"ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் கட்சி உழைத்தது'" - மாணிக்கம் தாகூர் எம்.பி பிபிசி தமிழுக்கு பேட்டி
தமிழ்நாட்டில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற குரல் பல்வேறு தரப்புகளிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறது.
இந்த நிலையில் தேர்தல், கூட்டணி ஆட்சி உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவரும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.
கேள்வி: தமிழ்நாட்டில் அதிகாரம் மட்டுமல்ல, அதிகாரப் பகிர்வும் அவசியம் என சமீபத்தில் கூறியிருந்தீர்கள். அதற்கான நேரம் வந்துவிட்டதா?
பதில்: என்னைப் பொருத்தவரை நீண்டகாலத்திற்கு முன்னரே வந்துவிட்டது. தமிழ்நாடு 2006-இல் அதற்கான வடிகாலை கொடுத்துவிட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 1967-இல் இருந்து யார் வலுவான கூட்டணி வைக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுகிறார்கள். பலமான கூட்டணியால் தான் காமராஜரை வீழ்த்த முடிந்தது. அதையே பலரும் பின்பற்றினார்கள். 2006-இல் அது தெளிவாக தெரிந்தது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் மற்ற கட்சிகளுக்கும் பங்களிக்க வேண்டும் என மக்கள் வாக்களித்திருந்தார்கள். அதற்கேற்ப காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்காமல் இருந்தது வரலாற்றுப் பிழை.
கேள்வி: தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கை என்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது?
பதில்: காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது பேட்டியில் தெளிவாக கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் சில உத்தரவாதங்களை வழங்குகிறது. காங்கிரஸ் தலைமை தான் அந்த உத்தரவாதங்களை வழங்குகிறது. அதை செயல்படுத்துவதற்கு ஆட்சியில் பங்கில் இருக்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் கட்சி உழைத்தது, 2026-இல் காங்கிரஸ் உழைக்க இருக்கிறது. எங்களுடைய கோரிக்கை அந்த அமைச்சரவையிலும் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு இருக்க வேண்டும் என்பது தலைமையின் பார்வை.
கேள்வி: 2021 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி நிறைய வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. அதை திமுக நிறைவேற்றி இருக்கிறதா?
பதில்: காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் அறிக்கை வழங்குகிறது. அதை எவ்வாறு அமல்படுத்த முடியும். ஆட்சியில் பங்கு இருந்தால் தான் அவற்றையெல்லாம் அமல்படுத்த முடியும்
முழு பேட்டியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.



