மந்திரங்கள் சொல்லி தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images
இந்த உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. பல எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகள் என மனிதர்கள் தொடர்ந்து அதன்பின் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
நாம் மகிழ்ச்சியாக இருப்பதும், மன அழுத்தத்தில் இருப்பதும் முழுக்க முழுக்க நம்மைச் சார்ந்ததே. நமது மனதைச் சார்ந்ததே.
மந்திரங்களின் பின் உள்ள அறிவியல்
சரி. தற்போது நாம் சிந்தித்து கொண்டிருக்கும் முறையில் என்ன பிரச்னை?
மந்திரத்தைச் சொல்லி தியானம் செய்வது நமது மனதை குணப்படுத்தும் என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?
நமது மனது 24 மணி நேரத்தில் 60 ஆயிரம் எண்ணங்களை நினைத்துக் கொண்டிருக்கும்.
ஒரு குரங்கைப் போல நமது மனது ஓர் எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்திற்கு தாவாமல் இருப்பதற்கு இந்த மந்திரங்கள் உதவி செய்யும்.
நாம் எப்போதும் ஏதோ ஒரு வாழ்க்கைத் தரத்தை நோக்கி தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இன்ஸ்டாகிராமையும், ஃபேஸ்புக்கையும் நிஜ உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். என்ன வென்றே தெரியாத ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
எனவே இந்த மந்திரங்கள் நமது ஆணிவேருடன் நம்மை இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மந்திரம் என்னும் பாதுகாப்பு கவசம்
சமஸ்கிருதத்தில் 'மந்த்ரா' - மன் என்றால் மனது; 'த்ரா' என்றால் கருவி என்று பொருள். நாம் என்ன சிந்திக்கின்றோம் என்பதை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக மந்திரங்கள் பணி செய்கின்றன.
"என்னுடைய இளம் வயதில் எனக்கு மந்திரங்கள் பழக்கமானது மற்றொரு பக்கம் நமது மானிட இருப்பின் இன்றியமையாத ஒன்று சத்தம். அதாவது நாம் பேசும் வார்த்தைகள் நமது உலகை உருவாக்கும் அல்லது உடைக்கும். வார்த்தைகளால் இது இரண்டுமே சாத்தியம்," என்கிறார் ஓம் ஸ்வாமி. இவர் தி ஏன்ஷியண்ட் சயின்ஸ் ஆஃப் மந்த்ராஸ் என்னும் புத்தகத்தை எழுதியவர்.
"ஒருவரிடம் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று கூறி அதன்படி நடந்து கொண்டால், இந்த மொத்த உலகமும் அவர்களைப் பார்த்துக் கொள்ளும். 'மனது' என்ற பூ பூத்தவுடன் ஒருவரின் வாழ்வில் அழகு கூடிவிடுகிறது. மனம் எனும் பூ வாடினால் நாம் சோர்ந்து போகிறோம். இந்த உலகில் இருந்து மறைந்துவிடப் பார்க்கிறோம். எனவே மந்திரங்கள் உங்கள் மனதிற்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்படுகிறது. தேவையில்லாத எண்ணங்களிலிருந்து உங்கள் மனதைக் காக்கிறது," என்கிறார் ஓம் ஸ்வாமி.
பாதக அம்சங்கள்
நாம் நமது கடந்த காலத்தை நினைவில் வைத்து, எதிர் காலத்தை கற்பனை செய்வது மனித குலத்தின் வெற்றிக்கு முக்கியமானதாக உள்ளது. ஆனால் இதில் சில பாதக அம்சங்களும் உள்ளன.
"ஆம் நாம் வாழ்வதற்கு இது ஒரு திறனாக உள்ளது. சில எதிர்மறையான அனுபவங்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முடியும். ஆனால் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் இந்த செயல்முறையில் அதிகம் சிக்கிக் கொள்கின்றனர்," என்கிறார் நியூரோ இமேஜிங் துறையில் பேராசிரியாக இருக்கும் ரொசலின் சிம்னோன்.

பட மூலாதாரம், Getty Images
"இந்த செயல்முறை நமது மனதில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும்போது நமக்கு உதவாமல் போய்விடுகிறது. அதேசமயம் 'என்னால் முடியாது', 'நான் திறனற்றவர்' போன்ற சில எதிர்மறையான மந்திரங்களையும் நாம் தொடர்ந்து சொல்லத் தொடங்கிவிடுகிறோம்" என்கிறார் ரோசலின்.
நாம் நமது எதிர்காலம் குறித்து யோசிக்கும் போது நமது மூளையில் உள்ள 'டீஃபால்ட் மோட் நெட்வொர்க்' (Default mode network) என்ற பகுதியை ஆக்டிவேட் செய்கிறோம்.
இந்த பகுதிதான், பிரச்னையை தீர்த்தல் போன்ற விஷயங்களை செய்கிறது. ஆனால் அதே சமயம் இந்த பகுதி செயல்படும்போது நம்மை நாமே அதிகம் எடைபோட்டு கொள்கிறோம். ஏதோ ஓர் ஆழ்ந்த சிந்தனையில் மீண்டும் மீண்டும் மூழ்கி போய்விடுகிறோம். அதாவது எதிர்காலத்தில் நீங்கள் இருப்பது போல கற்பனை செய்து கொள்வீர்கள்.
"அப்படியானால் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க மாட்டீர்கள். நீங்கள் நிகழ்காலத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் அதை எப்படி நினைவில் வைத்து கொள்வீர்கள்?" என்கிறார் ரோசலின்.
ஆய்வு சொன்ன தகவல்
ரோசலின் மற்றும் அவர் உடன் பணிபுரியும் மரியா, இந்த 'மந்த்ரா தியானம்' அறிவியல் ரீதியாக பயன் கொடுக்குமா என்பதை நிரூபிக்க முடியுமா என்று பார்த்தார்கள்.
பெண்கள் அமைதியான மந்திரங்களை சொல்லும்போது அவர்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆய்வில் ஈடுபட்டார் மரியா. ரோசலின் அதன் விளைவுகளை ஆராய்ந்தார்.
"இரண்டு வார காலத்தில் திரும்ப திரும்ப மந்திரங்களை சொல்லும்போது மூளையின் அந்த டீஃபால்ட் மோட் நெட்வொர்க் பகுதி அமைதியானது," என்கிறார் ரோசலின்.
எனவே மந்திரங்களை சொன்னவர்கள், தங்களைத் தாங்களே எடைபோட்டுக் கொள்ளும் பழக்கம் குறைந்ததாக தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல ஒரு பணி குறித்த அவர்களின் நினைவாற்றலும் அதிகரித்தது. ஓம் ஸ்வாமி, தனது வாழ்நாளில் 15 ஆயிரம் மணி நேரங்களை மந்திரங்கள் ஓதவும், தியானம் செய்யவும் செலவிட்டார்.
2018ஆம் ஆண்டு அவரின் மூளையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அப்போது அவர் தனது மனதை இயல்பைக் காட்டிலும் அமைதியாக வைத்துக் கொள்ளும் திறன் படைத்தவர் என்பது தெரியவந்தது.
தியானத்தை எப்படி தொடங்க வேண்டும்?
"ஒரு நல்ல மந்திரம் ஒரு சிறிய கடிதத்தை போன்று இருக்கலாம். அல்லது ஆயிரம் சொற்களை கொண்டதாகவும் இருக்கலாம். இதை நாம் மாலை மந்திரம் என்போம். அதாவது மணியால் ஆன மாலையை கொண்டு மந்திரம் ஓதுவது. மந்திரம் என்பது சொற்களின் அழகான வடிவமைப்பு," என்கிறார் ஓம் ஸ்வாமி.
"நீங்கள் என்ன வாக்கியத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டுமல்ல, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதும்தான். அது சத்தமும் அமைதியும் கலந்தது. அமைதியை கொண்டு ஓசைக்கு அழகு சேர்ப்பது," என்கிறார் ஓம் ஸ்வாமி.
மந்திரங்களை சொல்ல நீங்கள் மத நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
"எந்த மொழியிலும் மந்திரத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் எந்த மந்திரத்தை சொன்னாலும் சரி, ஒரு 6 மாத காலத்தில் அது நரம்பியல் பாதையை உருவாக்கும். 'இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி' என்றும் நீங்கள் சொல்லலாம். ஆங்கிலத்திலும் கூட அது இருக்கலாம்.
ஆனால் நீங்கள் பாரம்பரிய முறையை தேர்ந்தெடுப்பவராகவோ அல்லது மந்திரங்கள் மூலம், உங்கள் ஆழ்மனதை கட்டுப்படுத்த விரும்பினாலோ நீங்கள் ஓம் என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் உங்கள் தியானத்தை தொடங்கலாம்" என்கிறார் ஓம் ஸ்வாமி.
"அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது உங்கள் தோள்களை தட்டி, 'வாவ் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது' என்று தொடர்ந்து சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் சமயம், அந்த ஆற்றலை சேகரிக்கத் தொடங்கும்போது உங்கள் மூளை அதைக் குறித்து வைத்து கொள்ளும். சில நாட்கள் கழித்து நீங்கள் சோர்வாக இருக்கும்போது, உங்கள் தோள்களைத் தட்டினால், அனைத்தும் சரியாக உள்ளது என உங்கள் மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பப்படும்" என்கிறார் அவர்.
நீங்கள் முயன்றால், நமது எதிர்பார்ப்புகளிடமிருந்து மந்திரங்கள் நம்மை விடுவிக்கும் என்பதும் மந்திரங்கள் குறித்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
"புத்தா என்றால் விழித்தல், அவர் நாம் நமது வாழ்நாள் முழுவதும் நமது ஆசைகள் மூலமும், தேவைகள் மூலமும் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார். நாம் நம் மீதும் பிறர் மீதும் வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்புகள் மூலம் பிணையப்பட்டு அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் குற்ற உணர்ச்சியிலோ அல்லது கோபத்தாலோ சூழப்படுகிறோம்," என்கிறார் ஓம் ஸ்வாமி.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். எனவே நான் எதில் கவனம் செலுத்துகிறோம் என்பது மிக அவசியம். நீங்கள் எதில் கவனம் செலுத்துகிறீர்களோ அவ்வாறே உங்கள் மூளை அமைப்பும் மாறுகிறது. காலப்போக்கில் அதன்படியே செயல்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












