தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு ரத்தாகுமா? சவால்கள் என்ன? வந்துள்ள ஆலோசனைகள் எப்படி உள்ளன?

கல்வி

பட மூலாதாரம், Twitter

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

`பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்தலாமா?' என பெற்றோர், மாணவர், ஆசிரியர் ஆகியோரிடம் தமிழ்நாடு அரசு ஆலோசனைகளைப் பெற்று வருகிறது. `மாணவர்களும், பெற்றோரும் தேர்வை நடத்த விரும்பவில்லை. ஆனால், ஆசிரியர்கள் விரும்புகின்றனர்' என்கின்றனர் கல்வி அதிகாரிகள். என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?

அமைச்சரின் ஆர்வம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிளஸ் 2 தேர்வை நடத்தி முடிப்பதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆர்வம் காட்டி வந்தார்.

இதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

`பள்ளிகளோடு தொடர்பில் உள்ள மாணவர்கள், அவர்களில் எத்தனை பேரால் தேர்வு எழுத வர முடியும்?' என்பது குறித்த புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டு வந்தன. வகுப்பறைக்கு பத்து பேரை மட்டுமே அனுமதித்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்துவது என அதிகாரிகள் முடிவு செய்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றை காரணம் காட்டி சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ரத்து செய்தது. இதனைப் பின்பற்றி குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளும், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதை வரவேற்ற பிரதமர் மோதியும், ` மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே முக்கியம். தற்போதைய சூழலில் சிறப்பான, மாணவர் நலன் சார்ந்த முடிவு இது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

என்ன நடக்கிறது பள்ளிக்கல்வித் துறையில்?

சி.பி.எஸ்.இ அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதன்பின்னர், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ` அனைத்து தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத்தினர் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதன்பிறகு ஜூன் 5ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்து முதலமைச்சர் இறுதி முடிவை அறிவிப்பார்' என்றார்.

அமைச்சர்

பட மூலாதாரம், facebook

இதில், கல்வி அதிகாரிகளிடம் கருத்து தெரிவிப்பதற்காக `14417' என்ற இலவச தொலைபேசி எண்ணும் [email protected] என்ற இமெயில் முகவரியும் கொடுக்கப்பட்டன. கடந்த 2 நாள்களாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கருத்துகளைப் பெற்று தொகுக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

`தற்போது வரையில் என்ன மாதிரியான ஆலோசனைகள் வந்துள்ளன?' என பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கம், கல்வியாளர்கள், பள்ளி நலனில் ஆர்வம் உள்ளவர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட ஆலோசனைகளைத் தொகுத்து வருகிறோம். இதில் பெறப்படும் ஆலோசனைகளில், ஒருமித்த கருத்தைப் பதிவு செய்து தருமாறு அமைச்சர் கேட்டுள்ளார்.

தொடர்பில் 60 சதவிகிதம் பேர்தான்!

இதில், அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோரை ஆசிரியர்களால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர்களில் பலரிடம் செல்போன் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களின் தொடர்பு எண்கள் பள்ளிகளில் இல்லை. தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் 60 சதவிகித மாணவர்களின் தொடர்பு எண்கள் உள்ளன.

`இந்த 60 சதவிகித மாணவர்களிடம் இருந்தே கருத்துகளை கேட்டு வாங்கிக் கொடுங்கள்' என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில் 29 மாவட்டங்களில் இருந்து முழுமையான தகவல்கள் வந்துவிட்டன. விரைவில் மற்ற மாவட்டங்களில் இருந்தும் ஆலோசனைகள் வந்துவிடும்" என்கிறார்.

கல்வி

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து பேசுகையில், `` மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோர், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொள்கின்றனர். தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளின் ஆசிரியர்கள் மூலம் பெற்றோர், மாணவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை சேகரிக்கின்றனர். இதுவரையில் வந்த தகவல்களில், `தேர்வு வேண்டாம்' என்றுதான் பலரும் தெரிவித்துள்ளனர். `தேர்வு எழுத வந்தால் உயிருக்கு அரசு பாதுகாப்பு கொடுக்குமா?' எனவும் கேட்கின்றனர். ஒரு சிலர், `ஆன்லைனில் தேர்வு வையுங்கள்' என்கின்றனர். வேறு சிலரோ, `எந்தவகையில் மார்க் கொடுக்கலாம்? என்பதை முடிவு செய்துவிட்டு சொல்லுங்கள்' என்கின்றனர்.

அரசுக்கு வந்த ஆலோசனைகள்!

இந்த விவகாரத்தில் சில பெற்றோர் அளித்த ஆலோசனையில், `80 சதவிகித மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கு 85 சதவிகிதம் மதிப்பெண் கொடுங்கள். அப்போதுதான் அந்த மாணவரின் மனம் உற்சாகப்படும். இந்த விஷயத்தில் அரசாங்கம் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்' எனவும் கூறியுள்ளனர். இதுவரையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் நான்கு மாதிரி தேர்வுகளை நடத்தியுள்ளனர். கேள்வித்தாளை வடிவமைத்து ஒவ்வொரு பள்ளியின் இமெயில் ஐ.டிக்கும் கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். அந்த வினாத்தாளை மாணவர்களின் வாட்ஸ்அப்புக்கு அனுப்பி தேர்வு எழுத வைத்துள்ளனர். இந்தத் தேர்வையும் பெரும்பாலான மாணவர்கள் எழுதவில்லை. `இதன் அடிப்படையில் மதிப்பெண் அளித்தால் தேர்வு எழுதாத மாணவர்களை என்ன செய்வது?' என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர். `பிளஸ் 2 தேர்வைவிட மத்திய அரசுக்கு நீட் தேர்வுதான் முக்கியம். அதனை நடத்தினால் என்ன செய்வது என்பதற்கு பதில் சொல்லுங்கள்' எனவும் கேட்கின்றனர்.

`மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் ஒருமித்த கருத்தாக என்ன உள்ளது?' என்று கேட்டோம். `` பிளஸ் 2 தேர்வை எழுத 97 சதவிகித மாணவர்கள் தயாராக இல்லை. இதில், 83 சதவிகித பெற்றோர் தேர்வை விரும்பவில்லை. மற்ற பிரிவினரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். தனியார் பள்ளி ஆசிரியர்களில் 92 சதவிகிதம் பேர், தேர்வை நடத்துவதில் உறுதியாக உள்ளனர். காரணம், கொரோனா காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், `இந்தத் தேர்வை மையமாக வைத்து பாதி சம்பளமாவது வருமா?' என எதிர்பார்க்கின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 9 சதவிகிதம் பேர் மட்டும், `பெற்றோர் தயாராக இல்லாததால்தான் நாங்களும் தேர்வு வேண்டாம் என்று சொல்கிறோம்' எனக் கூறியுள்ளனர். மற்ற 91 சதவிகித அரசுப் பள்ளி ஆசிரியர்கள், `தேர்வு நடத்தலாம்' எனக் கூறியுள்ளனர்.

மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான ஆலோசனைகளும் வந்துள்ளன. `பத்தாம் வகுப்பில் 10 மதிப்பெண்ணையும் பிளஸ் 1 வகுப்பில் ஆன்லைனில் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் 30 மார்க்கையும் மாணவரின் நடத்தைக்கு 30 மதிப்பெண்ணையும் பிளஸ் 2 மாதிரி தேர்வுகளில் இருந்து 30 மதிப்பெண்ணையும் எடுத்துக் கொள்ளலாம்' எனவும் கூறியுள்ளனர். தேர்வு தொடர்பான இறுதி முடிவை முதலமைச்சர்தான் எடுக்க வேண்டும்" என்கிறார்.

சி.பி.எஸ்.இ. மூலம் வரும் பாதிப்பு!

பிளஸ் 2 தேர்வு தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து, மூத்த கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது ஒன்றுதான் மாணவர்களுக்குச் சாதகமாக அமையும். ஆனால், தேர்வு தொடர்பாக 100 சதவிகிதம் பெற்றோருக்கு ஏற்ற வகையில் முடிவெடுக்க முடியாத சூழலில்தான் மாநிலங்கள் உள்ளன. ஒரு தரப்பு மாணவர்கள், `தேர்வு வேண்டும்' என்கின்றனர். இன்னொரு பிரிவினர், `தேர்வு வேண்டாம்' என்கின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதுதான் பெற்றோரின் விருப்பமாக உள்ளது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` மாநில அரசு தேர்வை நடத்த விரும்பினால் இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் நடத்த முடியும். அதற்குள் சி.பி.எஸ்.சி மாணவர்களை வைத்து மாணவர் சேர்க்கையை சில கல்லூரிகள் தொடங்கிவிட்டன. ஒரு பெற்றோர் என்னிடம், `கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படிப்புக்கு ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் கேட்கிறார்கள்' என்றார். அந்த வரிசையில் சி.பி.எஸ்.சி மாணவர்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், நமது மாநில கல்வி வாரியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மாணவர் சேர்க்கையில் பாதகங்கள் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் எண்ணம்.

ஜெயப்பிரகாஷ்

பட மூலாதாரம், Jayaprakash gandhi

படக்குறிப்பு, ஜெயப்பிரகாஷ் காந்தி

உதாரணமாக, சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மாதிரி தேர்வை மையமாக வைத்து மதிப்பெண் கொடுக்கிறார்கள் என்றால், 3 மாதம் கழித்து மாநில வாரிய (ஸ்டேட் போர்டு) மாணவர் தேர்வெழுதிவிட்டு வந்தால் இருவரில் அதிக மதிப்பெண்ணை சி.பி.எஸ்.இ மாணவர் பெற்றிருந்தால் அவருக்குத்தான் சீட் கிடைக்கும். பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களை சி.பி.எஸ்.இ மாணவர்களோடு எப்படி ஒப்பிட முடியும்? இது தவறான ஒன்று. மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்தாவிட்டாலும் வேளாண்மை, கால்நடை, பொறியியல் என உயர் படிப்புகள் அனைத்திலும் நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்துகின்றனர்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

நமக்கு நீட், ஜே.இ.இ தவிர வேறு தேர்வுகள் இல்லை. தேர்வு இல்லாமல் இருப்பதுதான் நமது மாநில மாணவர்களுக்குச் சாதகமாக இருக்கப் போகிறது. கொரோனா குறைந்தாலும் செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அங்கெல்லாம் எப்படி தேர்வு நடத்த முடியும்? 45 நாள்கள் அவகாசம் கொடுத்தால்தான் தேர்வுக்குத் தயாராக முடியும். இதனால் ஏற்படும் தாமதம் என்பது மாணவர்களை பாதிக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தேர்வை ரத்து செய்வதில் தவறில்லை. இந்த விவகாரத்தில், `நீட் உள்பட எந்தத் தேர்வையும் நடத்தப் போவதில்லை' என்ற கொள்கை முடிவை மத்திய அரசு ஏன் கொண்டு வரவில்லை?" என்று கேட்கிறார்.

மேலும், `` எப்போது தேர்வை நடத்த வேண்டும் என்பதை மாநிலங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். பெரும்பான்மையான மாணவர்களின் கருத்துகளுக்கு ஏற்ப அரசு செயல்பட வேண்டும். தற்போதுள்ள பொருளாதார சூழலில், எத்தனை பிளஸ் 2 மாணவர்களின் குடும்பங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன, தடுப்பூசிகளை எத்தனை ஆசிரியர்கள் போட்டுக்கொண்டுள்ளனர் என்பதை பொறுத்து முடிவெடுக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வு ரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநிலங்கள் எல்லாம் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள். நமது அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. அது சரியான ஒன்றுதான். இதுதொடர்பாக வல்லுநர்களின் கருத்தை கேட்டுவிட்டு அரசு முடிவெடுக்க வேண்டும்" என்கிறார்.

காணொளிக் குறிப்பு, மலைகளுக்கு மத்தியில் 'ஸ்மார்ட் கிளாஸ்' நடத்தும் எட்டாம் வகுப்பு மாணவி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :