பறையா பருந்தும் பிராமினி பருந்தும்: பறவைகளுக்கு சாதிப் பெயர் சூட்டப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், DEA/V.GIANNELLA/ Getty Images
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
மலேசியாவில் லினாஸ் என்ற நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று குற்றம்சாட்டி அதனை மூடவேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லிய அப்போதைய மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹம்மது "லினாஸ் நிறுவனத்தை 'பறையா'க்களைப் போல நாட்டைவிட்டு வெளியேற்றினால், மலேசியாவுக்கு முதலீடு செய்யவாருங்கள் என்று யாரையும் அழைக்க முடியாது" என சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார்.
அவர் பயன்படுத்திய Pariah என்ற ஆங்கிலச் சொல் தமிழர்களில் ஒருபிரிவினரை அவமதிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் சொல் என்பதால் மலேசியப் பிரதமர் இந்த சொல்லைப் பயன்படுத்தியதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவிலும் இந்த ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு எழுந்த நிகழ்வுகள் உண்டு.
இந்த ஆங்கிலச் சொல்லின் வேர்ச்சொல் எது? அது தமிழ்நாட்டில் தீண்டப்படாதவர்களாக நடத்தப்பட்ட மக்களை குறிக்கும் சொல்லில் இருந்து பிறந்ததா என்கிற மொழி ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கிறது.
அதே நேரம், தமிழ்நாட்டில் பொதுவாகக் காணப்படும் பறவையான பருந்துக்கும் அதன் உட்பிரிவான கருடனுக்கும் தமிழ்நாட்டின் சாதிப் பிரிவுகளைச் சுட்டும் வகையில் ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA/Getty Images
பொதுவாக சமய வழிபாட்டுடன் இணைத்துப் பார்க்கப்படுவதும், கழுத்தும் தலையும் வெள்ளை நிறத்தில் இருப்பதுமான கருடனுக்கு 'பிராமினி கைட்' என்றும், கருப்பு நிறமுடைய ஊர்ப்பருந்துக்கு 'பறையா கைட்' என்றும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டது.
பறவைகளுக்கு சாதிப் பெயர்கள்
பறவைகள், உயிரினங்களின் பெயர்களில் சாதிப்பெயர்கள் இருப்பது பற்றி ஆய்வு செய்து நூல் எழுதிவருகிறவரும், பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பாக வெளியாகும் 'உயிர்' என்ற இதழின் ஆசிரியருமான ஏ.சண்முகானந்தத்திடம் இந்த பெயர் சூட்டலின் பின்புலம், வரலாறு என்ன என்று கேட்டது பிபிசி தமிழ்.

பட மூலாதாரம், Getty Images / Jerry Redfern
பறையா கைட், பிராமினி கைட் என்பவை மட்டுமல்ல வேறு பல உயிரினங்களுக்கும் சாதிச் சாயலில் பெயர்சூட்டல் நடந்திருக்கிறது. கவர்ச்சியான நிறமுடையவற்றை ஆதிக்கசாதிப் பெயர்களைக் கொண்டும், மங்கலான நிறமுடையவற்றை ஒடுக்கப்பட்ட சாதிப் பெயர்களைக் கொண்டும் அழைப்பது வேறு பல உயிரினங்களுக்கும் நடந்திருக்கிறது" என்றார் சண்முகானந்தம்.
எடுத்துக்காட்டாக ஒருவகை அரணைக்கு பிராமினி ஸ்கிங்க் (Brahminy Skink) என்றும், ஒருவித பாம்புக்கு பிராமினி வோர்ம் ஸ்னேக் (Brahminy Worm Snake) என பெயர் வைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
கருடன் அல்லது செம்பருந்து
கழுத்தும் தலையும் வெள்ளை நிறத்தில் காணப்படும் பருந்து வகைப் பறவை கருடன். தற்போது 'பிராமினி கைட்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருடன் புதுவையில் அதிகம் காணப்பட்டதால், முதலில் அது 'ஃப்ரெண்ச் கைட்' என்றும், 'பாண்டிச்சேரி கைட்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிறகுதான் கருடன், பிராமினி கைட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது தொடங்கியது. இந்தப் பறவை இன்னமும் ஆங்கிலத்தில் பிராமினி கைட் என்றுதான் அழைக்கப்படுகிறது. கருடனை தமிழில் செம்பருந்து என்று அழைப்பதுண்டு" என்றும் இவர் கூறுகிறார்.
கள்ளப் பருந்து அல்லது ஊர்ப்பருந்து
பரவலாக காணப்படும், கருமை நிறம் கொண்ட பருந்து, கள்ளப் பருந்து அல்லது ஊர்ப்பருந்து என்று அழைக்கப்படுகிறது. முதலில் இது பரவலாக பறையா கைட் (Pariah Kite) என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது.

பட மூலாதாரம், Arterra/Getty Images
"தமிழில் இது கள்ளப்பருந்து என்றும் அழைக்கப்பட்டதுண்டு. ஆனால், சாதியைக் குறிக்கும் நோக்கில் அந்தப் பெயர் வரவில்லை. அது திடீரெனப் பாய்ந்து மக்கள் வளர்க்கும் கோழிக்குஞ்சு முதலியவற்றை வேட்டையாடிச் சென்றுவிடும் என்பதால் வந்த பெயர் இது.
எப்போது பறவைகளுக்கு சாதிப் பெயர்கள் வந்தன?
"சங்கத் தமிழிலோ, பழங்காலத் தமிழ்ப் பாடல்களிலோ பறவைகளை, உயிரினங்களைக் குறிக்கும் பெயர்களில் சாதிப்பெயர் இல்லை. இந்த 'பிராமினி கைட்', 'பறையா கைட்' என்பதெல்லாம் கடந்த 200 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட பெயர்கள்தான். இந்தியாவின் மேல்தட்டுப் பிரிவினர் பிரிட்டீஷாரோடு கலந்து பழகத் தொடங்கிய காலத்தில் இத்தகைய பெயர் சூட்டல்கள் நிகழ்ந்திருப்பதாகவே தெரிகிறது.
சங்கத் தமிழில் உயிரினங்கள் குறித்து பல நூல்களை எழுதியுள்ள பி.எல்.சாமி, சங்கத் தமிழில் பறவைகள், உயிரினங்களைக் குறிக்க சாதிப் பெயர்கள் இல்லை என்று உறுதி செய்கிறார்.
எப்போது பறையா கைட் என்பது மாறியது?
பிறகுதான் இந்தப் பறவைகளுக்கு சாதிப்பெயர் வந்தது. இது எப்படி வந்தது என்பதற்கான சில தரவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால், 2000 ஆண்டு வாக்கில் இருந்து இந்தப் பறவை கரும்பருந்து என்று பொருள்படும் வகையில் பிளாக் கைட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படத் தொடங்கியது. ஆனால், இது ஒரு சாதியை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது என்ற காரணத்தை வைத்து இந்தப் பெயர் மாற்றப்படவில்லை என்கிறார் சண்முகானந்தம்.
எழுத்தாளரும், சூழலியல் ஆர்வலருமான தியோடர் பாஸ்கரனிடம் இதுபற்றிக் கேட்டபோது, "சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெயர் சூட்டல் நடந்திருக்கும். ஆங்கிலேயர்கள்தான் இந்தப் பெயரை சூட்டியிருப்பார்கள். எனினும் 'பறையா கைட்' என்ற பெயர் தற்போது எந்தப் புத்தகத்திலும் வருவதில்லை. ஆனால், பிராமினி கைட் என்ற பெயர் இன்னும் இருக்கிறது" என்றார்.

உலகம் முழுவதுமே இந்தப் பறவைகள் இதே பெயரில்தான் அறியப்படுகின்றனவா? ஏன் இவை இந்தியாவின் சாதிப் பெயர்களை சுமந்திருக்கவேண்டும்? என்று கேட்டபோது "இந்தியாவில் மட்டும்தானே இந்தப் பறவைகள் இருக்கின்றன. அதனால், இந்தப் பெயர் சூட்டல் நடந்திருக்கவேண்டும்" என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.
இன்னும் நீடிக்கும் சாதிப் பெயர்
ஆனால், சலீம் அலி, லயீக் ஃபதேஹ் அலி இணைந்து எழுதி, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்ட் மூலம் வெளியிடப்பட்ட நூல் 'பறவை உலகம்'. 2011ல் வெளியிடப்பட்ட இதன் ஐந்தாம் பதிப்பில்கூட ஆங்கிலத்தில் 'Pariah and Brahminy Kites' என்று இந்தப் பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வேறு சில நூல்களும் இன்னும் பறையா கைட் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைப் பார்த்ததாக கூறுகிறார் சண்முகானந்தம். பறையா கைட் என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொதுவாக மாறிவிட்டாலும், பிராமினி கைட் என்பதை பயன்படுத்துவது தொடர்வதாகவும் கூறுகிறார் சண்முகானந்தம். இந்தப் பெயர்சூட்டல் சாதிய மனநிலையில் வெளிப்பாடு என்று கூறும் அவர், Brahminy Kite என்ற பெயரும் மாற்றப்படவேண்டும் இதற்கு பாம்பே நேச்சுரல் ஹிஸ்ட்ரி சொசைட்டி போன்ற செல்வாக்கு மிக்க இந்திய இயற்கையியல் நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும் முன்முயற்சி எடுக்கவேண்டும் என்கிறார்.
மீன், கருவாடு உண்ணும் கருடன்
பொதுவாக குழப்பிக்கொள்ளப்படும் கழுகு, பருந்து இடையிலான வேறுபாட்டை விளக்கிய பறவை நோக்குநரும், ஓவியருமான குமார் என்கிற சிவக்குமார் கழுகுகள் இறந்தவற்றை உண்ணும். ஆனால், பருந்துகள், பாம்பு, எலி, ஓணான், மீன் முதலியவற்றை உயிருடன் வேட்டையாடி உண்ணும். இந்த பருந்துக்குள் உள்ள உட்பிரிவுதான் இந்த ஊர்ப்பருந்தும், கருடனும் ஆகும்.
ஊர்ப்பருந்துகள் பெரிதும் பாம்பு, எலி, கோழிக்குஞ்சு முதலியவற்றை வேட்டையாடி உண்ணும்.
கருடன் பெரிதும் நீர்நிலைகளை ஒட்டி வாழும். இது பெரிதும் மீன், மீன் காயவைக்கும் இடங்களில் இருந்து கருவாடு முதலியவற்றை வேட்டையாடி உண்ணும். பிராமினி கைட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கருடன் அரிதாக பாம்பு, எலி முதலியவற்றையும் வேட்டையாடும் என்கிறார் குமார்.
(மறு பகிர்வு செய்தி)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












