கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பூர்ணிமா தம்மிரேடி
- பதவி, பிபிசி தெலுங்கு சேவைக்காக
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மற்றும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இணைந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளன.
'யூபிஐ பரிவர்த்தனை' என்பது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் உருவாக்கப்பட்டதுதான்.
பொதுவாக இந்த யூபிஐ பரிவர்த்தனைகள் கூகுள் பே, பேடிஎம் மற்றும் ஃபோன் பே போன்ற மூன்றாம் தர நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பரிவர்த்தனைகள் 30 சதவீதத்தை தாண்ட கூடாது என்ற விதிகளுடன் செயல்படுகிறது.
இந்த யூபிஐ பரிவர்த்தனை செயலிகள் மூலம் பெரிதாக சிரமம் இல்லாமல் ஒருவருக்கு நாம் பணம் அனுப்பிகிறோம்.
ஆனால் எந்த அளவிற்கு இது எளிதாக உள்ளதோ அதே அளவிற்கு இதை கவனமாக கையாள வேண்டியதும் அவசியமாகவுள்ளது.
கூகுள் பே, பேடிஎம், ஃபோன் பே, வாட்சப் பே போன்றவை தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல தேவையை கருதி சந்தையில் வேறு பல புதிய செயலிகளும் அறிமுகமாகவுள்ளன. எனவே எந்த செயலியை பயன்படுத்தலாம், எதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகிறது.
இதை முடிவு செய்வதற்கு கீழே உள்ள கேள்விகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
- ப்ளே ஸ்டோரில் இந்த செயலிகள் குறித்து முறையான ரேட்டிங் மற்றும் ரிவ்யூ உள்ளதா?
- இந்த செயலியை பயன்படுத்த நாம் லாகின் செய்ய வேண்டுமா? அப்படியானால் அதற்கான விதிகள் எந்த அளவிற்கு கடினமாக உள்ளது? வலுவான பாஸ்வேர்டை உருவாக்க வேண்டுமா?
- நீங்கள் ஃபோனை ஓபன் செய்யும் போது ஒருமுறை பாஸ்வேர்டை பயன்படுத்தினாலும், மீண்டும் அந்த செயலிக்காக பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டுமா?
- இந்த செயலியின் மூலம் பணம் செலுத்தும்போதும், பெறும்போதும் நோட்டிஃபிகிஷன்கள் வருமா?
- பணத்தை ஒருவருக்கு அனுப்பும் முன் உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு முறை உங்களிடம் கேட்கப்படுமா? தவறு நடந்தால் அதை சரி செய்ய வழி உள்ளதா?
- ஏதேனும் பணம் செலுத்தும் போது ‘உறுதிப்படுத்துங்கள்’ என்ற கேள்வியை கேட்குமா?
அந்த செயலியை இன்ஸ்டால் செய்யும்போது என்ன மாதிரியான அனுமதியை கோருகிறது? அந்த செயலியின் விளக்கத்தில் எங்கேனும் இதன்மூலம் சேகரிகக்ப்படும் தகவல்கள் மூன்றாம் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
இந்த கேள்விகளுக்கான விடையை பொறுத்து தற்போது எந்த செயலி பயன்படுத்த பாதுகாப்பானது என்பதை நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
மொபைல் செயலியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வழிகள்
நீங்கள் பயன்படுத்தும் செயலியை சில அம்சங்களை தேர்வு செய்வதும் மூலம் நீங்கள் மேலும் பாதுகாப்பாக்கலாம்.
‘மல்டி ஃபேக்டர் ஆதென்டிகேஷன்’: இதன்மூலம் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை மட்டும் பயன்படுத்தாமல், மொபைல் அல்லது மின்னஞ்சலுக்கு ஓடிபியை பெறலாம். ஓடிபியை சரியாக டைப் செய்த பிறகே, அந்த செயலி சரியான தகவல்களை காட்டும். எனவே இந்த வசதியை ஆன் செய்து வைத்து கொள்ளவும்.
நோட்டிஃபிகேஷன் வசதியை வைத்து கொள்ளுங்கள்: உங்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டாலோ அல்லது எடுக்கப்பட்டாலோ நோட்டிஃபிகேஷன் பெறும் வசதியை வைத்து கொள்ளுங்கள்.
குறிப்பு: எஸ் எம் எஸ் மற்றும் மின்னஞ்சலில் நோட்டிஃபிகேஷன் வரும் வசதியை நீங்கள் இணைத்து கொள்ளலாம். எஸ்எம்எஸ்-ல் உங்கள் பேங்க் பேலன்ஸ் குறித்த தகவல்கள் வந்தால் அதை படித்துவிட்டு ஓரிரு நாட்களில் டெலிட் செய்துவிடுங்கள். உங்கள் ஃபோனை யாரேனும் திருடிவிட்டால் அல்லது உங்கள் ஃபோனை நீங்கள் லாக் செய்ய மறந்துவிட்டால் பிறர் உங்களின் வங்கி இருப்பு தொகையை அறிந்து கொள்ள நேரலாம்

பட மூலாதாரம், Getty Images
பாஸ்வோர்ட் செட்டிங்: ஒவ்வொரு முறை நாம் அந்த செயலிக்குள் நுழையும்போதும் பாஸ்வேர்ட் செலுத்தும்படி நீங்கள் ஒரு பாஸ்வேர்டை அமைத்து கொள்ள வேண்டும்.
அப்டேட்ஸ்: மொபைல் செயலிகள் ஒருமுறை இன்ஸ்டால் செய்தால் தானாக அப்டேட் செய்து கொள்ளும். அது பல சமயங்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கு உதவியாகவும் இருக்கும்.
இந்த வசதியை நீங்கள் ஆன் செய்து வைத்திருக்கவில்லை என்றால், செடிங்ஸ் > ஆட்டோ அப்டேட் ஆப்ஸ் இன் த கூகுள் ப்ளே ஸ்டோர் ஆப் – என்று செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
ஐஃபோனாக இருந்தால் செட்டிங்க்ஸ் > ஐ ட்யூன்ஸ் & ஆப் ஸ்டோர் > ஆப் அப்டேட்ஸ் – என்று செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
யாருக்கு பணம் செலுத்துகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்
ஒரு பரிவர்த்தனையை பல வழிகளில் நீங்கள் மேற்கொள்ளலாம். அலைபேசி எண்ணை வைத்து, யூபிஐ ஐடியை கொண்டு, க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, அல்லது லிங்கின் மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
இது அனைத்தையுமே நீங்கள் இருமுறை சோதித்து பார்க்க வேண்டும். இல்லேயேல் வேறு யாருகேனும் பணம் சென்றுவிடும். சில நேரங்களில் மோசடிகளில் சிக்கிவிடலாம்.
ஒருவருக்கு முதல் முதலாக பணம் செலுத்தும்போது ரூ.5 போன்ற சிறிய தொகையை செலுத்திப் பாருங்கள். சரியான நபருக்குத்தான் பணம் சென்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பட மூலாதாரம், Getty Images
மொபைல் மூலம் பணம் செலுத்தினாலும் அதையும் பணத்தை செலுவு செய்வதை போலவே நினைத்து கொள்ளுங்கள்
ஒருவருக்கு நாம் பணம் கொடுத்த பின் அதை திரும்ப பெற முடியாது அல்லவா (அவர்களே திரும்பி கொடுக்க விரும்பாத வரை)?
அதேபோல மொபைலில் செலுத்தும் பரிவர்த்தனையும். ஏதேனும் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தால் அதை திரும்ப பெற இயலாது.
எனவே எந்த ஒரு அவசரத்திலும், சந்தேகத்திலும் பரிவர்த்தனையை மேற்கொள்ளாதீர்கள்.
அலைபேசியை பயன்படுத்தும்போது தேவை கவனம்
இம்மாதிரியான பரிவர்த்தனையை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் அலைபேசியை பணம் உள்ள ஒரு பர்சை போலதான் நினைக்க வேண்டும்.
அலைபேசிக்கு பாஸ்வேர்டை செட் செய்யுங்கள். உங்கள் முகம் அல்லது விரல் ரேகையை கொண்டு ஓபன் செய்யும் வசதியை காட்டிலும் பாதுகாப்பான பாஸ்வேர்டை அமைத்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் வலுக்கட்டாயமாக யார் வேண்டுமென்றாலும் உங்கள் ரேகையை பயன்படுத்தலாம். ஆனால் பாஸ்வேர்டை நாம் சொன்னால் மட்டுமே அவர்களுக்கு தெரியவரும்.
மூன்று முறை பாஸ்வேர்டை தவறாக செலுத்தினால் அதுவாகவே லாக் ஆகிவிடும் வசதியை ஆன் செய்து வையுங்கள்.
ஒவ்வொரு பரிவர்த்தனை செயலிக்கும் ஒரு பாஸ்வேர்டை செட் செய்யுங்கள்.
பிற கேமிங் அல்லது வேறு ஏதெனும் செயலியை இன்ஸ்டால் செய்யும்போதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் பிற போலி செயலிகளின் மூலம் மால்வேர் (தரவுகளை திருட வடிவமைக்கப்பட்ட மென்பொருள்) செலுத்தப்பட்டு நமது பரிவர்த்தனை செயலி மூலம் பண மோசடி நடக்க வாய்ப்புள்ளது.
உங்கள் அலைபேசி தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
ட்ராக்கிங் வசதியை நீங்க செட் செய்ய வேண்டும். தற்போது அனைத்து பிராண்ட் அலைபேசிகளும் ட் ராக்கிங் வசதியை கொண்டுள்ளது.
‘ரிமோட் டேட்டா எரேஸ்’ (தூரத்திலிருந்து தரவுகளை அழிக்கும் வசதி) எனவே நீங்கள் அலைபேசியை தொலைத்துவிட்டாலும், தரவுகளை அழித்துவிடலாம். ஆனால் அந்த அலைபேசியில் இணைய வசதியை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும்.
மொத்தத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிகவும் எளிதானதாக இருக்கலாம் ஆனால் அதில் அதிக எச்சரிக்கையும் கவனமும் தேவை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












