பருவநிலை மாற்றம் மனிதர்களையும், பூமியையும் எப்படி பாதிக்கும்? - 4 முக்கிய வழிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மேட் டெய்லர்
- பதவி, பிபிசி பருவநிலை செய்தியாளர்
கடும் வெப்ப அலைகள், மோசமான வெள்ளங்கள், காட்டுத் தீ பிரச்சனைகள் என இந்த கோடை காலத்தில் பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய பல வானிலை (Weather) பிரச்னைகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
தொழில் புரட்சி காலத்தில் இருந்து, மரபுசார் எரிபொருளை பயன்படுத்துவதன் மூலம், வெப்பம் வளிமண்டலத்திலேயே அடைபடுகிறது. அதன் விளைவாக உலகின் சராசரி வெப்ப நிலை 1.2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.
இப்படி வளிமண்டலத்தில் கூடுதலாக அடைபடும் வெப்பம் சமமாக பரவலாகாததால், தற்போது நாம் பார்ப்பது போன்ற பல மோசமான காலநிலை பிரச்னைகளாக வெளிப்படுகின்றன. உலக அளவில் இந்த உமிழ்வு குறைக்கப்படாவிட்டால், இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
பருவநிலை மாற்றம் எப்படி மோசமான வானிலைக்கு வழிவகுக்கின்றன என்பதை நான்கு வழிகளைப் பார்க்கலாம்.
1. அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலைகள்

மேலே கொடுத்திருக்கும் படத்தைப் பாருங்கள். சராசரி வெப்ப நிலையில் ஏற்படும் சிறிய மாற்றம், வானிலையில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன என்பதை புரிந்து கொள்ள உதவும்.
உலகின் சராசரி வெப்பநிலை அதிகரித்தால், வெப்பம் தீவிரமாகிறது. ஆகையால்தான் வெப்ப அலைகள் மிக அதிகமாகவும், மிக தீவிரமாகவும் ஏற்படுகின்றன.
கடந்த 50 ஆண்டுகளில், பிரிட்டனில் வெப்பம் நிலவும் காலத்தின் நாட்கள் சுமார் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது என வானியல் அலுவலகம் கூறுகிறது.
மேற்கு கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலைகளும் நீண்ட காலத்துக்கு அதிதீவிரமாக வீசுகின்றன. இதற்கு ஹீட் டோம் எனப்படுகிற நிகழ்வு காரணமாக கூறப்படுகிறது.'ஹீட் டோம்' என்றால் தமிழில் 'வெப்ப குவிமாடம்' என்று பொருள்.
சில வாரங்களுக்கு முன் வழக்கத்தை விட அதிகமாக இருந்த கடல் வெப்ப நிலையால், பசிபிக் பெருங்கடலில் ஒரு புயல் உருவானது. அது வளிமண்டலத்தில் இருக்கும் ஜெட் ஸ்ட்ரீம் எனப்படும் காற்றோட்டத்தை பாதித்தது. எப்போதெல்லாம் ஒரு புயல் வழக்கமான காற்றோட்டத்தை பாதிக்கிறதோ அப்போது எல்லாம், வானிலை மாற்றங்கள் ஏற்படும்.
இந்த காற்றோட்ட அலைகள் மொத்த வானிலை அமைப்பின் வேகத்தையும் குறைத்துவிடும். வானிலை அமைப்பு பல நாட்களுக்கு ஒரே இடத்தில் சிக்கிக் கொள்ளும்.
'ஹீட் டோம்' என்றால் என்ன?

அதிக அழுத்தமுள்ள இடங்களில், மேல் நோக்கி பயணிக்கும் வெப்பக் காற்று, அழுத்தம் காரணமாக மீண்டும் கீழே தள்ளப்படும். எனவே அந்த வெப்பக் காற்று ஒரே இடத்தில் சிக்கிக் கொண்டு, கிட்டத்தட்ட அந்த கண்டத்தின் வெப்ப நிலையையே அதிகரித்துவிடும்.
மேற்கு கனடாவில், லிட்டன் பகுதியில் வெப்ப நிலை 49.6 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. இது முந்தைய அதிகபட்ச வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகம். இத்தனை அதிக வெப்ப நிலை, பருவநிலை மாற்றமின்றி சாத்தியமில்லை என வோர்ல்ட் வெதர் அட்ரிபியூஷன் (World Weather Attribution) எனும் அமைப்பு
ஆர்டிக் பகுதிகளில் அதிக வெப்பம் நிலவுவதால், காற்றோட்டத்தின் வேகம் குறைகிறது, எனவே ஹீட் டோம் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன என்கிறது ஒரு கோட்பாடு.
இந்த கோடை காலத்தில் வட அமெரிக்காவில் மட்டும் வெப்ப நிலை அதிகரிக்கவில்லை. ரஷ்யாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப நிலை அதிகரித்திருக்கிறது. வடக்கு அயர்லாந்தில் ஒரே வாரத்தில் மூன்று புதிய அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. அவ்வளவு ஏன் அன்டார்டிக் கண்டத்தில் கூட புதிய அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
2. தொடர் வறட்சிகள்

வெப்ப அலைகளின் காலம் அதிகரிக்கும் போதும், தீவிரமடையும் போதும் வறட்சிகள் மோசமடையும்.
வெப்ப அலைகளுக்கு மத்தியில் மழை பொழிவுகள் குறையும். எனவே நிலத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் நீர் விநியோகம் விரைவில் தீர்ந்து வறண்டு போகும்.
ஆக, நிலம் அதிவிரைவாக வெப்பமடைந்து காற்றை சூடேற்றும். இது ஒரு தொடர் சுழற்சியாக மீண்டும் ஒட்டுமொத்த வெப்ப நிலையையும் அதிகரிக்கும்.
மனிதர்களுக்கான தண்ணீர், விவசாய தேவைக்கான தண்ணீர் தேவைகள் நெருக்கடியை ஏற்படுத்தும். நீர் பற்றாக்குறை ஏற்படும்.
ஜூலை மத்தியில் கோடை கால வெப்ப அலைகளைத் தொடர்ந்து, அமெரிக்க நிலபரப்பில் கடுமையான அல்லது வழக்கத்துக்கு மாறான வறட்சியைக் கண்டது.
3. காட்டுத் தீ

காட்டுத்தீ மனிதர்களால் நேரடியாக உருவாகலாம் - ஆனால் இயற்கை காரணிகள் அதில் பெரும் பங்கு வகிக்கலாம்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர மற்றும் நீடித்த வெப்ப சுழற்சியால், நிலம் மற்றும் தாவரங்களிலிருந்து அதிக அளவில் ஈரப்பத்ம் உறிஞ்சப்படுகிறது.
இந்த உலர்தன்மை நெருப்புக்கு எரிபொருளாக அமைகின்றன, எனவே காட்டுத் தீ நம்பமுடியாத வேகத்தில் பரவுகிறது.
இக்கோடை காலத்தில் மேற்கு கனடாவில் ஏற்பட்ட தீ வெப்ப அலைகளின் காரணமாக அதிவேகமாக பரவியது. பைரோக்யுமுலோனிம்பஸ் (pyrocumulonimbus clouds)என்கிற இடி மேகங்கள் உருவாகியதால், தீ அதிகமாக பரவியது.
மேலும் இந்த பிரம்மாண்டமான மேகங்கள் மின்னலை உருவாக்கி, அதிக தீப்பற்ற உதவியது. சைபீரியாவில் இதே தான் நிகழ்ந்து வருகிறது.
கடந்த சில தசாப்தங்களில் பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்படுவது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
1970 களுடன் ஒப்பிடும்போது 10,000 ஏக்கருக்கும் அதிகமான தீ இப்போது மேற்கு அமெரிக்காவில் ஏழு மடங்கு அதிகமாக ஏற்படுகின்றன என்று விஞ்ஞானிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் சுயாதீன அமைப்பான க்ளைமேட் சென்ட்ரல் தெரிவித்துள்ளது.
4. கனமழை பொழிவு

வழக்கமான வானிலை சுழற்சியில், வெப்பமான வானிலை, காற்றில் ஈரப்பதத்தையும் நீராவியையும் உருவாக்குகிறது, இது மழை நீர்த்துளிகளாக மாறும்.
அதிகம் வெப்பமடையும் போது, வளிமண்டலத்தில் அதிக நீராவி உருவாகும். இதன் விளைவாக அதிக நீர்த்துளிகள் உருவாகும். அது கன மழையாக பொழியும். சில நேரங்களில் இந்த கன மழை சிறிய பகுதியில், குறைந்த காலகட்டத்துக்குள் பொழிந்து பெருஞ்சேதத்தை ஏற்படுத்தும்.
சீனா, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், தீவிர மழையால் ஏற்படும் பேரழிவின் விளைவுகளைக் காட்டுகின்றன.
அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் நீர் நிபுணர் பீட்டர் க்ளீக்கின், இந்த மழை நிகழ்வுகள் மற்ற இடங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்கிறார்.
"சைபீரியா மற்றும் மேற்கு அமெரிக்கா போன்ற பகுதிகளில் வறட்சி அதிகரிக்கும் போது, அந்த நீர் வேறு இடத்தில், சிறிய பகுதிகளில் விழுந்து பெருவெள்ளம் போன்ற சேதங்களை ஏற்படுத்துகின்றன. ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் வெள்ளங்களை உதாரணமாகக் கூறலாம்," என அவர் கூறுகிறார்.
உலகெங்கிலும் உள்ள வானிலை எப்போதும் மாறுபடும் - ஆனால் பருவநிலை மாற்றம் அதை மேலும் தீவிரமாக்குகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












