தமிழ்நாடு பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தற்போது குவியக் காரணம் என்ன?

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கொரோனா காலத்தில் பெரிய சமூக கொந்தளிப்பு ஒன்றை தமிழ்நாடு சந்தித்துள்ளது. சென்னையில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர், பல மாணவிகளை பாலியல் துன்புறுதலுக்கு உட்படுத்தியதாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம் தளங்களில் வெளியான பதிவுகளைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள், தங்களுக்கு நேர்ந்த அவலங்களை பேசத் தொடங்கியுள்ளனர்.
சென்னை காவல்துறையிடம் பல பிரபலமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் புகார்கள் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திடமும் மின்னஞ்சல் வாயிலாக புகார்கள் தருகிறார்கள். காஞ்சிபுரம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகளும் புகார்கள் கொடுத்துள்ளனர்.
சிபிசிஐடிக்கு மாற்றப்படும் விசாரணை

உலக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பலர் #Metoo என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் புகார்களை பதிவிட்டார்கள். ஒரு சில புகார்கள் வழக்காக பதிவாகி, கைதுகளும் தொடர்கின்றன. அதுபோல, தமிழ்நாட்டுப் பள்ளிகளின் #metoo இயக்கமாக இந்த ஆன்லைன் புகார்கள் உருவெடுத்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்சனையின் தொடக்கப் புள்ளியான சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் கைதாகியுள்ளார், அடுத்து விளையாட்டுத் துறை ஆசிரியர்கள் கைதாகியுள்ளனர். விசாரணை வளையம் சிபிசிஐடி வரை விரிந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் தங்களது அடையாளங்களை வெளியிடாமல், பள்ளிகளில் நேர்ந்த துன்புறுத்தல் பற்றி மாணவிகள் பேச முன்வந்துள்ளனர். ஒரு சிலர் பள்ளி படிப்பு முடிந்த பின்னர், பல ஆண்டுகள் கழித்து தற்போதுதான் தாங்கள் சந்தித்த துன்புறுத்தல் பற்றி பேசுகிறார்கள்.
குழந்தைகள் புகார்களை தெரிவிக்க உதவி எண் 1098, காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் புகார் தெரிவிக்க இயங்கும் சிறப்பு பிரிவு, மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் என பல அமைப்புகள் செயல்படுகின்றன. ஆனால் மாணவிகளுக்கு எந்த அமைப்பும் நம்பிக்கை தரவில்லையா?
தற்போது அவர்கள் முன்வந்து புகார் தருவது சாத்தியமானது எப்படி? என குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் புகார்களை கையாண்ட நிபுணர்களிடம் கேட்டோம்.
குழந்தைகள் மத்தியில் நம்பிக்கை துளிர்க்க காரணம்

பட மூலாதாரம், Getty Images
சென்னைக் கல்லூரி ஒன்றில் பணியாற்றும் மனநல ஆலோசகர் யாழினி. அவர்கள் தற்போது எப்படி பேச முன்வந்தார்கள் என விளக்குகிறார்.
மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்களது புகார்களை சமூக வலைத்தள பிரபலங்களை நம்பி வெளியிடுகிறார்கள்.
''ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு நினைவு இருக்கும். தீடீரென பல நூறு இளைஞர்கள் ஒன்று சேர்ந்தார்கள். ஒரு கூட்டு மனப்பான்மை உருவானது. அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அது போலத்தான் தற்போது மாணவிகளிடம் ஒரு கூட்டு மனப்பான்மை உருவாகியுள்ளது.
இதுநாள்வரை தயங்கியது போதும், தற்போது தனக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு உருவாகியுள்ளது. மேலும், சமூக வலைத்தளத்தில் நேரடியாக தங்களது அடையாளத்தை சொல்லாமல், தனக்கு நேர்ந்த துன்புறுத்தலை சொல்லலாம் என்பதால், குழந்தைகளுக்கு பயம் குறைந்து, ஒரு பிடிமானம் ஏற்பட்டுள்ளது.
அதனால்தான், ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சொல்ல முன்வந்ததும், பல பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள் முன்வருகிறார்கள்,'' என்கிறார் யாழினி.
இதுநாள் வரை பாதிக்கப்பட்ட குழந்தைகள் மௌனமாக இருந்ததற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார் யாழினி.
''பாலியல் துன்புறுத்தல் புகார்களில் பல சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கு தாங்கள் பாதிக்கப்பட்டோம் என்பதைவிட, புகாரை சொன்னால் தான் எவ்வாறு நடத்தப்படுவோம் என்ற பயம் அதிகம் இருக்கும். சில குழந்தைகள் புகார் சொன்னாலும், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கு பதிலாக அந்த குழந்தையை 'நீ ஏன் அனுமதித்தாய்' என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுவதால், அவர்கள் அஞ்சுவார்கள்.
இதுபோன்ற ஒரு சமூக, கலாசார நடைமுறை நம் நாட்டில் இருப்பதால், பல குழந்தைகள் அஞ்சுகிறார்கள். உனக்கு நேர்ந்தது அநியாயம் என சொல்வதைவிட, உனக்கு அசிங்கம் நடந்துள்ளது என்றுதான் குழந்தைகளுக்கு போதிக்கப்படுகிறது,'' என்கிறார் யாழினி.
குழந்தைகளை நாம் புறக்கணிக்கிறோமா?

பட மூலாதாரம், Getty Images
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்குகளை கையாண்ட அனுபவம் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் அஜீதாவிடம் பேசினோம். பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்ட மாணவிகளுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால் புகார்களை சொல்கிறார்கள் என்கிறார்.
''பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தான் குழந்தைகள் நம்பிக்கையுடன் தங்கள் பிரச்சனைகளை பேசுவார்கள். ஆனால் இதுநாள் வரை எந்த பெற்றோரும், ஆசிரியர்களும் நம்பிக்கை தரவில்லை, அல்லது குழந்தைகள் பிரச்சனைகளை சொல்லிய போதும்,அவர்களை புறக்கணித்துவிட்டார்கள் என்பதைதான் இந்த பாலியல் புகார்கள் காட்டுகின்றன.
பல ஆண்டுகளாக குழந்தைகள், துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்றால், கண்டிப்பாக ஒரு சில பெற்றோர்களிடமாவது குழந்தைகள் சொல்லியிருப்பார்கள், ஆசிரியர்கள் மத்தியில் பேசியிருப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை, புகாருக்கு உள்ளாகும் ஆசிரியர் சிக்கலின்றி பணியாற்றுகிறார் என்ற நிலை தொடர்ந்தால், குழந்தைகள் முன்வரமாட்டார்கள். தற்போது, பல குழந்தைகள் பேச முன்வந்துள்ளார்கள், அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்,''என்கிறார் அஜீதா.
''சென்னையின் மிகவும் பிரபலமான பள்ளிகளில் உள்ள குழந்தைகள் சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் சமூக அந்தஸ்து பற்றி யோசித்திருக்கலாம்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக பள்ளி படிப்பை முடித்த குழந்தைகளும் புகார் தர முன்வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பொறுத்து போக்சோ சட்டத்தில் தண்டனை தரப்படும். காலம் தாழ்த்தி புகார்கள் தருகிறார்கள் என்பதைவிட, எந்த சூழலில் இருந்து அவர்கள் புகார் தருகிறார்கள் என்பதுதான் போக்சோ சட்டத்தின் அடிப்படை,'' என்கிறார் அவர்.
''விசாகா கமிட்டி போல குழந்தைகள் நலக் குழு அமைக்கவேண்டும்''

பட மூலாதாரம், Getty Images
இனிவரும் காலங்களில் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை துணிவுடன் பேசுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கவேண்டும் என்கிறார் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் ஆண்ட்ரு ஜேசுராஜ்.
''தற்போது உள்ள சூழலில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பங்கு என்ன என்பதை உணரவேண்டும். குழந்தைகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த நாம் அனைவரும் தவறிவிட்டோம். பல குழந்தைகள் பல ஆண்டுகளாக மோசமான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். நாம் அவர்களை மௌனமாக்கிவிட்டோம் என்பதை உணர்ந்து, இனி அவர்கள் குரல்கள் ஒலிக்க உதவவேண்டும்,'' என்கிறார் அவர்.
''அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தாக்குதல் புகார்களை பதிவுசெய்ய விசாகா கமிட்டி அமைக்கவேண்டும் என்பது சட்டவிதி. அதுபோல, எல்லா பள்ளிகளிலும், பாலியல் புகார்களை உடனடியாக தெரிவிக்க குழந்தைகள் நலக்குழு செயல்படவேண்டும்.
அந்த குழுவில் பள்ளி நிர்வாகம் மட்டுமல்லாது, பெற்றோர்கள், குழந்தைகள் நல தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் இருக்கவேண்டும். ஒவ்வோர் ஆண்டும் அந்த கமிட்டி செயல்பாடு பற்றி மாநில குழந்தைகள் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படவேண்டும். குழந்தைகள் மத்தியில் புகார் கொடுப்பது எப்படி என விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்,'' என்கிறார் ஆண்ட்ரு ஜேசுராஜ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












