இந்திய கடற்படை வரலாறு: அதிகம் அறியப்படாத பின்னணியும் தகவல்களும்

பட மூலாதாரம், Universal History Archive/UIG via Getty images
- எழுதியவர், பரணிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி டிசம்பர் 1 முதல் 7ஆம் தேதிவரை கடற்படையின் பணிகளை சிறப்பிக்கும் பல வகை கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த நாளில் உலகின் முதல் 10 பெரிய கடற்படை சக்திகளில் ஒன்றாக இந்திய கடற்படை விளங்கினாலும், அதன் பின்னணியை ஆராயும்போது, பல கால நாகரிகங்களும் வரலாற்று அரசியலும் அதிகம் அறியப்படாமலேயே இருப்பதை அறியலாம். அதை இந்த நாளில் வெளிக்கொண்டு வருகிறது இந்த கட்டுரை.
இந்தியாவின் கடல்சார் வரலாறு மேற்கத்திய நாகரிகத்தின் பிறப்புக்கு முந்தையது. ஹரப்பா நாகரிகத்தின் போது கிமு 2300இல் லோதல் என்ற பழங்கால கப்பல் தளத்தில் உலகின் முதல் கப்பல் சரக்குகள் கையாளும் பகுதி (Tidal dock) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இது குஜராத் கடற்கரையில் இன்றைய மங்ரோல் துறைமுகத்திற்கு அருகே உள்ளது.
பழங்காலத்தில் இந்திய ராஜ்ஜியங்களில் கடல் வழி ஆளுகைகளின் செல்வாக்கு வளர்ந்து வந்தது. வடமேற்கு இந்தியா - பேரரசர் அலெக்சாண்டரின் செல்வாக்கின் கீழ் வந்தது. அவர் அரபிக் கடலில் நுழைவதற்கு முன்பு சிந்து நதி இரண்டாகப் பிரியும் படாலாவில் ஒரு துறைமுகத்தைக் கட்டினார்.
சிந்துவில் கட்டப்பட்ட கப்பல்களில் இருந்த அவரது ராணுவம் மெசபடோமியாவுக்குத் திரும்பியது. அவரது வெற்றிக்குப் பிறகு, சந்திரகுப்த மௌரியர் தனது போர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக, கடல்கள், பெருங்கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளில் வழிசெலுத்துவதற்கான பொறுப்பு உட்பட ஒரு சாசனத்துடன் கப்பல் கண்காணிப்பாளரின் கீழ் 'அட்மிரால்டி' பிரிவை நிறுவினார் என்று பதிவுகள் காட்டுகின்றன.
இந்திய கப்பல்கள், ஜாவா மற்றும் சுமத்ரா வரையிலான நாடுகளுடன் வர்த்தகம் செய்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் காண முடிகிறது. மேலும் இது தொடர்பாக கிடைக்கக்கூடிய சான்றுகள் மூலம், பசிஃபிக் மற்றும் இந்திய பெருங்கடல்களில் உள்ள மற்ற நாடுகளுடன் அப்போதைய சமஸ்தானங்கள் கடல் வழி வாணிபம் செய்ததை அறிய முடிகிறது.
ஆக்கிரமிப்பு பேரரசுகளுக்கு முன்பே கடல் வாணிப ஆற்றல்

பட மூலாதாரம், Getty Images
அலெக்சாண்டருக்கு முன்பே கிரேக்க படைப்புகளில் இந்தியாவைப் பற்றிய குறிப்புகள் இருந்தன. மேலும் இந்தியா ரோமுடன் ஒரு செழிப்பான வர்த்தகத்தைக் கொண்டிருந்தது.
ரோமானிய எழுத்தாளர் ப்ளினி, விலைமதிப்பற்ற கற்கள், தோல்கள், ஆடைகள், மசாலா பொருட்கள், சந்தனம், வாசனை திரவியங்கள், மூலிகைகள், இண்டிகோ போன்ற பிற தேசங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதிகளுக்கு பணம் செலுத்துவதற்காக, இந்திய வர்த்தகர்கள் ரோமில் இருந்து அதிக அளவு தங்கத்தை எடுத்துச் செல்வதைப் பற்றி பேசுகிறார்.
பொருத்தமான கடல் வழி செலுத்தல் திறன் இல்லாமல் இந்த கடல் பகுதியில் பல நூற்றாண்டுகளாக கடல் வர்த்தகம் நடத்தப்பட்டிருக்க முடியாது.
புகழ்பெற்ற இரண்டு இந்திய வானியலாளர்கள், ஆர்யபட்டா மற்றும் வராஹமிஹிரா, விண்ணியல் அமைப்பைத் துல்லியமாக வரைபடமாக்கி, நட்சத்திரங்களின் மூலம் கப்பலின் நிலையைக் கணக்கிடும் முறையை உருவாக்கினர்.
நவீன கால 'மேக்னட்டிக் காம்பஸ்' எனப்படும் காந்த திசைகாட்டிக்கெல்லாம் இதுவே முன்னோடி. காரணம், இந்த கடல் பயண கணக்கீடு சாதனம், கி.பி நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.
'மத்ஸ்ய யந்திரம்' என்று அழைக்கப்படும் இந்த சாதனம், ஓர் இரும்பு மீனை காம்பஸ் கூர்மை கம்பி போல கொண்டிருந்தது, அது எண்ணெய் பாத்திரத்தில் மிதந்து வடக்கு நோக்கிய கடல் பாதையை சுட்டிக்காட்டும்.
கி.பி. ஐந்தாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளுக்கு இடையில், தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் விஜயநகரம் மற்றும் கலிங்க அரசுகள் மலாயா, சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவாவில் தங்கள் ஆட்சியை நிறுவியிருந்தன.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் இந்திய தீபகற்பத்திற்கும் இந்த ராஜ்ஜியங்களுக்கும் இடையில் வர்த்தகம் செய்வதற்கும், சீனாவிற்கும் இடையே ஒரு முக்கியமான நடுப்பகுதியாக செயல்பட்டன.
கி.பி 844-848 காலகட்டத்தில் கிழக்குப் பகுதிகளிலிருந்து தினசரி வருவாய் 200 மவுண்ட்ஸ் (எட்டு டன்) தங்கமாக மதிப்பிடப்பட்டது. கி.பி 984-1042 காலகட்டத்தில், சோழ மன்னர்கள் பெரும் கடற்படையை அனுப்பி பர்மா, மலாயா மற்றும் சுமத்ராவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தனர். அதே நேரத்தில் சுமத்ரா பகுதியில் நீடித்த கடற்கொள்ளையர்களையும் அடக்கினர்.
கி.பி. 1292இல், மார்கோ போலோ இந்திய பகுதிகளின் கப்பல் வலிமையை பற்றி விவரித்தார்.
"... ஃபிர் மரத்தால் (கனம் குறைந்த ஊசியிலை மர வகை) இந்திய பகுதியில் இருந்து வந்த மரங்கள் கட்டப்பட்டவை. ஒவ்வொரு பகுதியிலும் பலகைகளின் மேல் பலகைகள் அமைக்கப்பட்டன, கருவேலமரத்தால் எரியூட்டப்பட்டு அந்த மரங்கள் வலுவாக்கப்பட்டன.
இடுக்கு தெரியாத அளவுக்கு இரும்பு ஆணிகளால் அவை அடிக்கப்பட்டிருந்தன. அடிப்பகுதிகள் சுண்ணாம்பு தயாரிப்பால் முலாம் பூசப்பட்டிருந்தன. இறுக்கத்தை உறுதிப்படுத்த சணல், ஒரு குறிப்பிட்ட மரத்தின் எண்ணெய்யுடன் ஒன்றாகத் தட்டிதால், பித்த திசுவை விட சிறந்த அடர்த்தியானதாக அடிப்பகுதி முலாம்களாக இருந்தன," என்று எழுதியுள்ளார் மார்கோ போலோ.
ஓர் இந்திய கப்பலைப் பற்றிய பதினான்காம் நூற்றாண்டு விளக்கக் குறிப்பில், '100-க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது,' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கப்பல் கட்டும் திறன் மற்றும் இவ்வளவு பெரிய கப்பலை வெற்றிகரமாக இயக்கக்கூடிய மாலுமிகளின் கடல்சார் திறன் ஆகிய இரண்டையும் பற்றி அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியின் மற்றொரு குறிப்பு, இந்திய கப்பல்கள் தொகுதி, தொகுதியாக கட்டப்பட்டதாக விவரிக்கிறது. அதனால் ஒரு பகுதி சேதமடைந்தாலும், மீதமுள்ளவை அப்படியே இருந்தன. கப்பல் தனது பயணத்தைத் தொடர அவை உதவியன - நவீன காலத்தில் கப்பல்களை நீர்ப்புகா பெட்டிகளாகப் பிரிக்கும் முன்னோடியாக இருந்தது.
போர் குழுவில் சேர்ந்த கப்பல்கள்

பட மூலாதாரம், British Museum
இந்திய கடல்சார் சக்தியின் வீழ்ச்சி 13ஆம் நூற்றாண்டில் தொடங்கியது, போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது இந்திய கடல் வலிமை கிட்டத்தட்ட இல்லாத ஒன்றாகி விட்டது. அவர்கள் கடல் வாணிபத்துக்கு வர்த்தக உரிம முறையை கடைப்பிடித்தனர்.
மேலும், அனைத்து ஆசிய கப்பல்களும் தங்கள் ஆளுகையில் இருந்த கடல்பகுதிக்குள் நுழைய அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. 1529ஆம் ஆண்டில் பம்பாய் துறைமுகத்தில் நடந்த கடும் மோதலுக்குப் பிறகு தானா, பண்டோரா நகரங்கள் போர்த்துகீசியர்களுக்கு கப்பம் செலுத்த ஒப்புக்கொண்டன, அதன் பிறகு 1531இல் மிகப்பெரிய அளவில் கடற்படை செயலாக்கத்துக்கான ஆய்வு நடத்தப்பட்டது.
1534 இல் பம்பாய் துறைமுகத்தை முழுமையாக கைப்பற்றி கடைசியில் 1662இல் பிரிட்டிஷ் இரண்டாம் சார்ல்ஸ் மற்றும் அரசி பிரகன்சாவின் இன்ஃபாண்டா கேத்தரின் இடையே நடந்த திருமண ஒப்பந்தத்தின் அங்கமாக இந்த துறைமுகம் ஆங்கிலேயர்வசம் வந்தது.
வாஸ்கோடகாமா, வர்த்தகம் செய்ய அனுமதி பெற்ற பிறகு, சுங்க வரியை செலுத்த மறுத்தபோது, போர்த்துகீசியர்களின் கடற்கொள்ளையை கோழிக்கோடு ஜாமோரின் எதிர்த்துப் போராடினார். இந்த காலகட்டத்தில் இரண்டு முக்கியமான கடல் மோதல்கள் நடந்தன.
முதலாவது மோதல், 1503இல் நடந்த கொச்சி போர் வடிவில் நடந்தது, அது இன்றைய இந்தியப் பகுதியில் இருந்த ஆட்சியாளர்களின் கடற்படை பலவீனத்தை வெளிப்படுத்தியது. தங்களுடைய இந்திய பகுதி கடற்படை சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை அது ஐரோப்பியர்களுக்கு உணர்த்தியது.
இரண்டாவது மோதல், 1509இல் டையூவில் நடந்தது. இந்திய கடல்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சூழலை போர்த்துகீசியர்களுக்கு அது உருவாக்கிக் கொடுத்தது. அதுவே அடுத்த 400 ஆண்டுகளுக்கு இந்திய கடல் பகுதிகள் மீதான 'ஐரோப்பிய கட்டுப்பாட்டின்' அடித்தளத்தை அமைத்தது. இந்திய கடல்சார் நலன்கள் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சியைக் கண்டன.
பிரிட்டிஷ், டச்சு கடற்படையை விரட்டியடித்த மராட்டிய படை

பட மூலாதாரம், British Museum
ஜஞ்சிராவின் 'சிதிகள்' இனக்குழு, மொகலாயருடன் இணைந்து மேற்குக் கடற்கரையில் ஒரு பெரிய சக்தியாக மாறியது. இது மராட்டிய மன்னர் சிவாஜி தனது சொந்த கடற்படையை உருவாக்க வழிவகுத்தது. சிதோஜி குஜார், பின்னர் கன்ஹோஜி ஆங்ரே போன்ற திறமையான அட்மிரல்களால் இந்த கடற்படை கட்டளையிடப்பட்டது.
கன்ஹோஜி தலைமையில் இந்த மராட்டிய கடற்படை, ஆங்கிலம், டச்சு மற்றும் போர்த்துகீசியர்களை விரட்டியடித்து தங்கள் பகுதியில் இருந்து தள்ளியே இருக்கச் செய்தது. கொங்கன் கடற்கரை முழுவதும் மராட்டிய படை ஆதிக்கம் செலுத்தியது.
1729இல் கன்ஹோஜி ஆங்ரேயின் மரணம், தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது, அதன் விளைவாக மராட்டிய கடல் வலிமை பலவீனம் அடைந்தது.
மேற்கத்திய ஆதிக்கத்தின் வரவால் இந்திய ராஜ்ஜியங்களின் ஆளுகை படிப்படியாக வீழ்ந்து வந்தபோதும், இந்திய கப்பல் கட்டுமானத்துறையில் இருந்தவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தங்கள் சொந்த நலன்களுக்காக வாணிப தொழிலில் தழைத்தோங்கினர்.
இந்த காலகட்டத்தில்தான் 800 முதல் 1000 டன் எடையுள்ள கப்பல்கள் டாமனில் தேக்கு மரத்தால் கட்டப்பட்டன. அவை வடிவமைப்பிலும் நீடித்து நிலைத்து நிற்கும் தன்மையிலும் பிரிட்டிஷ் கப்பல்களை விட சிறந்தவை ஆக இருந்தன. இது இங்கிலாந்தின் தேம்ஸ் நதிக்கரையில் கோலோச்சி வந்த பிரிட்டிஷ் கப்பல் கட்டுமான நிறுவனங்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது.
அந்நிறுவனங்கள் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு, இங்கிலாந்தில் இருந்து வர்த்தக பொருட்களை கொண்டு செல்ல இந்தியாவில் கட்டப்பட்ட கப்பல்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
இதன் விளைவாக இந்திய தொழில்துறையை முடக்குவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆயினும்கூட, 1795இல் HMS ஹிந்துஸ்தான், 1800இல் கார்ன்வாலிஸ் போர்க்கப்பல், 1806இல் HMS கேமல், 1808இல் HMS சிலோன் போன்ற பல இந்திய கப்பல்கள் பிரிட்டிஷ் கடற்படையில் சேர்க்கப்பட்டன.
'HMS ஆசியா' 1827 நவரினோ போரில் அட்மிரல் கோட்ரிங்டன் கொடியை சுமந்து கொண்டு பயணம் செய்தது. அதுதான் முற்றிலும் கடலிலேயே நடந்த கடைசி நீண்ட, நெடிய கடல் போர் ஆகும்.
இந்திய வரலாறுகளை பதிவு செய்த போர் கப்பல்கள்

பட மூலாதாரம், British Museum
1842ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29இல் 'கார்ன்வாலிஸ்' கப்பலில் நான்ஜிங் ஒப்பந்தம் கையெழுத்தானது. அது சாத்தியமாவதற்கு சாட்சியாக இருந்தவை இரண்டு இந்திய கப்பல்கள்.
ஹாங்காங்கை ஆங்கிலேயருக்கு வழங்கிய நான்ஜிங் ஒப்பந்தம், 1842இல் HMS கார்ன்வாலிஸ் கப்பலில் கையெழுத்தானது.
பிரிட்டிஷ் கப்பல்கள் போரில் ஈடுபட்டு, மேரிலாந்தின் பால்டிமோர் மெக் ஹென்றி கோட்டை ஆளுகை பகுதியை குறைக்க முயன்றபோது, எச்எம்எஸ் மிண்டனில் இருந்த பிரான்சிஸ் கீ, அமெரிக்காவின் 'தி ஸ்டார் ஸ்பாங்கிள்ட் பேனர்' தேசிய கீத வரிகளை இயற்றினார்.
இந்த இரண்டு நிகழ்வுகளும், பிரிட்டிஷ் கடற்படை வரலாற்றில் பதிவான முக்கிய திருப்பங்கள் மற்றும் நிகழ்வாக கருதப்படுகின்றன.
இந்த காலகட்டங்களில் மேலும் பல கப்பல்கள் கட்டப்பட்டன. அவற்றில் மிகவும் பிரபலமானது HMS திருகோணமலை. இது 1817ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி அர்ப்பணிக்கப்பட்டது.
46 துப்பாக்கிகள் மற்றும் 1065 டன் ஆயுத சரக்குகளை அந்த கப்பல் இடமாற்றம் செய்தது. இந்தக் கப்பல் பின்னாளில் ஃபவுட்ரோயண்ட் என பெயர் மாற்றப்பட்டது. மேலும் இந்தியாவில் கட்டப்பட்ட மிக பழமையான கப்பல் என்ற பெருமையையும் அது பெற்றது.
பம்பாய் கப்பல் கட்டுமான துறைமுகம், 1735ஆம் ஆண்டு ஜூலை மாதம் கட்டி முடிக்கப்பட்டது. இன்றும் அது பயன்பாட்டில் உள்ளது. லோதல் மற்றும் பாம்பே கப்பல் கட்டுமானத் துறைக்கு இடைப்பட்ட 4,000 வருட காலப்பகுதியில் பதிவான கப்பல் வரலாறுகள், கடல் தொழில் திறன்களுக்கு உறுதியான சான்றாக உள்ளன.
எனவே, பதினேழாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், பிரிட்டிஷ் கடற்படை கப்பல்கள் இந்தியாவுக்கு வந்தபோது, கணிசமான கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் திறன்கள் இந்தியாவில் இருப்பதையும், கடல் மாலுமிகள் அதிகளவில் இருப்பதையும் உணர்ந்தன.
ஒரு கடல்சார் போர்ப்படையை உருவாக்க இந்த இரண்டு திறன்களையும் ஒருங்கிணைக்க அங்கேதான் ஆங்கிலேயர்கள் முடிவெடுத்தனர்.
இந்திய கடற்படையின் வீர வரலாற்றை, 1612ஆம் ஆண்டு 'கேப்டன் பெஸ்ட்' போர்த்துகீசியர்களை எதிர்கொண்டு தோற்கடித்ததை வைத்து அறியலாம்.
இந்த வெற்றிக்குப் பிறகு, கடற்கொள்ளையர்களால் ஏற்பட்ட பிரச்னையையும், சூரத் (குஜராத்) அருகே உள்ள ஸ்வாலியில் ஒரு சிறிய கடற்படையை பராமரிக்கவும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி கட்டாயப்படுத்தப்பட்டது.
போர்க் கப்பல்களின் முதல் படை, 1612 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி வந்தடைந்தது. அப்போது கிழக்கிந்திய கம்பெனியின் மரைன் என்று அழைக்கப்பட்டது. காம்பே வளைகுடா மற்றும் தப்தி மற்றும் நர்மதா நதி முகத்துவாரங்களில் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கு இது பொறுப்பாக இருந்தது.
இந்த படையின் அதிகாரிகளும் ஆட்களும் அரேபிய, பாரசீக மற்றும் இந்திய கடற்கரைகளை ஆய்வு செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்திய கடற்படைக்கு உருவம் கிடைத்த வரலாறு

பட மூலாதாரம், Getty Images
1662ஆம் ஆண்டில் 'பம்பாய்' ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், அவர்கள் 1665ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதிதான், அதை முழுமையாக தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.
1668ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கிழக்கிந்திய கம்பெனிக்கு அதை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் ஆளுகை ஒப்படைத்தது. அதன் விளைவாக, கிழக்கிந்திய கம்பெனியே பம்பாய் வர்த்தகத்தை பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றது.
1686 ஆண்டுவாக்கில், பிரிட்டிஷ் வர்த்தகத்தில் பெரும்பாலானவை பம்பாய்க்கு மாறியது. அதை பாதுகாக்கும் படையின் பெயர் 'பாம்பே மரைன்' என மாற்றப்பட்டது.
போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரஞ்சு உள்பட பல்வேறு நாடுகளுடன் மட்டுமில்லாது, கடற்கொள்ளையர்களுடனும் இந்த பாம்பே மரைன் சண்டையிட்டு அதன் தனித்துவ சேவையை நிரூபித்தது.
பம்பாய் மரைன் மராட்டியர்கள் மற்றும் சிதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டது. 1824இல் பர்மா போரிலும் அது பங்கேற்றது. 1830ஆம் ஆண்டில், பம்பாய் மரைன், பிரிட்டிஷ் அரசியின் 'இண்டியன் நேவி' (மாட்சிமை வாய்ந்த அரசியின் இந்திய கடற்படை) என மறுபெயரிடப்பட்டது.
ஆங்கிலேயர்களால் யேமனில் உள்ள ஏடன் துறைமுகம் கைப்பற்றப்பட்ட பிறகு இந்திய கடற்படையின் பொறுப்புகள் பன்மடங்கு வளர்ந்தன. 1840இல் சீன போரில் அது நிலைநிறுத்தப்பட்டதில் இருந்தே அதன் திறனை உலகம் உணரத் தொடங்கியது.
கடற்படை கண்ட மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images
1863 முதல் 1877 வரை பாம்பே மரைன் என மறுபெயரிடப்பட்ட கடல் பாதுகாப்புப்படை, பிறகு அரசியின் இந்திய கடற்படை ஆக இருந்தபோது இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
வங்காள விரிகுடாவின் கண்காணிப்பாளரின் கீழ் கல்கத்தாவை (இப்போது கொல்கத்தா என அழைக்கப்படுகிறது) தளமாகக் கொண்ட கிழக்குப் பிரிவு மற்றும் அரபிக்கடல் கண்காணிப்பாளரின் கீழ் பம்பாயில் மேற்குப் பிரிவு கடற்படையில் புதிய பிரிவுகளாயின.
பல்வேறு கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்த இரு பிரிவுகளும் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவற்றின் தலைப்பு 1892இல் 'ராயல் இந்தியன் மரைன்' என மாற்றப்பட்டது, அந்த நேரத்தில் இந்த ராயல் இந்தியன் மரைன், 50க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்டிருந்தன.
முதல் உலக போரின் போது பம்பாய் மற்றும் ஏடனில் கண்ணிவெடிகள் கண்டறியப்பட்டபோது, ராயல் இந்தியன் மரைன் கண்ணிவெடிகள் செயலிழக்கும் நிபுணர்கள், ரோந்துப் படகுகள் மற்றும் துருப்புகளை சுமந்து கொண்டு நடவடிக்கையில் இறங்கியது.
இராக், கிழக்கு ஆஃப்ரிக்கா, எகிப்து ஆகிய இடங்களுக்கு ராயல் இந்தியன் மரைன் பயணம் செய்தது.
பிரிட்டிஷ் கடற்படையில் முதலாவது இந்திய அதிகாரி

பட மூலாதாரம், Getty Images
ராயல் இந்தியன் மரைனில் கடற்படை சேவையில் அமர்த்தப்பட்ட முதலாவது இந்திய பொறியியல் அதிகாரியாக சப்-லெஃப்டினன்ட் டி.என். முகர்ஜி 1928இல் சேர்ந்தார்.
1934இல், ராயல் இந்தியன் மரைன் மீண்டும் ராயல் இந்திய கடற்படையில் ஒழுங்கமைக்கப்பட்டு அதன் சீரிய சேவைக்காக 1935இல் அரசர் கொடிக்கு உகந்த படையாக அங்கீகரிக்கப்பட்டது.
இரண்டாம் உலக போர் வெடித்தபோது, ராயல் இந்திய கடற்படை எட்டு போர்க்கப்பல்களைக் கொண்டிருந்தது. போரின் முடிவில், அதன் பலம் 117 போர்க் கப்பல்கள் மற்றும் 30,000 படை வீரர்களைக் கொண்டதாக உயர்ந்தது. இதன் சேவை காலத்தில் பல போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ராயல் இந்திய கடற்படை பதினோராயிரம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கடலோர ரோந்துக்கு மட்டுமே பொருத்தமான 32 பழைய கப்பல்களைக் கொண்டதாக இருந்தது.
இதில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் பிரிட்டிஷ் கடற்படையில் இருந்து பெறப்பட்டனர்,
ரியர் அட்மிரல் ஐடிஸ் ஹால், இந்திய சுதந்திரத்துக்குப் பிந்தைய முதலாவது தலைமைத் தளபதியாக இருந்தார். இந்தியா, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு ஆக அறிவிக்கப்பட்டபோது, கடற்படைக்கு முன்னால் அதுநாள் வரை அழைக்கப்பட்டு வந்த 'ராயல்' என்ற பெயர் நீக்கப்பட்டது.
அதன் பிறகு இந்திய கடற்படையின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த அமிட்ரல் சர் எட்வார்ட் பேரி 1951இல் தமது பொறுப்பை அட்மிரல் சர் மார்க் பிஸ்ஸேவிடம் வழங்கினார்.
1955இல் அட்மிரல் பிஸ்ஸே இந்திய கடற்படையின் தலைமைத்தளபதியானார். அவருக்குப் பிறகு தளபதியானவர் வைஸ் அட்மிரல் எஸ்.ஹெச். கார்லில்.
1958ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இந்திய கடற்படையின் முதலாவது இந்திய தலைமைத் தளபதியாக பதவியேற்றார். அவரது பெயர் வைஸ் அட்மிரல் ஆர்.டி. கட்டாரி.
இந்திய கடற்படை தினம் கொண்டாட என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
1944 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, ராயல் இந்தியன் நேவி முதல் முறையாக கடற்படை தினத்தை கொண்டாடியது. கடற்படை தினத்தை கொண்டாடுவதன் பின்னணியில், பொதுமக்களிடையே கடற்படை பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதும் முக்கிய நோக்கமாக இருந்தது.
மேலும், பல்வேறு துறைமுக நகரங்களில் கடற்படையினரின் அணிவகுப்புகளை நடத்துவதுடன், உள்நாட்டு மையங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி மக்களின் ஆதரவைப் பெறுவதையும் திட்டமாகக் கொண்டிருந்தது. அந்த திட்டம் கணிசமான வெற்றியையும் பெற்றது. 'இந்திய கடற்படை' தங்களின் கடல்சார் பாதுகாப்பு முகமை என்ற நம்பிக்கையை பொதுமக்கள் இடையே செயல்பாடுகள் கொடுத்தன.
இந்த திட்டத்தின் வெற்றியைக் கண்டு, ஒவ்வோர் ஆண்டும் இதேபோன்ற செயல்பாடுகளை பெரிய அளவில் நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. காலப்போக்கில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும் பருவத்தில் கடற்படை தினம் 1945ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி பம்பாய் மற்றும் கராச்சியில் கொண்டாடப்பட்டது.
அதன் பிறகு 1972ஆம் ஆண்டு வரை, இந்திய கடற்படை தினம் 'டிசம்பர் 15' அன்று கொண்டாடப்பட்டது. டிசம்பர் 15 நிகழும் வாரம் 'கடற்படை வாரம்' என்று கடைப்பிடிக்கப்பட்டது.
இந்தியா- பாகிஸ்தான் போரின் போது அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இந்திய கடற்படையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில், 1972ஆம் ஆண்டு மே மாதம் நடந்த மூத்த கடற்படை அதிகாரிகள் மாநாட்டில், டிசம்பர் 4ஆம் தேதியை கடற்படை தினம் ஆக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஒவ்வோர் ஆண்டும் முந்தைய வழக்கத்தின்படியே டிசம்பர் 4 இடம்பெறும் மாதத்தின் முதலாவது வார நாட்களான டிசம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை, இந்திய கடற்படை தின வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் அங்கமாக பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளை கடற்படை நடத்தி வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
• ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
• டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
• இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
• யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













