திருப்பூர் ஆசிரமத்தில் 3 குழந்தைகள் இறப்புக்கு கெட்டுப்போன உணவு காரணமா?

அவசர ஊர்தி

திருப்பூரில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் அவர்கள் கெட்டுப் போன உணவை உட்கொண்டதால் மரணம் அடைந்ததாக கூறப்படும் சம்பவம் சர்ச்சை ஆகியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி அருகே அம்மாபாளையத்தில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஆசிரமம் இயங்கி வருகிறது. பெற்றோர்களை இழந்த மற்றும் ஒற்றை பெற்றோரைக் கொண்ட 15 குழந்தைகள் இந்த ஆசிரமத்தில் தங்கி அருகே உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று இரவு ஆசிரமத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளில் ஒருவர் மட்டும் அவரின் பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார். 14 குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்துள்ளனர்.

நேற்றிரவு குழந்தைகளுக்கு ரசம் சாதம் உணவாக வழங்கப்பட்டது. அதில் சில குழந்தைகளுக்கு இன்று அதிகாலையில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகள் ஆசிரமத்திலேயே நினைவிழந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அந்த குழந்தைகளின் உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.

கெட்டுப் போன உணவு
படக்குறிப்பு, குழந்தைகள் முன்தினம் சாப்பிட்டு எஞ்சிய உணவு குப்பை கூடையில் கொட்டப்பட்டுள்ளது. இது கெட்டுப்போனதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மற்ற 12 குழந்தைகள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மேலும் ஒரு குழந்தை உயிரிழந்தது.

இதையடுத்து எஞ்சிய 11 குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சந்தேக மரணம் ஆக வழக்கு

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் அளித்துள்ள புகாரின் பேரில் காவல்துறையினர் குழந்தைகள் இறப்பை, சந்தேக மரணம் ஆக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்தினார்.

குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சதிஷ்

திருப்பூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சதிஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், `"அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நீர் சத்து குறைந்துள்ளது. அதனால் அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள குழந்தைகளும் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளின் சிறுநீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது," என்றார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்

பட மூலாதாரம், Empics

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "குழந்தைகள் இரவு நேரம் உட்கொண்ட உணவினால் தான் மயக்கம் ஏற்பட்டுள்ளது முதல் கட்டமாக தெரியவந்துள்ளது. ஃபுட் பாய்சனிங் தான் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, குழந்தைகளின் உடல் கூராய்வு அறிக்கை வந்த பிறகு இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை, வருவாய்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.` என்றார்.

போலீஸ் தரப்பு விளக்கம்

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன்

இந்த நிலையில், குழந்தைகளுக்கு முந்தைய தினமே காய்ச்சல் இருந்துள்ளதாக தெரிவிக்கிறார் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன்,

"கடந்த 4ஆம் தேதி சுண்டல் மற்றும் பொங்கல் வெளியிலிருந்து வந்துள்ளது. நேற்று இரவு ரசம் சாதமும் இனிப்பும் உணவாக வழங்கியுள்ளனர். ஆனால் குழந்தைகள் இரவு உணவை முழுமையாக உண்ணவில்லை. சிலர் எஞ்சிய உணவை குப்பைத் தொட்டியில் கொட்டியுள்ளனர். முந்தைய தினமே குழந்தைகளில் சிலருக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால் இரவு உறங்கும் போது பாதி டோலோ மாத்திரையை வழங்கியுள்ளனர்.

அதையும் மீறி சில குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை மாணவர்கள் ஒவ்வொருவராக மயக்கமடைந்ததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதலில் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில் மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசிரமத்தில் இருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் இறப்பு தொடர்பாக தற்போதைக்கு சந்தேக மரணம் ஆக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். ஆசிரிம நிர்வாகிகளையும் விசாரிக்க உள்ளோம்` என்கிறார் காவல் ஆணையர் பிரபாகரன்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தற்போது முதல் கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது. உணவு மாதிரி பரிசோதனை, பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. ஆசிரம செயல்பாடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது. குழந்தைகள் நலத்துறை இயக்குநரும் விசாரிக்க உள்ளார். அதன் பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்` என்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: