நினைவாற்றல் இழப்பு: டிமென்ஷியாவை கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம், BBC NEWS/CAMBRIDGE UNIVERSITY
- எழுதியவர், பல்லப் கோஷ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
ஒரே ஒரு மூளை ஸ்கேனில் டிமென்ஷியா நோயைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியோடு இயங்கும் ஓர் அமைப்பை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
அப்படி கண்டுபிடிக்கப்படும் டிமென்ஷியா (மறதிநோய்), அப்படியே பல ஆண்டுகளுக்குத் தொடருமா, சூழல் மெல்ல மோசமாகுமா அல்லது உடனடியாக கிசிச்சை பெற வேண்டுமே என்பதைக் கூட இந்தத் தொழில்நுட்ப உதவியோடு கணிக்க முடியும்.
(டிமென்ஷியா 'மறதிநோய்' என்று தமிழில் அழைக்கப்பட்டாலும் இது நினைவாற்றல் இழப்பு, நடத்தை மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் ஏற்படும் குழப்பம் போன்ற பல கூட்டு அறிகுறிகளை உள்ளடக்கியது.)
தற்போது டிமென்ஷியாவைக் கண்டுபிடிக்க பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்களை செய்ய வேண்டி இருக்கிறது.
டிமென்ஷியா முன் கூட்டியே கண்டுபிடிக்கப்படுவது நோயாளிகளுக்கு பெரிதும் உதவும் என இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.
அமைப்பு முறைகளை கண்டுபிடிக்கும் அல்காரிதம்

பட மூலாதாரம், Getty Images
"நாம் முன்கூட்டியே டிமென்ஷியாவை கண்டுபிடித்துவிட்டால், உடனடியாக சிகிச்சையளிக்கத் தொடங்கி, நோய் தீவிரமடைவதை தடுக்கலாம். அதே நேரம் நோயாளிக்கு ஏற்படும் பெரும் சேதங்களையும் தடுக்கலாம்" என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தேசிய செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மையத்தின் சோ கொர்ட்சி.
"டிமென்ஷியாவின் அறிகுறிகள் வாழ்வின் பிற்பகுதியில் தோன்றலாம் அல்லது எப்போதுமே வெளிப்படாமலும் இருக்கலாம்" என்கிறார்.
பேராசிரியர் கொர்ட்சியின் இந்த அமைப்பு, தனக்கு டிமென்ஷியா இருக்கலாம் என கவலைப்படுபவர்களின் மூளை ஸ்கேன் பரிசோதனைகளையும், டிமென்ஷியா இருக்கும் ஆயிரக் கணக்கான நோயாளிகளின் ஸ்கேன் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ தரவுகளையும் ஒப்பிடுகிறது.
இவ்வமைப்பின் அல்காரிதம், டிமென்ஷியா இருப்பவர்களின் ஸ்கேன் பரிசோதனைகளில் இருக்கும் அமைப்பு முறைகளை கண்டுபிடித்து அதை, நோயாளிகளின் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்.
அறிகுறிகள் மேம்படுவதற்கு முன்பே
மூளையில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன், அவ்வளவு ஏன் டிமென்ஷியா நோய்க்கான அறிகுறிகள் மேம்படுவதற்கு முன்பே, மருத்துவ பரிசோதனைகளிலேயே டிமென்ஷியாவைக் கண்டுபிடித்துவிடலாம்.
இவ்வமைப்பு மருத்துவமனை சூழல்களில் சரியாக வேலை செய்கிறதா, டிமென்ஷியாவைக் கண்டுபிடிக்கும் பழைய முறைகளோடு இணைந்து வேலை செய்கிறதா என பிரிட்டனைச் சேர்ந்த அடன்ப்ரூக் மருத்துவமனை போன்ற நினைவு சார் மருத்துவமனைகளில் வைத்து சோதனை செய்ய இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், BBC NEWS
முதலாமாண்டில் சுமார் 500 நோயாளிகள் இதில் பங்கேற்கலாம். அவர்களின் பரிசோதனை முடிவுகள், அவர்களின் மருத்துவர்களிடம் சென்று சேரும். தேவைப்பட்டால் அவர்கள், தங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்கலாம்.
நரம்பியல் நிபுணரான மருத்துவர் டிம் ரிட்மென், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானிகளோடு இணைந்து இவ்வாய்வை வழிநடத்தி வருகிறார். செயற்கை நுண்ணறிவு ஒரு அற்புதமான முன்னேற்றம் என்கிறார் ரிட்மென் .
"டிமென்ஷியா போன்ற நோய்கள் உண்மையிலேயே மனிதர்களை மனதளவில் உருகுலையச் செய்துவிடும்" என்கிறார் அவர்.
"ஒரு நோயாளிக்கு இது போன்ற விவரங்களைக் கொடுக்கும் போது, பரிசோதனை நம்பகமானதாக இருக்க நான் எதை வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எப்படி தீவிரமடையும் என்பதைக் குறித்த விவரங்களைக் பகிர்ந்தால், அவர்கள் தங்களின் வாழ்கையை திட்டமிட்டுக் கொள்ள முடியும் என்பது மிகப் பெரிய விஷயம்." என்கிறார் மருத்துவர் ரிட்மென்.
நினைவுபடுத்திப் பார்க்க போராட்டம்

பட மூலாதாரம், BBC NEWS
75 வயதான டெனிஸ் க்ளார்க் இப்பரிசோதனையில் பங்கேற்கும் முதற்கட்ட பங்கேற்பாளர்களில் ஒருவர். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் ஒரு இறைச்சி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
டெனிஸ் சில நேரங்களில் நினைவுபடுத்திப் பார்க்க சிரமப்படுகிறார் என்பதை கடந்த ஆண்டுதான், அவரது மனைவி பெனெலோப் கண்டு கொண்டார்.
டெனிஸுக்கு டிமென்ஷியா இருக்குமோ என அவரது மனைவி கவலையில் இருக்கிறார்.
டெனிஸ் தனக்கு நடப்பதை விவரிக்க முயல்கிறார். ஆனால் பெனலோப், அவர் தனக்கு நடப்பதை விவரிக்க சிரமப்படுகிறார் என குறுக்கிடுகிறார்.
டெனிஸின் மருத்துவ செலவுக்காக, தங்களது வீட்டை விற்க வேண்டி இருக்கும் என இந்த அன்பு ஜோடி கவலையில் உள்ளது.
டிமென்ஷியா இருக்கிறதா இல்லையா? அது எப்படி தீவிரமடையும்? போன்ற கேள்விகளுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் பெனலோப் கொஞ்சம் ஆசுவாசமடைந்து இருக்கிறார்.
"டிமென்ஷியா மோசமடைவதற்கு முன் நாங்கள் கணவன் மனைவியாக ஒரு சில விடுமுறைகளை கொண்டாட முடியுமா என்பதை அறிவோம். எனவே அதற்கு முன் டெனிஸை விடுமுறைக்கு நான் அழைத்துச் செல்ல முடியும்."
மனநலப் பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images
மருத்துவர் ரிட்மெனின் மற்றொரு நோயாளியான மார்க் தாம்சன் (57 வயது) 10 மாதங்களுக்கு முன்பே ஞாபக மறதியால் பாதிக்கப்படத் தொடங்கினார். அப்போது செயற்கை நுண்ணறிவு மூலம் டிமென்ஷியா நோயைக் கண்டறியும் அமைப்புகள் செயல்படத் தொடங்கவில்லை. அப்போது இவ்வமைப்பு இருந்திருந்தால், அவருக்கு பேருதவியாக இருந்திருக்கும் என்கிறார்.
"நான் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்கு முன் குறைந்தபட்சம் 4 முறை ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டேன். பல மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டேன்" என்கிறார் தாம்சன்.
"எனக்கு என்ன பிரச்னை என்பதை கண்டறிய மருத்துவர்கள் தங்களால் முடிந்த வரை எல்லாவற்றையும் செய்தனர்".
ஆனால் பதில் கிடைக்கவில்லை. அந்த நிலையற்றதன்மையே எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலைக் கொடுத்தது.
"மூளையில் கட்டியாக இருக்குமா? அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா? எனக்கு என்ன பிரச்னை என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் நான் மிகுந்த மன அழுத்தத்துக்கும் ஆளானேன்" என்கிறார் தாம்சன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













