சீனாவில் யானை - மனித மோதலை தடுக்க ஒன்றரை லட்சம் பேரை இடம்பெயர வைத்த அரசு
யானைக் கூட்டம் ஒன்று வரும் பாதையில் குடியிருக்கும் ஒன்றரை லட்சம் பேருக்கும் அதிகாமானவர்களை சீன அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
பல மாதங்களாக தொடர்ச்சியாக நகர்ந்து வரும் இந்த யானைக் கூட்டத்துக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல் நிகழ்வுகள் எதுவும் ஏற்படக் கூடாது என்பதால் சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள யுன்னான் மாகாண அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
வாகனங்கள் மற்றும் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் 25,000 பேருக்கும் அதிகமான காவல் அதிகாரிகள் இந்த யானை கூட்டத்தைக் கண்காணித்து வருகிறார்கள் என்று சீனாவின் அரசு ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த யானைகள் அனைத்தும் ஒன்றாகப் படுத்து உறங்கிய படம் உலகளவில் சமீபத்தில் பிரபலம் ஆனதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

பட மூலாதாரம், Getty Images
யுனான் மாகாணத்தில் உள்ள சரணாலயம் ஒன்றில் இருந்த இந்த யானைகள் 17 மாதங்களுக்கு முன்பு மக்கள் வாழும் பகுதிகளுக்கு நகரத் தொடங்கின.
காடுகள், வயல்கள், நகரங்கள் என சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமான தூரத்தையும் நடந்தே கடந்துள்ள இந்த யானைகள் அப்போது முதலே சர்வதேசச் செய்திகளில் இடம் பிடிக்கத் தொடங்கின. இந்தப் பயணத்தின்போது பல கோடி ரூபாய் மதிப்பிலான விளை பயிர்களை உண்டதுடன் கட்டங்களையும் இந்த யானைக் கூட்டம் சேதப்படுத்தியது.
இந்த யானைக் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளை நெருங்கி வருவதால், அப்பகுதிகளில் வாழும் மக்களை அதிகாரிகள் தற்காலிகமாக வெளியேற்றியுள்ளனர்.
இந்த யானைகள் மாகாணத் தலைநகரான குன்மிங் நகரின் புறநகர்ப் பகுதியை ஜூன் மாதம் சென்றடைந்தன.
மென்ங் யான் சி காப்புக் காடுகளுக்கே இந்த யானைகளை திரும்பச் செல்ல வைப்பதற்கான முயற்சிகள் தொடக்கத்தில் தோல்வியைச் சந்தித்தன; எனினும், அவை திரும்பி மீண்டும் தங்கள் சொந்த நிலத்துக்கே திரும்பத் தொடங்கியுள்ளன.
யானைக் கூட்டம் யுவான்ஜியாங் நதியைக் கடந்து, தெற்கு நோக்கி நகர்ந்து செல்கின்றன என்று யானைகளைக் கண்காணிக்கும் குழுவுக்கு தலைமை தாங்கும் வான் யாங் திங்களன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பட மூலாதாரம், CHINA CENTRAL TELEVISION (CCTV)
தாய் வீடு திரும்பும் வழியில் இந்த யானைகள் சரியான பாதையைச் செல்வதை உறுதி செய்யும் நோக்கில், மின்சாரம் பாயும் வேலிகள், தூண்டில்கள், செயற்கை சாலைகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
யானைக் கூட்டம் திடீரென ஏன் தங்கள் வாழ்விடத்தை விட்டு நகரத் தொடங்கின என்று இதுவரை வல்லுநர்களுக்குத் தெரியவில்லை.
கூட்டத்துக்கு தலைமை தாங்கும் யானையின் அனுபவமின்மையே இதற்குக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இந்த யானைக் கூட்டம் வேறு ஒரு வாழ்விடத்தைத் தேடித் செல்லலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
ஆசிய யானைகள் அழியும் ஆபத்தில் உள்ள விலங்குகளில் ஒன்றாக உள்ளன. சீனாவில் சுமார் 300 காட்டு யானைகளே உள்ளன.
இவ்வாறு நடமாடும் யானைக் கூட்டத்தைப் போலவே சீனாவில் உள்ள பெரும்பாலான யானைகள் யுனான் மாகாணத்தின் தெற்கே வாழ்ந்து வருகின்றன.
பிற செய்திகள்:
- 'சார்பட்டா பரம்பரை' VS 'இடியாப்ப பரம்பரை' - மீண்டும் தொடங்கிய சண்டை
- மக்களை கேடயமாகப் பயன்படுத்திய சதாம் ஹுசேன் - முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெடிக்கும் சர்ச்சை
- ரூ.800 கோடிக்கு டெண்டர்; எகிறிய வருமானம் -எஸ்.பி.வேலுமணியை சிக்கவைத்த ஒப்பந்தங்கள்
- ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு: மீதமிருந்த வரியை செலுத்தினார் நடிகர் விஜய்
- சௌதி அராம்கோ: உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனத்தின் லாபம் எவ்வளவு?
- கடலுக்குள் மூழ்கும் நாடுகளுக்கு ஐபிசிசி அறிக்கை பீதியை ஏற்படுத்துவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













