ஞானவாபி: 'கார்பன் டேட்டிங்' பற்றி அக்டோபர் 11இல் உத்தரவு - கார்பன் டேட்டிங் என்றால் என்ன?

பட மூலாதாரம், ROBERT NICKELSBERG/GETTY IMAGES
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் உண்மையான வயதை கண்டறிய பயன்படும் கார்பன் டேட்டிங் தொடர்பான வழக்கில் உத்தரவு அக்டோபர்11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் நீதிமன்ற விசாராணை நடத்தக் கோரிய நான்கு பெண் மனுதாரர்கள், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், இந்த மசூதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தில் கார்பன் டேட்டிங் சோதனை செய்யக் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி, இக்கோரிக்கை மீதான உத்தரவை அக்டோபர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாகக் கூறினார்.
இந்த ஆண்டு மே மாதத்தில் ஞானவாபி மசூதியில் மதிப்பாய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு மசூதியில் உள்ள ஒரு பகுதியில் ஒரு சிவலிங்கம் மீட்கப்பட்டதாக இந்து தரப்பு கூறியது. அதைத் தொடர்ந்து கீழ்மை நீதிமன்றம் சீல் வைக்க உத்தரவிட்டது.
இதற்கிடையில் கார்பன் டேட்டிங் என்றால் என்ன, பழங்கால கட்டடங்களுக்கு இந்த சோதனையைச் செய்ய முடியுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
கார்பன் டேட்டிங் என்றால் என்ன?
கார்பன் டேட்டிங் என்பது ஒரு காலத்தில் உயிருடன் இருந்த உயிரினங்களின் கரிம பொருட்களின் வயதைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறை.
உயிரினங்களில் பல்வேறு வடிவங்களில் கார்பன் உள்ளது. கார்பனில், கரிமம் 14 எனப்படும் ஓர் ஐசோடோப் (isotope) உள்ளது. இதிலிருந்து டேட்டிங் எனப்படும் காலக்கணிப்பைச் செய்ய முடியும். கரிமம 14-யில் அணுத்திணவான 14 உள்ளது. இதனால், ஓர் உயிரினம் காலப்போக்கில் கரிமப் பொருளாகச் சிதைகிறது.
ஒரு தாவரமோ அல்லது விலங்கோ இறந்த பிறகு, அதன் கரிம விகிதம் கார்பன 12-யில் இருந்து கார்பன் 14-க்கு மாறுகிறது அல்லது அதன் உடலின் எச்சங்களின் விகிதம் மாறத் தொடங்குகிறது. இந்த மாற்றத்தை அளவிடமுடியும். ஓர் உயிரினம் இறந்த காலகட்டத்தைக் கணக்கிட, இந்த கார்பன் டேட்டிங்கை பயன்படுத்த முடியும்.
இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அனைத்து சூழ்நிலையிலும் கார்பன் டேட்டிங்கை பயன்படுத்த முடியாது. குறிப்பாக, பாறை போன்ற உயிரற்ற பொருட்களின் வயதைத் தீர்மானிக்க இதைப் பயன்படுத்த முடியாது.
மேலும், கார்பன் டேட்டிங்கின் மூலம் 40,000-50,000 ஆண்டுகளுக்கும் மேலுள்ள வயதைக் கணக்கிட முடியாது. ஏனென்றால், கரிம ஐசோடோப்புகளுடைய அரை-வாழ்நாளின் (அரை-வாழ்நாள்=5,700ஆண்டுகள்) எட்டு முதல் பத்து சுழற்சிகளைக் கடந்த பிறகு, கார்பன்-14இன் அளவு கிட்டத்தட்ட மிகவும் குறைந்துவிடும்.
பழங்கால கட்டடங்களுக்கு கார்பன் டேட்டிங் செய்ய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
இதைப் பற்றி புரிந்துகொள்ள லக்னோவில் உள்ள பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆப் பேலியோண்டாலஜியின் (Birbal Sahni Institute of Paleontology) விஞ்ஞானி டாக்டர் ராஜேஷ் அக்னிஹோத்ரியிடம் பிபிசி பேசியது.
உயிரினங்கள் இறந்த பிறகு அவற்றின் வயதை அறிய ஒரே வழி ரேடியோ கார்பன் டேட்டிங்தான் என்று அவர் பிபிசியிடம் கூறினார். இந்தத் தகவலை தொல்லியல் தகவல்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதன் மூலம் நாம் கட்டடங்களின் வயதைக் கணக்கிடமுடியும்.


அப்படியெனில், உயிரற்ற பொருட்கள் மீது கார்பன் டேட்டிங் செய்ய முடியுமா?
