காணொளி: 47 ஆண்டுகளில் இல்லாத சவாலை எதிர்கொள்கிறதா இரான்?

காணொளிக் குறிப்பு, 47 ஆண்டுகளில் இல்லாத சவாலை எதிர்கொகிறதா இரான்?
காணொளி: 47 ஆண்டுகளில் இல்லாத சவாலை எதிர்கொள்கிறதா இரான்?

இரான் இஸ்லாமிய குடியரசின் 47 ஆண்டுகால வரலாற்றில் முன்னெப்போதும் பார்த்திராத கட்டத்தை தற்போது நடந்து வரும் போராட்டம் எட்டி உள்ளதாக பல வல்லுநர்களும், நேரில் காண்பவர்களும் கூறுகின்றனர்.

இதற்கு முன்னும் இரானில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. அப்படி இருக்கையில், தற்போது நடக்கும் போராட்டம் ஏன் முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது?

தற்போது நடக்கும் போராட்டம் இதற்கு முன்பு பெயர் கேள்விப்படாத சிறு நகரங்களிலும் பரவி உள்ளதாக கூறுகிறார் சமூகவியல் ஆராய்ச்சியாளர் எல்லி கோர்சன்ட்ஃபர்.

இரான் முன்பும் போராட்டங்களை கண்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு பசுமை இயக்கம் என அழைக்கப்பட்ட போராட்டங்களை, தேர்தல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக நடுத்தர வகுப்பினர் நடத்தினர். அது பெரியளவிலான போராட்டமாக இருந்தாலும், முக்கிய நகரங்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. 2017 மற்றும் 2019-ல் நடைபெற்ற மற்ற போராட்டங்கள் ஏழ்மையான பகுதிகளில் மட்டுமே நடந்தன.

2022-ஆம் ஆண்டு தடுப்புக் காவலில் இருந்த 22 வயதான மாசா அமினி என்ற பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டங்கள் அமினி உயிரிழந்த ஆறு நாட்களுக்குப் பிறகு உச்சக்கட்டதை எட்டியதாக பல தகவல்கள் கூறுகின்றன. ஆனால், தற்போதைய போராட்டம் தொடக்க நாளான டிசம்பர் 28 முதலே சீராக அதிகரித்து வருவதாக தெரிகிறது.

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களை போலவே தற்போதைய போராட்டமும் குறிப்பிட்ட குறைகளை முன் வைத்து ஆரம்பித்தது. பின், விரைவிலேயே ஆழமான அமைப்பு ரீதியான மாற்றத்தை கோரும் குரல்கள் எழ ஆரம்பித்தன.

"2022-ஆம் ஆண்டு போராட்டம் பெண்கள் சார்ந்த பிரச்னைக்காக தொடங்கியது. ஆனால், மற்ற குறைபாடுகளும் அதில் பிரதிபலித்தன. 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய போராட்டங்கள் பொருளாதார ரீதியிலான பிரச்னைகளுக்காக தொடங்கியதாக தோன்றினாலும், மிகமிக குறுகிய காலகட்டத்திலேயே பல பொதுவான குறைகளையும் எதிரொலித்தன," என கோர்சன்ட்ஃபர் கூறுகிறார்.

சிலர் சர்வாதிகாரி ஒழிக என்ற முழக்கங்களுடன் தெருக்களில் பேரணியாக சென்றனர். இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரின் தலைமையிலான அரசை நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

2022-ஆம் ஆண்டு நடந்த போராட்டங்கள் தலைமை இல்லாமல் நடந்ததாக தெரிந்தது. அவை விரைவிலேயே முடிவுக்கு வந்தன. ஆனால், அதற்கு முரணாக, தற்போது நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ரெஸா பஹ்லவி போன்ற தலைவர்கள் உள்ளனர்.

1979-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட கடைசி ஷா-வின் மகனான ரெஸா பஹ்லவி, தொலைவிலிருந்து இந்த பேரணிகளை வடிவமைக்க அல்லது தலைமை தாங்க முயற்சிக்கிறார். இந்த போராட்டம் ஏன் இவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தற்போதைய போராட்டங்களில் பஹ்லவி நாடு திரும்ப வேண்டும் என அழைப்பு விடுக்கும் குரல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமாக கேட்கின்றன.

நன்கு அறியப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரின் இருப்பு, தற்போதைய அரசாங்கம் வீழ்ந்தால் ஒரு சாத்தியமான மாற்று உள்ளது என்ற நம்பிக்கையை சில போராட்டக்காரர்களிடையே வலுப்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2022 போராட்டத்தில் இருந்து தற்போதைய போராட்டத்தை வேறுபடுத்திக் காட்டும் மற்றொரு விஷயம் அமெரிக்கா. முந்தைய போராட்டங்களை போல அல்லாமல் தற்போதைய நடைபெறும் போராட்டம் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இரான் அரசின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். இது முன்பு எப்போதும் நடந்திராத ஒன்று.

அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக 2009-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள், ஒபாமா ஒன்று எங்களுடன் இருங்கள் அல்லது அவர்களுடன் இருங்கள் என முழக்கமிட்டனர். போராட்டக்காரர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காததற்காக ஒபாமா பின்னர் வருத்தம் தெரிவித்தார்.

தற்போதைய போராட்டம் இரான் எதிரிகளால் தூண்டிவிடப்படுவதாக இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் குற்றம்சாட்டுகிறார். ஆனால், தற்போது அவருக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால் சமீபத்திய ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது இரானுக்கு நட்பு சக்திகள் குறைவாக உள்ளனர்.

ஏனெனில், இரான் சில முக்கிய கூட்டாளிகளை இழந்துள்ளது. உதாரணமாக, சிரியா அதிபராக இருந்த பஷர் அல்-அசத் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டார். இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையால் லெபனானில் ஹெஸ்பொலா குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமடைந்திருக்கிறது.

2022 போராட்டங்களை போல அல்லாமல், தற்போது நடக்கும் போராட்டங்கள் இஸ்ரேலுடனான 12 நாள் போர் மற்றும் அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு நடக்கின்றன.

இந்தச் சம்பவங்கள் மக்களிடையே ஒருவித ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த ஒரு வாய்ப்பை உருவாக்கியதாகவும், ஆனால் இரான் அரசாங்கம் அதை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டது என்றும் பத்திரிகையாளர் அப்பாஸ் அப்தி நம்புகிறார்.

அதே போல, கடந்த ஆண்டில் ராணுவத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு, இரானியர்களின் பார்வையில் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் செல்வாக்கை சிதைத்துவிட்டது என சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு