இரட்டைக் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பது செயற்கை கருவூட்டலின் விளைவா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
(குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான செய்திகளை சிறப்பு தொடராக பிபிசி தமிழ் வெளியிட்டது. அந்தத் தொடரின் நான்காவது கட்டுரையான இது மறுபகிர்வு செய்யப்படுகிறது.)
இரட்டை குழந்தை வேண்டும் என்ற எண்ணத்துடன் பல பெற்றோர்கள் செயற்கை கருவூட்டல் முறைக்கு பணம் செலவிட தயாராக இருப்பதாகவும், இந்திய அளவில் இரட்டை குழந்தைகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதற்கு பெற்றோரின் விருப்பமும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக கூறுகிறார் சென்னையை சேர்ந்த மருத்துவர் மாதங்கி ராஜகோபால்.
உலகம் முழுவதும் இரட்டை குழந்தைகள் அதிகரிப்பது பிரச்சனையாகி வருவதாகவும், மேலை நாடுகளில் உள்ளது போல இந்தியாவிலும் செயற்கை கருத்தரிப்பு முறையில் கட்டுப்பாடுகள் கொண்டுவந்தால்தான் இந்தியாவில் இரட்டை குழந்தைகளின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும் என்கிறார் மகப்பேறியல் மருத்துவர் மாதங்கி.
முன்னெப்போதையும் விட இப்போது அதிகமான இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன என்றும் பெரும்பாலும் செயற்கை கருவூட்டல் மற்றும் பிற உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களின் காரணமாகதான் இரட்டை குழந்தைகள் உலகளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வு கண்டறிந்துள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த குளோபல் டேட்டா லேப், இன்ஸ்டிடியூட் ஃபார் மேனேஜ்மென்ட் ரிசர்ச் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மக்கள்தொகை ஆய்வு மையம் இணைந்து நடத்திய இந்த ஆய்வுதான் உலகளவில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு கடந்த 30 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் இரட்டை குழந்தைகள் பிறப்பது குறித்து பேசிய மாதங்கி, "குழந்தையின்மை தமிழகத்தில் அதிகரித்துள்ளது என அரசாங்க ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு, பல பெண்களும் திருமணத்தை தள்ளிப்போடுவது, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிபோடுவதால், குழந்தையின்மை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டாகின்றன. முடிவில் செயற்கை கருத்தரித்தல்தான் ஒரே தீர்வு என்ற எண்ணத்துடன் பல தம்பதிகளும் இருக்கிறார்கள். அதிலும் இரட்டை குழந்தை வேண்டும் என்றும் எங்களிடம் கேட்கிறார்கள்," என்கிறார் அவர்.
இந்திய அளவில் 250ல் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறக்கும் என்ற கணக்கீடு தற்போது, 100-இல் இரண்டு இரட்டை குழந்தையாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் மாதங்கி.
''செயற்கை கருவூட்டல் முறையில், ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகள் தாயின் கருப்பையில் உருவாகும். அந்த முட்டைகளில், விந்தணுகளை செலுத்தும்போது, சில நேரம், ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகள் கருவாக மாறும். ஒரு சிலருக்கு அது மூன்றாகவும் இருக்கும். இதனால், இரட்டை குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் ஒரே சமயத்தில் பிறக்கும் நிலை ஏற்படுகிறது,''என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இரட்டை குழந்தைகள் பிறப்பதில் உள்ள சிக்கல்களை விளக்கிய அவர், ''இரண்டு குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்துவிடுவதால் தங்களுக்கு சிரமங்கள் குறைவு என பெற்றோர்கள் எண்ணுகிறார்கள். உண்மையில், இரட்டை குழந்தைகள் கருவுற்ற காலத்தில் இருந்து அந்த தாய் அதிக சிக்கல்களை சந்திக்கவேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவேண்டும். தாயும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அதோடு, அந்த குழந்தைகள் பெரும்பாலும், இயல்பான பிரசவ தேதிக்கு முன்னதாகவே பிறக்கும் அபாயம் இருக்கும் என்பதால், குறைமாத குழந்தையாகப் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்,''என்கிறார்.
இரட்டை குழந்தைகள் பிறந்த பின்னரும், உடல் மற்றும் அறிவு வளர்ச்சியில் சிக்கல்கள் இருப்பதாக கூறுகிறார் மருத்துவர் மாதங்கி.


''குறை மாதத்தில் பிறக்கும் ஒரு சில குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும். இரண்டு குழந்தைகளுக்கும் கவனம் கொடுக்கவேண்டிய தாயின் உடல்நலனும் பாதிக்கப்படும். இரட்டை குழந்தைகளை சுமக்கும் தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். உடல்எடை அதிகரித்து, பிற உபாதைகள் ஏற்படும்,''என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) மும்பையில், 113 தம்பதிகளிடம் நடத்திய ஆய்வில், செயற்கை கருவூட்டல் மூலம் 45 சதவீத தம்பதிகள் இரட்டை அல்லது மூன்று குழந்தைகளை ஒரே பிரவசத்தில் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நிலை நீடித்தால், இந்தியாவில் இரட்டை குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் மாதங்கி.
மேலை நாடுகளில், செயற்கை கருவூட்டல் முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை வைத்து கருவூட்டல் செய்யக்கூடாது என்றும் தீவிர சோதனைகளும் நடைபெறுவதாக கூறுகிறார் அவர்.
''இந்தியாவில் செயற்கை கருவூட்டல் முறைக்கு அதிக கட்டுப்பாடுகள் இல்லை என்பதால், பெற்றோர்கள் பலர் தாங்களாகவே விருப்பப்பட்டு, இரட்டை குழந்தை தேவை என்றும் மருத்துவர்களிடம் கேட்கும் சம்பவங்களும் நடக்கின்றன,''என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













