ஏடிஎம்மில் பணம் இல்லையா? இனிமேல் வங்கிகளுக்கு அபராதம் - இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி

ஏடிஎம்மில் பணம் இல்லையா? இனிமேல் வங்கிகளுக்கு அபராதம் - ஆர்பிஐ அதிரடி

பட மூலாதாரம், Getty Images

இந்திய ஊடகங்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

ஏடிஎம்மில் பணம் இல்லையா? இனிமேல் வங்கிகளுக்கு அபராதம்

ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு மாதத்துக்கு ஒட்டுமொத்தமாக 10 மணி நேரத்துக்கும் மேலாக பணம் இல்லாமல் இருந்தால், அந்த வங்கிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கும் திட்டத்தை வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அமல்படுத்த உள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏடிஎம் இயந்திரங்கள் (White Label ATM) ஒரு மாதத்துக்கு பணம் இல்லாமல் எவ்வளவு நேரம் இருந்தன என்பது பற்றிய விவரங்களை, அடுத்த மாதம் ஐந்தாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாமல் போனதற்கு வங்கிகள் அபராதம் செலுத்த வேண்டி இருந்தால், அந்த நிறுவங்களிடம் இருந்து தாங்கள் செலுத்திய அபராதத் தொகையை வங்கிகள் மீட்டுக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏடிஎம்மில் பணம் உள்ளதா என்று வங்கிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களை இயக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் ஏடிஎம்மில் பணம் இல்லாதபோது பொதுமக்களுக்கு உண்டாகும் சிரமத்தைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது.

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான வழக்கு

நடிகர் ஆர்யா

பட மூலாதாரம், @aryaoffl instagram

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மன் பெண் அளித்த புகாரில், நடிகர் ஆர்யா காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து ஆர்யா திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த விட்ஜா என்பவர் சிபிசிஐடி போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், நடிகர் ஆர்யாவுக்கு எதிராக மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீதான தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி போலீஸார் வரும் ஆக.17-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தைக் காண அனுமதி

அயோத்தி ராமர் கோயில்

பட மூலாதாரம், Getty Images

அயோத்தியில் தற்காலிகமாக செயல்படும் ராமர் கோயிலை தரிசிக்க வரும் பக்தர்கள், புதிய ராமர் கோயிலின் கட்டுமான பணிகளை பார்க்க அனுமதிப்பது என ராமர் கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.

இதற்காக, தற்காலிக கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு சுவர் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில், துவாரங்களுடன் கூடிய 15 அடி அகல இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. அந்த வேலிக்கு பின்னால் இருந்தபடி, கட்டுமான பணிகளை பக்தர்கள் பார்க்கலாம்.

ஆனால், அந்த இடத்தில் நிற்பதற்கு அனுமதி இல்லை. பார்த்தபடியே நகர்ந்து செல்ல வேண்டும் என்று அறக்கட்டளை நிர்வாகி சம்பத்ராய் தெரிவித்தார்.

2023-ம் ஆண்டு இறுதிக்குள், ராமர் கோயில் கருவறை, பக்தர்கள் தரிசிக்க தயாராகி விடும் என்றும் அவர் கூறினார் என்கிறது அந்தச் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :