சென்னையில் மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார், இடைநீக்கம்

பாலியல் துன்புறுத்தல் மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

சென்னை கே.கே. நகரில் இருந்த ஒரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் மீது பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியரும் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அயனாவரத்தில் இருந்து செயல்படும் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்களுடைய பள்ளிக்கூடத்தில் வணிகவியல் பாடம் நடத்தும் ஆனந்த் என்பவர் மீது கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பினரும் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து வருவதால் அவரை இடைநீக்கம் செய்திருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தப் பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர்கள் மின்னஞ்சல் மூலமும் சமூக வலைதளங்களின் மூலமும் தங்கள் பள்ளிக்கூடத்தில் நடந்தத பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக உள் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது அப்பள்ளி. இதுவரை தெரிவிக்கப்பட்ட புகார்களும், இனிமேல் வரும் புகார்களும் நியாயமான முறையிலும் வெளிப்படையான முறையிலும் விசாரிக்கப்படுமென அந்தப் பள்ளி கூறியுள்ளது.

இந்த விகாரத்தில் தொடர்புடைய ஆனந்த் மே 26ம் தேதி முதல் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் பள்ளியின் முன்னாள் மாணவர்களையோ இந்நாள் மாணவர்களையோ தொடர்புகொள்ளக்கூடாது எனக் கூறப்பட்டிருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில் கே.கே. நகர் பள்ளி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபால் குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

"இது தனி மனிதர்களுக்கு எதிரான குற்றமில்லை. இது சமூகத்திற்கு எதிரான குற்றம். குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தவறு செய்திருப்பதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாராவது இருந்தால் முன்வந்து புகார் கொடுக்கலாம். அவர்கள் அடையாளம் வெளிப்படுத்தப்படாது. இப்போது ராஜகோபால் மீது மேலும் இருவர் புகார் அளித்திருக்கிறார்கள். வேறு ஒரு விவகாரம் நடந்திருப்பதாகவும் தெரிந்திருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களை அணுகி புகார் அளிக்கும்படி கேட்டிருக்கிறோம். சமூக வலைதளங்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்" என செய்தியாளர்களிடம் கூறினார் சங்கர் ஜிவால்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :