கொரோனா காலத்தில் என்ன சாப்பிடலாம்? ஏன் பழச்சாறுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்?

உணவு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"பூண்டு தட்டிப் போட்டி பாலை குடியுங்கள்" கொரோனா எட்டி கூட பார்க்காது. "லவங்கம், பட்டை பொடியாக்கி மிளகு சேர்த்து கசாயமாக இரண்டு வேலை எடுத்துக் கொண்டால் கொரோனா காணாமால் போய்விடும். "மூன்று வேளையும் மிளகை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், கொரோனா தன்னால் குணமாகி விடும்" - இப்படி பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இவை உண்மை தானா? இந்தியாவில் அதிதீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் எந்த உணவை சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என பிபிசி தமிழுக்காக, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் மீனாக்‌ஷி பஜாஜிடம் கேட்டோம்.

நாம் உட்கொள்ளும் உணவால் கொரோனா வராமல் தடுக்க முடியுமா? என்கிற கேள்விக்கு "முடியாது" என ஒற்றை சொல்லில் விடையளித்தார் அவர்.

"உணவு வகைகள் கொரோனாவால் ஏற்படும் தாக்கத்தை குறைக்குமே தவிர, கொரோனா தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாக்காது. அதே போல சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் குறிப்பிடப்படும் இஞ்சி, மிளகு, பூண்டு, லவங்கம், பட்டை... போன்ற உணவுப் பொருட்கள் பொதுவாக நன்மை தரக்கூடியவையே. இருப்பினும் அதை உட்கொள்ளும் விதம், எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் அளவு போன்றவை முக்கியம்," என தொடங்கினார் மீனாக்‌ஷி.

பூண்டு

பட மூலாதாரம், Getty Images

அதற்கு உதாரணமாக இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படும் பூண்டை குறிப்பிடுகிறார் மீனாக்ஷி.

"பூண்டு எடுத்துக் கொள்வது நல்லது தான். பூண்டில் பல்வேறு சத்துக்களோடு முக்கியமாக அலிசின் என்கிற வேதிப் பொருள் இருக்கிறது. பூண்டை நறுக்கி 10 நிமிடம் வைத்த பின் தான் அதில் அலிசின் சுரக்கும். அதன் பிறகு அதை குழம்பிலோ ரசத்திலோ, பாலிலோ கலந்து உட்கொள்ளலாம். ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 2 கிராம் வரை பூண்டை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருக்கும். அவர்கள் அதிகமாக பூண்டு சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம்"

"அதே போல இஞ்சியும் ஒரு அருமையான உணவுப் பொருள். இஞ்சியில் சுமார் 400 வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், சத்துக்கள், இரண்டு முக்கியமான ஆன்டி வைரல்களும் அடக்கம். இது கொரோனா ஆன்டி வைரல் அல்ல. இத்தனை நன்மை விளைவிக்கக் கூடிய இஞ்சியை, தேன் மற்றும் எலுமிச்சையோடு சேர்த்து அல்சர் போன்ற வயிற்றுப் பிரச்னை இருக்கும் ஒருவர் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்."

"அதே போல சில உணவுகள், சில உணவுப் பொருட்களோடு சேர்த்து உட்கொண்டால் தான் அதன் முழு பலனும் கிடைக்கும். உதாரணமாக, மிளகு மற்றும் மஞ்சளைக் கூறலாம். ரசத்திலோ, பாலிலோ, இந்த இரண்டையும் சேர்த்து உட்கொண்டால் தான் இரண்டில் பலனும் சிறப்பாக நம் உடலுக்குக் கிடைக்கும். எனவே யார் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொண்டு உட்கொள்வது நல்லது."

"சில உணவுப் பொருட்கள் பொதுவாக நன்மை தரக்கூடியவையாக இருக்கும் ஆனால், அதை சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், பொட்டாஷியம் அதிகம் உள்ளவர்கள் என உடல் குறைபாடு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். உதாரணமாக முட்டையைக் கூறலாம். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், நல்ல உடல் ஆரோக்கியதோடு இருக்கும் இளைஞர்கள், போதிய ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் போன்றோர் முழு முட்டையை காலை மற்றும் மதிய நேரங்களில் உட்கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், இருதயக் கோளாறு உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவை காலை மற்றும் மதிய நேரங்களில் மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது.

உணவு

பட மூலாதாரம், Getty Images

முட்டை போன்ற புரதச் சத்து, கொழுப்பு நிறைந்த உணவுகள் எளிதில் செரிக்க, இரவில் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. எனவே சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்ற வேண்டாம்," என வேண்டுகோள் வைத்தார் மீனாக்ஷி பஜாஜ்.

சரி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன மாதிரியான உணவை எடுத்துக் கொள்ளலாம், எதைத் தவிர்க்கலாம்? எனக் கேட்டோம்.

"கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம்.

1. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டவர்கள்.

2. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்.

முதலில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கான உணவைப் பார்க்கலாம்.

"பொதுவாக குறைந்த அளவு மாவுச்சத்து, நிறைய ஃபைபர், தரமான புரதம், தரமான கொழுப்பு, நிறைய திரவ உணவுகள் என அவர்கள் உணவு இருக்க வேண்டும்.

பழத்தை சாப்பிடுவதற்கு பதிலாக, பழத்தை சாறாக்கி சர்க்கரை சேர்ப்பதால் அது கிட்டத்தட்ட மாவுச்சத்து போலவே நம் உடலில் செயலாற்றும். எனவே பழச்சாறுகள் எடுத்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதே போல கேக், பிரட், ஐஸ்கிரீம், இனிப்புகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது"

உணவு

பட மூலாதாரம், Getty Images

"மாவுச் சத்து மற்றும் சர்க்கரை உணவுகளை நாம் அதிகமாக உட்கொண்டால், நம் உடலில் கார்பன் டை ஆக்ஸைட் வெளியீட்டை அதிகரிக்கும். சுருக்கமாக நம் உடலின் ஆக்சிஜன் அளவை பாதிக்கும். எனவே மாவுச் சத்த் மற்றும் சர்க்கரை உணவுகளைக் குறைப்பது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூச்சு திணறல் பிரச்சனையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த உதவும்" என்கிறார்.

"மிதமான அளவுக்கு அரிசி, போன்ற உணவுப் பொருட்கள், நிறைய பழங்கள், நிறைய நார்சத்து மிகுந்த பச்சைக் காய்கறிகள், புரதம் நிறைந்த முட்டை, சிக்கன், கருப்பு கொண்டைக் கடலை, ராஜ்மா, பச்சைப் பயிறு, நல்ல கொழுப்பு நிறைந்த பாதாம், வெள்ளை எல்லு, வால்நட், காய்கறி சூப், மோர் (குளிர்ச்சியாக உட்கொள்ளக் கூடாது) போன்றவைகளை உட்கொள்ளலாம்.

சிறுநீரக பிரச்னை இருப்பவர்கள் தக்காளி போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். உடலில் அதிக அளவில் பொட்டாஷியம் உள்ளவர்கள் ஆரஞ்சு, நெல்லிக் காய் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

எனவே சர்க்கரை நோயாளிகள், இருதயக் கோளாறு உள்ளவர்கள், உடல் உறுப்புகள் செயல்பாட்டில் பிரச்சனை உள்ளவர்கள்ஊட்டச்சத்து நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று உணவை திட்டமிட்டுக் கொள்வது தான் சரியான வழிமுறை" என்கிறார்.

சர்க்கரை நோய், இருதயக் கோளாறு, உடல் உறுப்பு செயல்பாடு கோளாறு போன்ற எந்த பிரச்சனையும் இல்லாதவர்களுக்கு ஏதாவது உணவுத் திட்டம் இருக்கிறதா? எனக் கேட்டோம்.

உணவுத் திட்டத்தை விளக்கத் தொடங்கினார் மீனாக்ஷி பஜாஜ்.

உணவு

பட மூலாதாரம், Getty Images

உணவுத் திட்டம் எப்படி இருக்கலாம்?

அதிகாலை - நீரில் ஊர வைத்து தோல் நோக்கிய பாதாம் (8 - 12 எண்ணிக்கை), நீரில் ஊர வைத்த வால்நட் 3 - 6 எண்ணிக்கை.

காலை உணவுக்கு முன் - மிளகு, மஞ்சள், இஞ்சி தட்டிப் போட்ட பால்.

காலை உணவு - எளிதில் செரிக்கக் கூடியதாக இருக்கும் இட்லி, உப்புமா, தலியா, தோக்லா, முட்டை, கதம்ப சாம்பார், காரமில்லாத புதினா அல்லது கொத்தமல்லி சட்னி.

காலை உணவுக்குப் பிறகு - வீட்டிலேயே சமைத்த முருங்கை கீரை சூப், தக்காளி சூப் அல்லது ஏதோ ஒரு காய்கறி சூப்.

மதிய உணவுக்கு முன் - இனிப்பு சேர்க்காமல் பீட்ரூட் மற்றும் நெல்லிக்காய் சாறு (50 - 100 மிலி) அல்லது கொய்யா, ஆரஞ்சு, கேப்சிகம், பைன் ஆப்பிள் சாலட்

மதிய உணவு - கொஞ்சம் அரிசி சாதம், ரசம், தக்காளி பருப்பு, கிச்சடி, குறைவாக தாளித்த தயிர் சாதம், (அரிசியை காய்கறி வேகவைத்த நீரில் சமைப்பது நல்லது)

மாலை - கறுப்பு கொண்டைக் கடலை சுண்டல், ராஜ்மா சுண்டல், எலுமிச்சை சாற்றுடன் சக்கரவள்ளிக்கிழங்கு, கடலைமிட்டாய், எல்லுருண்டை, கிரீன் டீ, இஞ்சி டீ, துளசி டீ

இரவு உணவு - சப்பாத்தி, கோதுமை தோசை, இட்லி, கதம்ப சாம்பார், புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி

இரவு உணவுக்குப் பிறகு - பருப்புகள் கொண்ட டார்க் சாக்லேட் 1 - 2 துண்டுகள்

உறங்கச் செல்வதற்கு முன் - மீண்டும் மிளகு, மஞ்சள், இஞ்சி தட்டிப் போட்ட பால்

பொதுவாக ஆப்பிள், ஓட்ஸ், வெங்காயம், கோதுமை போன்ற உணவுகளை ஒரு நாளில் ஏதாவது ஒரு வேளையில் எடுத்துக் கொள்வது நம் குடலுக்கு நல்லது.

வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும், சர்க்கரை, உப்பு, கெட்ட கொழுப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மைதா உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றார்.

கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஏதாவது பொது உணவு இருக்கிறதா?

"அப்படி குறிப்பிட்டுக் கூற முடியாது. கொரோனாவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கும் போது பலருக்கும் சர்க்கரை அளவு மாறுபடுகிறது. அவர்களின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் எல்லாம் வழக்கத்தை விட வேறுபடுவதால் பொதுவான உணவுத் திட்டத்தை அவர்களுக்கு வகுக்க முடியவில்லை. எனவே மருத்துவமனையில் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் ஊட்டச் சத்து நிபுணரை தொடர்பு கொள்வது நல்லது. மேலும் மிதமான கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள், வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டு குணமானவர்கள், மேலே குறிப்பிட்ட உணவையே தொடரலாம்." என்கிறார் மீனாக்‌ஷி பஜாஜ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :