புஷ்பா தலைவணங்க மாட்டான்: பாலிவுட்டுக்கு போட்டியாக முன்னேறும் தென்னிந்திய சினிமா

பட மூலாதாரம், TWITTER/PUSHPAMOVIE
- எழுதியவர், பராக் சாபேகர்
- பதவி, மூத்த பத்திரிகையாளர் பிபிசி ஹிந்திக்காக
தென்னிந்திய சினிமாவில் இருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் அல்லது சிரஞ்சீவி ஆகியோரை மட்டுமே இந்தி பேசும் ரசிகர்கள் அறிந்திருந்த ஒரு காலம் இருந்தது. சில நேரங்களில் நாகார்ஜுனா அல்லது வெங்கடேஷ் போன்றோரின் பெயர்களையும் அவர்கள் கேட்டிருக்கலாம். ஆனால் இன்று பிரபாஸ், அல்லு அர்ஜுன் போன்ற நட்சத்திரங்களின் பெயர்கள் இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள கிராமங்களில் கூட எதிரொலிக்கின்றன.
தனுஷ், அஜீத், மோகன் பாபு, விஜய் தேவரகொண்டா, சியான் விக்ரம், கிச்சா சுதீப், பவன் கல்யாண், நாக சைதன்யா, ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், சூர்யா, சமந்தா, ராஷ்மிகா மந்தானா என்று நீண்டுகொண்டே போகும் பெயர் பட்டியலில் உள்ளவர்கள், உ.பி., பிகார், வங்காளம் முதல் மத்தியபிரதேசம், குஜராத் வரை கொடிகட்டிப்பறக்கின்றனர்.
வைஜயந்தி மாலா காலத்திலிருந்தே ஹிந்தி சினிமாவில் தென்னிந்தியாவின் ஆதிக்கம் கதாநாயகிகள் விஷயத்தில் இருந்துவருகிறது. ஹேமமாலினி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, மீனாட்சி சேஷாத்ரி முதல் இன்று ஸ்ருதிஹாசன் வரை, தென்னிந்திய நடிகைகள் இந்தி படங்களில் நடித்து பிரபலமானார்கள். ஆனால் இந்த காலம் முற்றிலும் வேறுபட்டது. தென்னக நட்சத்திரங்கள் நாடு முழுவதும் தங்கள் சொந்த படங்களால் ஜொலிக்கிறார்கள்.
முழுக்க முழுக்க பொழுதுபோக்கு, பார்வையாளர்களின் நாடித் துடிப்பின் மீது முழுமையான பிடிப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 20 வருடங்களாக நன்கு சிந்தித்து செயல்படுத்தப்பட்டு வரும் உத்தி இன்று பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் கோட்டையை கைப்பற்றும் பந்தயத்தின் இறுதிகோட்டிற்கு அருகே தென்னிந்திய நடிகர்கள் உள்ளனர். தென்னிந்திய சினிமாவின் ஒட்டுமொத்த தளபதிகளின் பட்டாளமும் பாலிவுட்டை ஆளும் கனவை நனவாக்குவதற்கு மிக அருகில் உள்ளது.
இப்போது நாடெங்கும் புயலாய் சீறி, கோடிக்கணக்கான ரூபாயை ஈட்டிய புஷ்பா படத்தை மட்டுமே வைத்து, இந்த முடிவு எட்டப்பட்டது என்று நினைக்க வேண்டாம்.
பாலிவுட் நடிகர்கள் உதவியோடுரசிகர்களை சென்றடையும் உத்தி
தெற்கிலிருந்து வரும் இந்தத் திட்டத்தில் இந்தி-பட ரசிகர்களைக்கவர ' ஆசை காட்டும்' உத்தியும் உள்ளது. தென்னிந்திய சினிமா, பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்களுக்கு சின்ன சின்ன வேடங்கள் கொடுப்பது தொடர்கிறது. இந்திரனில் (ரோபோ) ஐஸ்வர்யா ராய் முதல் அமிதாப் பச்சன் வரை, மற்றும் வரவிருக்கும் RRR திரைப்படத்தில் ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் வரை இந்த விஷயம் தொடர்கிறது.
சொல்லப்போனால், ஹிந்தி பட நடிகர்கள் மூலம் இந்தப்பெரிய மார்க்கெட்டை எளிதாகக் கைப்பற்றமுடியும் என்பதை தென்னிந்திய சினிமா துறையினர் அறிந்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், TWITTER/BINGED
ராஜதந்திரத்திற்கும் இங்கு குறைவில்லை. 'பாலிவுட்டை சேர்ந்தவர்களை எங்கள் இண்டஸ்ட்ரிக்கு திறந்த மனதுடன் வரவேற்கிறோம்' என்கிறார் 'புஷ்பா' வின் கதாநாயகன் அல்லு அர்ஜுன். ஆனால் பிரச்சனை என்னவென்றால், தென்னிந்திய நட்சத்திரங்களின் பெயரும் புகழும் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், இங்குள்ள ரசிகர்கள் வெளியாட்களை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை.
தென்னிந்தியாவின் இந்த 'தாக்குதல்' சுமார் 15-20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்தக் காலகட்டத்தின் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாலிவுட் ஆட்களை வைத்து அவ்வப்போது படம் தயாரித்து 'தென்னிந்தியப் படங்களின்' மயக்கத்தை அளித்தனர். பிறகு ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா போன்ற நடிகைகள் பாலிவுட்டின் முக்கிய நீரோட்டத்திற்கு வந்தனர்.
தென்னகமும் ஹிந்திப் படங்களில் இருந்து நடிகர்களை தங்கள் மொழிப் படங்களில் நடிக்க வைத்தது. ஆனால் பெரும்பாலும் அவர்கள் குணச்சித்திரக் கலைஞர்களாகவே இருந்தனர். ராகுல் தேவ், சோனு சூட், சங்கி பாண்டே, வினீத் குமார், முரளி ஷர்மா ஆகியோர் தென்னிந்திய டப்பிங் படத்தில் அவ்வப்போது காணப்பட்டனர்.
தென்னிந்தியத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும், அங்குள்ள பெரிய திரைப்பட நிறுவனங்களும் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தென்னிந்திய டப்பிங் படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யத்தொடங்கினர். இன்று பெரும்பாலான திரைப்பட சேனல்களின் ஒளிபரப்பு நேரம் இந்த டப்பிங் படங்களால் தான் நிரம்புகிறது..
தென்னிந்திய திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமங்கள் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு கிடைத்தது. அதாவது சேனல்கள் தனது காலியாக இருந்த நேரத்தை மலிவாக நிரப்பும் காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் நடக்கின்றன.

பட மூலாதாரம், UNVIERSAL PR
இந்த மன்னர்கள் பாலிவுட் கோட்டையைக் கைப்பற்ற ,அந்தந்தப் பகுதிகள் அல்லது மொழிவாரியாகப் பயன்படுத்திய 'டப் மார்க்கெட்' ஆயுதம் இன்று சரியான இடத்தை அடைந்துள்ளது.
தென்னிந்திய படங்களால் பாலிவுட்டுக்கு அச்சுறுத்தல்
"இதுவரை இப்படி நடந்ததில்லை. இன்று நடப்பது பாலிவுட்டுக்கு நிச்சயம் ஒரு எச்சரிக்கை மணி. தென்னிந்தியாவின் டப் ஃபார்முலா ஹிட் ஆகியுள்ளது."என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளரான மேஹுல் குமார் கூறுகிறார்.
இதற்கான காரணத்தை விளக்கிய மேஹுல் குமார், "பாலிவுட் 100% ஆபத்தில் உள்ளது. ஏனென்றால் இங்கே உள்ளடக்கம் ஓரமாக தள்ளப்பட்டுள்ளது. ஒரு பிரபல நட்சத்திரம் கிடைத்தால் உடனே ஒரு படத்தை தயாரிக்கின்றனர். பெரிய நட்சத்திரங்களின் தலையீடு அதிகமாக உள்ளது. இயக்குனர் தன் விருப்பப்படி வேலை செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை. இன்று 10வது வாரமாக புஷ்பா வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நான் யாருடைய பெயரையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு பெரிய நிறுவனம் பாடல்களை முதலில் வாங்கிவிட்டு, என்னிடம் 10,12 பாடல்கள் உள்ளன. எது பிடிக்கிறதோ அதைப்போடுங்கள் என்று இயக்குனரிடம் சொல்கிறது. பாலிவுட்டில் உள்ளடக்கத்தின் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை என்பது தென்னிந்திய சினிமா துறைக்கு முன்பே தெரியும். அதனால் பார்வையாளர்களின் விருப்பத்தை மனதில் வைத்து கதை மற்றும் பாடல்களில் கவனம் செலுத்தினார்கள். நம்மால் இதை தரமுடிவதில்லை,"என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுகளில், தென்னிந்திய டப்பிங் படங்கள் ஆதிக்கம் செலுத்தியதால், ஒரு காலத்தில் கொரியன் அல்லது ஹாலிவுட் படங்களை ரீமேக் செய்த பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தை அதிகம் நம்பத் தொடங்கியது. சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர்.
தென்னிந்திய ரீமேக்கில் இருந்து 'ரவுடி ராத்தோர்' உருவானதன் மூலம் அக்ஷய் குமாரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை அனைவரும் அறிந்ததே. தெற்கின் ரீமேக் ஒப்பந்தம் பாலிவுட்டுக்கு லாபகரமானது தான். ஆனால் பாலிவுட் இதை பின்னர்தான் உணர்ந்தது.
இதனால்தான் 14 நாட்களில் 234 கோடி ரூபாயை 'புஷ்பா' வசூல் செய்துள்ளது. இப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு முன், 'மாஸ்டர்' 209.60 கோடியும், 'வக்கீல் சாஹப்' 119.90 கோடியும், 'அகண்ட்' 103 கோடியும், 'அண்ணாத்தே' 102.50 கோடியும், 'உப்பேனா' 93.30 கோடியும், 'டாக்டர்' 81.60 கோடியும் வசூல்செய்து தந்தது.
'பாகுபலி'துவக்கிவைத்த ஆதிக்கம்
பணமழை பொழிந்த மிக பிரம்மாண்டமான 'பாகுபலி' (இரண்டு பாகங்களும்) ஹிந்தி மொழி பிராந்தியங்களில் ஆதிக்கத்தை துவக்கிவைத்த தென்னிந்தியபடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சொல்லப்போனால், கன்டென்ட் மட்டுமில்லாமல், படம் ' நிஜ வாழ்க்கையை ஒப்பிடும்போது மிகைப்படுத்தல்' நிறைந்ததாக இருந்ததோடு கூடவே கட்டப்பா மாமாவும் இருந்தார். 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?' இந்தக்கேள்வி 'ஷோலே' படத்தின் வசனம் போல சாகாவரம் பெற்றுவிட்டது.

பட மூலாதாரம், SS RAJAMOULI
"10-15 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய படங்கள் டப் செய்யப்பட்டு தொலைக்காட்சியில் வர ஆரம்பித்தபோது இதற்கான அடித்தளம் போடப்பட்டது. மக்களுக்கு சினிமாவின் கேளிக்கை இலவசமாக டிவியில் கிடைக்கத்தொடங்கியது.மறுபுறம் பாலிவுட், யதார்த்த சினிமாவை நோக்கி நகர ஆரம்பித்தது. மல்டிபிளக்ஸ்கள் மற்றும் நகர்ப்புற ரசிகர்களை மையமாகக் கொள்ள ஆரம்பித்தது. தென்னிந்திய திரைதுறையினருக்கு யூடியூப் என்ற ஆயுதம் கிடைத்தது," என்று நாடு முழுவதும் உள்ள படங்களின் வியாபாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் வர்த்தக நிபுணர் அதுல் மோகன் தெரிவித்தார்.
"தென்னகத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்க கோடிக்கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர். அவர்களின் டிஆர்பியும் டிவி மூலம் அதிகரித்தது. அதன் காரணமாக அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, விஜய், அஜீத் ஆகியோர் பிரபலமடையத் தொடங்கினர். நாம் 'கிளாஸ்' தயாரிப்பில் பிஸியாக இருந்தோம். அவர்கள் 'மாஸ்' என்டர்டெயின்மென்ட்டில் கவனம் செலுத்தினர். ஒரே திரை கொண்ட அரங்குகளுக்கு அதுதான் தேவை. பிறகு 'பாகுபலி' அதை வேறு மட்டத்திற்கு எடுத்துச் சென்றது," என்கிறார் அவர்.
"இப்போது தெலுங்கு படங்களை பாருங்கள்.. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலாகிவிடுகிறது. நாடு முழுவதிலும் இருந்து 100 கோடி வசூல் செய்ய ஹிந்தி நடிகர்கள் போராடுகிறார்கள். அதன்படி பார்த்தால், தெற்கை விட 20 மடங்கு அதிகமாக பாலிவுட் வியாபாரம் இருந்திருக்கவேண்டும்," என்று அதுல் மோகன் சுட்டிக்காட்டினார்.
தென்னிந்திய சினிமாத்துறையினர் தங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதே நேரம் பாலிவுட்டின் தரம் குறைந்து வருகிறது என்றும் அதுல் மோகன் கருதுகிறார்.

பட மூலாதாரம், TWITTER/PUSHPA
"புத்திசாலித்தனமான உள்ளடக்கம் வேண்டுமானால் மலையாள சினிமாவைப் பாருங்கள். மாஸ் என்டர்டெயின்மென்ட் வேண்டுமானால் தமிழ்-தெலுங்கு படங்களைப் பாருங்கள். ஆனால் இங்கே சல்மான்-அக்ஷய் போன்ற நட்சத்திரங்கள் தென்னிந்திய படங்களை ரீமேக் செய்கிறார்கள். தென்னிந்தியாவில் அவர்கள் ஒரிஜினல்களை உருவாக்குகிறார்கள். நாம் கிளாசிக் அல்லது கலைப்படங்களை தயாரிக்கிறோம். பாகுபலி போன்ற ஒரு படத்தை பாலிவுட் இதுவரை தயாரிக்கவில்லை. இந்தப் படம் எல்லா சாதனைகளையும் முறியடித்துவிட்டது. அவர்கள் ஹிந்தி மக்களை கவர்வதற்காக வந்துள்ளனர் என்று நாம் சொல்லலாம். இது பத்தாண்டுகளாக மெதுவாக நடந்து வருகிறது… இது நமக்கு தெரியவே இல்லை," என்றும் அவர் கூறினார்.
'வடக்கு-தெற்கு சினிமாவுக்கு இடையில் இடைவெளி இப்போது முடிந்துவிட்டது
"பாலிவுட்டுக்கு இது கடினமான நேரம். இப்போது ஹிந்தியில் ப்ராஜெக்ட்கள் உருவாகின்றன. மல்டிஸ்டார் மசாலா படங்கள்தான் ஓடும் என்று பாலிவுட் உணர்ந்துவிட்டது. இந்த திசையில் வேலைகள் வேகமாக தொடங்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் அடுத்த இரண்டு - மூன்று ஆண்டுகளில் தெரியும்," என்று அதுல் மோகன் தெரிவித்தார்.
"பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களை அதிகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் ஒதுங்கி இருக்கவேண்டும். அப்போதுதான் தென்னிந்திய நட்சத்திரங்களைப் போல நட்சத்திர அந்தஸ்தை அடைய முடியும்."
" முன்பு பாலிவுட் படங்களுக்கான போட்டி பாலிவுட் படங்களில்தான் இருந்தது. ஆனால் இப்போது ஹாலிவுட் தமிழ்-தெலுங்கு மற்றும் OTT யிடம் அது போட்டியிடவேண்டும். போட்டி அதிகரித்துள்ளது. அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். புதிதாக ஏதாவது கொண்டு வர வேண்டும். மக்களை கவர ஏதாவது செய்யவேண்டும். இப்போது இருக்கும் நிலை தொடரமுடியாது. சராசரி படங்களுக்கு இங்கு இடமில்லை.. சராசரிக்கு மேல் தரத்தில் வேலை செய்ய வேண்டும். லாக் டவுன் எல்லா சமன்பாடுகளையும் மாற்றிவிட்டது. இப்போது பாலிவுட் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என்று திரைப்பட ஆய்வாளர் கோமல் நஹடா தெரிவித்தார்.
தென்னக ஆற்றின் கரை உடைந்தால் வெள்ளம் வருவது நிச்சயம். தென்னிந்திய நட்சத்திரங்கள், ஏற்கனவே தங்கள் வட்டாரத்திலும் உலகெங்கிலும் பெயரைப் பெற்றுள்ளனர். இந்தி பெல்ட் ரசிகர்களின் இதயங்களை ஆளத் தயாராக உள்ளனர். ரசிகர்களும் இதற்கு தயாராகவே இருக்கிறார்கள். பல படங்கள் உருவாகி வருகின்றன. இப்போது படங்களில் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு முடிவுக்கு வந்துவிட்டது. இந்திய சினிமா மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவே தொடரும்.

பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













