டிமென்ஷியா என்ற மறதி நோய்: "இந்தியாவின் புதிய சுகாதார சவால்"

பட மூலாதாரம், Hindustan Times/Getty Images
- எழுதியவர், ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு, அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு என்று எல்லாமே பாதிக்கப்படும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் அனைத்து தேவைகளுக்கும் மற்றவரின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.
டிமென்ஷியாவை முழுமையாக குணப்படுத்தக் கூடிய மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
வரும் காலங்களில் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரும் மருத்துவ மற்றும் சமூக நெருக்கடியாக டிமென்ஷியா என்கிற இந்த நோய் உருவாகியிருப்பதாக அல்சைமர்ஸ் நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகளவில் ஒவ்வொரு 3 விநாடிக்கும் ஒருவர் இந்த நோயால் தாக்கப்படுகிறார் என்கிறது அந்த அமைப்பு.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இந்த நோய் இருப்பதே தெரியாமல் அல்லது அதற்கு தகுந்த சிகிச்சை கிடைக்காமல் கிட்டத்தட்ட 90% பேர் வாழ்வதாக கூறுகிறார், அது தொடர்பான ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மருத்துவர் டாக்டர் ஶ்ரீதர் வைத்தீஸ்வரன்.
பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:
கேள்வி: 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் என்றால் என்ன? இது யாரை பாதிக்கும்?
பதில்: 'டிமென்ஷியா' என்பது மூளை பாதிப்படைவதால் ஏற்படும் நோய். அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மறதி நோயின் மிகப் பொது வடிவமான அல்சைமர் நோய் தாக்குதல் காரணனமாக, 'டிமென்ஷியா' அதிகமாக வருகிறது
அது தவிர, மூளைக்கு ரத்த ஓட்டம் சரியாக இல்லாத போது, ஏற்படும் மறதி நோயை 'வாஸ்குலர் டிமென்ஷியா' என சொல்கிறோம்.
பார்கின்சன் நோய் தாக்குதல் போன்ற காரணங்களாலும் டிமென்ஷியா ஏற்படும்.
பொதுவாக 60 அல்லது 65 வயதை கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மிகச் சிலருக்கு மட்டுமே 40 அல்லது 45 வயதில் இந்த நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. அது மிகவும் அரிது.
அதனால், 60 அல்லது 65 வயதை கடந்தவர்கள் வழக்கத்தை விட நினைவிழப்பு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கேள்வி: இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு எவ்வளவு அதிகமாக உள்ளது?
பதில்: இங்கு கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. அதில், கிட்டத்தட்ட 90% பேருக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை அல்லது அவர்களுக்கு நோய் இருப்பதே கண்டறியப்படவில்லை. இந்நிலையில், இங்கு இந்த நோயின் தாக்கம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. அப்போது கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்த நோயால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
இந்த விவகாரத்தில், 'டிமென்ஷியா' உள்ளவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் குடும்பத்தினரும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்த நோயாளிகளை கவனித்துக் கொள்ள நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 10 மணி நேரம் செலவிட வேண்டியுள்ளது. அதனால் இது ஒருவருக்கு முழு நேர வேலையாக மாறிவிடுகிறது.
இந்த தீவிரத்தை குறைக்க தேவையான மருத்துவ வசதிகளை நாம் பெருக்க வேண்டும்.

கேள்வி: இந்த நோயை கண்டறிய மற்றும் அதற்கு சிகிச்சை அளிக்க புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளதா?
பதில்: டிமென்ஷியாவுக்கு தொழில்நுட்பத்தை பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும்.
முதலாவதாக டிமென்ஷியா நோயை கண்டறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். இரண்டாவது, டிமென்ஷியா நோயாளிக்கு ஆதரவு மற்றும் சிகிச்சை அளிக்க முடியும், மூன்றாவதாக விழிப்புணர்வு ஏற்படுத்த அது உதவும். நான்காவது, பயிற்சி அளிக்க தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும். இந்த நான்கு தலைப்புகளில் டிமென்ஷியாவுக்கான தொழில்நுட்பத்தை நாம் யோசிக்கலாம்.
கேள்வி: அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்யவேண்டிய தேவையுள்ளதா?
பதில்: சர்வதேச அளவில் பார்க்கும் போது, டிமென்ஷியா நோயை கண்டறிய மொபைல் ஆப்களில் அல்லது பலகைக் கணினிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள் அல்லது படங்களை போட்டு அது தொடர்பான பதில்களை பெற்று நோய் கண்டறியப்படுகிறது.
ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் அந்த கைக்கருவிகளின் பயன்பாடு குறித்த அறிவு, அவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளதால் அவர்களின் மொழியறிவு போன்ற சவால்கள், சோதனையின் முடிவுகளை பாதிக்கும் அபாயம் உள்ளது.

பட மூலாதாரம், Paul Watson
அதனால் சோதனை முயற்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் டெல்லி, மைசூர் மற்றும் சென்னையில் சமூக சுகாதார ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் பயன்படுத்தக் கூடிய மொபைல் ஆப் ஒன்றை சோதித்து வருகிறோம். இதில் அவர்கள் நேரடியாக கைக்கருவிகளை பயன்படுத்த மாட்டார்கள் என்பதால், துல்லியமான சோதனை முடிவுகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
வீடுகளில் உள்ள நோயாளிகளை கண்காணிக்க நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளன. குறிப்பாக வீடுகளில் இன்ஃப்ராரெட் சென்சார்களை பொருத்துவதன் மூலம் அவர்கள் எத்தனை முறை கதவை திறக்கிறார்கள், தண்ணீர் குடிக்கிறார்கள் மற்றும் என்னென்ன செய்கிறார்கள் போன்ற தகவல்களை பெற முடியும். பெரும்பாலும் நோயாளிகள், இரவு நேரங்களில் படுக்கையிலிருந்து எழுந்து விழுந்து விடுகின்றனர். அதை தவிர்க்க இது போன்ற சென்சார்களை அவர்களின் கட்டிலில் பொருத்தி, அவர்கள் எழுந்தால் அலாரம் செய்ய வைத்து அவர்களுக்கு உதவலாம்.
வீடுகளை விட்டு வெளியில் செல்லும் அவர்கள் நிறைய பேர் வழிதவறி காணாமல் போகும் நிலையைத் தவிர்க்க, இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் ஜி.பி.எஸ் டிராக்கர் அதிக அளவில் பயன்படுகிறது.
கேள்வி: இந்த நோயாளிகளுக்கு உதவும் ரோபோ தொழில்நுட்பம் தற்போது பயன்பாட்டில் உள்ளதா?

பதில்: நோயாளிகளுடன் தொடர்ந்து உரையாடக்கூடிய ஒரு ரோபோவை பயன்படுத்தும் முயற்சியை நாங்கள் சென்னையில் மேற்கொண்டு வருகிறோம். பலகைக் கணினிக்கு முகம் போன்ற அமைப்பை உண்டாக்கி, மனிதன் போலவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், பேசவும் அதை தயார் செய்கிறோம். செயற்கை நுண்ணறிவுடன் அந்த ரோபோ இணைக்கப்பட்டு, சோதனைகள் வெற்றியடைந்தால், டிமென்ஷியா நோயாளிகளுக்கு அது பயனளிக்கும்.
இது தவிர சாதாரண மக்களின் பொருட்செலவை குறைக்கும் நோக்கில் இந்தியாவில் எராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிற செய்திகள்:
- 'ராட்சசி' படத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் பார்க்க வேண்டும்: மலேசிய கல்வி அமைச்சர்
- ’சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்’ - நெகிழவைக்கும் 80 வயது மூதாட்டி
- பறையா பருந்தும் பிராமினி பருந்தும்: பறவைகளுக்கு சாதிப் பெயர் சூட்டப்பட்டது ஏன்?
- இந்திய விமானப்படையில் அப்பாச்சி ஹெலிகாப்டர்: 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












