காம்பியா குழந்தைகள் இறப்பு - WHO எச்சரிக்கைக்கு பின் தமிழ்நாட்டில் என்ன நிலை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) இந்திய மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த நான்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. நான்கு மருந்துகளை உட்கொண்ட குழந்தைகளுக்கு அதில் இருந்த கலப்படம் காரணமாக சீறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதையடுத்து, மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து கடைகளில் தாமாக இருமல் மருந்துகளை பெற்றோர்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் இருந்து தயாராகும் அந்த நான்கு மருந்துகள் - ப்ரோமெதாசின் ஓரல் சொல்யூஷன்(Promethazine Oral Solution) , கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப் (Kofexmalin Baby Cough Syrup), மாகோஃப் பேபி காஃப் சிரப் (Makoff Baby Cough Syrup) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் (Magrip N Cold Syrup) என்ற பெயரில் விற்கப்படுகின்றன. தற்போதுவரை அந்த தனியார் மருந்து நிறுவனம், உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
'பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தேவை'
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியம், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நான்கு இருமல் மருந்துகள் குறித்த விழிப்புணர்வுடன் பெற்றோர் இருப்பது அவசியம் என்றும், தமிழகத்தில் அந்த மருந்துகளின் பயன்பாடு உள்ளதா என்று சோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


''காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டால் அதனை சாதாரணமானதாகக் கருதி, மருந்து கடைகளில் 'சிரப்' வாங்கி அருந்தும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. தற்போது பருவ மாற்றம் மற்றும் கொசு பிரச்னை காரணமாக ஏற்படும் காய்ச்சல் மற்றும் சளி, ஒரு வகையாக உள்ளது. மறுபுறம் டெங்கு காய்ச்சல் மற்றும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா ஆகியவையும் உள்ளன. இதுபோன்ற பிரச்னைகளை முன்னரே அடையாளம் கண்டு தீர்வு காண்பதுதான் சரியாக இருக்கும். பெற்றோர்கள் அருகில் உள்ள அரசு சுகாதார மையத்தில் இலவசமாக ஆலோசனை பெற்றுக்கொண்டு மருந்துகள் வாங்குவதுதான் சிறந்தது. மருந்து கடைகளிலும் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் தருவதையும் தவிர்க்க வேண்டும்,''என்கிறார் மா. சுப்பிரமணியன்.

பட மூலாதாரம், MA SUBRAMANIAN FACEBOOK PAGE
''கொரோனா பேரிடர் காலத்திற்கு பின்னர், காய்ச்சல் மற்றும் சளி பிரச்னைகளை வெகு இலகுவாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை பலரும் உணர்ந்துள்ளனர். பலர் இதுபோன்ற தடை செய்யப்பட்ட மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் நேரடியாக மருந்துகளை வாங்கி பயன்படுத்தினால், அதன் விளைவுகள் பல சமயம் வெளியில் தெரியாமல் கூட போகும் வாய்ப்புகள் உள்ளன,''என்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன்.
முறையான ஆலோசனை தேவை
இருமல் மற்றும் சளி மருந்துகளில் மூன்று பெரிய பிரிவுகள் உள்ளது எனவே, சரியான ஆலோசனையின்றி தவறான மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் ரமேஷ்.
''சளி மூக்கில் வழிவது, அலர்ஜி காரணமாக சளி சேர்ந்து மூச்சு குழாய் அடைப்பை ஏற்படுத்தும் சளி, வறட்டு இருமல் என மூன்று விதமான சளி பிரச்னைகளுக்கு விதவிதமான தீர்வுகள் உள்ளன. அதனால் மருத்துவர் ஆலோசனையின்போதுதான் ஒரு குழந்தைக்கு எந்தவிதமான சளி ஏற்பட்டுள்ளது என்றும் அதற்கான சரியான மருந்து என்னவாக இருக்கும் என்றும் தெரிந்துகொள்ளமுடியும். மருந்து கடைகளில், பெற்றோர் ஒரு சில அறிகுறிகளை சொல்லிவிட்டு, மருந்துகளை வாங்குவதால் சரியான பிரச்னைக்கு சரியான மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பில்லை,''என்கிறார் மருத்துவர் ரமேஷ்.

பட மூலாதாரம், WHO
நேரடியாக மருந்துகளை வாங்கும்போது ஏற்படும் சிக்கல்களை விளக்கிய அவர், ''ஒரு சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவருக்கு செலுத்த வேண்டிய பணம், அவர் பரிந்துரை செய்யும் மருந்துகள் என செலவாகும் என்று எண்ணி நேரடியாக மருந்து கடைகளில் வாங்குகிறார்கள். ஒரு சில நேரம், இருமல் தொந்தரவு குழந்தைக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. சளி வெளியில் தெரியாமல், மூச்சு குழாய் பகுதியில் ஒழுகி, நுரையீரல் வரை தாக்கத்தை ஏற்படுத்தி, மூச்சுவிடுவதற்கு சிரமத்தை ஏற்படுத்தும். சில சமயம், சளி அடைப்பு காரணமாக, மூச்சு குழாய் சுருங்கும். இந்த வித்தியாசங்களை தெரியாமல் மருந்து எடுத்துக்கொள்வது ஆபத்தானது. நீங்கள் கொடுக்கும் சளி மருந்து சில நேரம் மூச்சடைப்பை ஏற்படுத்தி, ஆபத்தான நிலைக்கு குழந்தையை தள்ளிவிடும்,''என்கிறார் அவர்.
மேலும், ஆஸ்துமா, வீசிங் போன்ற வியாதிகள் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் இருமல் மருந்துகள் தனிப்பட்டவை என்றும் அதற்கு சாதாரண இருமல் மருந்துகள் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறுகிறார். ''தவிர்க்கமுடியாத காரணங்களால், நேரடியாக மருந்து வாங்கும் பெற்றோர், ஜெனரல் காப் சிரப் என்ற வகையில், சில இருமல் மருந்துகள் கிடைக்கின்றன. அதனை பயன்படுத்தலாம். ஆனாலும், அதை தவிர்ப்பது சிறந்தது,''என்கிறார்.

மக்களை தடுப்பது கடினம்
சென்னையைச் சேர்ந்த பிரபாவதி தனது இரண்டு குழந்தைகளுக்கும் மருந்து கடையில் நேரடியாக மருந்து வாங்கி கொடுத்ததாகவும், மருத்துவரிடம் செல்வதை கடந்த சில மாதங்களில் குறைத்துக்கொண்டுள்ளதாகவும் கூறுகிறார்.
''கொரோனா காலத்திற்கு பிறகு, குடும்ப செலவுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. எல்லா பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதால், ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் செல்வது எங்களுக்கு சாத்தியமில்லை என்பதால், மருந்து கடையில்தான் மருந்து வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இதுபோன்ற ஆபத்து ஏற்படுத்தும் மருந்துகள் பற்றி அரசாங்கம் விளம்பரம் செய்தால்தான் எங்களை போன்றவர்களுக்கு தெரியும்,''என்கிறார் பிரபாவதி.
மருந்து கடைகளில் நேரடியாக மருந்து வாங்குவதை தடுப்பது எளிதான காரியமாக இல்லை என்று மருந்து கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
''எங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒரு பகுதி, இருமல், காய்ச்சல் பிரச்சனைக்காக முன்னர் மருத்துவர் அளித்த சீட்டை காட்டி அதே மருந்து கொடுங்கள் என்று கேட்கிறார்கள். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் கொடுக்கமுடியாது என்று சொல்லும்போது, அந்த நபர் வேறு கடையில் வாங்கிக்கொள்வார். வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, மருத்துவரின் பரிந்துரை அவசியம் என்ற கட்டுப்பாடுகள் இந்தியாவில் இல்லை என்பதால், மக்கள் எளிதாகவும் சுயமாகவும் மருந்துகளை வாங்கிச் செல்கிறார்கள்,''என்கிறார் மருந்துக் கடை உரிமையாளர் குமார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












