கி. ராஜநாராயணனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: தமிழக முதல்வர் அறிவிப்பு

'கரிசல் இலக்கியத்தின் தந்தை' கி. ராஜநாராயணன் மறைவு

பட மூலாதாரம், படம்: புதுவை இளவேனில்

படக்குறிப்பு, கரிசல் வட்டார அகராதி என மக்கள் பேசும் மொழிக்கென ஓர் அகராதியை உருவாக்கினார் கி.ரா.

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி. ராஜநாராயணன் காலமானார். அவருக்கு வயது 98. புதுச்சேரியில் வசித்துவந்த அவர், மூப்பின் காரணமாக திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கி. ராஜநாராயணன், நேற்று இரவு (மே 17-ம் தேதி) சுமார் 11:30 மணியளவில் காலமானார். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் ஆகிய நாவல்களை எழுதிய கி.ரா. 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.

கி. ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளையாக கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தார் கி.ரா.

கரிசல் வட்டார அகராதி என மக்கள் பேசும் மொழிக்கென ஓர் அகராதியை உருவாக்கினார் கி.ரா. சாகித்ய அகாதெமி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கனடா தமிழ் தோட்ட விருது ஆகிய விருதுகளைப் பெற்ற கி.ரா, புதுச்சேரியில் வசித்துவந்தார்.

'நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்' என்று கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றியவர்.

'கரிசல் இலக்கியத்தின் தந்தை' கி. ராஜநாராயணன் மறைவு

பட மூலாதாரம், படம்: புதுவை இளவேனில்

கடந்த ஆண்டு கொரோனா‌ நோய் தொற்று சூழலில், பெண்களைப் பற்றிய "அண்டரண்டப்பட்சி" என புத்தகத்தை தன் கைப்பட எழுதியுள்ளார். இதை அச்சில் பதிக்காமல், கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என விரும்பி எழுதினார்.

மேலும் சாதி குறித்த "சாவஞ்செத்த சாதிகள்" என்று கதையினையும், தான் எழுதாமல் விட்ட கதைகளைத் தொகுப்பாகக் கொண்டு "மிச்ச கதைகள்" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கி.ரா. கடந்த ஆண்டு தனது சுயநினைவுடன் எழுதிக் கொள்வதாக கூறி ஒரு எழுத்து படிவத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் தாம் எழுதிய படைப்புகள் அனைத்தின் உரிமையையும் தமது இரண்டு மகன்கள் மற்றும் அவரது வாசகரான சங்கர் என்கிற புதுவை இளவேனிலுக்கு எழுதி வைத்துள்ளார்.

இதன் மூலம் தமது படைப்புகள் அனைத்தும் இந்த மூவரையும் சாரும் என வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூவரும் தமது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை "கரிசல் அறக்கட்டளை" என துவங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்பும் கூடிய விருதினை வழங்க ஏற்பாடு செய்யும்படி கூறியிருக்கிறார்.

தற்போது லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடல் இன்று (18-ம் தேதி) மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது.

கி.ராஜநாராயணன் உடலை புதுச்சேரியில் இருந்து இன்று பிற்பகல் 1 மணிக்கு சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்திற்கு எடுத்து செல்கின்றனர்.‌ அங்கே அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது இளைய மகன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கி.ராவின் மறைவுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அரசியல் தலைவர்கள்‌, எழுத்தாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :