பருவநிலை மாற்றத்தால் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

அமைச்சர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கரீன் எல்ஹாரர், இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர்

கடந்த வாரம் கிளாஸ்கோவில் தொடங்கிய பருவநிலை மாற்ற மாநாட்டில் இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரால் பங்கேற்க முடியவில்லை.

மாற்றுத் திறனாளிகள் பலரும் பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கான ஒரு உதாரணமாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் கூற்றுப்படி, காட்டுத் தீ முதல் வெள்ளம் வரையிலான அடிக்கடி ஏற்படும் "அவசர கால நெருக்கடிகளின்போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவோரில்" மாற்றுத் திறனாளிகளும் அடங்குவார்கள்.

மாற்றுத் திறனாளிகள் ஏன் பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

ஜூலை 2018 இல், கனடாவின் மாண்ட்ரியலில் அனல் காற்று வீசியது. வெப்பநிலை 35.5C (95.9F) வரை உயர்ந்தது. வெப்பத்தால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் குவிந்தனர். 61 பேர் இறந்தனர். அவர்களில் கால் பகுதியினர் ஸ்கிசோஃப்ரினியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"இது மக்கள்தொகையில் அவர்களின் பங்கை விட 500 மடங்கு அதிகம்" என்கிறார் மேக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பருநிலை மாற்ற நிபுணரான செபாஸ்டின் ஜோடோயின்.

ஸ்கிசோஃப்ரினியா நோயால் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் ஆன்டி-சைகோடிக் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இது வெப்பத்தைத் தாங்கும் திறனைக் குறைக்கும். வெப்பப் பக்கவாதம் மற்றும் கடுமையான நீரிழப்பு அவர்களின் அபாயத்தை அதிகரிக்கும். அப்படி நடந்தால் உயிரைப் பறிக்கும்.

அதிகாரிகளுக்கும் அபாயம் கொண்டோருக்கும் இடையேயான தொடர்பு இல்லாதது நிலைமையை மோசமாக்குகிறது என்று ஜோடோயின் கூறுகிறார்.

"ஸ்கிசோஃப்ரினியா நோயுடன் வாழ்பவர்களின் சமூகத் தொடர்புகள் குறைவாக இருக்கும். ஏழ்மையில் நிலையிலும் வாடுவார்கள்" என்று அவர் கூறுகிறார். "மாற்றுத் திறனாளிகளுக்கு காலநிலை மாற்றத்தின் காரணமாக பாதிப்பு எப்படி அதிகமாகும் என்பதற்கு இது உதாரணமாகும்"

காட்டுத்தீ

பட மூலாதாரம், Getty Images

காலநிலை மாற்றம் வெப்பமான, வறண்ட வானிலையின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது அதிக அனல் காற்றையும் அதன் மூலமாக காட்டுத்தீ ஏற்படவும் வழிவகுக்கும். வளிமண்டலம் வெப்பமாவதால் தீவிர மழைப்பொழிவும், வெள்ளமும் தூண்டப்படுகிறது.

மாண்ட்ரீலில் நடந்திருப்பது வரவிருக்கும் நிகழ்வுகளின் ஒரு முன்னோட்டம்தான் என்கிறார் ஜோடோயின்.

2019 ஆம் ஆண்டில், காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க பல நிறுவனங்கள் மின்சாரத்தை நிறுத்தியதால் கலிஃபோர்னியா தொடர்ச்சியாக முடங்கியிருந்தது. வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா ரோசாவைச் சேர்ந்த ஜெரால்ட் நிமிக்கு ஆண்டுகளாக நாள்பட்ட நுரையீரல் பிரச்னை இருக்கிறது. சுவாசிப்பதற்கு அவர் ஆக்ஸிஜன் வென்டிலேட்டரை நம்பியிருந்தார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அவரது வென்டிலேட்டர் நின்றுவிட்டது. அவரும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியேறி, செயல்படக்கூடிய வென்டிலேட்டர் கிடைக்கிறதா எனத் தீவிரமாக தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜெரால்ட் இறந்துவிட்டார்.

அந்தப் பகுதிக்கு மின்சாரத்தை வழங்கும் பசிபிக் கேஸ் & எலக்ட்ரிக் என்ற நிறுவனம் தனது ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே மின்துண்டிப்பு பற்றி தகவல் தெரிவிக்கத் தவறியதை ஒப்புக்கொண்டது. இவர்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் இருக்கின்றன.

காட்டுத்தீயின் போது, ​​சில மாற்றுத் திறனாளிகள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற சிரமப்பட்டனர். தப்பிக்க முடிந்தவர்கள்கூட தண்ணீர், குளியலறை உள்ளிட்ட வசதிகளை வழங்கும் அவசரகால மையங்களுக்குச் செல்ல முடியவில்லை.

ரப்பர் படகுகளும் மாற்றுத் திறனாளிகளும்

கடந்த கோடை காலத்தில் ஜெர்மனியில் உள்ள சின்சிக் நகரில் கருணை இல்லத்தில் வசித்த 12 மாற்றுத் திறனாளிகள் திடீர் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். அவர்களால் வெள்ளத்தின்போது வெளியேற முடியவில்லை. இந்த வெள்ளத்துக்கு காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் கூறுகின்றனர்.

இல்லம்

பட மூலாதாரம், Getty Images

பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சார்லஸ் வில்லியம்ஸுக்கு முதுகெலும்பு தசைச் சிதைவு (SMA) பாதிப்பு இருக்கிறது. சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் அவர், திடீர் வெள்ளத்தின்போது ரப்பர் படகில் தம்மால் ஏற முடியாது என்று கூறுகிறார்.

2005 இல் நியூ ஆர்லியன்ஸ் மாநிலத்தில் கத்ரீனா புயலால் பெரும் வெள்ளம் ஏற்பட்ட போதும் இதேபோன்ற பல கதைகள் வெளிவந்தன. இந்தக் காலகட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவதற்கும் மிகவும் சிரமப்பட்டனர் என்று தேசிய மாற்றுத் திறனாளிகள் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்தது.

மீட்பதற்காக வந்த பேருந்துகளில் சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கான வசதி கிடையாது. அவசர காலத் தங்குமிடங்கள் மாற்றுத் திறனாளிகளால் அணுக முடியாத இடங்களில் இருந்தன. பார்வை மற்றும் செவித் திறன் மாற்றுத் திறனாளிகளால் உள்ளூர் அறிவிப்புகளைப் பெற முடியவில்லை.

கத்ரீனா புயல் போன்ற தீவிர வானிலை தொடர்பான பேரழிவுகள் கடந்த 50 ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அப்படியானால் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்?

பருவநிலை மாற்ற விவாதங்களில் மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய அம்சங்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் உரிமைச் செயல்பாட்டாளர் ஆன்டி க்ரீன் வலியுறுத்துகிறார்.

சட்டங்கள் மாற்றுத் திறனாளிகள் மீது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அரசுகள் கவனிப்பதில்லை என்று அவர் ஆதங்கப்படுகிறார். பிளாஸ்டிக் ஸ்ட்ரா மீதான கட்டுப்பாட்டை ஓர் உதாரணமாக அவர் கூறுகிறார்.

புதிய சட்டத்தில் மருத்துவ காரணங்களுக்காக பிளாஸ்டிக் ஸ்ட்ராவைப் பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு இதில் சலுகை கிடையாது. அவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் குடிப்பதற்கு இன்னும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை நம்பியிருக்கிறார்கள் என்பதை சட்டம் கவனிக்கவில்லை.

உலோகம், காகிதத்தால் உருவாக்கப்பட்ட ஸ்ட்ராக்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்போது கோப்பையைக் கையில் எடுத்துக் குடிக்க வேண்டியிருக்கும். அவை நழுவுவதற்கு வாய்ப்பு அதிகம். சேதம் ஏற்படக்கூடும். அதனால்தான் கோப்பையை எடுக்க முடியாதவர்களுக்கு வளைக்கக்கூடிய பிளாஸ்டிக் ஸ்ட்ரா முக்கியமானது.

ஸ்ட்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாற்றுத் திறனாளிகள் யாருடைய உதவியும் இல்லாமல் குடிப்பதற்கு இன்னும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை நம்பியிருக்கிறார்கள்

மாற்றுத்திறனாளிகள் மறந்து விடப்படுவதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு என்று க்ரீன் கூறுகிறார்.

இந்த வகையான பாகுபாட்டை விளக்குவதற்கு "சுற்றுச்சூழல் திறன்" என்ற சொல் இப்போது பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான ஆர்வலர்கள் மற்றும் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை மேலும் கடினமாகின்றன. உதாரணத்துக்கு சைக்கிள் பாதைகளை ஏற்படுத்துவதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கான வாகன நிறுத்த இடங்களை அகற்றுவது போன்றவை.

அடுத்து என்ன?

கிளாஸ்கோவில் நடக்கும் சில நிகழ்வுகளில் மாற்றுத் திறனாளிகள் பற்றிப் பேசப்படுகின்றன. ஒரு நிகழ்வு, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் நகர வடிவமைப்புகளைப் பற்றி விவாதிக்கிறது. மற்றொன்று மாற்றுத் திறனாளிகளின் உடல்நலத்தில் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றிப் பேசுகிறது.

மாற்றுத் திறனாளிகள் தேவைகள் பற்றி அரசுகள் பெரும்பாலும் கவலைப்படுவதில்லை என்று கூறும் ஜோடோயின், அவர்களுக்கான உரிமைகளைப் பெறும் வாய்ப்பாக கிளாஸ்கோ மாநாட்டைப் பார்க்கிறார்.

அரசு மட்டத்திலும் தனிப்பட்ட அளவிலும் மாற்றங்களைச் செய்வதற்கான சுயமுயற்சியும், துணிச்சலும் இல்லாததே இதுவரையிலான பிரச்னைகளுக்குக் காரணங்கள் என்று வில்லியம்ஸ் கூறுகிறார்.

"இந்த அணுகுமுறையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அது தொடர வேண்டும்"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :