சௌதி அரேபியாவின் அராம்கோ: உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனத்தின் லாபம் எவ்வளவு?

Saudi oil giant Aramco

பட மூலாதாரம், Reuters

உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனமான சௌதி அரேபிய அரசின் அராம்கோ நிறுவனத்தின் கடைசி காலாண்டு (ஏப்ரல் - ஜூன்) லாபம் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பது மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் பெட்ரோலிய பொருட்களுக்கு உண்டாகியுள்ள தேவை ஆகியவற்றின் காரணமாக இந்த லாபம் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்படுவதும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படுவதும் தங்களுக்கு சாதகமான முடிவுகளை தந்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான நிகர லாபம் 288 சதவீதம் உயர்ந்து 25.5 பில்லியன் டாலர் (சுமார் 1,90,000 கோடி இந்திய ரூபாய்) அளவுக்கு அதிகரித்துள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெயின் விலை 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

2021ஆம் ஆண்டி மீதமுள்ள காலத்திலும் தங்கள் நிறுவனத்துக்கான லாபம் அதிகமாக இருக்கும் என்றும் அராம்கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமீன் நாசர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அராம்கோ நிறுவனத்தின் லாபம் அதிகரித்திருப்பதை சர்வதேச அளவில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருபவர்கள் நல்ல செய்தியாகப் பார்க்கவில்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களிலேயே உலக அளவில் அதிகமான பசுமை இல்ல வாயு வெளியேற்றும் நிறுவனமாக அராம்கோ நிறுவனம் உள்ளது என்று சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

1965ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வெளியான பசுமை இல்ல வாயுக்களில், அராம்கோ நிறுவனத்தால் மட்டும் 4% அதிகமான பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று சில கணக்கீடுகள் கூறுகின்றன.

திங்களன்று வெளியான ஓர் அங்கமான பருவநிலை மாற்றம் குறித்த நாடுகளுக்கு இடையிலான குழுவின் (ஐபிசிசி) அறிக்கை மனித நடவடிக்கைகள்தான் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக உள்ளது என்றும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாத அளவுக்கு சில நேரங்களில் புவியின் மீதான தாக்கம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோலிய நிறுவனங்கள் அதிகம் லாபமீட்டுவதை சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கவலையுடன் பார்க்கின்றனர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பெட்ரோலிய நிறுவனங்கள் அதிகம் லாபமீட்டுவதை சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கவலையுடன் பார்க்கின்றனர்.

இந்த அறிக்கை மனித குலத்துக்கு ஓர் சிவப்பு அபாய எச்சரிக்கை என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ கூட்டரேஷ் தெரிவித்துள்ளார்.

அரம்கோ நிறுவனம் மட்டுமல்லாது பிற பெரிய எண்ணெய் நிறுவனங்களும் உலக அளவில் அதிக லாபம் மீட்டுள்ளதாக சமீப நாட்களில் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த பெட்ரோலிய உற்பத்தி நிறுவனமான எக்சான் மொபில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான தங்களது வருவாய் 4.7 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்த நிறுவனம் ஒரு பில்லியன் டாலரை விட அதிகமான இழப்பை சந்தித்து இருந்ததாக தெரிவித்திருந்தது.

ஐரோப்பிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ராயல் டச் ஷெல் நிறுவனமும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதிகபட்ச காலாண்டு லாபத்தை ஈட்டியுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்தபின்பு உலக அளவில் விற்பனையாகும் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு சுமார் 70 அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்தது. இதனால் சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :