சாம்பார் என்ற உணவு எங்கிருந்து வந்தது தெரியுமா? சுவாரஸ்ய வரலாறு

சாதத்துடன் சாம்பார்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஒன்கார் கரம்பேல்கர்,
    • பதவி, பிபிசி மராத்தி

வேகவைத்த பருப்பு, புளி, முருங்கைக்காய், தக்காளி, கேரட், பூசணி மற்றும் பச்சை கொத்தமல்லி - இவை அனைத்தையும் சேர்த்து இதில் மசாலா பொருட்களும் சேர்க்கப்பட்டு சாம்பார் தயாரிக்கப்படுகிறது.

தென்னிந்திய சாம்பார் இந்தியா முழுவதிலும் பரவியுள்ளது. அது ஏற்கனவே இந்திய எல்லைகளையும் தாண்டிவிட்டது. சாம்பார், இட்லியின் தவிர்க்க முடியாத தோழன். சிலர் சாம்பாருடன் சாதம் சாப்பிடுவதை விரும்புகிறார்கள்.

சாம்பார் எவ்வாறு உருவானது? சாம்பார் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இது போன்ற பல கேள்விகளை நாம் ஆராய வேண்டும்.

சில நேரங்களில் சில உணவுகள் நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் ஒருங்கிணைந்ததாக மாறும். அதன் மூலத்தை நாம் ஆராயத் தொடங்கினால், சில ஆச்சரியமான வரலாறு இருப்பதை அறியலாம். இது நம்மை வியக்கவைக்கும்.

சாம்பார் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பதைக் காண்கிறோம். இன்று நமக்குத் தெரிந்த சாம்பார் திரவ வடிவில் உள்ளது. ஆனால் அதன் உண்மையான பொருள் 'சுவை கூட்டி'.. இன்று பரிமாறப்படும் சாம்பாருக்கும் பண்டைய காலங்களில் நடைமுறையில் இருந்த பல்வேறு உணவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நாம் காண்கிறோம்.

தஞ்சாவூரில் சம்பாஜி - உணவு

இட்லி சாம்பார்

பட மூலாதாரம், Getty Images

முதன்முறையாக சாம்பார் எங்கே சமைக்கப்பட்டது என்று ஒருவர் கேட்டால், ​​தஞ்சாவூரின் மராட்டிய ஆட்சியாளர்களின் சமையலறையில் ஒரு தற்செயலான சம்பவம் பற்றிய ஒரு பொதுவான கதை நமக்குக் கூறப்படுகிறது. இந்த கதையை நாம் முதலில் ஆராய வேண்டும்.

சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஒன்றுவிட்ட சகோதரர் வியன்கோஜி, தஞ்சாவூர் ராஜ்ஜியத்தை ஆண்டார். அவர் 1683இல் காலமானார். வியன்கோஜியின் மகன் ஷாஹூஜி ,1684இல் தனது 12 வது வயதில் அரியணை ஏறினார். தஞ்சாவூரின் மற்ற ஆட்சியாளர்களைப் போலவே அவர் கவிதை மற்றும் கலைகளில் ஆர்வம் காட்டினார். அவர் சமையற்கலையில் தேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

சாம்பாருடன் தொடர்புடைய புகழ்பெற்ற கதையின்படி, சத்ரபதி சம்பாஜி மகாராஜ் ஒரு முறை தஞ்சாவூர் சென்றார். ஆனால், ஷாஹூஜி மகாராஜின் சமையலறையில் கோக்கும் (புளிப்பு சுவை சேர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள்) இல்லை. அதற்கு பதிலாக புளியைப் பயன்படுத்துமாறு யாரோ ஒருவர் பரிந்துரைத்தார். எனவே புளி சேர்த்து ஷாஹூஜி கறியை தயாரித்தார்.

சம்பாஜி மகாராஜை கெளரவிக்கும் விதத்தில், இந்த உணவை சம்பாஜி + ஆஹார் (சம்பாஜியின் உணவு) என்று அழைத்தனர். இது சாம்பாராக மாறியது. செய்முறையில் பல மாற்றங்களைக் கொண்ட அதே உணவு தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பின்னர் இந்தியா முழுவதிலும் பரவியது. இது சாம்பாருடன் தொடர்புடைய பொதுவான கதை.

பிரபல உணவு வரலாற்றாசிரியரும் உணவு நிபுணருமான கே. டி. ஆச்சார்யா இந்த கதையை உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, சாம்பார், தஞ்சாவூரில் தோன்றியதாக பொதுவாக கருதப்படுகிறது.

ஆனால், இந்த சம்பவத்தில் அதிக உண்மை இல்லை என்று புனேவைச் சேர்ந்த உணவு கலாச்சார ஆராய்ச்சியாளர் முனைவர் சின்மய் டாம்லே கூறுகிறார்.

"1684இல் ஷாஹூஜி ஆட்சிக்கு வந்தபோது ​​அவருக்கு 12 வயது. சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் ஆட்சிக்காலம் 1680 - 1689 வரை இருந்தது. இந்த சம்பவம் 1684 மற்றும் 1689 க்கு இடையில் நடந்திருக்க வாய்ப்பில்லை," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும், சம்பாஜி மகாராஜின் தஞ்சாவூர் சுற்றுப்பயணத்தின் இந்த கதையை உறுதிசெய்ய எந்த ஆதாரமும் இல்லை. 17ஆம் நூற்றாண்டிலிருந்து மராட்டிய உணவு வகைகள் குறித்து ஆவணப்படுத்தப்பட்ட குறிப்புகள் மிகக் குறைவு. எனவே, இந்தக்கதைக்கு அதிக அடிப்படை இருப்பதாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.

ஆனால், சம்பாஜி மகாராஜ் தஞ்சாவூருக்குச் சென்றபோது, ​​பருப்பு, காய்கறிகள் மற்றும் புளி அடங்கிய சிறப்பு கறி அவருக்கு வழங்கப்பட்டதாகவும், அந்த உணவுக்கு அவருடைய பெயரால் சாம்பார் என்று பெயரிடப்பட்டதாகவும், இந்த வம்சத்தில் வந்தவரான சிவாஜி மகாராஜ் போன்ஸ்லே பிபிசியிடம் தெரிவித்தார்.

சாம்பார் என்ற சொல்லின் பொருள் என்னவாக இருக்கும்?

சாம்பார்

பட மூலாதாரம், Getty Images

நாம் உண்ணும் சாம்பார் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்பது குறித்து ஆராய்ந்தோம். முந்தைய நாட்களில் பல உணவுப் பொருட்கள் 'சுவை கூட்டிகள்' என்ற வகையில் பரிமாறப்பட்டன. அவை சாம்பார் என்று அழைக்கப்பட்டன. வெள்ளரி, தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கக்கூடிய 'சாலட்' போல 'சாம்பார்' என்பது ஒரு பொதுச்சொல்.

சில அறிஞர்கள் சாம்பார் என்பதன் சொற்பிறப்பியல், 'சம்பார்' (Sambhar) என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அருகாமையில் இருப்பதாகக் கூறுகின்றனர். சமஸ்கிருத அறிஞரும், மகாராஷ்டிரா என்சைக்ளோபீடியா கவுன்சில் உறுப்பினருமான ஹேமந்த் ராஜோபாத்யே இது குறித்து விளக்குகிறார்.

"சமஸ்கிருதத்தில் உள்ள, எஸ்.எம் (Sm) மற்றும் ப்ரு (Bhru) என்ற அடிப்படை சொற்கள், பலவற்றின் கலப்பு அல்லது பலவற்றை கலப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு பொருளைக் குறிக்கின்றன. ஆனால், இதற்கு சாம்பார் என்ற வார்த்தையுடன் தொடர்பு உள்ளது என கூறமுடியாது," என்கிறார் அவர்.

"சாம்பார் என்ற வார்த்தையின் திராவிட மற்றும் இந்தோ - இரானிய சொற்பிறப்பியல் குறிப்புகளை நாம் ஆராயாமல், சாம்பார் என்பது சம்பார் என்கிற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது என சொல்வது மிகவும் அவசரத்தனமாக இருக்கும். சரியான சொற்பிறப்பியல் குறிப்புகளை நாம் கண்டுபிடிக்கவில்லை எனில், அது ஏறக்குறைய சாத்தியம் அல்லது ஒரு தற்செயல் நிகழ்வு. பர்ரோ மற்றும் எமெனோ ஆகியோரால் தொகுக்கப்பட்ட ஒரு திராவிட சொற்பிறப்பியல் அகராதி, இந்த இரண்டு சொற்களுக்கும் உள்ள எந்த தொடர்பையும் குறிப்பிடவில்லை" என்று ராஜோபாத்யே குறிப்பிடுகிறார்.

சாம்பார் என்றால் சுவை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் என்று டாக்டர் சின்மய் டாம்லே கூறினார்.

"சாம்பார் என்ற சொல் சுவை அதிகரிக்கும் பொருட்களுக்கு பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். மசாலா மற்றும் சாம்பார் போன்றவையும் இதே போன்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளன," என்று அவர் கூறினார்.

"லீலாசரித்ராவில் மசாலாப் பொருட்களுக்கு சம்பாரு என்ற வார்த்தையைக் காணலாம். குஜராத்தி (சாம்பார்), பெங்காலி (சாம்பாரா), தெலுங்கு (சாம்பராமு), தமிழ் (சாம்பார்), கன்னடம் (சாம்பார் ) போன்றவை, சமஸ்கிருத சம்பாருக்கு ஒத்ததாக உள்ளன. மலையாளத்தில் மசாலாப் பொருட்களுடன் கூடிய மோர் 'சம்பாரம்' என்று அழைக்கப்படுகிறது,"என்றும் டாக்டர் சின்மய் டாம்லே விளக்கம் அளித்தார்.

மகாராஷ்டிராவில் சாம்பார்

தோசை சாம்பார்

பட மூலாதாரம், Getty Images

சாம்பார் மற்றும் சாம்பாரு என்ற சொற்கள் மகாராஷ்டிராவில் பண்டை நாட்களிலிருந்து பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. "சக்ரதார்​​சுவாமியின் லீலாசரித்ராவின் முதல் பாதியில், வசனம் எண் 260 , சம்பாரு என்ற வார்த்தையை, சுவை கூட்டி என்ற பொருளில் குறிப்பிடுகிறது," என்று டாக்டர் சின்மய் டாம்லே கூறுகிறார்.

வசனம் எண் 358, சாம்பாரிவ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. இந்த வசனத்தின் தலைப்பு 'ததா சனா அரோகன்'.

பைதேவ் ஒரு கிராமத்திற்கு வருகை தருகிறார், அவர் சில பருப்பு சேமிப்பு கிடங்குகளை பார்க்கிறார். அவர் சக்ரதார் ​​சுவாமிக்கு மிகச் சிறந்த தரமான பருப்புகளை சேகரித்த பின், மீதியை சாப்பிடுகிறார். அவர் ஒரு கையளவு பருப்பை முனிவருக்கு எடுத்துச்செல்கிறார். நான் உங்களுக்காக பருப்பு கொண்டு வந்துள்ளேன். அவை இனிப்பாக உள்ளன என்று முனிவரிடம் கூறுகிறார். உடனே முனிவரும் ஒரு பெண்மணியை அழைத்து, பருப்பை எடுத்துச்சென்று சமைக்குமாறு கூறுகிறார். அந்தப் பெண்மணி தன்கனே மற்றும் சாம்பரிவ் என்ற உணவுகளைத் தயாரிக்கிறார். சாம்பரிவ் என்றால் சுவை கூட்டி.

சாம்பாரு (ஒரு கறியில் சேர்க்க வேண்டிய மசாலா) ,சாம்பரிவ் (சுவை கூட்டி) ஆகிய இரண்டு சொற்களும், பதின்மூன்றாம் நூற்றாண்டின் மகாராஷ்டிராவில் பயன்பாட்டில் இருந்தன என்பதை லீலாசரித்ராவில் உள்ள குறிப்புகள் தெளிவுபடுத்துகின்றன.

மேலும், ஏக்நாத் மகாராஜின் பேரன் முக்தேஸ்வரா தனது ராஜ்சூயா தியாகத்தைப் பற்றிய விவரிப்பில், சாம்பர் எனப்படும் ஒரு உணவைக் குறிப்பிட்டுள்ளார் என முனைவர் சின்மய் டாம்லே கூறுகிறார்.

பேஷ்வா காலத்தில் சாம்பார்

இட்லி சாம்பார்

பட மூலாதாரம், Getty Images

பேஷ்வா ஆவணங்களிலும் சாம்பார் எனப்படும் உணவுப் பொருள் காணப்படுகிறது. சவாய் மாதவ்ராவ் பேஷ்வா, 1782 இல் புனேயில் திருமணம் செய்து கொண்டார். நானா பட்னவிஸ் திருமணத்திற்கு பெரிய விருந்து தயாரித்திருந்தார். அவர் நுணுக்கமான அறிவுறுத்தல்களைக் கொடுத்ததாகத் தெரிகிறது.

இரண்டு வகையான சாதங்கள் - இனிப்பு சாதம் மற்றும் கத்திரிக்காய் சாதம், இரண்டு வகையான கறிகள் - துவரம் பருப்பு கறி மற்றும் சம்பாரி, இரண்டு வகையான சூப்கள், சாம்பார், பாயசம் போன்றவற்றை பரிமாறுவது குறித்து அவர் அறிவுறுத்தியிருந்தார். தரையில் அல்லது தேவையற்ற இடங்களில் சிந்தாமல் உணவை எப்படி பறிமாறவேண்டும் என்றும் அவர் விளக்கியிருந்தார்.

எனவே, மகாராஷ்டிராவில் ஒரு சுவை கூட்டும் உணவுப்பொருள் 'சாம்பார்' பயன்பாட்டில் இருந்தது என்று டாம்லே கூறுகிறார். சித்ததேக் கோவிலில் ஒரு சடங்கில், பிராமணர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் குறித்தும் ஒரு கடிதத்தில் நானா பட்னவிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

மராட்டியர்களுக்கு முன்பு, நாயக்கர்கள் வம்சம் தஞ்சாவூரை ஆண்டது. மன்னர் ரகுநாத் நாயக்கின் வாழ்க்கையில் ஒரு நாளை விவரிக்கும் 'ரகுநாத ப்யுதயம்' என்ற கவிதை உள்ளது. ராஜாவின் உணவில் பரிமாறப்பட்ட உணவுப் பொருட்களின் நீண்ட பட்டியலை இந்த கவிதை குறிப்பிடுகிறது. சாம்பாரொட்டி மற்றும் சாம்பார் சாதம் போன்ற சில உணவுகள் உள்ளன (சேர்க்கப்பட்ட மசாலாப் பொருட்களுடன்). ஆனால், இன்று சாப்பிடப்படும் சாம்பாருக்கு ஒத்ததாக எந்த உணவுப் பொருளும் இருந்ததாகத் தெரியவில்லை.

"தஞ்சாவூரின் ஷாஹாஜி மகாராஜ் சாம்பாரை கண்டுபிடித்தார் என்று கூறப்பட்டாலும், அவர் எழுதிய எந்த புத்தகத்திலும் இந்த உணவு வகை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஒரு புத்தகத்தில் ' 'பொரிச்சகுழம்பு' என்ற ஒரு உணவு பற்றிக்கூறப்படுகிறது. இதில் துவரம் பருப்பு, காய்கறிகள், புளி, கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் மிளகாய்பொடி ஆகியவை அதில் சேர்க்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, சாம்பார் மற்றும் ஷாஹாஜி என்ற வார்த்தைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. மேலும் தஞ்சாவூரிலிருந்து வெளியிடப்பட்ட ஷர்பேந்திர பக்‌ஷாஸ்திரத்தில், துவரம் பருப்பு சாம்பார் குறிப்பிடப்படவில்லை,"என்று டாம்லே கூறுகிறார்.

எனவே, பல்வேறு வரலாற்று குறிப்புகள் மற்றும் கிடைக்கக்கூடிய இலக்கியங்களைத் தேடிய பிறகு, இன்று நடைமுறையில் இருக்கும் சாம்பாருக்கும், அதன் தோற்றத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே தோன்றுகிறது.

இன்றைய சாம்பார் எங்கிருந்து வந்தது?

சாம்பார்

பட மூலாதாரம், Getty Images

எனவே, சாம்பார் என்ற சொல் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எஞ்சியுள்ளது

"20 ஆம் நூற்றாண்டில் மெட்ராஸில், சிறிய உணவகங்கள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டன. அங்கு குழம்பு என்ற உணவுப் பொருள் வழங்கப்பட்டது. அது சாம்பார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இட்லி, வடை, தோசை ஆகியவற்றுடன் பரிமாறப்படும் ஒரு சுவை அதிகரிக்கும் கறி, 'சாம்பார்' என்று அழைக்கப்படுகிறது. " என கூறுகிறார் முனைவர் சின்மய் டாம்லே.

"நாளடைவில், பொரிச்ச குழம்பு மற்றும் குழம்பு ஆகியவை வழக்கத்திலிருந்து மறைந்தன. பிறகு சாம்பார் அவற்றின் இடத்தைப் பிடித்தது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தென்னிந்தியாவில் முன்பு சாம்பார் என்ற சொல் , சுவை அதிகரிக்கும் உணவு என்ற பொருள்படவே பயன்படுத்தப்பட்டது. "என்கிறார் அவர்.

மசாலா தோசையில் உள்ள உருளைக்கிழங்கு கறி, மசாலா என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது, ​​வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் பற்றாக்குறை இருந்தது. எனவே கர்நாடகாவில் உள்ள உணவகங்கள் தோசைக்குள் திடவடிவில் காய்கறிகளை வைத்து உருட்டி, பரிமாறத் தொடங்கின. அது மசாலா என்று அழைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உணவகங்கள் பூரிமசாலா என்ற உணவை பறிமாறுகின்றன. இதில் உருளைக்கிழங்கு கறி மற்றும் பூரி கொடுக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு கறி, ஒரு சுவை கூட்டி என்பதால் இது மசாலா என்று அழைக்கப்படுகிறது. எனவே, ஒரு தோசையில் உருளைக்கிழங்கு கறி மற்றும் சாம்பார் ஆகிய இரண்டின் பொருளும் ஒத்திருக்கிறது.

எது எப்படியிருந்தாலும், சாம்பார் நம் வாழ்வில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. பல வெளிநாடுகளில் நிறுவப்பட்ட தென்னிந்திய உணவகங்களும் உலகெங்கிலும் சாம்பாரை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :