நரேந்திர மோதி அரசு முஸ்லிம், கிறிஸ்தவ தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு தர உண்மையாகவே விரும்புகிறதா?

இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தீபக் மண்டல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான பாதை சீர்செய்யப்பட்டுவிட்டதா? சீக்கிய மற்றும் பெளத்த மதத்திற்கு மாறிய தலித்துகள் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுகிறார்கள். ஆனால் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட தலித்துகளுக்கு மட்டும் இதன் பலன் ஏன் கிடைப்பதில்லை?

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளின் சமூக நிலையைக் கண்டறிய 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைக்கும் அறிவிக்கையை இந்திய அரசு வெளியிட்டதை அடுத்து விவாதம் மேலும் சூடுபிடித்துள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் இந்த ஆணையத்தின் தலைவராக இருப்பார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதவ் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவீந்தர் குமார் ஆகியோர் ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்கள்.

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு, பட்டியல் வகுப்பினர் என்ற அந்தஸ்தை வழங்கலாமா என்று இந்த ஆணையம் ஆய்வு செய்யும்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இந்தியாவில் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

எனவே கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு அளித்து அரசியல் ஆதாயம் தேட நரேந்திர மோதி தலைமையிலான அரசு நினைக்கிறது என்று கருதப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்திய அரசு அக்டோபர் 11-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டிய நிலையில், ஆணையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலித்துகள் பட்டியல் சாதியில் ஏன் இல்லை?

கிறிஸ்தவர்களாகவோ முஸ்லிம்களாகவோ மதம் மாறிய தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர்ந்து, அக்டோபர் 11-ம் தேதி இதுகுறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு நீதிமன்றம் இந்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு 2004 முதல் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு பட்டியல் சாதியினருக்கான சலுகைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து, பொதுநல வழக்குகளுக்கான மையம், ஒரு பொது நலன் வழக்கைத் தொடர்ந்துள்ளது.

இட ஒதுக்கீடு

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 341வது பிரிவின் கீழ், சாதிகள், இனங்கள் அல்லது குழுக்களை, பட்டியல் சாதிகளில் சேர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை குடியரசுத் தலைவர் வழங்க முடியும். 1950ஆம் ஆண்டில், இந்த விதிகளைப் பயன்படுத்தி, "தீண்டத்தகாதவர்கள்" என்று கருதப்பட்ட மற்றும் "புறக்கணிக்கப்பட்ட" இந்துக்கள் மட்டுமே பட்டியல் சாதிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இன்று தலித்துகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆனால் சீக்கிய சமூகத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, 1956ஆம் ஆண்டில் இது. இதன்படி "தீண்டத்தகாதவர்கள்" என்று கருதப்பட்ட மற்றும் "புறக்கணிக்கப்பட்ட" தலித் சீக்கியர்களும் இதில் சேர்க்கப்பட்டனர்.1990ல் மத்தியில் வி.பி. சிங் அரசு ஆட்சிக்கு வந்தபோது, தலித் பௌத்தர்களும் அதில் சேர்க்கப்பட்டனர்.

"இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தையும் பின்பற்றுபவர்கள், பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட மாட்டார்கள்" என்று திருத்தப்பட்ட உத்தரவில் மத்திய அரசு அப்போது கூறியது.

இந்த உத்தரவு காரணமாகவே முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்து, சீக்கிய மற்றும் பௌத்த தலித்துகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் பலன்களை அவர்கள் இழக்கிறார்கள்.

இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், AFP

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தில், தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு பற்றிய கேள்வி

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர்களிடையே சாதி வேறுபாடு இல்லாததால், இந்த மதங்களைச் சேர்ந்த தலித்துகளுக்கு எதிராக எந்த பாகுபாடும் இருக்காது என்றும், அவர்கள் சமூக மற்றும் பொருளாதார நிலையில் மற்ற முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சமமாக இருப்பார்கள் என்றும் நம்பப்பட்டது.

ஆனால் யதார்த்தம் வேறாக உள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள தலித் முஸ்லிம்களில் 47 சதவிகிதம் பேர் வறுமை கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்காக சதீஷ் தேஷ்பாண்டே மற்றும் கீதிகா பாப்னா ஆகியோர் தயாரித்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிக்கை, 2004-05 ஆம் ஆண்டின் தரவுகளை மேற்கோள்காட்டுகிறது. கிராமப்புறங்களில் 40 சதவிகித தலித் முஸ்லிம்களும், 30 சதவிகித தலித் கிறிஸ்தவர்களும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர்.

பொருளாதார மட்டத்தில் பின்தங்கிய நிலை இருப்பதோடு கூடவே, கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறினாலும், அவர்களுக்கு எதிரான சமூக பாகுபாடும் தொடர்கிறது. தனி தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கல்லறைகளுக்கு செல்ல அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். நீண்ட காலமாக இதை மறுத்து வந்த கத்தோலிக்க திருச்சபை, தலித் கிறிஸ்தவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதை இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களிலும் தலித்துகளுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்று பல அமைப்புகள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் தலித் கிறிஸ்தவர்கள் தேசிய கவுன்சில். இட ஒதுக்கீட்டில் 'மத நடுநிலை' பராமரிக்கப்படவேண்டும் என்று கோரி இந்த கவுன்சில் தாக்கல் செய்த மனு, 2020 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

சச்சர் கமிட்டியும், ரங்கநாத் மிஷ்ரா ஆணையமும் சொன்னது என்ன?

கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு உரிமை வழங்க வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நோக்கம். இதேபோன்ற பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுளன. இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அக்டோபர் 11 ஆம் தேதி தெளிவுபடுத்துமாறு உச்ச நீதிமன்றம் , மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் இதற்கு முன்பாகவே அவர்களுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஆணையத்தை அமைக்கும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டு, இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

"முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் சாதி வேறுபாடு இருப்பதாக சச்சர் கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அங்கும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு உள்ளது. எனவே, பட்டியல் சாதியினருக்கு வழங்கப்படும் சலுகைகளை அவர்களும் பெற வேண்டும். மற்ற மதங்களில் உள்ள தலித்துகளை அடையாளம் கண்டு, அவர்களின் நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக பின்னர் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஷ்ரா ஆணையமும் கிட்டத்தட்ட இதையேதான் கூறியது," என்று பிபிசியிடம் பேசிய அகில இந்திய பஸ்மந்தா முஸ்லிம் மகாஸின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அலி அன்வர் அன்சாரி தெரிவித்தார்.

இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

"1950ல் 341வது பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பாரா 3-ஐ சேர்த்து, தலித் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை பட்டியல் சாதிகளின் வரம்பில் இருந்து குடியரசுத் தலைவர் விலக்கிய விதம், அரசியலமைப்புக்கு எதிரானது என்று ரங்கநாத் மிஷ்ரா ஆணையம் கூறியுள்ளது. அது முடிவுக்கு வரவேண்டும். இதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் எதுவும் தேவையில்லை. இந்தப்பணியை நிர்வாக உத்தரவின் மூலமும் செய்யலாம்,"என்று அலி அன்வர் மேலும் கூறினார்.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலித்துகளுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி சில கிறிஸ்தவ அமைப்புகள் 2004 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

பின்னர் சில முஸ்லிம் அமைப்புகளும் மனு தாக்கல் செய்தன. நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பான ஆணையம் அமைக்க அரசு உத்தரவிட்டு என்ன பயன்?

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

சட்ட அம்சங்கள்

  • 1950ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விடுத்த ஆணைப்படி, இந்து தலித்துகளுக்கு மட்டுமே பட்டியல் சாதி அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • சீக்கிய தலித்துகள் 1956ஆம் ஆண்டிலும், பௌத்த தலித்துகள் 1990ஆம் ஆண்டிலும் பட்டியல் சாதி அந்தஸ்தைப் பெற்றனர்.
  • சீக்கிய தலித்துகளுக்கு காக்கா காலேல்கர் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையிலும், 1983 இல் அமைக்கப்பட்ட கமிட்டியின் அடிப்படையில் பெளத்த தலித்துகளுக்கும் இந்த அந்தஸ்து கிடைத்தது.
  • இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களை பட்டியல் சாதியில் சேர்க்க முடியாது என்று மத்திய அரசு கூறுகிறது
  • இஸ்லாமும் கிறிஸ்தவமும் சாதி பாகுபாட்டை கடைப்பிடிப்பதில்லை. எனவே இந்த அந்தஸ்தை அளிக்க முடியாது என்று மத்திய அரசு வாதிடுகிறது.
இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், EPA

ஆணையம் அமைப்பதன் நோக்கம் குறித்த கேள்வி

"இந்த விவகாரத்திற்கு நீதிமன்றத்தில் பதிலளிப்பதை தவிர்க்க இந்திய அரசு விரும்புகிறது. இது அரசின் கோழைத்தனமான செயல். இப்போது இந்த விவகாரத்தில் ஆணையம் அமைத்து என்ன பயன்?"என்று தேசிய தலித்துகள் கவுன்சிலின் தேசியதலைவர் வி.ஜி. ஜார்ஜ் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

"பல ஆண்டுகளுக்கு முன்பே ரங்கநாத் மிஷ்ரா ஆணையம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதத்தில் தலித்துகளின் மோசமான நிலை மற்றும் அவர்களுக்கு எதிரான பாகுபாடுகளை குறிப்பிட்டுள்ளது. இப்போது அரசு வேறு என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறது. பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே தலைமையில் இந்த அம்சத்தை அரசு ஏற்கனவே ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வு அரசின் நிதியில் செய்யப்பட்டது," என்று அவர் மேலும் கூறினார்.

"ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் உட்பட வேறு பல கமிஷன்களும் தலித் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று கருதுகின்றன. இப்போது அரசு இன்னொரு ஆணையத்தை உருவாக்குவதன் மூலம் காலதாமதம் செய்ய விரும்புகிறது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்தும் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்," என்று ஜார்ஜ் குறிப்பிட்டார்.

நரேந்திர மோதி அரசின் இந்த முடிவு குறித்து அலி அன்வரும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

"2019 இல் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது, ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் பரிந்துரைகள் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு நரேந்திர மோதி அரசு அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சாதி வித்தியாசம் இல்லை, எனவே அவர்களுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அரசு தெரிவித்தது." என்று அலி அன்வர் கூறினார்.

"இப்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. உறுதியான முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நரேந்திர மோதி அரசு ஒரு ஆணையத்தை உருவாக்கி ஓர் இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"இது விஷயத்தை தாமதப்படுத்தும் முயற்சி. இது மோதி அரசின் பொது உறுதிமொழி அல்ல. எனவே இந்த விவகாரம் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதுடன், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலித்துகளுக்கு இந்த அந்தஸ்தை வழங்குவதிலிருந்து அரசு தப்பித்துவிடும்," என்று அலி அன்வர் குறிப்பிட்டார்.

வாக்கு வங்கி அரசியலா?

தேர்தல் ஆதாயத்திற்காக நரேந்திர மோதி அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக சில வட்டாரங்களில் முணுமுணுப்பு நிலவுகிறது.

"நரேந்திர மோதியின் பஸ்மந்தா நல்லிணக்க யாத்திரை மற்றும் முஸ்லிம்-கிறிஸ்தவ தலித்துகளுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்கும் நோக்கம் ஆகியவை வெறும் மாயை மட்டுமே. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், ஏற்கனவே முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்று கருதுகிறது. பிறந்த பூமி மற்றும் புண்ணிய பூமி பற்றிய அந்த அமைப்பின் கருத்துகள் அனைவருக்குமே தெரியும்," என்று அலி அனவர் சுட்டிக்காட்டினார்.

"மோதி இதன்மூலம் தேர்தல் ஆதாயம் பெற நினைக்கிறார் என்ற கூற்றும் தவறானது. ஏனென்றால் முஸ்லிம்களில் ஒரு டஜன் சாதிகள், தலித்துகளின் கீழ் உள்ளன. இவர்களின் எண்ணிக்கை ஒரு சதவிகித வாக்காளர்களை காட்டிலும் குறைவுதான். தேர்தல் ஆதாயம் பெறவேண்டுமானால் இதை நடைமுறைப்படுத்தி, இதன் பலன் யாருக்கு கிடைத்தது என்று ஆய்வு செய்திருக்கலாம். ஆனால் அதையும் செய்யவில்லை. எனவே இது குழப்பத்தை பரப்பும் நடவடிக்கை மட்டுமே என்பது தெளிவாகிறது,"என்றார் அவர்.

இந்து தலித்துகள் கோபப்படுவார்களா?

கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித்துகளுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்கினால், அது தங்கள் உரிமைகளை பறிப்பது போன்றது என்று இந்து தலித்துகள் நம்புகிறார்கள்.

இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

"தங்கள் மதத்தில் பாகுபாடு இல்லை என்று இஸ்லாமும் , கிறிஸ்துவமும் கூறுகின்றன. தங்கள் பார்வையில் அனைவரும் சமம் என்று அவை சொல்கின்றன. ஆனால் எங்கள் மத்திலும் பாகுபாடு உள்ளது என்று இப்போது அவர்கள் சொல்கிறார்கள். தீண்டாமை என்பது தங்களிடையே இல்லை என்று கூறி கிறிஸ்தவமும் இஸ்லாமும் இப்போது வரை அதை மறுத்து வந்தன," என்று தலித் மற்றும் பழங்குடிகள் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசோக் பாரதி கூறினார்.

" உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, காஜி சாதுதீன் Vs மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் பிறரின் சிவில் மேல்முறையீடு, பொது நல வழக்குகள் மற்றும் பிற மனுக்கள் மூலம், 341வது பிரிவின் கீழ் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித்துகளை பட்டியல் சாதிகளில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள பட்டியல் சாதியினரின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சியாகும்," என்று பாரதி குறிப்பிட்டார்.

கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு வலுவான சான்றுகள் இருப்பதாக, தனது 2008 ஆண்டின் அறிக்கை தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக, சதீஷ் தேஷ்பாண்டே தெரிவித்தார். அவர்களின் பொருளாதார நிலை மற்ற மதங்களைச் சேர்ந்த தலித்துகளை விட மோசமாக உள்ளது. ஆனால் இந்து தலித்துகள் இதை ஏற்கத் தயாராக இல்லை.

"தலித் வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏற்கனவே அரசுப் பணி மற்றும் கல்வியில் ஓபிசியின் கீழ் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். எனவே, பொது நலன் வழக்கு மூலம் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலித்துகளை பட்டியல் சாதிகளில் சேர்த்து இடஒதுக்கீடு அளிக்குமாறு கோருவது வேறு சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இது வரும் நாட்களில் தெளிவாகும்," என்று அசோக் பாரதி தெரிவித்தார்.

Banner
காணொளிக் குறிப்பு, விலைவாசி உயர்வு உங்கள் தட்டுக்கு வரும் சாப்பாட்டை எப்படி பாதித்துள்ளது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: