'ஜல்சா' திரைப்படம்: செரிப்ரல் பால்சியுடன் பாலிவுட்டில் ஜொலிக்கும் சூர்யா காசிபட்லா

ஜல்சா திரைப்படம்

பட மூலாதாரம், PRIME VIDEO

படக்குறிப்பு, ஜல்சா திரைப்படத்தில் நடித்த வித்யா பாலன் மற்றும் ரோஹிணி அத்தங்காடியுடன் சூர்யா காசிபட்லா.

சமீபத்தில் வெளியான 'ஜல்சா' பாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் செரிப்ரல் பால்சியால் (பெருமூளை வாத நோய்) பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா காசிபட்லா, தன் நிஜ வாழ்க்கையில் தினந்தோறும் அத்தகைய பாதிப்புடன் வாழ்ந்து வருபவர்.

ஆனால், உலகின் மிகப்பெரிய திரைத்துறையான பாலிவுட்டில் அவரை நடிக்க வைப்பதென்பது, எல்லோருக்கும் வாய்ப்பளிப்பதில் அரிதான ஒரு நிகழ்வு ஆகும். சூர்யாவின் இந்த பயணம் குறித்து அவருடன் சுதா ஜி திலக் பேசியுள்ளார்.

சூர்யா ஒரு சைவ உணவு விரும்பி, பியானோ வாசிப்பார், கிரிக்கெட் மீது காதல் கொண்டவர், கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை கற்க திட்டமிட்டு வருகிறார், அவர் தன்னை "நிஃப்டி கோடர்" என அழைத்துக்கொள்கிறார்.

டெக்சாஸில் வாழ்ந்து வரும் அவர் சொந்தமாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனல் வைத்துள்ளார், சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடர்பவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் கவனிக்கிறார்.

மிக பிரபலமான இந்திய நடிகைகள் வித்யா பாலன் மற்றும் ஷெஃபாலி ஷா ஆகியோருடன் இணைந்து, அமேசானில் வெளியாகியுள்ள 'ஜல்சா' திரைப்படத்தில் சூர்யாவின் பாராட்டத்தக்க நடிப்பு, அவரை புகழ்வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

"திறமைக்கு என் உடல் தடையல்ல"

"எனக்கு செரிப்ரல் பால்சி உள்ளது, ஆனால், புதிய திறன்களை கற்கும் என்னுடைய திறமைக்கு அது தடையல்ல," என, ஜூம் செயலி வாயிலாக அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்தார்.

மும்பையில் நடக்கும் ஆபத்துமிகுந்த கதைக்களம் தான் ஜல்சா. பிரபலமான தொலைக்காட்சி ஊடகவியலாளர் வித்யா பாலனின் 'கத்துக்குட்டி' மகன் ஆயுஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. ஆயுஷ் கதாபாத்திரத்திற்கு வீடியோ கேம் விளையாடவும் இசை கேட்கவும், தனக்கு நெருக்கமான பாட்டியுடன் துடுக்குடன் விளையாடவும் பிடிக்கும். கார் விபத்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் வித்யா பாலன் சிக்கிக்கொள்ள, அவருடைய குடும்பத்தினரின் வாழ்க்கை தலைகீழாகிவிடுகிறது.

சூர்யாவின் யூடியூப் காணொளிகளை பார்த்த இத்திரைப்படத்திற்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் 'காஸ்டிங் இயக்குநர்', சூர்யாவை தொடர்புகொண்டுள்ளார், இதன்மூலம் அவருக்கு ஆயுஷ் கதாபாத்திரம் வழங்கப்பட்டது. அந்த யூடியூப் காணொளிகளில் சூர்யா பாடுகிறார், கம்ப்யூட்டர் புரோகிராமிங் குறித்து "வகுப்பெடுக்கிறார்", கிரிக்கெட் குறித்தும் "பாடமெடுக்கிறார்". இந்த திரைப்படத்திற்கான ஆடிஷன் குறித்து சூர்யாவின் குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார், வீட்டுப் பணிகளை கவனித்துவரும் சூர்யாவின் தாய் சுனிதா சனாகரம், "இதனை செய்து பார்ப்போம்" எனக்கூறி ஊக்கம் அளித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான ஆடிஷனில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்ட இளம்வயது நடிகர்களுக்கு மத்தியில் இயக்குநர் சுரேஷ் திரிவேணி சூர்யவை இக்கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார். தொற்றுநோய் காலகட்டத்தில் மும்பைக்கு பறந்த சூர்யா, அங்கு தன் கதாபாத்திரத்திற்காக தயார்படுத்திக்கொள்ள பல்வேறு பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்டார். அந்த பயிற்சி பட்டறைகளில் "மிகுந்த குதூகலமாக இருந்ததாகவும்", படக்குழுவினர் மிகவும் சவுகரியமாக தன்னை உணரச்செய்ததாகவும் சூர்யா கூறுகிறார்.

ஜல்சா திரைப்படம்

பட மூலாதாரம், PRIME VIDEO

படக்குறிப்பு, சூர்யா காசிபட்லா

"ஜல்சா திரைப்படம் ஒரு மைல்கல்"

மிகவும் ஆழமான உணர்ச்சிகளை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தியுள்ள சூர்யா, புன்னகை மற்றும் தன் எளிமையான இருப்பின் மூலம், கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.

சூர்யா "ஒரு நடிகராக உள்ளுணர்வுடன் இருப்பதாக," வித்யா பாலன் தெரிவிக்கிறார். சூர்யாவுடன் பல காட்சிகளை திரையில் பகிர்ந்த ஷெஃபாலி ஷா, "சூர்யா பயிற்சி பெற்ற நடிகர் அல்ல, ஆனால், கேமரா முன்பு மிகவும் இயல்பாக இருக்கிறார்," என தெரிவித்தார்.

"திரைப்படங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும், அரை நிமிட காட்சிக்காக, படப்பிடிப்பில் எத்தனை பேர் தேவை என்பதை நான் நடிப்பின் மூலம் கற்றுக்கொண்டேன். திரைப்பட உருவாக்கம் என்பது அனைவரின் கூட்டுப்பணி என்பதை கவனத்தில் கொள்ளும்போது மிக பணிவாக உணர்ந்தேன்," என சூர்யா தெரிவித்தார்.

உடல் சவால்களை கொண்ட கதாபாத்திரங்களுக்கு எப்போதும் அத்தகைய சவால்களற்ற நடிகர்களே இந்திய திரைப்படங்களில் நடிப்பர். எல்லோரையும் உள்ளடக்கிய சினிமாவில் 'ஜல்சா' இத்தகைய வழக்கங்களை முறியடிக்கிறது, இத்தகைய கதாபாத்திரங்கள், உடல் சவால்களை கொண்டவர்களுக்கே வழங்க வேண்டும் என பெரும்பாலானோர் தற்போது நம்புகின்றனர். அத்தகைய சவால்களுடன் வாழ்வதன் நுணுக்கங்களை அவர்களால் துல்லியமாக வெளிப்படுத்த முடியும் என நம்புகின்றனர்.

ஜல்சா திரைப்படம்/ செரிப்ரல் பால்சி

பட மூலாதாரம், PRIME VIDEO

"ஜல்சா திரைப்படத்தில் சூர்யாவை நடிக்க வைத்திருப்பது, அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான மிகச்சிறந்த ஒரு நகர்வு. இந்திய சினிமாவில் இதுவொரு மைல்கல். அந்த நடிகரையும் அவரது கதாபாத்திரத்தையும் மரியாதையுடன் நடத்தியுள்ளனர், திரைப்படத்தில் அதனை இயல்பாக கொண்டு வந்துள்ளனர்," டெல்லி பத்திரிகையாளரும் மாற்றுத்திறனாளிகள் செயற்பாட்டாளருமான மதுசூதன் ஸ்ரீனிவாஸ் தெரிவிக்கிறார்.

ஐடி துறையைச் சார்ந்த சூர்யாவின் தந்தை கிருஷ்ணா காசிபட்லா, "வீட்டில் சூர்யா மகிழ்ச்சியான குடும்ப சூழலை அனுபவிக்கவும், சூர்யா தொடர்புடைய முக்கியமான விஷயங்களில் அனைத்து முடிவுகளையும் எடுப்பதில் அவருடைய பங்கையும்" உறுதிப்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார். சூர்யாவை "வித்தியாசமாக நடத்தக்கூடாது" என முன்பே அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தனக்கு 4 வயதாக இருந்தபோதே, சூர்யா தான் நடிகராக விரும்புவதாக தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். டெக்சாஸில் உள்ள தனது பள்ளியில் மாறுவேட போட்டிகளில் கலந்துகொள்வதில் ஆர்வமுடையவராக இருந்தார் சூர்யா.

பன்மொழி அறிந்தவராக சூர்யா உள்ளார், அவரால் தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை புரிந்துகொள்ள முடியும். பாலிவுட், தெலுங்கு திரைப்படங்கள் தனக்கு பிடிக்கும் எனக்கூறும் சூர்யா, சைஃபி (sci-fi ) திரைப்படங்கள் மற்றும் கொலைக்களம் தொடர்பான திரைப்படங்களில் ஆர்வம் என்கிறார்.

வித்யா பாலன்

பட மூலாதாரம், PRIME VIDEO

படக்குறிப்பு, வித்யா பாலன்

"என் பெற்றோர்தான் சூப்பர் ஹீரோக்கள்"

கம்ப்யூட்டர் புரோகிராமராக தான் திட்டமிட்டிருப்பதாக கூறும் சூர்யா, ஆனால், "ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பது சந்தேகத்திற்கிடமின்றி என் நினைவில் நிற்கும் ஒரு அனுபவம்" என்கிறார்.

"செரிப்ரல் பால்சி உள்ள கதாபாத்திரத்தில் நான் நடித்திருப்பது, என்னை போன்றவர்களும் கனவு காணலாம், பொழுதுபோக்கு துறையில் நுழையலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என நம்புகிறேன்," என தெரிவித்தார்.

"எல்லோரையும் உள்ளடக்கியதாகவும், பன்மைத்தன்மை உடையதாகவும் பாலிவுட் திரைத்துறையை உருவாக்குவதில் நான் பங்கு வகித்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்," என்றார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஹிரித்திக் ரோஷன், அக்ஷய் குமார் மற்றும் தெலுங்கு திரையுலகின் மகேஷ் பாபு ஆகியோரின் 'ஃபேன்' என்கிறார், இந்த நடிகர்கள் அனைவரும் 'சூப்பர் ஹீரோ' நாயகர்களாவர்.

ஆனால், அவருக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோக்கள் யார்?

"என் பெற்றோர்".

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: