கடுகு எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம் என்ன? வியாபாரிகள் என்ன கூறுகிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தில் நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி நிருபர்
உத்தர பிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த சஜித் உசேன் என்ற விவசாயி மார்ச் மாதத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .4200 என்ற விகிதத்தில் 400 கிலோ கடுகு விற்பனை செய்துள்ளார். அதாவது ஒரு கிலோவுக்கு ரூ. 42. அவருக்குக் கடுகு விலை ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று தெரியாது.
முசாஃபர்நகரின் விவசாயி சுபாஷ் சிங் தனது பயிரை வீட்டிலேயே சேமித்து வைத்திருந்தார். அவர் தனது கடுகு விலையை ஒரு ஆன்லைன் போர்ட்டலில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .7 ஆயிரம் என்ற அளவில் வைத்திருக்கிறார். விலை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
கரும்பு விவசாயம் செய்யும் சுபாஷ் சிங் போனஸ் வருமானத்திற்காக மட்டுமே இந்த முறை கொஞ்சம் கடுகு விதைத்திருந்தார். "விலை குவிண்டால் ஐந்தாயிரம் ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் விலை ஏழாயிரம் ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று சுபாஷ் சிங் கூறுகிறார்.
கடுகு விலை உயரக் காரணம், இந்த நேரத்தில் கடுகு எண்ணெய் விலை வரலாற்று உச்சத்தில் உள்ளது. சந்தையில் ஒரு லிட்டர் எண்ணெயின் விலை 175 ரூபாயை எட்டியுள்ளது. தூய செக்கில் ஆட்டப்பட்ட கடுகு எண்ணெய் ஒரு கிலோவுக்கு இருநூறு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் நுகர்வோர் நலத் துறையின் புள்ளிவிவரப்படி, 2020 ஏப்ரலில் இந்தியாவில் ஒரு கிலோ கடுகு எண்ணெயின் சராசரி விலை ரூ .117.95 ஆகவும், 2020 நவம்பரில் கிலோவுக்கு 132.66 ரூபாயாகவும் இருந்தது. நுகர்வோர் நலத் துறையின் கூற்றுப்படி, 2021 மே மாதத்தில் இந்தியாவில் கடுகு எண்ணெயின் சராசரி விலை கிலோவுக்கு ரூ .163.5 ஆக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
அம்ரோஹாவில் உள்ள ஒரு கிராமத்தில், கடுகிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை நடத்தி வரும் ஆகிப், ஒரு கிலோ கடுகு 70 ரூபாய்க்கு வாங்கி 200 ரூபாய்க்கு ஒரு கிலோ எண்ணெயை விற்பனை செய்கிறார். அவர், இது வரை இந்த உயர்ந்த விலைக்குக் கடுகை வாங்கியதுமில்லை, இவ்வளவு உயர்ந்த விலைக்கு எண்ணெயை விற்றதும் இல்லை என்று கூறுகிறார்.
இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஒரு வருடத்தில் சமையல் எண்ணெய்களின் விலை 55% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, உள்நாடு மட்டுமல்ல, சர்வதேச சந்தையிலும் விலைகளை பாதிக்கிறது என்று சந்தைப் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
கன்ஷ்யம் கண்டேல்வால் கடந்த 45 ஆண்டுகளாக கடுகு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். 35 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது நிறுவனத்தின் அடித்தளத்தை உத்தரபிரதேசத்தின் பரேலியில் அமைத்தார், இது இப்போது ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் வர்த்தகம் செய்கிறது.
கன்ஷ்யம் கண்டேல்வால், "என் வாழ்க்கையில் இவ்வளவு அதிக விலையில் கடுகு எண்ணெய் விற்கப்படுவதை நான் பார்த்ததில்லை. எண்ணெய் விலை உயரும்போது கடுகு விலையும் அதிகரித்துள்ளது, இது ஓரளவுக்கு நேரடியாக விவசாயிகளைச் சென்றடைகிறது. இப்போது ஒரு குவின்டால் ஏழாயிரம் ரூபாய் வரை விற்கிறது. மண்டியின் கமிஷன் குறைக்கப்பட்டால், விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .6600 முதல் ரூ .6800 வரை பெறுகிறார்கள். கடுகின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ .4400 ஆகும். " என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Ghanshyam Khandelwal
கடுகு விலை உயர்வுக்குப் பின்னால் அரசாங்கத்தின் நோக்கமும் இருக்கிறது என்று கன்ஷ்யம் கண்டேல்வால் கருதுகிறார். அவர், "விவசாயிகளுக்கு நேரடி நன்மைகளை வழங்குவதற்காகக் கூட கடுகு எண்ணெய் விலை உயர்வை அரசாங்கம் அனுமதித்திருக்கலாம்," என்கிறார்.
சர்வதேசச் சந்தை
"சர்வதேச சமையல் எண்ணெய்ச் சந்தை கடந்த 13 ஆண்டுகளில் மிக உயர்ந்த அளவில் உள்ளது. 25 சென்டுக்குக் கிடைத்த எண்ணெய், இப்போது 65 சென்டுக்கு விற்கப்படுகிறது. ($ 0.65) . சர்வதேச அளவில் எண்ணெய் விதைகளிலிருந்து கிடைக்கும் சமையல் எண்ணெய்கள், இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளன. இது இந்தியாவின் சந்தையை நேரடியாகப் பாதிக்கிறது. இந்த ஏற்றம் தொடர்ந்தால், கடுகு விலை குவின்டால் 8,000 ரூபாயை எட்டலாம்," என்று கண்டேல்வால் கூறுகிறார்.
கடுகு எண்ணெய் விலை உயர்வுக்கு மற்றொரு காரணத்தையும் அவர் குறிப்பிடுகிறார். "உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பசுமை ஆற்றலை நோக்கி நகர்கின்றன. இதன் காரணமாக, பயோடீசல் நுகர்வு அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவேளை இதன் காரணமாகவும் உலகச் சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை அதிகரித்திருக்கலாம்," என்பது அவரது கருத்து.
கடுகு எண்ணெய் விலை உயர்வு வரவேற்கத்தக்க அறிகுறியாக விவசாய நிபுணர் தேவேந்திர சர்மா கருதுகிறார். "விவசாயிகள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலை, விவசாயத் துறைக்கு நல்லது," என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலை உயர்வுக்குப் பின்னால், மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதில் இந்திய அரசும் கடுமையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தேவேந்திர சர்மா கருதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அவர், "மலேசியா காஷ்மீரைப் பற்றி கருத்து தெரிவித்தபோது, இந்தியா, இறக்குமதிக்கான இலவச பட்டியலில் இருந்து மலேசியாவை அகற்றித் தடைசெய்யப்பட்ட பட்டியலில் வைத்தது. இந்தியா பெரும்பாலான பாமாயிலை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால் இப்போது மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வது பெருமளவு குறைந்துள்ளது இது இந்தியாவின் சமையல் எண்ணெய்ச் சந்தையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, " என்று கூறுகிறார்.
2020 செப்டம்பரில் கடுகு எண்ணெயில் வேறு எந்த சமையல் எண்ணெயையும் கலப்படம் செய்ய இந்திய அரசு தடை விதித்தது. கடுகு எண்ணெய் விலை உயரவும் இந்த நடவடிக்கை தான் காரணம் என்று சர்மா நம்புகிறார்.
அவர், "இந்திய அரசு, மிக முக்கியமான நடவடிக்கை எடுத்து, கடுகு எண்ணெயுடன் வேறு எந்த எண்ணெயும் கலப்பதைத் தடை செய்தது. அதாவது, கடுகு எண்ணெயில் வேறு எந்த எண்ணெயையும் கலப்படம் செய்வது நிறுத்தப்பட்டது. இது கடுகு எண்ணெயின் விலையையும் அதிகரித்தது," என்கிறார்.
இது எண்ணெய் உற்பத்தியாளர்களுக்குப் பெரிதும் பயனளித்துள்ளது, அதானி குழுமம் இந்தியாவில் கடுகு எண்ணெயை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது, அதன் எண்ணெய் பார்ச்சூன் என்ற பெயரில் விற்கப்படுகிறது என்கிறார் தேவேந்திர ஷர்மா.
இந்தியாவில் கடுகு எண்ணெய் சந்தை சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய், 75 ஆயிரம் கோடி மதிப்புள்ள சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
தேவேந்திர சர்மா கூறுகையில், "கடுகு எண்ணெய் கலப்பதை கட்டுப்படுத்துவது இந்தியாவில் பாமாயில் இறக்குமதியைக் குறைத்தது. இந்த நடவடிக்கைகள் இந்திய விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த ஆண்டு கோதுமையைப் போல இரு மடங்கு விலையை கடுகிலிருந்து பெறுகிறார்கள். கடுகு எண்ணெய் வர்த்தகர்கள் இப்போது மூலப்பொருட்களைத் தேடி வருகிறார்கள்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இது தவிர, எண்ணெய் விலை சர்வதேச சந்தையிலும் வரலாற்று உச்சத்தில் உள்ளது. சீனாவில் அதிகரித்த தேவை இதற்கு ஒரு காரணம். சர்வதேச சந்தையில் பொருட்களின் வர்த்தகம் அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் மற்றும் தொழில்துறை மக்கள் நம்புகின்றனர், இது சமையல் எண்ணெய்களின் விலையையும் பாதித்துள்ளது.
மேலும் அவர், "சர்வதேசச் சந்தையில் பல ஆண்டுகளாகவே சமையல் எண்ணெய்களின் இருப்பு அதிகரித்து வருகிறது. தவிர, சர்வதேசப் பொருட்களின் வர்த்தகத்திலும் உணவுப் பொருட்களின் பங்குகள் அதிகரித்து வருகின்றன. பொருட்கள் சந்தையில் கடுகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது, இந்த ஒரு ஏற்றமும் உலகளவில் காணப்படுகிறது," என்று கூறுகிறார்.
எண்ணெய் தொழில் மற்றும் வர்த்தகத்தின் மத்திய அமைப்பு (COOIT) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டு இந்தியாவில் கடுகு உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது. ரபி பருவத்தில் இந்தியா 89.5 லட்சம் டன் கடுகு உற்பத்தி செய்தது, இது முந்தைய ஆண்டை விட 19.33% அதிகம். 2019-20 ஆம் ஆண்டில், இந்தியாவில் 7.5 மில்லியன் டன் கடுகு உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இந்த பம்பர் உற்பத்தி கூட இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை.
ஒரு சராசரி இந்திய குடும்பம் ஆண்டு முழுவதும் சராசரியாக 20-25 லிட்டர் சமையல் எண்ணெயை பயன்படுத்துகிறது. இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் நுகர்வு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2-3 சதவீதம் அதிகரிக்கிறது, ஆனால் கோவிட் தொற்றுநோய்களின் போது, இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் நுகர்வு குறைந்துள்ளது என்று அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இறக்குமதியைச் சார்ந்துள்ள இந்தியா

வேளாண் நிபுணர் பேராசிரியர் சுதிர் பன்வார் கூறுகையில், "இந்தியாவில் கடுகு உற்பத்தியும் அதிகமாக உள்ளது மற்றும் சந்தையில் தேவையும் மிக அதிகமாக இல்லை, அத்தகைய சூழ்நிலையில், கடுகு எண்ணெய் விலை அதிகரிப்பு என்பது செயற்கையாகவும் இருக்கலாம்."
பேராசிரியர் பன்வார், "இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலை உயர்வு, உலகளாவிய சந்தை, இந்திய அரசின் இறக்குமதிக் கொள்கை, சமையல் எண்ணெய்களை பெருமளவில் இறக்குமதி செய்பவர்களின் முடிவுகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இந்திய உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கு சமையல் எண்ணெய் முக்கியமானதிலிருந்து உள்நாட்டு சந்தை இறக்குமதியையே சார்ந்துள்ளது," என்று குறிப்பிடுகுறார்.
பேராசிரியர் பன்வார் கூறுகையில், இந்தியா போன்ற விவசாயம் சார்ந்த நாடுகள் சமையல் எண்ணெய்களுக்கான தேவையில் 70% இறக்குமதியை நம்பியுள்ளன, இது ஒரு நல்ல விஷயம் அல்ல என்கிறார்.
பேராசிரியர் பன்வார் கூறுகிறார், "சாதகமான காலநிலை இருந்தபோதிலும், 1986-க்குப் பிறகு எண்ணெய் விதையில் தொழில்நுட்பம் போன்ற எந்த தீவிர முயற்சியையும் அரசாங்கம் எடுக்கவில்லை. இந்தியாவில் பாமாயில் உற்பத்திக்கு நல்ல வாய்ப்பு உள்ளது, ஆனால் ஒருவேளை இராஜதந்திர அல்லது இறக்குமதி லாபி இவற்றின் காரணமாக, இந்தியாவில் பனை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயில் 62 சதவீதம் பாமாயில் தான். "
இன்னும் உயருமா விலை?

பட மூலாதாரம், Getty Images
பேராசிரியர் பன்வார் கூறுகிறார், "சமையல் எண்ணெய்களின் விலை உயர்வு காரணமாக, விவசாயிகளுக்குக் கொஞ்சம் லாபம் கிடைக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அது நீண்ட காலம் பயனளிக்காது. ஏனெனில் விலை உயர்வைக் குறைப்பதற்காக வரியைக் குறைக்க வேண்டியிருக்கும். மேலும் சீனாவில் கொள்முதல் முடிந்ததும், சர்வதேச சந்தையிலும் விலைகள் குறையலாம்."
கன்ஷ்யம் கண்டேல்வால், "ஒவ்வொரு ஏழு எட்டு வருடங்களுக்கும் எண்ணெய் சந்தையில் ஒரு ஏற்றம் காணப்படுகிறது, விலைகள் உயர்கின்றன. 2008 ஆம் ஆண்டிலும் இதேதான் நடந்தது, எண்ணெய் விலை மிக வேகமாக உயர்ந்தது, ஆனால் பின்னர் அது 2009-10 இல் குறைந்தது. இப்போது எண்ணெய் விலை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது, இனி விலை உயர்வு இருக்காது என்று தெரிகிறது. அரசாங்கமும் சந்தையும் எச்சரிக்கையாக உள்ளன," என்று நம்பிக்கை அளிக்கிறார்.
சமையல் எண்ணெயின் விலை அதிகரிப்பு சாதாரண மக்களின் வரவு செலவுத் திட்டத்தையும் பாதித்துள்ளது. குறைந்த நுகர்வு என்பது மக்கள் தங்கள் தேவைக்கேற்ப சமையல் எண்ணெயை வாங்க முடியவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.
ஆனால் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சுபாஷ் சிங் கூறுகிறார், "இது எங்கள் போனஸ் வருமானம். விவசாயி தனது பயிரின் முழு விலையையும் பெறுவது அரிது, இப்போது இது மகிழ்ச்சியாகவே உள்ளது," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
அதே சமயம், தேவேந்திர சர்மா கூறுகையில், "சந்தையை வாடிக்கையாளரின் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக்கூடாது. இது விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் கண்ணோட்டத்திலிருந்தும் பார்க்கப்பட வேண்டும். கடுகு எண்ணெய் விலை அதிகரித்தால் ஏழைகள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்புகிறோம். ஆனால் விவசாயிகள் இதன் மூலம் பயனடைகிறார்கள் என்பதை மறந்து விடுகிறோம்," என்று கூறுகிறார்.
"பணக்கார வாடிக்கையாளர் அல்லது நடுத்தர வர்க்க வாடிக்கையாளர் கூட சமையல் எண்ணெயை மலிவான விலையில் வாங்கவே விரும்புகிறார்கள் என்பது முரண்பாடான விஷயம். என் பார்வையில், விலை அதிகரிக்கவில்லை, ஆனால் இப்போது தான் சமையல் எண்ணெய்கள் சரியான விலையைப் பெறுகின்றன," என்கிறார் அவர்.
மரபணு மாற்ற கடுகு விதை அனுமதிக்கு எதிராக 'விதை சத்தியாகிரகம்' - தொடர்புடைய காணொளி
பிற செய்திகள்:
- பிரதமர் இல்ல கட்டுமானம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படலாம்
- #ICUdiary கொரோனா ஐசியு வார்டில் மருத்துவரின் அனுபவங்கள் - ஜூன் 1 முதல் புதிய தொடர்
- ஏஐசிடிஇ அனுமதி: பிராந்திய மொழிகளில் பொறியியல் வகுப்புகள்: யாருக்கு சாதகம்?
- கோவைக்கு எந்த பாரபட்சமும் இல்லை: மு.க. ஸ்டாலின் விளக்கம்
- பிபிஇ பாதுகாப்பு ஆடையுடன் கொரோனா வார்டில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி சாம்சன் திருமணம் எளிமையாக நடந்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













