''EWS உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்" - தீர்ப்பு வந்தது, அடுத்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், எதிர்ப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் அடங்கிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி. பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர். ஆகவே 3:2 என்ற விகிதத்தில் வெளியாகியுள்ள இந்த தீர்ப்பின் மூலம், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த 103ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
எதிர்பார்த்ததைப் போலவே, தமிழ்நாட்டில் இந்தத் தீர்ப்புக்கு பரவலான எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பு வெளிவந்தவுடன் இது குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது. எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்," என்று கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், M.K. STALIN
"103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்ற பெரும்பான்மைத் தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான சமூகநீதித் தத்துவத்திற்கு நேர் முரணானது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லாது என்ற மண்டல் குழு தொடர்பான 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலிருந்து தப்பிக்கவே 103ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம். இதனை நியாயப்படுத்திட எந்தப் புள்ளி விவரமும், ஆதாரமும் கிடையாது. இதன்மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவேண்டியது அவசியம்." என திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞரும் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சனிடம் பிபிசி இது குறித்து கேட்டபோது, "நீதிமன்றத்தில் வாதாடியதைத் தவிர சொல்வதற்கு ஏதுமில்லை. தீர்ப்பு முழுமையாக வெளிவந்த பிறகு அடுத்த கட்டமாக என்ன செய்வது என கட்சித் தலைவருடன் பேசி முடிவெடுக்கப்படும்" என்று மட்டும் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை, அதனை ஏற்காதவர்கள் சீராய்வு மனுத் தாக்கல் செய்யலாம். ஆனால், அதில் தீர்ப்பு மாறி வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கருணாநிதி.
"இந்த வழக்கில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் பல்வேறு வாதங்களை முன்வைத்தார்கள். பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று கூறிய சிம்ஹோ கமிஷனின் பரிந்துரைகளை முன்வைத்து வாதாடினார்கள். இருந்தும் பெரும்பான்மைத் தீர்ப்பு எதிராக வந்திருக்கிறது. யு.யு. லலித்தும் ரவீந்திர பட்டும் இதில் முரண்பட்டிருக்கிறார்கள்.
அதிலும் ரவீந்திர பட், பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீட்டை எல்லோருக்கும் அளிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆகவே, 'சீராய்வு' என்று சென்றாலும் இதே தீர்ப்புதான் வர வாய்ப்புள்ளது.


ஆனால், இன்னும் விஷயங்களை நமது தரப்பிற்கு ஆதரவாக முன்வைக்க முடியும். அதிலும் சாதகமான தீர்ப்பு வராத நிலையில், கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் மேல் முறையீடு செய்யலாம்" என்கிறார் கருணாநிதி.
ஆனால், இந்த பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு தொடரும்பட்சத்தில், 50 சதவீத இட ஒதுக்கீடுதான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு போய்விடும். மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி, இட ஒதுக்கீட்டு விகிதத்தை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். முடிவில் விகிதாச்சார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நோக்கி நகரலாம். ஆனால், அதற்கான அழுத்தம் வெளியிலிருந்து வரவேண்டும்" என்கிறார் கருணாநிதி.
தற்போது தமிழ்நாட்டு அரசு வழங்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு கிடையாது. இந்தத் தீர்ப்பு இதைக் கட்டாயப்படுத்துகிறதா? என்று கேட்டபோது, "இல்லை. பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளிப்பது செல்லும் என்றுதான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், ஒரு அரசு அதைச் செயல்படுத்தியே ஆகவேணடுமெனச் சொல்லவில்லை. ஆகவே, மாநிலங்கள் கொடுத்து ஆக வேண்டும் என்று சொல்ல முடியாது" என்கிறார் கருணாநிதி.
இதற்கிடையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யப்போவதாகச் சொல்லியிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இந்திரா சஹானி வழக்கில் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு மாறாக இந்த தீர்ப்பு வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளன்.


"இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது என்று இந்திரா சஹானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்மானிக்கப்பட்டது. அதை ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு மாற்ற முடியாது. எனவே இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பு குறித்து இந்த அமர்வு முடிவு செய்திருப்பது சட்டப்படி ஏற்புடையதல்ல.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை அனுப்ப வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்யும். இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வர் என நம்புகிறோம்" என திருமாவளவன் கூறியிருக்கிறார்.
மேலும், இட ஒதுக்கீட்டுப் பிரச்னைகளை நீதிமன்றத்தில் தீர்த்துவிட முடியாது, முதன்மையாக அது அரசியல் களத்தில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்துக்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஓபிசி இந்துச் சமூகப் பிரிவினருக்கு எதிரான பாஜகவின் இந்த 10% இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து முறியடிக்க சமூக நீதியின்பால் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், மேல் முறையீடு செய்யவோ, கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமர்வைக் கோரவோ முடியாது, இதுவே இறுதித் தீர்ப்பு என்கிறார் மூத்த வழக்கறிஞரான கே.எம். விஜயன்.
"இந்த வழக்கில் கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமர்வைக் கோரவே முடியாது. பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு கொடுக்கலாமா கூடாதா என்பது குறித்து இந்திரா சஹானி வழக்கில் விவாதிக்கப்பட்டது. அப்போது, அதை ஒரு அரசு ஆணையின் மூலம் செய்ய முடியாது, அரசியலமைப்புச் சட்டத்தைத்தான் திருத்த வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டது. அதற்காகத்தான் 103ஆவது திருத்தம் செய்யப்பட்டது. ஆகவே, இப்போது இந்த தீர்ப்பு அந்த அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது. இது அரசியல் சாசன ரீதியாக சரியான தீர்ப்பு." என்கிறார் கே.எம். விஜயன்.
இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை நீதிபதிகள் 3:2 என்ற விகிதத்தில் முரண்பட்டிருந்தாலும், அந்த முரண்பாடு, எல்லோருக்கும் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீட்டைத் தர வேண்டுமா, அல்லது ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீட்டை பெறாதவர்களுக்கு மட்டும் தர வேண்டுமா என்பதில்தான் இருந்தது எனச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
தற்போது, 50 சதவீத இட ஒதுக்கீட்டைத் தாண்டியும் தரலாம் என நீதிமன்றம் சொல்லியிருப்பதால், மாநிலங்கள் தங்கள் இட ஒதுக்கீட்டு அளவை எவ்வளவு வேண்டுமானாலும் அதிகரித்துக்கொள்ள முடியுமா? என்று அவரிடம் கேட்ட போது, "அது முடியாது என்பதை மராத்தா வழக்கில் உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆகவே, மாநிலங்கள் விருப்பப்படி இட ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க முடியாது" என்கிறார் விஜயன்.
ஆனால், 103வது திருத்தத்தை வைத்து மத்திய அரசு பணிகளுக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு தர முடியும். மாநிலங்களும் இந்த இட ஒதுக்கீட்டைத் தரவிரும்பினால், அவை தனியாக சட்டம் இயற்ற வேண்டியிருக்கும். அதனை மாநில அரசுகள் செய்யாது என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













