கொரோனா ஊரடங்கில் ஆதரவற்றோரின் பசியை போக்கும் கடலூர் பட்டதாரி பெண்கள்

- எழுதியவர், நட்ராஜ் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மாநில அரசு பொது முடக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்கியிருப்பதால், அத்தியாவசிய கடைகள் மட்டுமே ஒரு சில மணி நேரம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், கடலூரைச் சேர்த்த மூன்று பெண்கள் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கடலூர் மாவட்டத்தில், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு ,இரவு உணவு என இரு வேளை உணவை தயார் செய்து வழங்கி வருகின்றனர். இவர்களுடன் 15க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் இணைத்துள்ளனர்.
"கொரோனா பொது முடக்கம் காரணமாக ஆதரவற்றோர் சாலையோரத்தில் உணவின்றி பசியால் பாதிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்த பிறகு அவர்களின் பசியைப் போக்க இவ்வாறு செய்ய தீர்மானித்தோம்," என்று இந்த மூன்று பெண்களும் கூறுகின்றனர். அவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.


கடலூரைச் சேர்ந்த குமுதவள்ளி, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடலூரைச் சேர்ந்த ஜோஷ் மகேஷ் கொரோனா தொற்று சூழலில் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆதரவற்றவர்களுக்குச் செய்யும் உதவிகளை செய்து வருகிறார். அவரது சமூக ஊடக பதிவுகள் மூலம் ஈர்க்கப்பட்ட குமுதவள்ளி அதேபோல தினமும் ஆதரவற்றோருக்கு உதவி செய்யத் தொடங்கினார்.
"இந்த பணியை கொரோனா தொற்று தீவிரமடைந்த நாளிலிருந்து செய்து வருகிறேன். தினந்தோறும் சுமார் 300 பேருக்கு மதியம் ,இரவு ஆகிய இரு வேளையும் உணவு தயார் செய்து வழங்கி வருகிறோம். நாங்கள் செய்யும் இந்த உதவிகள் அனைத்தையும் தினந்தோறும் எங்களது வாட்ஸ் ஆஃப் மற்றும் சமூக வலைதள குழுக்களில் பகிர்வோம். இந்த பதிவுகளைப் பார்த்து, எங்களது அன்றாட பணிக்குத் தேவையான சிறு சிறு உதவிகளை எங்களுடைய நண்பர்கள், வீட்டின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் சமூக வலைதளம் மூலமாக பலர் உதவிக்கரம் நீட்டினர்."

"தினந்தோறும் இவர்களைச் சந்தித்து உணவு வழங்கும் போதெல்லாம் எங்களை கை எடுத்துக் கும்பிட்டு அவர்களது கண்ணீரால் வாழ்த்துகின்றனர். பசியால் கஷ்டப்படும் அவர்கள், வயிறு நிறைந்த மனதார வாழ்த்துவது எங்களுக்கு நிம்மதி அளிக்கிறது. அதன் காரணமாகவே இவர்கள் இந்த கடினமான சூழலிலிருந்து மீண்டு வர எங்களது முயற்சியை தொடர்கிறோம்," என்றார் குமுதவள்ளி.
மேலும், "உணவு கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. யாரும் பசியோடும் இருக்கக்கூடாது, யாசகம் கேட்கக் கூடாது (no hunger, no beggar) என்பதை நோக்கமாகக் கொண்டே செயல்பட்டு வருகிறோம். சாலையோரத்தில் இருக்கும் ஆதரவற்றோரை கண்டறிந்து மீட்டு அவர்களைப் பாதுகாப்பாக காப்பகத்தில் சேர்ப்போம். குறிப்பாக ஆதரவற்றோரை மீட்கும் போது அவர்களது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்வதுண்டு. இதைப் பார்க்கும் சம்மந்தப்பட்ட நபர்களின் மகன்கள், பேரன்கள் எங்களை தொடர்பு கொண்டு அழைத்துச் சென்றுள்ளனர். இது மாதிரி கன்னியாகுமரியைச் சேர்த்த ஒருவரை அவரது குடும்பத்திடம் சேர்த்து வைத்துள்ளோம்," என்கிறார் குமுதவள்ளி.
குமுதவள்ளியின் செயலைப் பார்த்து அவரது தோழி ஹம்ஸினி ஈர்க்கப்பட்டு இப்போது அவரும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
குமுதவள்ளியின் தோழி ஹம்ஸினி கூறியதாவது: "ஆப்டோமெட்ரி இளங்கலை படிப்பு முடித்து விட்டு, தற்போது சுயமாகக் கண் சிகிச்சை மையம் திறக்க திட்டமிட்டு வருகிறேன். இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் வேலையின்றி இருந்தேன். இந்த சமயத்தில், எனது தோழி குமுதவள்ளி ஆதரவற்றோருக்கு உதவி செய்யும் படங்களை எங்கள் வீட்டில் காட்டினேன். இதைப் பார்த்த எனது பெற்றோர் என்னையும் சேவை செய்ய ஊக்கப்படுத்தினர்.
முதன் முதலில் எனது தோழியுடன் சேர்ந்து உதவி செய்யத் தொடங்கியபோது பலரும் எங்களை வாழ்த்தினர். அந்த தருணம் என்னை இந்த சேவையை மேலும் செய்ய ஊக்கப்படுத்தியது. எங்களுடன் பானு என்ற மூத்த சகோதரி ஒருவரும் இணைந்துள்ளார். மதியம் மற்றும் இரவுக்கு தேவையான உணவை அவர் சமைப்பார். அவருக்குத் துணையாக நானும் எனது தோழியும் உதவி செய்து இரு வேளைக்குமான உணவை ஏற்பாடு செய்வோம்," என்கிறார் ஹம்ஸினி.

"வீட்டில் எங்களை வெளியே அனுப்புவதற்கு அதிகமாகப் பயப்படுவார்கள். ஆனால் அதற்காகப் பயந்து வீட்டிலேயே இருந்தால், இவர்களைப் போன்ற ஆதரவற்றோருக்கு யார் உதவி செய்வார்கள்? ஒருவேளை இவர்களைப் பற்றித் தெரியாமல் இருந்திருந்தால் கூட வீட்டிலிருந்திருப்பேன். ஆனால் இவர்கள் கஷ்டப்படுவது தெரிந்த பிறகு எப்படி வீட்டில் இருக்க முடியும்? இதன் காரணமாகவே இந்த பணியை விடாமல் தொடர்கிறேன்," என்கிறார் ஹம்ஸினி.
இவர்களுடன் இணைந்துள்ள பானு என்ற ஆசிரியர், இந்த பணியை செய்வதற்கான காரணத்தை விளக்கினார்.
கொரோனா ஊரடங்கு "முதன் முதலில் கடுமையாக அமலானபோது அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுவிட்டன. அப்போது சாலையோரத்தில் இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். உதவி செய்ய கிடைத்த வாய்ப்பாக அதை பயன்படுத்திக் கொண்டேன். அன்றிலிருந்து ஆதரவற்றோருக்கு எங்களால் முடிந்த உதவியை தொடர்ந்து செய்கிறோம். ஆதரவின்றி சாலையோரத்தில் இருக்கும் இவர்களால் தொற்று ஏற்பட்டுவிடும் என்று பயந்து பலரும் இவர்கள் அருகே செல்ல மறுக்கின்றனர். இத்தகைய சூழலில் எப்படி இவர்கள் தங்களை பசியை போக்கி கொள்வர்கள்?," என்று கேள்வி எழுப்பினார் பானு.
எனக்கு கேட்டரிங் செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் கனவு. அந்த கனவை இந்த சேவை மூலமாக நிவர்த்தி செய்து கொள்கிறேன். ஆதரவற்றவர்களின் பசியைத் தீர்த்து அவர்கள் முகத்தில் சந்தோஷத்தைப் பார்ப்பதே எங்களுக்கு நிம்மதி அளிப்பதாக கூறுகிறார் பானு.
பிற செய்திகள்:
- நீராவி பிடிப்பது கொரோனாவை விரட்டியடிக்குமா? - உண்மை என்ன?
- `துரைமுருகனோடு அ.தி.மு.க வேட்பாளர் சமரசமா? காட்பாடி தொகுதியில் நடந்தது என்ன?
- 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' கி. ராஜநாராயணன் காலமானார்
- அதிக நேரம் வேலை செய்து அநியாயமாக சாகும் ஊழியர்கள் - ஆய்வில் அதிர்ச்சி
- “இந்தியாவில் கொரோனா நிலைமை கைமீறிப் போய்விட்டது” - பதவி விலகிய வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல்
- இரு வேறு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உங்கள் உடலில் என்னாகும்?
- செர்னோபில் அணு உலை அருகில் விளைந்த ஆப்பிளிலிருந்து தயாரித்த மதுபானம் பறிமுதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












