e-RUPI: நரேந்திர மோதி அரசின் புதிய பணப் பரிவர்த்தனை திட்டம் - 10 முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், PM INDIA
இ-ருபி எனும் புதிய பணமில்லாத மற்றும் தொடர்புகளற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம், சாமானியர்களுக்கு எத்தகைய பயனைத் தரும்? இதை யார், எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றிய முக்கிய 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்கிறோம்.
1. "e-RUPI" திட்டம், இந்திய பேமன்ட்ஸ் நிறுவனத்தின் (என்பிசிஐ), யுபிஐ தளம் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் இந்த வசதியை பெற பயனருக்கு டெபிட் கார்டோ, இன்டர்நெட் வங்கிக்கணக்கோ, மொபைல் வங்கிக் கணக்கோ இருக்க வேண்டிய அவசியமில்லை. முன்கூட்டியே செலுத்தப்பட்ட பணத்துக்கான 'வவுச்சர்' அல்லது ரசீது அடிப்படையிலேயே பரிவர்த்தனை நடக்கும்.
2. பயனருக்கும் இ-ருபி சேவைக்கும் பாலமாக இருப்பது வவுச்சர் மட்டுமே. இந்த வவுச்சர் கியூ ஆர் கோட் அல்லது எஸ்எம்எஸ் லிங்க் மூலம் பயனருக்கு கிடைக்கும். இந்த லிங்க்கை சாதாரண செல்பேசி வசதிக்கும் அனுப்ப முடியும். இது ஒரு கிஃப்ட் கூப்பன் போல. எதிர்காலத்தில் இந்த இ-ருபி வவுச்சர்களை எந்த நிறுவனங்கள் எல்லாம் ஏற்கிறதோ, அந்த நிறுவனங்களிலும் அரசுத்துறைகளிலும் இந்த இ-ருபி வவுச்சர்களை காட்டி சேவைக்கான கட்டணத்தை செலுத்தலாம்.
3. பணம் வழங்கும் நடைமுறைகள் முடிவடைந்த பிறகே, அதாவது டிரான்சாக்ஷன் வெற்றிகரமாக நடந்த பிறகே வவுச்சரில் இருக்கும் பணம் சம்பந்தப்பட்ட சேவை வழங்குநருக்கு செலுத்தப்படும். இந்த பரிவர்த்தனைக்கு இடையே எந்தவொரு இடைநிறுவனமும் இருக்காது. இது கிட்டத்தட்ட ப்ரீபெய்டு பணம் போன்றது. உங்களுக்கான பணம் வவுச்சர் வடிவில் இருக்கும். அந்த வவுச்சரை அரசு அல்லது தனியார் சேவை வழங்கும் நிறுவனத்திடம் காண்பித்தால், அந்த வவுச்சரில் குறிப்பிட்டுள்ள பணம் பிடித்தம் செய்யப்படும்.
4. தாய்-சேய் நலத்திட்டங்கள், காச நோய் ஒழிப்புத் திட்டங்கள், மருந்து, பாரத் ஆயுஷ்மான் மக்கள் சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மருந்து வழங்குதல் மற்றும் பரிசோதனை செய்தல், வேளாண் உர மானியம் வழங்குதல் போன்றவற்றுக்கும் இ-ருபி பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்.
5. பணியாளர்களின் நலத்திட்டம், கார்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் போன்றவற்றில் இ-ருபி முறையை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தவும் அரசு ஊக்குவிக்கும்.
6. இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் அரசு நிறுவனங்கள் அல்லது கார்பரேட் நிறுவனங்கள் தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளை அணுகலாம். பயனர்கள், அவர்கள் வங்கியில் பதிவு செய்துள்ள செல்பேசி எண் மற்றும் வங்கி ஒதுக்கிய வவுச்சர்கள் மூலம் அடையாளம் காணப்படுவார்கள்.
7. வவுச்சர் அடிப்படையிலான இந்தப் பரிவர்த்தனையை சம்பந்தப்பட்ட பயனரால் கண்காணிக்க முடியும். இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்பேசியோ, வங்கிக் கணக்கோ இல்லாதவரும் இ-ருபி முறையை பயன்படுத்தலாம்.
8. எதிர்காலத்தில் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கான பணியை இந்திய அரசு ஏற்கெனவே தொடங்கி விட்டது. அதன் முன்னோட்டமாகவே தற்போதைய இ-ருபி திட்டம் கருதப்படுகிறது. இதன் அமலாக்கத்தில் காணப்படும் இடைவெளியை அடையாளம் கண்டு, டிஜிட்டல் கரன்சியை நடைமுறைப்படுத்தும்போது எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள அரசு திட்டமிட்டிருக்கிறது.
9. இந்த இ-ருபி முறை பயன்படுத்த எளிமையானது, பாதுகாப்பானது, நம்பகமானது என்று இந்திய அரசு கூறுகிறது. பயனருக்கு வழங்கப்படும் பணம் எவ்வளவு என்பது ஏற்கெனவே அவருக்கான வவுச்சரில் குறிப்பிடப்படுகிறது. இதனால் பரிவர்த்தனை வேகமாகவும் நம்பகமானதாகவும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
10. இந்தியாவில் ஆக்சிஸ் வங்கி, பரோடா வங்கி, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இந்தியன் வங்கி, கோட்டாக் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்திய ஸ்டேஸ் வங்கி, இந்திய யூனியன் வங்கி ஆகியவற்றில் இ-ருபி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள்
- இமயமலை நாட்டின் இமாலய சாதனை: பூட்டானில் 99% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த எம்மா மெக்கியோன்
- காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்
- "பெட்ரோல் பாண்டுகளால்தான் பெட்ரோல் விலை உயர்வதாகச் சொல்வது பொய்" - ஆனந்த் ஸ்ரீநிவாசன்
- நரபலி கொடுக்கும் ஆஸ்டெக் பேரரசு: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பழங்குடிகளை பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












