நரேந்திர மோதி அறிவித்த ஆத்மநிர்பர் பாரத்: 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு என்ன ஆனது?

பணம்

பட மூலாதாரம், GETTY CREATIVE STOCK

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி நிருபர்

கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையில் உள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களில் சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது. 2020-21 நிதியாண்டில், சுமார் 8 சதவிகிதம் பொருளாதாரம் சுருங்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இது இப்போது 7.3 சதவீதம் சுருங்கியுள்ளது.

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில், அதாவது, ஜனவரி - மார்ச் 2021 காலகட்டத்தில் 1.3 சதவீத வளர்ச்சி இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், 1.6% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பொருளாதாரம் உடனடியாக வேகமாக உயரத் தொடங்கும் நிலைமை இன்னும் தெரியவில்லை.

பொருளாதாரம் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது, அதை மேம்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை நான்கு ஐந்து அம்சங்களைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளலாம். அவை:

மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரம், வேலையின்மை விகிதம் (இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது), பணவீக்க விகிதம் (உணவுப் பொருட்கள் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன), மக்களின் செலவு செய்யும் திறன் (வருமானம் இல்லாத நிலையில் செலவு எப்படிச் செய்வது).

கடந்த ஓராண்டாக, இதில் எந்த அம்சத்திலும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவே காரணம்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் திறன் வாய்ந்த அரசாகக் கூறிக்கொள்ளும் மோதி அரசின் எந்த முயற்சியும் பொருளாதாரத்தைச் சீர் செய்வதில் பலனளிக்கவில்லை. எனவே தவறு எங்கே நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் முழுவதுமாக நொடித்துப் போய்விடாமல் இருக்க, கொரோனாவின் முதல் அலையில், மோடி அரசு 20 லட்சம் கோடி நிவாரணப் தொகுப்பை அறிவித்தது.

திங்களன்று வெளியான புள்ளிவிவரங்கள் ஜனவரி முதல் மார்ச் வரையானவையே. இந்தக் கால கட்டத்தில் கொரோனா பயம் மக்களிடையே மிகக் குறைவாக இருந்தது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்திவிட்டதாக அரசு கூறி வந்தது. அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், மோடியின் 20 லட்சம் கோடி மெகா பூஸ்டர் டோஸ் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிற கேள்வி எழுகிறது. அப்படி என்றால், அந்த நிவாரணத் திட்டம் என்ன ஆனது? அதன் பலன் எப்போது தெரியும்? அரசாங்கம் வாக்குறுதியளித்த அளவுக்கு செலவு செய்ய முடியுமா?

20 லட்சம் கோடிக்காண கணக்கு வழக்கு

20 லட்சம் கோடி நிதி தொகுப்பு கணக்கு

பட மூலாதாரம், PIB

24 மார்ச் 2020 அன்று இந்தியாவில் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், பிரதமரின் கரீப் கல்யாண் எனப்படும் ஏழை நலத்திட்டத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது, தொழிலாளர்கள் உணவுப் பிரச்சனையும் குடும்பம் நடத்தும் பிரச்சனையும் இன்றி இருக்க வேண்டும் என்ற நோக்கில் இது அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுப்பில், ஏழைகளுக்காக 1.92 லட்சம் கோடி செலவிட திட்டம் இருந்தது.

13 மே 2020 - முந்தைய தினம் ரூ. 5.94 லட்சம் கோடி நிதி தொகுப்பு பற்றிய விவரங்களை நிதியமைச்சர் வழங்கினார், அதில் முக்கியமாக சிறு வணிகங்களுக்குக் கடன் வழங்கவும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மின் விநியோக நிறுவனங்களுக்கு உதவி தொகை வழங்கவும் அறிவிப்பு இருந்தது.

14 மே 2020 - ரூ .3.10 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது.

15 மே 2020 - 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் விவசாயிகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

16 மற்றும் 17 மே 2020 - கட்டமைப்புச் சீர்திருத்தங்களுக்காக ரூ .48,100 கோடி அறிவிக்கப்பட்டது. நிலக்கரி துறை, சுரங்கத் துறை, விமானப் போக்குவரத்து, விண்வெளி அறிவியல், கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகத்துக்கான உதவிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான உதவி சீர்திருத்த நடவடிக்கைகள் இதில் அடங்கும். இதனுடன், மாநிலங்களுக்கும் கூடுதல் உதவி அறிவிக்கப்பட்டது.

இன்னொரு பக்கம், இந்திய ரிசர்வ் வங்கியும் ரூ.8,01,603 கோடிக்கான திட்டங்களை அறிவித்தது. இதுவும் இந்த நிதி தொகுப்பின் பகுதியாகவே கருதப்பட்டது.

மேற்கூறிய அனைத்து தொகுப்புகளையும் சேர்த்து, அரசாங்கம் 20 லட்சம் கோடி ரூபாய்க்கான தற்சார்புப் பொருளாதாரத் திட்டம் என பெயரிட்டது.

எங்கெங்கு என்னென்ன செலவு?

நிர்மலா சீதாராமன், மத்திய நிதி அமைச்சர்

பட மூலாதாரம், Getty Images

இது அறிவிக்கப்பட்ட தொகையாகும். ஆனால், உண்மையில் களத்தில் செலவு செய்யப்பட்டது எவ்வளவு என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை காண, நாம் முன்னாள் மத்திய நிதித் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் அவர்களிடம் உரையாடினோம்.

பிபிசியிடம் பேசிய அவர், வாக்குறுதி அளித்த இந்த தொகையில் 10 சதவிகிதம் கூட 'களத்தில் செலவு செய்யப்படவில்லை என்று கூறினார்.

"ரிசர்வ் வங்கியின் 8 லட்சம் கோடி பணப்புழக்கத் தொகுப்பு இதில் சேர்க்கப்பட்டிருக்கக் கூடாது. பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி வழங்க முன் வந்தது. ஆனால் வங்கிகள் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. இப்போதைய நிலையிலும் கடன் வளர்ச்சி 5 - 6 சதவீதத்துக்கு இடையில் தான் உள்ளது. இது வரலாற்றியே குறைவான அளவில் உள்ளது." என அவர் தெரிவித்தார்.

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 1.5 லட்சம் கோடி?

இந்த 20 லட்சம் கோடி நிவாரணப் பொதியில், நிவாரணத்திற்காக அரசு செலவிட வேண்டியிருந்தது சுமார் 4 - 5 லட்சம் கோடி மட்டுமே என்று முன்னாள் நிதிச் செயலர் கூறுகிறார். இதில், 1 லட்சம் கோடி முதல் 1.5 லட்சம் கோடி வரை பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டுமே அரசாங்கம் செலவிட்டது. இது தவிர, வேறு சில பொருட்களுக்கான செலவினங்களைச் சேர்த்து, இந்த தொகுப்பில் இந்திய அரசு 2 லட்சம் கோடிக்கு மேல் செலவிடவில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்திய அரசின் முன்னாள் தலைமை புள்ளிவிவர நிபுணர் பிரணாப் சென்னும் சுபாஷ் சந்திர கர்க்குடன் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு உடன்படுவதாகவே தெரிகிறது.

உணவு

பட மூலாதாரம், Getty Images

20 லட்சம் கோடி தொகுப்பில், 15 லட்சம் கோடி, கடன் பெறுதல், திருப்பிச் செலுத்துதல் என்று தான் இருந்தது என அவர்கள் கூறுகிறார்கள். இந்தப் பங்கிலிருந்து, அரசாங்கமும் நிறைய செலவு செய்தது. இதன் காரணமாக, மூடக்கூடிய நிலையில் இருந்த சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் பிழைத்துக்கொண்டன.

ஊரடங்கு விலக்கலுக்குப் பின்னர், அங்கு மீண்டும் பணிகள் தொடங்கப்பட முடிந்தது. இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தற்சார்புப் பொருளாதாரத் தொகுப்பு, இந்த விஷயத்தில் பொருளாதாரத்திற்கு உதவியது.

அரசாங்கம் 5 லட்சம் கோடி வரை மட்டுமே செலவிட வேண்டியிருந்தது, அதில் 2-3 லட்சம் கோடியை மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், இலவச உணவு தானியங்களை விநியோகிப்பது ஆகிய திட்டங்களில் செலவிட்டது இந்திய அரசு.

"20 லட்சம் கோடி என்ற பெயரைக் கேட்டதும், சந்தையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒரு சேரப் புழக்கத்திற்கு வரும் என்று மக்கள் நினைத்தார்கள், அது மக்களின் எண்ணம் மட்டுமே. உண்மையில் 2.5 - 3 லட்சம் கோடி மட்டுமே வந்தது" என பிரணப் சென் கூறுகிறார்.

பிரதமர் ஏழை நலத்திட்டம்

ஏழைகள்

பட மூலாதாரம், Nur Photo

மத்திய அரசு 2020 செப்டம்பரில் தரவை வெளியிட்டு, பிரதமர் ஏழை நலத்திட்டத்தின் கீழ் 42 கோடி ஏழை மக்களுக்கு 68,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்று அறிவித்தது.

இதில், ஜன் தன் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தியது தொடங்கி, பிரதமர் - விவசாயிகள் திட்டம், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், பிரதமர் ஏழைகள் உணவுத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கணக்கையும் சேர்த்துக் காட்டியது.

கொரோனாவின் இரண்டாவது அலைக்கு இடையில், ஏப்ரல் மாதத்தில், 80 கோடி ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்து, அதற்காக 26 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்று கூறியது.

பிரணாப் சென், இலவச உணவு தானியங்களை வழங்குவதால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், ஏழைகளின் பணம் மிச்சப்படுகிறது. அதை அவர்கள் வேறு இடங்களில் செலவிட முடியும். இப்படியாகப் பணம் சந்தையில் புழக்கத்துக்கு வந்தது என்று கூறுகிறார்.

சிறு வணிகர்கள் அரசாங்கத்தின் திட்டத்தின் பயனை எந்த அளவுக்குப் பெற்றார்கள் என்பதை அறிய, அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வாலுடன் பேசினோம். பிபிசியுடனான உரையாடலில், "வர்த்தகர்கள் கஷ்டகாலத்தில், விநியோகச் சங்கிலியைப் பராமரித்து வந்தனர், ஆனால் வர்த்தகர்களுக்கு உதவி தேவைப்பட்ட போது, அவர்களுக்கு நிவாரணப் பொதியிலிருந்து எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை" என கூறினார்.

நிவாரண நிதி தொகுப்பை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைப் பட்டியலிடும் அவர், சில நேரங்களில் விதிகளாலும், போதுமான ஆவணங்கள் இல்லாததாலும் திட்டம் யாருக்காக அறிமுகப்படுத்தப்பட்டதோ அவர்களுக்கு பலன் சென்றடையவில்லை என கூறுகிறார்.

அவசர கால கடன் உத்தரவாதத் திட்டம்

உதவி

பட மூலாதாரம், XAVIER GALIANA

சுபாஷ் சந்திர கார்க், பிரணாப் சென் மற்றும் பிரவீன் கண்டேல்வாலின் அறிக்கைகள் தகவல் அறியும் உரிமையின் கீழான ஒரு கேள்விக்கான பதிலின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் பிரஃபுல்ல சார்டா கடந்த ஆண்டு டிசம்பரில் தற்சார்புப் பொருளாதாரத் தொகுப்பின் கீழ் செய்த செலவினங்களைக் கணக்கிடுமாறு அரசாங்கத்திடம் கோரியிருந்தார். இந்தத் தகவல் அறியும் உரிமை கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சகம், அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருக்க வேண்டிய இடத்தில், 1.2 லட்சம் கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

பிபிசியுடன் பேசிய பிரஃபுல்ல சார்டா, இந்த நிவாரணத் தொகுப்பு ஒரு கண் துடைப்பு என்றும் இதனால் யாரும் பயன் பெறவில்லை என்றும் கூறினார்.

தற்சார்பு பாரதம் திட்டத்தின் கீழ், எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் மாதம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஒரு தனி அறிவிப்பை வெளியிட்டார். அந்தச் செய்தியாளர் கூட்டத்தில், வருமான வரி திருப்பி அளித்தல், தற்சார்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கணக்கிடப்பட்டது.

தொகுப்பு அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகும், பல திட்டங்களுக்கான விதிகள் கூட உருவாக்கப்படவில்லை. கட்டமைப்புச் சீர்திருத்தங்களின் கீழ்தான் பெரும்பாலான பணம் கணக்குக் காட்டப்பட்டது. இது தொழிலாளர்களுக்கும் பிற சிறு வணிகர்களுக்கும் பயனளிக்கவில்லை.

தீர்வு என்ன?

முன்னாள் நிதிச் செயலாளர் எஸ்.சி. கார்க் கூறுகையில், "பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வர மக்களின் கைகளில் பணம் புழங்கக்கூடிய ஒரு திட்டம்தான் தேவை. மின் நிறுவனத்திற்குப் பணம் கொடுப்பதால் எந்த நன்மையும் இல்லை. வணிகமும் தொழிலாளர்களும் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள்?

அவர்களுக்கு இந்தத் தொகுப்பு தேவைப்படுகிறது. இதனால் அவர்கள் தங்கள் செலவுகளைப் பராமரிக்க முடியும். அரசாங்கம் உதவி செய்தால் மட்டுமே, அத்தகைய நபர்கள் செலவு செய்ய முடியும். அதுதான் உண்மையான நிவாரணத் தொகுப்பாக இருக்க முடியும்.

இந்த முறை கொரோனாவின் இரண்டாவது அலையின் போது, முழு ஊரடங்கு இல்லை, இதன் காரணமாகப் பிரச்சனை அவ்வளவாக இல்லை. ஆனால் தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு அவர்கள் செலவு செய்யக்கூடிய வகையில், இன்னும் ஒரு நிவாரணம் தேவைப்படுகிறது." என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :