கி. ராஜநாராயணனின் `கோபல்ல கிராமம்': தொன்மங்கள் நிறைந்த வரலாற்றுக் கதை

பட மூலாதாரம், KI.RAJANARAYANAN
மறைந்த எழுத்தாளர் கி ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம் அவருடைய படைப்புகளில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்த ஒரு படைப்பு. அதன் ஐந்தாவது அத்தியாயத்தில் 137 வயதான மங்கத் தாயாரு அம்மாள் பற்றிக் கூறப்படுகிறது.
மங்கத் தயாரு அம்மாளின் நினைவிலிருந்து கம்மவார்கள் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததன் கதை சொல்லப்படுகிறது.
சென்னதேவி என்ற மிக அழகிய பெண்ணின் காரணமாக அந்த மக்கள் இடம் பெயர்ந்து வர நேர்ந்தது பற்றிய பூர்வ கதை சொல்லப்படுகிறது. இந்த நாவலின் தொடர்ச்சியாகவே "கோபல்லபுரத்து மக்கள்", "அந்தமான் நாயக்கர்" நாவல்களை கி.ராஜநாராயணன் எழுதினார்.
தமிழ் இலக்கியப் பரப்பில் மறக்கமுடியாத படைப்பாக நிலைத்துவிட்ட கோபல்ல கிராமம் நாவலில் இருந்து சில பகுதிகள்:
ஆந்திர தேசத்திலிருந்து கம்மவார் மட்டும் இங்கே வரவில்லை. ரெட்டியார், கம்பளத்தார், செட்டியார், பிராமணர், பொற்கொல்லர், சக்கிலியர் இப்படி எத்தனையோ.. இவர்கள் இங்கே புறப்பட்டு வந்ததற்கும் காரணங்கள் எத்தனையோ.
தெலுங்கு அரசர்கள் இங்கே ஆட்சி செலுத்தியதையொட்டி வந்தவர்கள், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள், முஸ்லிம் ராஜாக்களுக்கு பயந்துகொண்டு வந்தவர்கள், இப்படி இப்படி.
கம்மவார் என்று பெயர் வந்ததற்கு மங்கத் தாயாரு அம்மாள் சொல்லும் காரணம் காது வளர்த்து வளையம் போன்ற "கம்ம" என்ற காது ஆபரணத்தை இந்தப் பெண்கள் அணிந்துகொள்வதால் இப்பெயர் வந்தது என்று சொல்லுவாள்.
கம்மவாரின் முதல் தோன்றலைப் பற்றியும் ஒரு பூர்வகதை சொல்லுவாள். நாகார்ஜுன மலையில் வீரம் நிறைந்த ஒரு ராட்சதப் பெண் இருந்தாளாம். அவளை அடக்க யாராலும் முடியவில்லையாம். அழகும் வீரமும் கொண்ட ஒரு பிராமணன் அவளை அடக்கி அவளுடைய மூக்கில் தொறட்டியைப் போட்டு இழுத்துக்கொண்டு வந்தானாம்.

பட மூலாதாரம், Ki.Rajanarayanan
மூக்கில் தொறட்டியைப் போட்டு அவளை இழுத்துக் கொண்டு வந்ததால் அந்தத் தொறட்டியையே அவள் ஆபரணமாக விரும்பிப் போட்டுக்கொண்டாளாம். ஆகவேதான் அவருடைய சந்ததியராகிய நமது பெண்டுகள் இன்றும் மூக்கில் தொறட்டி என்ற ஆபரணத்தை அணிந்துகொண்டிருக்கிறோம் என்பாள்.
ஆந்திர தேசத்திலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்ததை இன்னொரு தரம் சொல்லு என்று கேட்பார் கோவிந்தப்ப நாயக்கர். அவர் இப்படிக் கேட்பது இது ரெண்டாவது தடவை அல்ல; எத்தனையோ தடவை.
மங்கத் தாயாரு அம்மாள் ஒரு கவிஞையாகப் பிறந்திருக்கவேண்டியவள். விஷயங்களைப் பார்க்கிறதிலும் அதை மனசுக்குள் கொண்டுவந்து வெளியீடு செய்யும் அழகும் கோவிந்தப்ப நாயக்கரும் அக்கையாவும் தனித்திருக்கும்போது பேசிப் பேசி மகிழ்வார்கள். அவளுக்கும் தனது அந்தக் கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்ப்பதில் ஒரு தீராத பிரேமை. அவளால் இந்த தள்ளாமையில் செய்யக்கூடிய ஒரே காரியம் இது ஒன்றே.
கோவிந்தப்ப நாயக்கர் அப்படிக் கேட்டதும் மங்கத் தாயாருவின் மலர்ந்த முகம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக்கொண்டே வரும். கண்கள் இடுங்கி, இங்குள்ள பொருள்கள் எதிலும் பதியாமல் மனதூரத்தில் எங்கோ பார்க்கும். அப்புறம் சற்றே முகம் மலருவதைப் போல் வந்து முகம் அழுவதைப்போல உணர்ச்சிவயப்பட்டு பின்பு செருமி சரிசெய்துகொண்டு தொடங்குவாள்.
என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரியாக்கும் அந்த சென்னாதேவி. என்னைவிட ஆறு வயசு மூத்தவள். அப்போ எனக்கு ஒன்பது வயசு.
"கோயிந்தப்பா, எனக்கு இத்தனை வயசாகிறது. இன்னும் இப்படி ஒரு ரூபலாவண்யமுள்ள சிலையை நான் பார்த்ததில்லையடா!"
சென்னாதேவி இருக்குமிடத்தில் அவளுக்கு அருகே அவளைச் சுற்றி ஒரு பிரகாசம் குடிகொண்டிருக்கும். அவள் நிறை பௌர்ணமி அன்று பிறந்ததினாலோ என்னமோ அப்படி ஒரு சோபை அவளுடைய முகத்தில்.
பசுமாடுகள் ஒவ்வொரு பிரதேசத்திலும் அந்தந்த பிரதேசத்துக்குரிய அங்க லட்சண ஜாடைகளோடும் சுத்தத்தோடும் விளங்குவதில்லையா! அது மாதிரிதான் மனிதர்களுடைய ஜாடையும் அழகும். ஆந்திர தேசத்தின் அந்த தேசத்திற்குரிய அழகு தேவதையின் லட்சணம் கொண்டவளாக்கும் அவள்.
அவளுடைய அழகு பக்கத்து கிராமங்களுக்கு மட்டுமில்லை. வெகுதூரம் பிராபல்யம் அடைந்தது. அந்த பிராபல்யமே அவளுக்கு வினையாக முடிந்தது.

பட மூலாதாரம், KI.RAJANARAYANAN
அவளுடைய குரல்தான் என்ன இனிமை என்கிறாய்! அவள் பாட ஆரம்பித்தால் இந்தப் பிரபஞ்சமே ஒலியடங்கி மௌனியாகிவிடும். காற்று அசைவதை நிறுத்திவிடும். அவள் அபூர்வமாகத்தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொரு தரம் அப்படிச் சிரிக்க மாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பிலேதான் எத்தனை விதம்!
அவள் பூப்பதுக்கு கொஞ்ச நாள் முந்திதான் அந்தச் சம்பவம் நடந்தது. அவளுக்கு மாணிக்க மாலை செய்வதற்காக கெம்புக் கற்கள் வாங்கத் தீர்மானித்தார்கள். வீட்டில் ஏற்கனவே கொஞ்சம் கெம்புக் கற்கள் இருந்தன. காணாததுக்கு மேலுங்கொஞ்சம் வேண்டியிருந்தபோதுதான் "அவர்கள்" அந்த ஊருக்கு வந்தார்கள். அவர்கள் வந்தது கெம்புக் கற்கள் விற்பதற்காக அல்ல. வாங்குவதற்கு.
சென்னா தேவியின் தகப்பனார் அவர்களிடம் கற்கள் விலைக்குக் கிடைக்குமா என்று கேட்டார். அவர்களைக் கூப்பிட்டுத் தன்னிடமுள்ள கற்களையும் காட்டினார். ரத்ன வியாபாரிகளான அந்தத் துலுக்கர்கள் இந்த கெம்புக் கற்களைப் பார்த்து அசந்து போய்விட்டார்கள். இதை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டார்கள். இது எங்கிருந்து வாங்கினது என்பது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்றும் குடும்பத்தில் பூர்வீகமாகவே இருந்து வருகிறது என்றும் சென்னாவின் தகப்பனார் சொன்னார்.
அந்த வியாபாரிகள் அந்த கெம்புக் கற்களில் இருந்து தங்கள் கண்களை எடுக்க முடியாமல் திணறினார்கள். வீடே அதன் சிகப்பினால் ஒரு பிரகாசம் அடைந்ததைப்போலத் தோன்றியது. அவர்கள் அதிலிருந்த சில தேர்ந்த கற்களை கையில் எடுத்து வைத்துக்கொண்டு முற்றத்தில் போய்ப் பார்ப்பதும் அதிக வெளிச்சத்தில் கொண்டுபோய் வைத்து, அப்படியும் இப்படியும் புரட்டி ஒருவரைப் பார்த்து ஒருவர் மனம் திறந்து அதிசயச் சிரிப்பு சிரித்து, அவர்களுக்குள் அவர்கள் பாஷையில் சத்தம்போட்டு பேசிக்கொண்டுமிருந்தார்கள்.
அந்த நேரத்தில் சென்னாதேவி அங்கே தற்செயலாய் வந்தாள். அவர்களுடைய தலைப்பாகைகளையும் வெட்டி ஒழுங்கு செய்துவிடப்பட்ட தாடிகளையும் அவர்களுடைய பருத்த முழிகளையும் பார்த்து "கக்ரே.. புக்ரே" என்று கேவகமாகச் செல்லும் பேச்சையும் கேட்ட அவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவர்களில் வயசாளியான ஒருத்தன் இந்த இனிமையான சிரிப்பொலி வந்த திக்கில் பார்த்தான். கூர்ந்து பார்த்தான். கண்ணைக் கசக்கிவிட்டுப் பார்த்தான். தான் பார்ப்பது நிஜம்தானா என்பது போலிருந்தது சென்னாவுக்கு. அவன் அப்படிச் செய்தது வேடிக்கையாக இருந்தது. முத்து மாலைகள் தொடர்ந்து ஒன்றின்பின் ஒன்றாய் விழுவதைப்போல் அவள் விழந்துவிழுந்து சிரித்தாள்.

பட மூலாதாரம், KI.RAJANARAYANAN
அன்று சென்னாதேவி நீலநிறத்தில் பட்டுப் பாவாடை கட்டியிருந்தாள். காவி நிறம் மாதிரியான ஒரு நிறத்தில் ஜரிகை புட்டா போடப்பட்டுள்ள பட்டுத் தாவணி அணிந்து அதன் மேல் வைரக் கற்கள் இழைத்த ஒட்டியாணம் அணிந்திருந்தாள்.
மாணிக்கக் கற்களின் மேல் பதித்த கண்களை எடுக்க முடியாமல் திண்டாடிய அந்த ரத்ன வியாபாரிகள் இப்பொழுது இந்த ஸ்த்ரீ ரத்னத்தின் மேல் பதித்த கண்களை எடுக்க முடியாமல் திண்டாடினார்கள்,
அந்த வயசாளி அவர்களுடைய மொழியில் பகவானைத் தோத்தரிப்பது போல் கண்களையும் கை விரல்களையும் ஆகாயத்தை நோக்கி உயர்த்தி ஏதோ சொல்லி சென்னாவைப் பார்த்து ஆசிர்வதிப்பதைப் போலக் கைகளை அசைத்தார். அந்த வயசாளி அப்படிச் செய்ததில் ஒன்றும் அதிசயமில்லை. சென்னா தேவியைப் பார்க்கும் எந்தப் புதியவர்களும் இந்த மாதிரி ஏதாவது ஒன்று செய்ய நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு நாள் கோவிலுக்குள் போய்விட்டு நாங்கள் வெளியே வந்தபோது ஒருவன், கண்களுக்கு சென்னாதேவி மறையும் வரையிலும் அவளைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டே இருந்தான்.
இன்னொரு நாள் அவளைக் கண்ட மற்றொருவன், வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்திருந்துவிட்டுப் பிறகு மௌனமாக அழுதான்.
இதெயெல்லாம்விட எங்கள் சின்ன வயசில் ஒன்று நடந்தது. அன்று நடு மத்தியானம். ஜன சந்தடி இல்லாத காட்டுப் பாதை. மூடு பல்லக்குக்குள் நானும் சென்னாவும் மட்டுமே இருந்தோம். அவளுடைய அம்மாவைப் பிறந்த வீட்டில் விட்டுவிட்டுத் திரும்புகிற வழி. சென்னா என்னைத் தன் பக்கத்தில் இழுத்து உட்கார வைத்துக்கொண்டு சிறு குழந்தைகள் தங்களுக்குள் சொல்லி மகிழும் கதைகளில் ஒன்றை எனக்கு சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டு வந்தாள். இரண்டு ஈக்களுக்குக் கல்யாணமாம். மாப்பிளை ஈ என்னென்ன நகைகள் போட்டுக்கொண்டிருந்தது; பொண்ணு ஈ என்னென்ன நகைகள் போட்டுக்கொண்டிருந்தது என்று வர்ணித்துக்கொண்டுவந்தாள்.
சென்னாதேவி சொல்லிக்கொண்டுவரும்போதே மூடுபல்லக்கு பலமாக ஆடி எங்களைக் குலுக்கியது. நான் அவளைப் பலமாகச் சேர்த்துப் பிடித்துக்கொண்ட அதே வேளையில் வெளியே பரபரப்பான கூக்குரல்களும் சத்தங்களும் கேட்டன. மூடுபல்லக்கு தரையில் வைக்கப்பட்டது தெரிந்தது.
பல்லக்குத் திறக்கப்படாமலேயே உள்ளேயிருந்து கொண்டு வெளியிலுள்ள காட்சிகளைப் பார்க்க வசதியான துவாரங்கள் உண்டு. அது வழியாக நானும் சென்னாவும் என்ன என்று கவனித்தோம். எங்களைக் கொள்ளைக்காரர்கள் நான்கு பக்கமும் சூழ்ந்துகொண்டிருந்தார்கள். அந்த மனிதர்களைப் பார்க்கவே பயமாக இருந்தது. கருப்பு நிற வேட்டிகளால் இறுக்கமாகத் தார்ப்பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். குளிக்காத காட்டு யானைகள் மாதிரி மேலெல்லாம் மண்ணும் புழுதியும். உடம்பெல்லாம் அடர்ந்த செம்பட்டை பாய்ந்த ரோமக் கற்றைகள். எண்ணெய் படாத சிலிர்த்த தலைகள். அணில் வாலைப் போன்ற நீண்ட மீசைகள். பருத்து துருத்திய முழிகள். ஒவ்வொருத்தர் கையிலும் ஒரு வேல்.

பட மூலாதாரம், ANDHIMAZHAI
"மூடு பல்லக்கை நீங்கள் திறக்கிறீர்களா இல்லை நான் திறக்கவா?" என்று ஒரு கனமான குரல் கேட்டு நான் பதறிப்போனேன். சென்னா தேவியோ அமைதியாக துவாரத்தின் வழியாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனுடைய முகத்தில் துல்லியமான, பெரிதான நெற்றியில் இட்ட குங்குமம் பளிச்சென்று தெரிந்தது. அதன் கீழ் நீளமாக இழுக்கப்பட்ட சந்தனக் கீற்று. கழுத்தில் துளசி மணி மாலை. கருநீல நிறத்தில் தார்ப் பாய்ச்சிக் கட்டிய வேட்டி. தோள்களில் நீளமாகப் போடப்பட்ட மஞ்சள் நிற பட்டு அங்கவஸ்திரம். முக்கால் பாக நீளமுள்ள கண்ணைப் பறிக்கும் ஒளி வீசும் ஒரு வாளைக் கையில் ஏந்தியிருந்தான். வளர்ந்..த தாட்டியமான உருவம்.
யாரும் ஒன்றும் பேசவில்லை. அடுத்த கணம் என்ன நடக்கும் என்று யாருக்கும் திகையவில்லை. பளிச்சென்று சென்னாதேவி மூடுபல்லக்கின் கதவைத் திறந்து வெளியில் இறங்கி நின்றாள். கூட்டத்தைப் பூராவும் ஒருதரம் தலையைத் தூக்கி முகத்தில் புன்னகையோடு மிகவும் நிதானமாக சுற்றிலும் பார்த்தாள். பின்பு அவளுடைய அருள் கண்கள் அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவனிடம் வந்து நிலைத்தன.
சென்னாதேவி அப்படியே ஒரு சிலை மாதிரி நின்று கொண்டிருந்தாள். அவள் முகத்தில் அந்தப் புன்னகை மாறவேயில்லை. அவளுடைய புல்லாக்கில் பதித்திருந்த பெரிய வைரத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி பளீரிட்டது.
கொள்ளைக்கூட்டத் தலைவன் மெதுவாக நடந்து தேவியின் அருகில் வந்தான். அவன் எங்கள் அருகில் வந்ததும் கற்பூர வாசனை அடித்தது. வந்தவன், செம்பஞ்சு பூசப்பட்ட அவள் பாதங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு அவன் அந்த வாளின் நுனியைத் தரையில் ஊன்றி ஒரு காலை மட்டும் மடக்கி மண்டியிட்டான். வாளின் மேல் கைகள் கோத்து இருந்தன. தலையைத் தாழ்த்தி கண்களை மூடிக்கொண்டான். பிறகு எழுந்து இரண்டடிகள் பின்வாங்கி நின்றுகொண்டு கண்களை மூடி தியானத்தில் இருப்பவனைப்போல சற்று நேரம் இருந்து, தொண்டை கட்டிய ஒரு அழும் குரலில் "அடே பொம்மா" என்று மெதுவாகக் கூப்பிட்டான்.
அரையில் இடைவாருக்கு பதிலாக இரும்புச் சங்கிலி அணிந்த ஒருவன் வேலை இடது கைக்கு மாற்றி, அதைப் பின் பக்கமாகப் பிடித்துக்கொண்டு வலது கையால் வாயைப் பொத்திக்கொண்டு தலைவருக்கு இடதுபக்கத்தில் வந்து சற்றே குனிந்து நின்றான்.
"இந்த வனம் முடிகிறவரையிலும் இவர்களோடே நீ போய் வழியனுப்பிவிட்டு வா" என்று சொன்னான். சொல்லிய பிறகு அவன் அதே நிலையில் நின்று கொண்டிருந்தான்.
கூட்டம் விலகி வழி கொடுத்தது. பொம்மன் வேலை மார்பில் சாத்திக்கொண்டு இரண்டு கைகளையும் மரியாதையாக கதவு திறந்திருந்த பல்லாக்கின் ஆசனங்களை எங்களுக்குக் காட்டினான்.
சென்னா தேவி அதே கம்பீரத்தில் பல்லக்கினுள் என் அருகே வந்து அமர்ந்தாள். பல்லக்கின் கதவு அடைக்கப்பட்டதும் பிரயாணம் தொடர்ந்தது. பயந்த என் முகத்தைக் கண்ட சென்னா, "செல்லி (தங்கச்சி) பயந்து போய்ட்டியா!" என்று என்னை அணைத்துக்கொண்டு சிரித்தாள்.
எங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது, அவன்தான் பிரபலமான கொள்ளைக்காரன் மல்லையா என்று! திடுக்கிட்டுப் போனோம்!.
கோயிந்தப்பா, அவன் செய்த கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் கணக்கு வழக்கே இல்லை. சென்னா தேவியை அவன் கொல்லாமலும் அவளிடமிருந்த நகைகளை அவன் பறித்துக்கொள்ளாமலும் விட்டதுக்குக் காரணம் அவளுடைய தெய்வீக அழகுதான். அது பூஜிக்கிற அழகு.
பிற செய்திகள்:
- இஸ்ரேல்-காசா மோதல்: சண்டை நிறுத்த அழுத்தத்துக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்
- `துரைமுருகனோடு அ.தி.மு.க வேட்பாளர் சமரசமா? காட்பாடி தொகுதியில் நடந்தது என்ன?
- 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' கி. ராஜநாராயணன் காலமானார்
- அதிக நேரம் வேலை செய்து அநியாயமாக சாகும் ஊழியர்கள் - ஆய்வில் அதிர்ச்சி
- “இந்தியாவில் கொரோனா நிலைமை கைமீறிப் போய்விட்டது” - பதவி விலகிய வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல்
- இரு வேறு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உங்கள் உடலில் என்னாகும்?
- செர்னோபில் அணு உலை அருகில் விளைந்த ஆப்பிளிலிருந்து தயாரித்த மதுபானம் பறிமுதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












