10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி திமுக மனு - 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 103ஆம் அரசியலமைப்பு திருத்தம் செல்லும் என்று உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட தகவலை மாநிலங்களவை திமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு 133 கோடி இந்தியர்களைப் பாதிக்கிறது என்பதால் அந்த அடிப்படையில் மறுஆய்வு மனு மீதான விசாரணையை திறந்தவெளி நீதிமன்றத்தில் நடத்துமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான 10 தகவல்களை இங்கே வழங்குகிறோம்.
1) உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு கடந்த நவம்பர் 7ஆம் தேதி அளித்த தீர்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று உறுதிப்படுத்தியது.
2) இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டபோது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆக இருந்தவர் யு.யு.லலித். அவரும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பேலா எம் திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோரும் அளித்த தீர்ப்பில், தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் தனித்தனியாக மற்ற பெரும்பான்மையான நீதிபதிகளின் கருத்தை மறுத்து தீர்ப்புகளை அளித்திருந்தனர். அந்த வகையில் மொத்தம் நான்கு தீர்ப்புகள் இந்த விவகாரத்தில் அளிக்கப்பட்டன.
3) இடஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாடைக் கொண்ட நீதிபதிகள், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டாலும், எஸ்சி, எஸ்டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை EWS பிரிவில் இருந்து விலக்குவது அனுமதிக்கப்படாது என்றும் அது அவர்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு சமம் என்றும் கூறியுள்ளனர்.
4) இந்த மறுஆய்வு மனுவில், இந்திரா சாஹ்னி வழக்கை விசாரித்த அதிக நீதிபதிகள் அமர்வு வகுத்திருந்த விதிமுறைகளை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு பரிசீலிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
5) "இந்திர சாஹ்னியின் வழக்கில் அளித்த தீர்ப்பை மீறும் அல்லது திருத்தி எழுதும் பெரும்பான்மையான கருத்துக்களின் சில பகுதிகள் என்.எம். தாமஸ் வழக்கின் தீர்ப்பையும், நாகராஜ், அசோக குமார் தாக்கூர் வழக்குகளில் வழங்கப்பட்ட இதேபோன்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பையும் புறக்கணிக்கிறது" என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
6) அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நலிந்த பிரிவினரான எஸ்சி/எஸ்டி/ஓபிசியினரை, "பலவீனமான பிரிவினர்" என்ற வார்த்தை இல்லாமல் "பொருளாதார ரீதியாக" என்ற வார்த்தையைக் கொண்டு தனித்தனியாக பிரிக்க முடியாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7) மேல்முறையீடு செய்யப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாததால் அவர்கள் நலிவடைந்த பிரிவினராக கருதலாம் என வகை செய்யும் 'முன்னேறிய ஜாதிகள்' எவ்வாறு பயனடைகின்றன என்பதை உச்ச நீதிமன்றம் ஒருபோதும் ஆய்வு செய்யவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
9) இடஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி அமைப்பை ஒழித்து சமத்துவ சமுதாயம் உருவாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதன் மூலம், அது தவறு செய்து விட்டதாகத் தெரிகிறது. மேலும், மூன்று நீதிபதிகளின் பெரும்பான்மை தீர்ப்பு, அரசியலமைப்புத் திருத்தங்களை விசாரிக்கும்போது உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட அம்சங்களை கவனத்தில் கொள்ளவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
10) 103வது அரசியலமைப்புத் திருத்தத்துக்காக மத்திய அரசை மட்டுமே நம்பியிருந்த சின்ஹோ கமிஷன் அறிக்கை, இடஒதுக்கீட்டுக்கு வெளியே உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரின் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் தரவுகளை ஆதரிக்க உண்மையான தரவு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னேறிய ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், அரசியலமைப்பின் 15(4) & 16(4) ஆகிய பிரிவுகளால் கொண்டு வரப்பட்ட 'சமத்துவத்தை' அரசு அழிப்பதாகவும் அது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












