செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை குத்தகைக்கு கோரியுள்ள தமிழக அரசு: என்ன பலன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ விஜயனாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
செங்கல்பட்டு ஹெச்எல்எல் பயோடெக் தடுப்பூசி வளாகத்தை குத்தகை அடிப்படையில் எடுத்து நடத்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது. `தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவும் சூழலில் தமிழக அரசின் முயற்சி ஈடேறுமா?' என்ற கேள்வியை வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டிருப்பதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், மத்திய அரசிடம் இருந்து போதிய தடுப்பூசி கிடைக்காததால் தமிழக அரசு சிரமத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் "மத்திய அரசிடம் இருந்து இதுவரையில் 78,49,000 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 71 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. எங்களிடம் 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதில், 6 சதவீத தடுப்பூசி வீணாகியுள்ளது. எவ்வளவு தடுப்பூசிகள் வருகிறதோ, அவ்வளவும் போடப்படும். மத்திய அரசு குஜராத்துக்கு 16.4 சதவீதமும் தமிழகத்துக்கு 6.3 சதவிகித தடுப்பூசிகளையும் வழங்கியுள்ளது. இதனை நான் குறையாகக் கூறவில்லை. சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்புகிறவர்கள், இதையும் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து கடந்த 24 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வும் அதிருப்தி தெரிவித்தது. "தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசுகள் கொள்முதல் செய்ய இயலாத நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும்" எனவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மு.க.ஸ்டாலினின் `குத்தகை' கோரிக்கை

இந்நிலையில், செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி வளாகத்தை குத்தகைக்குத் தருமாறு பிரதமருக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு விரிவான கடிதம் ஒன்றையும் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், `கோவிட் தொற்றுக்கு எதிரான போரில் பெருந்திரளாக தடுப்பூசி செலுத்தப்படுவதே நமக்கு வாய்த்த பலம் பொருந்திய ஆயுதமாகும்.
பிரதமரின் நோக்கமான தற்சார்பு இந்தியாவை அடைய உள்நாட்டில் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதை வேகப்படுத்த வேண்டும். சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நவீன மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட தடுப்பூசி உற்பத்தி மையமான ஹெச்எல்எல் பயோடெக் லிமிடெட் நிறுவனம், பயன்படுத்தப்படாமல் உள்ளதை தாங்கள் அறிவீர்கள்.
இந்த உற்பத்தி மையத்துக்கு மத்திய அரசு 700 கோடி ரூபாய் அளவில் செலவு செய்துள்ளது. இது கிட்டத்தட்ட முடிவுற்ற திட்டம். ஆனால், கூடுதல் நிதி இல்லாததால் இது பயன்படுத்தப்படாமல் உள்ளது. யாரும் ஒப்பந்தம் எடுக்க முன்வராததால் தனியார் மூலம் இதனை இயங்க வைப்பதற்கான முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இந்த மையத்தின் மூலம் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் விரைவில் இயங்க வைக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.
இதனால் நாட்டின் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும். எனவே, இந்தத் தடுப்பூசி உற்பத்தி மையத்தை கடந்த கால கடன்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல், மாநில அரசுக்கு குத்தகைக்குத் தருமாறும் அதனை இயக்க முழு சுதந்திரம் தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்' என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்தில் பதில் வருமா?
தமிழக முதல்வரின் கடிதத்துடன், டெல்லியில் மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை வியாழக்கிழமையன்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் சந்தித்துப் பேசினர். `தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து ஒரு வாரத்தில் மத்திய அரசு பதில் தரும்' என அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாக செய்தியாளர்களிடம் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
`தமிழகத்தில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், முதல்வரின் கணக்கு ஈடேறுமா?' என மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். இவர் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளராக இருக்கிறார்.
"செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்தனை வருடங்களாக ஹெச்எல்எல் பயோடெக் வளாகத்தின் மீது மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. அங்கு அரசு மற்றும் தனியார் ஒப்பந்தத்தின் மூலம் உற்பத்தி செய்யலாம் எனத் திட்டமிட்டனர். அதுவும் முடியவில்லை. கொரோனா தொற்று அதிகமாகிவிட்டதால், அங்கு தடுப்பூசி தயாரிப்பதற்கும் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம், செங்கல்பட்டில் `மெடி பார்க்' என்ற திட்டத்துக்கு மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டது போல, இதற்கும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு செயல்படலாம்" என்கிறார் சாந்தி ரவீந்திரநாத்.
தொடர்ந்து பேசுகையில், ``மத்திய அரசின் அனுமதியைப் பெற்று மகாராஷ்டிர அரசு தடுப்பூசி தயாரிப்பதைப் போல இங்கும் உற்பத்தி செய்யலாம். தற்போது மிகக் குறைந்த அளவிலேயே மத்திய அரசு நமக்கு தடுப்பூசியை கொடுத்து வருகிறது. அதிகப்படியான நபர்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் போதுதான் நோயை கட்டுப்படுத்த முடியும். இந்த நேரத்தில் தமிழகத்தின் தேவையை நிறைவு செய்ய செங்கல்பட்டில் உற்பத்தியைத் தொடங்கலாம். ஸ்புட்னிக் V, மாடர்னா தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும்போது இங்கு செலவு மிகவும் குறைவு. நமக்கும் நிச்சயமாக தடுப்பூசி கிடைக்கும். மற்ற மாநிலங்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் கூட விற்கலாம். இதனால் எந்தவித நஷ்டமும் ஏற்படப் போவதில்லை" என்கிறார்.
ஹெச்எல்எல் வளாகத்தில் என்ன நடக்கிறது?

உண்மையில் செங்கல்பட்டு ஹெச்எல்எல் பயோடெக் வளாகத்தில் என்ன நடக்கிறது? அங்குள்ள தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதை அறிய அங்கு பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` திருவனந்தபுரத்தில் உள்ள இந்துஸ்தான் லைஃப் கேர் (முன்பு இந்துஸ்தான் லேடக்ஸ்) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி வளாகம் உள்ளது.
இங்கு பணிபுரிவதற்காக 230 பேரை வேலைக்கு எடுத்தனர். பின்னர் உற்பத்தி எதுவும் தொடங்கப்படாததால் இதன் எண்ணிக்கை 100 ஆக சுருங்கிவிட்டது. இந்த மையத்தில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உற்பத்தி, தரக்கட்டுப்பாடு, தர நிர்ணயம், திட்டம், மனிதவளம் என பல பிரிவுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். இந்தக் கட்டடம் திறந்திருந்தாலும் செயல்பாட்டில் இல்லை" என்கிறார்.
மேலும் `` கடந்த ஓராண்டாக அனைத்து இயந்திரங்களையும் அனைத்து வைத்திருக்கிறோம். ஒரு இயந்திரத்தை 25 டிகிரி வெப்பநிலையில் இயக்க வேண்டும். பாய்லரை இயக்க வேண்டும் என்றால் டீசல் வேண்டும். மின் வசதியும் வேண்டும். நிதி இல்லாததால் இவற்றையெல்லாம் இயக்க முடியவில்லை. இயந்திரங்களில் பழுது ஏற்படாமல் தடுக்க குறைந்த அளவு தடுப்பு நடவடிக்கைகளை செய்கிறோம். இங்குள்ள அனைத்துமே புதிய இயந்திரங்கள் என்பதால் பெரியளவில் பிரச்னை வருவதற்கு வாய்ப்பில்லை" என சில கூடுதல் தகவல்களைப் பட்டியலிட்டார்.
ஆண்டுக்கு 585 மில்லியன் டோஸ்கள்

கோவிட் தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் எந்தளவுக்கு உள்ளது?' என்றோம். `` உற்பத்தியை வேகப்படுத்தினால் ஆறு மாதத்துக்குள் தடுப்பூசிகளை தயாரித்துவிட முடியும். இங்கு வருடத்துக்கு 80 மில்லியன் டோஸ்களை தயாரிக்கும் திறன் உள்ளது. தற்போதுள்ள வசதிகளைக் கணக்கில் வைத்து இதனைச் சொல்கிறோம்.
இன்னும் 10 முதல் 15 சதவிகிதம் அளவுக்கு சில வேலைகள் நிலுவையில் உள்ளன. அவை சரிசெய்யப்பட்டால், ஆண்டுக்கு 585 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த மையத்துக்கு உலக சுகாதார நிறுவனத்தின் சார்பாக சவுமியா சுவாமிநாதன், மத்திய அமைச்சர்கள், அரசு செயலர்கள் எனப் பலரும் வந்து பார்வையிட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் முதல்வர் பழனிசாமி இங்கு வருவார் என எதிர்பார்த்தோம். அவர் வரவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பார்த்ததை நல்ல தொடக்கமாகப் பார்க்கிறோம்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` இவ்வளவு காலம் கிடப்பில் போடப்பட்டதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. இந்த மையத்தில் 600 மில்லியன் டோஸ்களை தயாரித்தால் 500 மில்லியன் டோஸ்களை இந்திய அரசு வாங்கியே ஆக வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. அப்படிச் செய்தால் தனியார்களுக்கு எந்தவித லாபமும் வரப்போவதில்லை என்பதால் தான் செங்கல்பட்டு வளாகத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாக கருதுகிறோம்.
2008-10 ஆம் ஆண்டில் இந்த வளாகம் அமைவதற்கு திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், வளாகப் பணிகள் நிறைவடையும்போது கூடுதல் செலவாகிவிட்டது. வங்கிகளிடம் கடன் பெற்றுத்தான் இந்த வளாகம் கட்டப்பட்டது. அதற்கான வட்டியும் அதிகரித்து வருகிறது" என்கிறார்.
6 வகையான தடுப்பூசிகள்

பட மூலாதாரம், Getty Images
தற்போது சம்பளம் முறையாக வருகிறதா.. வேறு என்னென்ன பணிகள் ஹெச்எல்எல் வளாகத்தில் நடக்கின்றன?' என்றோம். ``கடந்த 2 வருடங்களாக முறையாக சம்பளம் வருவதில்லை. உதவி மேலாளர், துணை மேலாளர், அசோசியேட் துணைத் தலைவர் வரையில் அதிகபட்ச சம்பளமே 25,000 ரூபாய்தான்.
அதற்குக்கீழ் உள்ளவர்களுக்கு 10,000 ரூபாய்தான் சம்பளம். அதையும் சரியாகத் தருவதில்லை. இதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் ஒரு ஊழியர் தற்கொலையே செய்து கொண்டார்.
சீரம், ஜைடஸ் கெடிலா உள்பட பிரபலமான தடுப்பு மருந்து கம்பெனிகளில் உள்ள தரத்துக்கு இணையாக செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் உள்ளது. இங்கு உற்பத்தியை வேகப்படுத்தும் அளவுக்கு போதிய ஊழியர்களை நியமித்தாலே போதுமானது. கடந்த ஆண்டு கோவிட் வந்தபோது ஹேண்ட் சானிடைசர், ஸ்வாப் டெஸ்ட் எடுப்பதற்கான பொருள்களைத் தயாரிக்கும் பணிகளைச் செய்தோம்" என்கிறார்.
மேலும், ``இந்த வளாகத்தைத் தொடங்கியதன் நோக்கம், நாட்டின் தடுப்பூசி தேவையில் தன்னிறைவு அடைவது தான். நாட்டுக்கு சேவை செய்யக் கூடிய வளாகத்தை, ஒரு மாநில அரசிடம் மத்திய அரசு கொடுத்துவிடுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தடுப்பூசிக்கு தமிழ்நாடு அரசு குளோபல் டெண்டரை கோரினாலும் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
தவிர, இங்கு கோவிட் தடுப்பூசியை தவிர பென்டோவேலன்ட் (Pentavalent Vaccine), ரேபிஸ், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், பிசிஜி, மீசெல்ஸ் ருபெல்லா (MR) என ஆறு வகையான தடுப்பு மருந்துகளையும் தயாரிக்கலாம். கோவிட் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கிவிட்டு மற்ற தடுப்பு மருந்துகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். அதற்கும் சேர்த்து நிதியுதவி அளித்தால் இந்த வளாகத்தைத் தொடங்கியதன் நோக்கம் நிறைவேறும்" என்கிறார்.
மத்திய அரசு முடிவெடுக்கும்
`தடுப்பூசி உற்பத்திக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என செங்கல்பட்டு ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் விஜயனிடம் கேட்டோம் `` நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது ஒரு மிகப் பெரிய திட்டம். ஒரு ஏக்கர் பரப்பளவில் 600 கோடி மதிப்பீட்டில் இந்த வளாகம் கட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்கி 2017 ஆம் ஆண்டுதான் நிறைவடைந்தன. ஆனால், 9 ஆண்டுகளாக இது மூடியே கிடப்பதாக சில ஊடகங்களில் தகவல்கள் வந்துள்ளன. அது தவறானது" என பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேசுகையில் ``ஹெச்எல்எல் பயோடெக் வளாகப் பணிகளில் பல்வேறு காரணங்களால் திட்டத்தின் செலவு அதிகரித்தது. அரசின் கொள்கை முடிவின் படி சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதியளிக்க மறுத்துவிட்டது. அந்தப் பட்டியலில் திருவனந்தபுரம் ஹெச்எல்எல் லைஃப் கேர் நிறுவனமும் சேர்ந்துவிட்டது. கோவிட் சூழலில் நாங்கள் நேரடியாக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு செயல்பட முடியாது. இதற்கான நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு, மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டுச் செயல்பட ஆர்வம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுத்து அறிவிக்கும்" என்றார் விஜயன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












