்டவர்களையும் மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்குள் சேர்த்துப் பார்க்க வேண்டும். அப்படியென்றால், அவர்கள் எண்ணிக்கை பெரிது” என்பது தீபக்கின் வாதமாக இருக்கிறது.
தனித்து விடப்படுகிறார்களா பார்வை மாற்றுத்திறனாளிகள்?

பட மூலாதாரம், Getty Images
மாற்றுத்திறனாளிகள் என்று வரும்போது பார்வை மாற்றுத்திறனாளிகள் தனித்து விடப்பட்டதாக உணர்வதாக கூறுகிறார், பொதுத்துறை வங்கி ஒன்றில் மேலாளராக (ஸ்கேல் 2) பணிபுரியும் பார்வை மாற்றுத்திறனாளி முத்துச்செல்வி.
“மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், ‘ஐநாவின் மாற்றுத்திறனாளிகள் உடன்படிக்கை’யில் சாலைகளில் ‘ஆடியோ சிக்னல்’ வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆடியோ சிக்னல்கள் பெரும்பாலான இடங்களில் இல்லை. எனவே, ஒரு சாலையை கடக்க வேண்டும் என்றாலும் ஒருவரை சார்ந்துதான் இருக்க வேண்டும். நடைமேடைகளிலும் டேக்டைல் தளம் இல்லை. தனியாக நடக்க முடியாத அளவுக்குத்தான் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாலைகள் இருக்கின்றன.
பொது இடங்களில் எங்கும் பிரெய்ல் முறையில் அறிவிப்புப் பலகைகள் எழுதப்பட்டிருக்காது. விதி விலக்காக சில இடங்களில் இருந்தாலும் அவை எங்கு இருக்கிறது என்பதே தெரியாது” என்கிறார் முத்துச்செல்வி.

பட மூலாதாரம், Muthuselvi
என்ன மாதிரியான உடல் குறைபாட்டுக்கு என்ன தேவை இருக்கிறது என்பதே இங்கு இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை எனக்கூறிய அவர், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும்” என்கிறார்.
“தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு கல்லூரிகள் உள்ளன. 160-க்கு மேல் அரசு உதவிபெறும் கல்லூரிகள் உள்ளன. ஆனால், அங்கு 5-6 பார்வை மாற்றுத்திறனாளிகள்தான் வேலை செய்வார்கள். பள்ளிகளிலும் இதே நிலைதான். யூஜிசி, நெட் தேர்வை எழுதிவிட்டு பலரும் வேலைவாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றார்.
“புத்தகங்கள், இணைய சேவைகள் Screen reading வடிவில் இருக்க வேண்டும். எழுத்துருக்கள் யூனிகோடில் இருக்க வேண்டும். ஆடியோ வடிவிலும் எல்லாவற்றையும் உருவாக்க வேண்டும். மேலும் தேர்வுகளின் போது கணினியிலேயே தேர்வெழுதும் விதத்தில் screen reading மென்பொருளுடன் இருக்க வேண்டும். ஏனெனில், பார்வை மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடு செய்த ஸ்க்ரைப், திடீரென வர முடியாத சூழல் ஏற்படும்” என்கிறார்.
வங்கிக் கணக்கு தொடங்குதல், ஏடிஎம் கார்டு வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை இன்னும் பார்வை மாற்றுத்திறனாளிகளால் பெற முடியாத சூழல் நிலவுவதாக கூறுகிறார் முத்துச்செல்வி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
• ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
• டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
• இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
• யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