இது குறித்து டாக்டர் ராஜேஷ் அக்னிஹோத்ரி பேசுகையில், "கற்கள், உலோகங்கள் போன்றவற்றில் கரிமம் கிடையாது. அதனால், அவற்றை கார்பன் டேட்டிங் செய்ய முடியாது. ஆனால் இந்த உயிரற்ற பொருட்கள் நிறுவப்படும்போது, அவற்றுடன் தானியங்கள், உடைகள், மரங்கள், கயிறுகள் ஆகியவற்றின் பிற கரிமப் பொருட்கள் காணப்படுகின்றன. அதை கார்பன் டேட்டிங் செய்ய முடியும்," என்று விளக்குகிறார்.
இந்த உயிரியல் பொருட்களிலிருந்து ஒரு கட்டடத்தின் வயதைக் கணிக்கமுடியுமா?
இந்த கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் ராஜேஷ் அக்னிஹோத்ரி, "நிச்சயமாக இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கட்டடத்தின் வயதைக் கண்டறிய முடியும். அதற்கு அந்த குறிப்பிட்ட காலத்தின் பிற தொல்லியல் விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்." என்கிறார்.
"ராம் ஜென்மபூமி மற்றும் இமாம்பராவின் வரலாற்று காலத்தை அறிய கார்பன் டேட்டிங் நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டன என்று ராஜேஷ் அக்னிஹோத்ரி கூறுகிறார். இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மூலம் இதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஞானவாபி விவகாரம் - இதுவரை நடந்தது என்ன?
2022: ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரிய இந்துப் பெண்களின் மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் செப்டம்பர் 12 ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. முஸ்லிம் தரப்பின் எதிர்ப்பை நீதிமன்றம் நிராகரித்தது.
2022: மே 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி, இந்த வழக்கு மேலும் விசாரிக்கத் தகுதியானதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதிமன்றத்திடம் கூறியது.
2022: மே 17ஆம் தேதி, 'சிவலிங்கத்தின்' பாதுகாப்பிற்காக வுசுகானாவை(நீரூற்று) சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, கூடவே மசூதியில் தொழுகையைத் தொடரவும் அனுமதித்தது.
2022: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன் மே 16 அன்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக கூறப்படும் பகுதியை சீல் வைக்க வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு தொழுகைக்கும் தடை விதிக்கப்பட்டது.
2022: மே மாதம், ஞானவாபி மசூதியின் வீடியோ பதிவு தொடர்பாக மஸ்ஜித் இந்தஜாமியா உச்ச நீதிமன்றத்தை அணுகியது
2022: மஸ்ஜித் இந்தஜாமியா இந்த உத்தரவை பல தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தது. அது தள்ளுபடி செய்யப்பட்டது.
2022: ஏப்ரலில், ஞானவாபி மசூதியின் ஆய்வு மற்றும் வீடியோகிராஃபிக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021: அலகாபாத் உயர் நீதிமன்றத்தை மஸ்ஜித் இந்தஜாமியா என்ற குழு அணுகியது. உயர்நீதிமன்றம் மீண்டும் சிவில் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி, அதை கண்டித்தது.
2021: ஆகஸ்ட் 18 அன்று, டெல்லியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, மசூதி வளாகத்தில் மா சிருங்கார் கௌரி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.
2021: உயர்நீதிமன்றத்தின் தடை இருந்தபோதிலும், வாரணாசி சிவில் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் வழக்கை மீண்டும் தொடங்கி மசூதியை ஆய்வு செய்ய அனுமதித்தது.
2020: அலகாபாத் உயர்நீதிமன்றம் சிவில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. பின்னர் இந்த விஷயத்தில் தீர்ப்பை ஒத்திவைத்தது.
2020: அடிப்படை மனுவை விசாரிக்குமாறு வாரணாசி சிவில் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
2019: அயோத்தி தீர்ப்புக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு 2019 டிசம்பரில் ஞானவாபி மசூதியை ஆய்வுசெய்யக்கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
1991: ஞானவாபி வழக்கு நீதிமன்றத்தை எட்டியது. ஞானவாபி மசூதி தொடர்பாக 1991ஆம் ஆண்டு முதன்முறையாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வாரணாசியில் உள்ள சாதுக்கள் மற்றும் துறவிகள் அங்கு வழிபாடு நடத்தக் கோரி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மசூதி நிலத்தை இந்துக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மசூதி நிர்வாகக் குழு, இது வழிபாட்டுத் தலச்சட்டத்தை மீறுவதாகக் கூறியது.
1991: பிவி நரசிம்ம ராவ் காங்கிரஸ் அரசு 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலச் சட்டத்தை (சிறப்பு விதிகள்) நிறைவேற்றியது. பாஜக இதை எதிர்த்தது. ஆனால் அயோத்தியை விதிவிலக்காக வைத்ததை வரவேற்றது. அதே நேரம் காசி மற்றும் மதுராவையும் விதிவிலக்காகக் கருத வேண்டும் என்று கோரியது. ஆனால் சட்டத்தின்படி, அயோத்திக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












